கலைக்களஞ்சியம்/அட்லான்டிக் சாசனம்

அட்லான்டிக் சாசனம் : 1939ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக, நெவில் சேம்பர்லின் என்னும் ஆங்கிலப் பிரதம மந்திரி பதவியிழந்தார். 1940-ல் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியானார். அப்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையே எப்பொழுதுமேயுள்ள நல்லுறவு மேலும் வலிவடைந்தது. சர்ச்சிலும், அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த பிராங்லின் ரூஸ்வெல்ட்டும் அட்லான்டிக் கடலில் ஒரு போர்க் கப்பலில் 1941 ஆகஸ்டு 14-ல் சந்தித்து எட்டு அமிசங்கள் கொண்ட ஒரு சாசனத்தை வகுத்தனர். இது 1918-ல் ஜனாதிபதி வில்சன் தயாரித்த பதினான்கு அமிசத் திட்டத்தின் முதல் ஐந்து அமிசங்களை யொத்திருந்தது. நேசநாடுகள் வெற்றிபெற்ற பின்னர் ஏற்படும் சமாதானத்தின் தன்மையை நிருணயிக்கும் முறையில் இச்சாசனம் அமைந்தது.