கலைக்களஞ்சியம்/அதிபூரிதம்

அதிபூரிதம் (Supersaturation): தூசு, அயான் முதலிய துகள்கள் இல்லாத காற்று, பூரித நிலையைவிட அதிகமாகக் குளிர்ந்த பின்னருங்கூட அதிலுள்ள நீராவி நீராகக் குளிராமல் இருக்கலாம். இது ஒரு நிலைப்பற்ற நிலை. காற்றில் சிறிதளவு தூசு முதலியன கலந்தாலும். அதிலுள்ள ஆவி உடனே குளிர்ந்துவிடும். இந்நிலை அதிபூரித நிலை எனப்படும். சிறிதும் அசைவில்லாதவாறு பூரிதக் கரைவொன்றை மெதுவாகக் குளிர்வித்தால், அக்கரைவில் படிகங்கள் தோன்றா. இத்தகைய நிலைப்பற்ற நிலையும் அதிபூரித நிலை எனப்படும்.

அதிர்ச்சி நிகழாதவாறு தூய திரவங்களை அவற்றின் உருகு நிலைக்குப் பல டிகிரி குறைவாகக் குளிர்வித்தாலும் அவை திரவ நிலையிலேயே இருக்கக் காணலாம். மிகைக் குளிர்நிலை எனப்படும். திரவத்தில் சிறிய அதிர்ச்சி நிகழ்ந்தாலும், அது உடனே இறுகி, அதன் வெப்பநிலை அதிகமாகும். இப்போது அது தன் உருகு நிலையை அடையும். காற்றிலுள்ள நீர்த்துளிகள் இத்தகைய நிலையை அடைந்திருக்கும்போது அவற்றின் வழியே விமானமொன்று சென்றால். அதன்மேல் நீர்த்துளிகள் இறுகிப் பனிக்கட்டியாகி, அதற்குத் தொல்லை விளைவிக்கலாம்.