கலைக்களஞ்சியம்/அத்திச் சாதி

அத்திச் சாதி (Ficus) : அத்தி, அரசு, ஆல், இத்தி, இந்திய ரப்பர், கல்லால், கொடியத்தி, சீமையத்தி, பேயத்தி முதலிய பல தாவரங்களிலே ஒற்றுமையான பண்புகள் காணப்படுகின்றன. காட்டாக, இவற்றில் வெண்மையான பால் உண்டு. எந்தப் பாகத்தை முறித்தாலும் பால் வடியும். இந்தப்பாலில் ரப்பர் சத்து இருக்கிறது. இலைகள் தனியானவை; பெரும்பாலும் மாறியமைந்தவை; முழு விளிம்புள்ளவை. நரம்புகள் கைவடிவமாக அமைந்திருக்கும். இலையடிச் செதில்கள் கண்டைச் சுற்றிப் பொருந்தியிருக்கும். அவை கிளையின் நுனிக்குருத்தை மூடிக் காப்பாற்றும். இலை விரிந்ததும் செதில்கள் விழுந்துவிடும். அவற்றின் வடு கிளையைச் சுற்றிலும் வளையம் போன்ற தழும்பாக இருந்துவரும். பூக்களும் மஞ்சரியும் மிகவும் விசித்திரமானவை. மஞ்சரித்தண்டு மிகச்சிறிய வாயுள்ள குடம்போன்றிருக்கும். அந்த வாயைக் கண் என்று கூறுவர். அந்தத் தண்டு சதைப்பற்றுள்ளது. பூக்கள் மிகவும் நுண்மையானவை ; எண்ணிறந்தவை; மஞ்சரிக்குடத்தின் உட்சுவரில் ஒட்டிக்கொண்டு வளரும். இவை வெளியே தோன்றாததால் இந்த வகை மரங்களைப் பூவாதே காய்ப்பவை என்பார்கள். பூக்களிலே பெண் பூ, ஆண் பூ, மலட்டுப்பூ (Gall flower), அலிப்பூ (Neutral Sterile or Mule f.) என நான்கு வகைகளுண்டு. ஒரே மஞ்சரியில் இந்த நான்கு வகைகளும் இருக்கலாம். ஆணும் பெண்ணும் மட்டும் இருக்கலாம். அவற்றோடு மலடாவது அலியாவது சேர்ந்திருக்கலாம். ஒரே மரத்தின் வெவ்வேறு மஞ்சரிகளில் வெவ்வேறு விதமாக இவை அமைந்திருக்கலாம். ஆண் பூவும் பெண் பூவும் ஒரே மஞ்சரியில் இருந்தால் ஆண் பூக்களெல்லாம் மஞ்சரிக் குடத்தின் கண்ணருகே அடர்ந்திருக்கும். பூக்களின் இடையே செதில்களும் மயிர்களும் வளர்ந்திருக்கலாம். இந்தப் பூங்கொத்தின் அமைப்பு அத்திச் சாதி யெல்லாவற்றிலும் உள்ள மிகச்சிறந்த பண்பு. இந்தப் பூங்கொத்துக்கு அத்தி மஞ்சரி என்று பெயர், இதையே அத்திக்காய் என்கிறோம். இது இலைக்கக்கத்தில் சில இனங்களில் ஒவ்வொன்றாகவும் சிலவற்றில் இரண்டிரண்டாகவும் தோன்றும். சிலவற்றில் உருண்டை வடிவாக இருக்கும். சிலவற்றில் பம்பரம் அல்லது வால் பேரிக்காய்போல் இருக்கும்.

ஆண் பூவில் இதழ் 2-6 பிரிவுகளுள்ளது. மகரந்த கேசரம் சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம். சிலவற்றில் மூன்று முதல் ஆறுவரையில் இருக்கும். பெண் பூவிலும் ஆண் பூவின் இதழ்கள் போலவே இருக்கும். சற்றுச் சிறிதாகவும் இருக்கலாம். சூலகம் நேராக இருக்கும், அல்லது ஒருபுறம் சற்றுச் சாய்ந்திருக்கும். சூல் தண்டு நடுவிலிராமல் ஒருபுறமாக இருக்கும். சூல் ஒன்றுதான் இருக்கும். அது சூலறையில் தொங்கிக் கொண்டிருக்கும். மலட்டுப்பூ பெண்பூப் போன்றது. ஒரு குளவி வகையைச் சார்ந்த சிறுபூச்சி அத்தி மஞ்சரியின் கண் வழியாக உள்ளே சென்று, அந்தப் பூவின் சூலறைக்குள் முட்டையிடும். பூச்சி முட்டையிட்ட பூவெல்லாம் கரடாக (Gall) ஆகிவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழு சூலறைக்குள் இருக்கும். அப்புழு வளர்ந்து கூட்டுப்புழுப் பருவமடையும். பிறகு அதிலிருந்து பூச்சி வெளிவரும். இந்தப் பூச்சிகள் வாயிலாக அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. அலிப்பூவின் இதழ் மூன்று பிரிவுள்ளது. அதில் ஆண் பாகமோ, பெண் பாகமோ கிடையாது.

பெண் பூவிலிருந்து மிகச்சிறிய கனி உண்டாகும். அது அக்கீன் என்னும் வெடியா உலர் கனி. சிலவற்றில் அந்தக்கனி சதையுள்ளதாக இருக்கும். இந்தக் கனிகளையே விதையென்று சொல்லுகிறோம். பூக்கள் முதிர முதிர, அத்தியின் குடம் போன்ற மஞ்சரித்தண்டும் சதைப்பற்றுள்ளதாக வளர்ந்துகொண்டே போகும்.

பழுத்த அத்தி பச்சை, மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கறுப்பு என வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு நிறமுடையதாக இருக்கும்.

ஒவ்வொரு பெண் பூவிலும் ஒரே விதையுண்டு. அதில் முளைசூழ் தசை சிறிதளவே இருக்கும். கரு வளைந்திருக்கும். விதையிலைகள் இரண்டு. அவை சமமாக இருக்கும்; அல்லது ஒன்று பெரியதும் மற்றொன்று சிறியதுமாய் இருக்கும்.

இந்தப் பழங்களில் சில வகைகள் மனிதர் உண்ணத்தக்கவை. சீமை அத்தி மிகச் சிறந்த பழம். மற்றக் கனிகளையெல்லாம் பலவகை விலங்குகளும் பறவைகளும் உண்ணும். இவற்றால் விதைகள் நெடுந்தூரம் பரவுகின்றன. இப்படிப் பரவின விதைகளிலிருந்து அரசு, ஆல் முதலியவை வேறு மரங்களின் மீதும், கோபுரம் மதில் முதலியவற்றின் மீதும் வளர்வதைக் காணலாம்.

அத்திச் சாதியிலே சுமார் 700 இனங்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் பெரிய மரங்கள் : குற்றுச் செடிகளும் உண்டு. சில கொடிகளும் இருக்கின்றன. இவற்றில் பல இந்தியாவில் நன்கறிந்த மரங்கள். அரச மரம், ஆலமரம் முதலியவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு.

நாட்டு அத்தி (Ficus glomerata) நமது நாட்டில் பொதுவாகக் காணப்படும் மரம். கடல் மட்டத்திலிருந்து 6,000 - அடி உயரம் வரையில் உள்ள பிரதேசங்களில் இது வளர்கிறது. ஆற்றோரங்களிலும் இது மிகுதியாக உண்டு. இது பெரிய மரம்; 30-40 அடி உயரமுள்ளது. எங்காவது சில சமயங்களில் இதில் சிறு விழுதுகள் உண்டாகலாம். பட்டை பசுமை அல்லது சிவப்பு கலந்த சாம்பல் நிறமுள்ளது. மரம் சாம்பல் கலந்த பழுப்பு; மெதுவானது. அத்திக்காய் கொத்துக் கொத்தாக அடிமரத்திலும் பெருங்கிளைகளிலும் தோன்றும். அது மிகக் குறுகிய கிளைகளில் அடர்ந்து நெருங்கி உண்டாகும். நன்றாக முதிர்ந்த காய் ஒரு அங்குல நீளமிருக்கலாம்; ஏறக்குறைய உருண்டையாக இருக்கும். பழம் செந்நிறமாக இருக்கும். இதை உண்பார்கள். உள்ளே புழுவும் பூச்சியும் இருக்கும். அத்தியின் அடிமரத்திலிருந்து பால் எடுப்பார்கள். அதற்குத் துவர்ப்புக் குணம் உண்டு. அத்தி வேரிலிருந்து வடிக்கும் பதநீர் போன்ற சாற்றை அத்திக்கள் என்பார்கள். பால், கள், பட்டை யெல்லாம் மருந்துக்கு உதவும். பிஞ்சைக் கறி சமைக்கலாம்.

சீமை அத்தி (Ficus carica) உலகிற் சிறந்த பழவகைகளில் ஒன்று; மேற்கு ஆசியாவிலும் தென் ஐரோப்பாவிலுமுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான உணவுப் பொருள். இதைப் பச்சையாகவும் உலர்த்தியும் வேறுவிதமாகப் பக்குவஞ் செய்தும் உட்கொள்வார்கள். இது மருந்துக்கும் பயன்படும். இது ஒரு சிறு மரம் ; 20, 30 அடி உயரம் வளரும். இதன் அடிமரம் குட்டையாக இருக்கும். கிளைகள் அதிலிருந்து அகன்று பரவி வளரும். இலை மற்ற அத்திகளிற்போல முழுவிளிம்புள்ளதாக இராமல் சாதாரணமாக ஐந்து பிளவுகள் உள்ளது. சீமையத்தி காட்டுமரமாக வட இந்தியா முதல் தென் பாரசீகம் தென்மேற்கு ஆசியா வரையிலும் வளர்கிறது. சீமை அத்தியை இந்தப் பிரதேசங்களிலும், மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளிலும் மிகப் பழைய காலந் தொட்டே பயிர் செய்து வந்திருக்கின்ற னர். இப்படிப் பயிர் செய்து வரும் வகைகள் நூற்றுக்கு மேற்பட்டவை உண்டு. அவற்றுளெல்லாம் மிக உயர்ந் தது ஸ்மர்னா அத்தி. பலவகைச் சீமையத்திகளில் மகரந்தச் சேர்க்கை யில்லாமலே பழம் உண்டா கும். ஆனால் ஸ்மர்னா அத்திக்கு மகரந்தச் சேர்க்கை

சீமையத்தி

இலையும் இரண்டு பூ மஞ்சரிகளும் : 1. அத்தி மஞ்சரி : அகத்தே நீண்ட சூல் தண்டுள்ள பெண் பூக்கள். புறத்தே மகரந் தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி. 2. காட்டு அத்தி மஞ்சரி : மலட்டுப் பெண் பூக்களும் ஆண் பூக்களும். 3. நீண்ட சூல் தண்டுள்ள பெண் பூ. 4. ஆண் பூ. 5. குறுகிய சூல் தண் டுள்ள மலட்டுப் பூ. (காடு) 6. காடான மலட்டுப் பூவி லிருந்து பூச்சி வெளிவருதல். 7. மலட்டுப் பூவின் உறுப்புக்கள் : a சூல் முடி, b. சூல் தண்டுக் குழாய். c. பூச்சி முட்டை , d . பூவின் அண்டக் கரு. 8 பெண் பூச்சி. 9. ஆண் பூச்சி.

இன்றியமையாதது. இதன் அத்தி மஞ்சரியில் பெண் பூக்கள் மட்டும் உண்டு. இவற்றில் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்குக் காட்டத்தி (Caprifig) மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூக்களிலிருந்து வெளிப்படும் அத்திப்பூச்சி இவற்றிற்கு வரவேண்டும். இதற்காக அத்தி மஞ்சரி களுள்ள காட்டத்திக் கிளைகளை நறுக்கிக் கொண்டுவந்து இவற்றின் கிளைகளில் கட்டுவார்கள் (Caprification). இதனால் இந்தக் காட்டத்தியை ஆண் அத்தியென்றும் சொல்வதுண்டு. காட்டத்தியிலிருந்து பூச்சி வெளிவரும் போது அந்த அத்தியின் கண்ணருகே யுள்ள ஆண் பூவிலுண்டாகும் மகரந்தம் அதன்மேற் படியும். அது வெளியே வந்து, நல்ல அத்தி மஞ்சரிக்குள் புகும். அப் போது மகரந்தச் சேர்க்கை யுண்டாகும். அதனால் பழம் பெரிதாகவும் சுவையும் மணமு முள்ளதாகவும் வளரும். நன்றாக வளர்ந்த பழம் 2 அங்குல நீளமும், 1½ அங்குல அகலமும் உள்ளது. அத்தி ஆண்டில் இரண்டு தடவை பழுக்கும்; மூன்று தடவையும் பழுப்பதுண்டு. ஓராண்டு வளர்ந்த அத்திக் கிளையைத் துண்டுகளாக நறுக்கி, 10, 12 அடிக்கு ஒன்றாக நட்டுப் பயிர் செய்வார் கள். அப்படி வளர்ந்த மரம் 2, 3 ஆண்டுகளில் தொடங்கி, 15, 20 ஆண்டுகள் வரை பலன் தரும்.