கலைக்களஞ்சியம்/அதிர்ச்சிதாங்கி

அதிர்ச்சிதாங்கி (Buffer) : அதிர்ச்சியை ஏற்று, அதை மெதுவாகத் தாங்கிநின்று, அதனால் சேதம் விளையாமல் தடுக்கும் சாதனம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. சாதாரணமாக இது ரெயில் வண்டிகளிலும், எஞ்சினிலும் பொருத்தப்படுகிறது. வண்டிகளையும், எஞ்சினையும் இணைக்கும் இடத்தில் முன்னும் பின்னும் அதிர்ச்சிதாங்கிகள் இருக்கும். இத்தகைய அதிர்ச்சி தாங்கியில் நீளவட்ட வடிவான தட்டு ஒன்று நீண்ட தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இத்தண்டு வண்டிக்குள் புகுமாறு அமைக்கப்பட்டிருக்கும். தண்டைச் சுற்றிலும் வலிவான சுருள் வில்லுகள் இருக்கும். வண்டிகள் மோதும்போது தண்டு சுமார் அரை அடிவரை உள்ளே நுழைந்து அதிர்ச்சியை ஏற்கும். சுருள் வில்லிற்குப் பதிலாக ரப்பர்க் கட்டையையும், காற்றின் அழுத்தத்தையும் பயன்படுத்தும் அதிர்ச்சிதாங்கிகளும்

உண்டு.

தண்டவாளம் முடியும் இடத்தில் வண்டி நிற்காது மேலே செல்லுவதைத் தடுக்கவும் அதில் அதிர்ச்சி தாங்கிகள் பொருத்தப்படுகின்றன.

மோட்டார் வண்டி மோதுதலினால் சேதமடையாமலிருக்க, அதன் இருபுறங்களிலும் வளைவான எஃகு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. இவைகளும் அதிர்ச்சி தாங்கிகளே ஆகும்.