கலைக்களஞ்சியம்/அதிகப் பற்று

அதிகப் பற்று (Overdraft) : பொதுவாக ஒரு பாங்கின் வாடிக்கைக்காரர்கள் அவர்களது நடப்புக் கணக்கிலுள்ள பணத்தைச் செக்குகள் மூலமாக வாங்குவது வழக்கம். ஒரு செக்கைக் கண்ணியப்படுத்துவது என்பது, ஒருவர் முன்னதாகவே தமது நடப்புக் கணக்கின் வரவிற்குச் செலுத்திய தொகையை அவர் எழுதிக் கொடுக்கும் செக்கிற்கு யாதொரு தடையுமின்றி உடனே கொடுப்பதாகும். ஆனால் சில சமயங்களில் ஒருவரது நடப்புக் கணக்கிலுள்ள தொகை, அவர் தயாரித்த செக்கில் குறிக்கப்பட்டுள்ள தொகையைவிடக் குறைவாயிருப்பினும், அச்செக்கை ஒரு பாங்கு கண்ணியப்படுத்தி, அந்த வாடிக்கைக்காரருக்கு அளிக்கும் உதவியின் பயனால் ஏற்படுவதே அதிகப் பற்றாகும். ஒரு பாங்கு, சில காரணங்களை முன்னிட்டு, ஒருவருக்கு அதிகப் பற்று அளிப்பதாக ஏற்றுக் கொண்டாலன்றி, வரவுக் கணக்கிற்கு மேற்பட்டுத் தயாரிக்கப் பட்ட செக்குகளைக் கண்ணியப்படுத்தவேண்டிய கட்டாயமில்லை. சில சமயங்களில் ஒரு பாங்கு தன் வசமுள்ள பொருள்களின் உரிமைப் பத்திரங்களின் ஆதரவில், பொருள்களை இறக்குமதி செய்யும் ஒருவருடைய சார்பாக, ஏற்றுமதி செய்பவர் தம்மேல் தயாரிக்கும் மாற்று உண்டியல்களை அங்கீகரிக்க ஏற்றுக் கொள்வதுண்டு. இது வாணிபத்தில் ஏற்படும் ஒரு நம்பிக்கை நடவடிக்கையே யன்றி அதிகப் பற்றாகாது. ஜி. சௌ.