கலைக்களஞ்சியம்/அத்திப்பூச்சி

அத்திப்பூச்சி :ஒரு மிகச் சிறிய குளவி; சால்சிடீ என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பல இனங்களுண்டு. அவை அத்தி, அரசு, ஆல் முதலிய அத்திச்சாதி மரங்களின் பூங்கொத்துக்களில் வளர்பவை. இவற்றில் மிக்க புகழ் பெற்றது உயர்ந்த சீமை யத்திப்பழம் உண்டாவதற்கு இன்றியமையாத ஓர் இனம்; சீமை யத்தியின் வகையாகிய காட்டத்தி மரத்தின் மஞ்சரியில் வளர்வது. அதற்கு பிளாஸ்ட்டோபாகா குரோஸ்ஸோரம் (Blastophaga grossorum) என்று பெயர். இதில் ஆண் பூச்சிக்குச் சிறகில்லை. பெண்ணுக்குச் சிறகு செம்மையாக வளர்ந்திருக்கும். பெண் அத்திப்பூச்சி, அத்தி மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூவின் சூலறைக்குள் முட்டையிடும். முட்டை பொரிந்து புழுவாகிப் பிறகு கூட்டுப் புழுவாகி, அப்பால் அதிலிருந்து குளவி வெளிவரும். முட்டையிடப்பட்ட மலட்டுப்பூக் கரடாகிவிடும். கரட்டிலிருந்து வெளிப்படும் குளவி அத்தி மஞ்சரியிலிருந்து புறத்தே வரும். வருகிற வழியில் ஆண்பூக்களிலிருந்துஉண்டாகும் மகரந்தத்தூள் அதன் உடலில் ஒட்டிக்கொள்ளும். பூச்சி வேறொரு மஞ்சரியில் புகுந்தால், அங்குள்ள பெண் பூக்களில் இந்த மகரந்தத்தூள் சேரும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. சீமை அத்திப்பழங்களில் சில உயர்ந்த வகைகளைப் பயிர் செய்வோர் அந்த அத்தியின் காட்டுவகைக் கிளைகளை மஞ்சரிகளோடு தந்து, அந்த உயர்ந்த மரங்களில் மகரந்தச்சேர்க்கை நிகழும்பொருட்டுக் கட்டுவார்கள். பார்க்க: அத்திச்சாதி, சீமை அத்தி.