கலைக்களஞ்சியம்/அதிகச் சலுகை ஷரத்து
அதிகச் சலுகை ஷரத்து (Most favoured nation clause) : வியாபார ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகள் சில சமயங்களில் அவ்வொப்பந்தங்களில் அதிகச் சலுகை பெறும் நாட்டு ஷரத்தைச் சேர்ப்பதுண்டு. அதாவது, ஒரு நாடு, தான் வாணிபம் செய்ய விரும்பும் மற்றொரு நாட்டோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில், வேறு எந்த நாட்டிற்கு எவ்வளவு வியாபாரச் சலுகையை எக்காலத்தில் காட்டினாலும், அந்தச் சலுகைகளையெல்லாம் இந்தநாட்டிற்கும் காட்டுவது என்று முன்கூட்டியே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு ஷத்து. உதாரணமாக, இந்தியா ஜப்பானோடு செய்துகொள்ளும் ஒரு வியாபார ஒப்பந்தத்தில், பிரிட்ட னுக்காவது அல்லது அமெரிக்காவிற்காவது அல்லது இந்தியாவிடம் மிக அதிகச் சலுகையைப் பெறும் வேறு எந்த நாட்டிற்காவது எவ்வளவு சலுகை காட்டப்படுமோ, அவ்வளவையும் ஜப்பானுக்கும் காட்டுவதாக ஒரு ஷரத்து எழுதிச் சேர்த்தால், அது அதிகச் சலுகை பெறும் நாட்டு ஷரத்தாகும். கொடுக்கல் வாங்கல் நிலையில் பேரம் பேசி, ஒரு நாடு பெறும் சலுகைகளையெல்லாம் இந்த ஷரத்தால் பலனடைந்த நாடு சும்மாவே பெறும். இந்நிலையைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில் நாடுகளுக்குள் ஓர் ஏற்பாடு இருக்கிறது. அதாவது அதிகச் சலுகை பெறும் ஒரு நாட்டின் தகுதியை, இந்த ஷரத்து மூலம் பலனடையும் நாடும் பெறவேண்டுமாயின், அந்த நாடும் அதிகச் சலுகை பெறும் நாட்டைப்போலப் பேரம் செய்து, இரு சாரார்க்கும் வியாபார நிலையில் பலனளிக்கும் முறையில் நடந்து கொண்டால் தான் அந்த ஷரத்தின் பலனை யடையலாம் என்பது. இது ஒரு சர்வதேசச் சட்டமில்லையாயினும், நாடுகளிலும் ஒப்பிக் கடைப்பிடிக்கப்படும் ஒழுகலாறு.