கலைக்களஞ்சியம்/அணில்

அணில்: மரக்கிளைகளிலும் மனைமுன்றில்களிலும் ஓடியாடும் அணில் எல்லோரும் அறிந்துள்ள சிறு விலங்கு. இது காட்டு விலங்கேயாயினும் மனிதனோடு கூட்டுறவுடையதாகி மனிதர் நெருக்கமுள்ள நகர் நடுவிலும் வாழ்கின்றது. இதன் அழகும், மென்மையும்,

அணில்

அமைதியான தோற்றமும், ஒளி நிறைந்த கண்களும், சுறுக்கான பார்வையும், விரைவும், சுறுசுறுப்பும், சிற்றொலிக்கும் மருண்டு ஓடியொளிக்குமியல்பும், எளிதில் பழகும் பண்பும் இதனை மனிதன் விரும்பிக் காண்பதற்குக் காரணமாக இருக்கின்றன. இதனைச் செல்லமாக அணிற்பிள்ளை என்று அழைக்கிறோம். இராமபிரான் அணைகட்டும்போது இந்தச் சிற்றுயிரும் தன்னாலான எளிய தொண்டைச் செய்தது என்றும் அவர் அதனைப் பாராட்டி அன்போடு தடவிக் கொடுத்தார் என்றும் சொல்லும் உருக்கமான கதையும் இதனிடத்து இரக்கம் உண்டாகச் செய்கிறது.

அணில்களிற் பல சாதிகளும், பல இனங்களும் உண்டு. இவற்றின் உடல் பொதுவாக மெலிந்திருக்கும். வால் மயிரடர்ந்து தினைக்கதிர் போல உடலளவு நீளமாக அல்லது அதைவிட நீளமாக இருக்கும். இந்த வாலைத் தரையில் படாமல் பின்னுக்குத் தூக்கி நீட்டிக்கொண்டு போகும், அல்லது மேலே உயர்த்தி வைத்திருக்கும். பின் காலைக் குந்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டு உடம்பை உயர்த்தி முன் காலில் பழத்தையோ, கொட்டையையோ தானியத்தையோ பற்றிக்கொண்டு கொறிப்பது இவற்றிற்கு வழக்கம். அணில்களிற் சிலவகைகள் மிகச்சிறியவை.

ஏழெட்டு அங்குலத்துக்குள் இருக்கும். சில
பெரிய அணில்

பூனையளவு பெரிதாக இருக்கும். வாலைச் சேர்த்து இரண்டடி நீளமிருக்கலாம். சில தரையில் வாழும். சில மரத்தில் வாழும். சிலவற்றிற்குக் காது சிறுத்திருக்கும். சிலவற்றிற்குக் காது முனையில் மயிர் குச்சமாக இருக்கும்; சிலவற்றிற்கு முயலுக்கிருப்பது போல நீண்டு அழகாக இருக்கும். சிவப்பும், பழுப்பும், சாம்பலும், கறுப்புமான பல நிறமான அணில்களுண்டு. சிலவற்றிற்குக் கோடுகள் உண்டு. சில பறக்கும் அணில்கள். பறப்பதென்றால் சிறகை அடித்துக்கொண்டு பறவைகளைப்போலச் செல்வதன்று. இவற்றின் இரு பக்கங்களிலும் உடலையும் முன்பின் கால்களையும் சேர்த்து மெல்லிய தோல் மடிப்புக்களிருக்கின்றன. அணில் ஒரு மரத்திலிருந்து ஆகாயத்தில் தாவி இந்தப் பக்கமடிப்புக்களை விரித்துக்கொள்ளும். காற்றில் மிதந்து சறுக்கிக் கொண்டேபோய் 70, 80 கஜத் தொலைவிலுள்ள இன்னொரு மரத்தைச் சேரும். தோல்மடிப்புக்கள் பாரஷூட் (Parachute) போல அணிலைத் தாங்கிக் கொள்ளுகின்றன. பிள்ளைகள் காகிதத்தை மடித்து எறியும் விளையாட்டுவிமானம் போல இந்தப் பறக்கும் அணில் செல்லும். அணில்கள் சத்தம்போடும்; வீட்டு அணில் பறவை ஒலிபோல வீச்சுவீச்சு என்று நெடு நேரம் உரக்கக் கூவும். ஒவ்வொரு ஒலிக்கும் வாலை எற்றியெற்றி ஆட்டும். அணில்கள் பாலூட்டி (Mammalia)த் தொகுதியில், ரோடென்ஷியா (Rodentia) என்னும் கொறிக்கும் விலங்கு வரிசையைச் சேர்ந்தவை. இந்த வரிசையிலுள்ள எலி, முள்ளம்பன்றி, முயல் ஆகியவற்றைப்போலத் தமது உளிபோன்று கூரான விளிம்புள்ள முன் பற்களால் உணவைக் கொறித்துக் கொறித்துத் தின்பவை. அணில்கள் ஸ்கையூரிடீ (Scturidae) என்னும் குடும்பத்தில் அடங்கும். இவை

பழம், கொட்டை, தானியம், இலை, பட்டை, கிளைகளின்
பறக்கும் அணில்

மென்மையான நுனி முதலியவற்றைக் கரண்டிக் கரண்டித் தின்னும். பழத்தோட்டங்களில் அணில் மிகுந்த கேடு விளைக்கும். கிளிகளைக் கடிவதுபோல அணில்களையும் ஓட்டிக்கொண்டு காவலிருக்க வேண்டும். மாதுளம்பழம் முதலியவற்றிற்கு இவை கடிக்காதபடி தகரத்தால் மூடி செய்து போடுவதுண்டு. சிறு பூச்சிகளையும் தின்னும். பறவைக் கூடுகட்புகுந்து முட்டைகளையும் குஞ்சுகளையும் தின்றுவிடுவதுமுண்டு.

அணில்கள் மரக்கிளைகளிலும், பொந்துகளிலும், வீட்டில் சுவரிலுள்ள சந்துகளிலும், இறவாணத்திலும், இலை, புல், வைக்கோல், நார் இவற்றால் கூடுகட்டும். வீட்டில் அகப்படும் கந்தைத் துணி, நூல், பஞ்சு முதலியவற்றையும் தூக்கிக் கொண்டுபோகும். கூடு அலங்கோலமாக இருக்கும். அதில் 2 முதல் 4 குட்டிவரையில் போடும் குட்டிக்குப் பிறக்கும்போது உடலில் மயிரிராது. கண் திறந்திராது. சில நாட்களுக்குப் பிறகே மயிர் முளைக்கும் ; கண் திறக்கும்.

பலவகை அணில்கள் உணவு மிகுதியாக அகப்படும் காலத்திலே, பின்னுக்கு அகப்படாத காலத்துக்கு உதவும் வண்ணம் அதை வளைகளிற் சேர்த்து வைத்துக் கொள்ளும். பைன் மரக்காடுகளில் ஓரணில் ஒரு மூட்டை இரண்டு மூட்டை பைன் காய்களைச் சேர்த்து வைப்பதுண்டு. இப்படி வருமுன் காக்கும் சிக்கனம் அணில் நமக்குக் கற்பிக்கும் படிப்பினையாகும்.

அணில்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களிலெல்லாம் வெப்பவலயம் சமவெப்ப தட்பவலயம் ஆகியவற்றில் மிகுதியாக உண்டு. ஆஸ்திரேலியாவிலும், மடகாஸ்கரிலும் இவை யில்லை.

உலகத்தின் பல பாகங்களிலே செவ்வணில், சாம்பலணில், நரியணில், பறக்குமணில் என்றும், சின்சில்லா, சிப்மங்க், கோவர், மார்மட், பிரெய்ரி நாய் (Cynomys) என்னும் பல பெயருடனும் பலசாதி அணில்கள் இருக்கின்றன.

நமது நாட்டிலுள்ள அணில்களில் மூன்று முக்கிய வகைகள் பீன்வருமாறு: தென்னிந்தியாவில் வீட்டிலும் தோட்டத்திலும் காண்பது மூன்று வரிகள் உடைய சாதாரண அணில்; இது சிறு நரையணில் எனப்படும். வடநாட்டில் இருப்பதற்கு ஐந்து கோடுகள் உண்டு. இவை மனிதனோடு பழகி வாழ்கின்றன. வளர்ந்த அணில் அச்சமின்றி வந்து கையிலிருக்கும் தீனியை எடுத்துக் கொள்ளும். மலைகளிலும் அவற்றைச் சார்ந்த காடுகளிலும் உள்ளது இந்தியப் பேரணில் (Ratufa indica). தென்னிந்திய மலைகளில் பெருவாலணில் (Ratifa macroura) என்பது ஒன்றுண்டு. நம் நாட்டில் பறக்கும் அணில் பெருங்காடுகளில் உள்ளது பெடௌரிஸ்டா பிலிப்பென்சிஸ் (Petaurista phillipensis) என்பது.

அணில்மயிர் ஓவியமெழுதுந் தூரிகை செய்யவுதவும். இதன் மெல்லிய தோலினால் மிருதுவான சின்ன செருப்பு, பை முதலியன செய்கின்றனர். சிலர் அணிலைத் தின்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அணில்&oldid=1453753" இலிருந்து மீள்விக்கப்பட்டது