கலைக்களஞ்சியம்/அண்டிரோமீடா

அண்டிரோமீடா (Andromeda) என்பது வடக்கே உள்ள நட்சத்திர மண்டலங்களில் ஒன்று. இது ஆசந்தி என்னும் காசியோப்பியா மண்டலத்தின் அருகில் உள்ளது. காசியோப்பியாவின் மகள் அண்டி ரோமீடாவின் கற்பை மெச்சி அதீனா என்னும் தேவதை அவளுக்கு நட்சத்திரப் பதவி கொடுத்ததாகக் கிரேக்க புராணம் கூறும். இந்த மண்டலத்திலிருக்கும் அல்மக் (Almach) ஓர் அழகான இரட்டை நட்சத்திரம். இது சிறு டெலிஸ்கோப் மூலம் தென்படும். அதிலுள்ள பெரிய நட்சத்திரம் மஞ்சள் நிறமாகவும், சிறியது நீலம் கலந்த பச்சையாகவும் ஒளிவிடுவது அழகாயிருக்கும். இவை இரண்டும் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. ஒரு நல்ல டெலிஸ்கோப் வழியாகப் பார்த்தால் பச்சை நட்சத்திரமும் இரட்டை நட்சத்திரமாய் இருப்பது தெரியும். இந்தப் பச்சை இரட்டை நட்சத்திரமும் பெரிய மஞ்சள் நட்சத்திரமும் ஒன்றையொன்று சுற்ற 55 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மண்டலத்திலுள்ள நெபுலாவே சுழல் நெபுலாக்களுள் மிகுந்த ஒளியுடையதாகும். இது ஒன்றே வெறுங் கண்ணால் பார்க்கக்கூடிய நெபுலாவாகும். இது ஒன்பது லட்சம் ஒளி ஆண்டுத் தொலைவில் இருக்கிறது. பெரும்பாலும் நெபுலாக்கள் நம்மைவிட்டு எட்டிப் போவனவாக இருக்கின்றன. நம்மை நோக்கி வரும் ஒரு சில நெபுலாக்களுள் இது ஒன்று. இதை முதன் முதல் கண்டவர் பத்தாம் நூற்றாண்டிலிருந்த ஆல்சூபி என்னும் அரபு அறிஞர் என்று கூறுவர். இதுவே முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட நெபுலாவாகும்.