கலைக்களஞ்சியம்/அதிர்ச்சிப் படைகள்

அதிர்ச்சிப் படைகள் (Commandos) எதிரியின் யுத்த கேந்திரங்களாக உள்ள இடங்களை மின்னலைப்போல் தாக்குவதற்காகவே தனிப்பட்ட வகையில் பயில்விக்கப்படும் துருப்புக்கள். 1899-1902 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளை முதன்முதலில் இவ்வாறு பயில்வித்துப் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரிலும் 1940 ஆம் ஆண்டில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாதபோது அதிர்ச்சிப்படைகள் தோன்றின. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜிமென்டிலிருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, இப்படைகளை அமைத்தார்கள். அதிர்ச்சிப் படைவீரர்களுக்கு மிகக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு உடுப்புடனும், தளவாடங்களுடனும், நீந்திச் செல்லவும், தேசப்படத்தின் உதவியால் வழி கண்டு பிடிக்கவும், படைக்கலங்கள் இன்றிப் போரிடவும், குறைந்த உணவுடன் நெடு நாள் காலந்தள்ளவும் இவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லாப் போர்வகைகளையும் பயின்றிருக்க வேண்டும்; கடலிலேயே மறைந்து வாழவும் கற்றிருக்கவேண்டும். இரண்டாம் உலகப்போரில் இப்படைகள் லிபியாவிலும், நார்வேக் கடற்கரையிலும், பிரெஞ்சுக் கடற்கரையிலும் முக்கியமான இடங்களைப் பன்முறை தாக்கி வெற்றி பெற்றன.