கலைக்களஞ்சியம்/அத்வைதம்
அத்வைதம் என்பது வேதாந்த மதங்களுள் ஒன்று. "பிரமம் இரண்டற்ற மூலப் பொருள் ; பலவாகக் காணப்படும் உலகம் பொய்த் தோற்றம்; ஜீவன் பிரமத்தைவிட வேறன்று" என்று அத்வை தம் கூறுகிறது. அத்வைதம் என்ற சொல்லுக்கு இரண்டற்றது என்பது பொருள். ஆசாரிய சங்கரர் இம் மதத்தின் கொள்கைகளைத் தாம் வரைந்த நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். இம்மதம் அவர் இயற்றியதன்று. உபநிஷதங்களில் பலவிடங்களில் அத்வைதம் போதிக்கப்படுகின்றது. முக்கியமாக யாஞ்ஞவல்கியரின் உபதேசங்களில் இதைக் காணலாம். சங்கரருக்கு முன்வந்த கௌடபாதர் அத்வைதக் கொள்கைகளை யுக்திகளைக் கொண்டு நிலைக்கச் செய்தார்.
ஏனைய வேதாந்த மதங்களைப்போல் அத்வைதமும், மூன்று பிரஸ்தானங்களை மூல நூல்களாகக் கருதுகின் றது. அவையாவன : உபநிஷதங்கள், பிரம சூத்திரம், பகவற்கீதை. கௌடபாதர் மாண்டூக்கிய உபநிஷதத் திற்கு வியாக்கியானமாகக் காரிகை யொன்றை இயற்றி யுள்ளார். சங்கரர் முக்கியமான உபநிஷதங்களுக்கும், மற்ற இரண்டு பிரஸ்தானங்களுக்கும் பாஷியம் எழுதி யுள்ளார். அத்வைதத்தைச் சுருக்கமாகவும் தெளிவாக வும் விளக்கி, அவர் வரைந்துள்ள விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ முதலிய தனி நூல்களும் உண்டு. பிருஹதாரணியகம், தைத்திரீயம் முதலிய உபநிஷதங் களுக்குச் சங்கரர் எழுதிய உரைகளுக்கு, அவருடைய சீடரான சுரேசுவரர் 'வார்த்திக'ங்கள் செய்துள்ளார். நைஷ்கர்ம்ய சித்தி என்பது சுரேசுவரருடைய மற்றொரு நூல். சங்கரரின் இன்னொரு சீடரான பதுமபாதர் தம் குருவின் சூத்திர பாஷியத்திற்கு ஒரு வியாக்கியானம் எழுதினார். அவர் எழுதியதில் முதல் ஐந்து பாதங்களுக்குள்ள வியாக்கியானமே அழியாமல் வந்திருக்கிறது. ஆகையால் அதற்குப் பஞ்சபாதிகை என்ற பெயர் ஏற்பட்டது. இதற்குப் பிரகாசாத்மன் என்பவர் பஞ்சபாதிகா விவரணம் என்ற ஒருரை வரைந்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு விவரணம் என்ற மரபு அத்வைதத்தில் தோன்றியது. விவரணக் கொள்கைகளைத் திரட்டி விவரணப் பிரமேய சங்கிரகம் என்ற நூலைப் பாரதீ தீர்த்த வித்யாரணியர் இயற்றினார். இவருடையதே பஞ்சதசீ என்னும் காவியமும். அத்வைதத்தில் சங்கரருக்குப்பின் வந்த மற்றொரு, மரபு பாமதி என்பது. இததற்கு மூல நூல் வாசஸ்பதி மிசிரர் சங்கரருடைய சூத்திர பாஷியத்திற்கு எழுதிய பாமதி என்னும் வியாக்கியானம். அமலானந்தர் எழுதிய கல்பதரு பாமதீயின் விளக்கம். இதற்கு உரை, அப்பைய தீட்சிதரின் கல்பதரு பரிமளம் என்பது. அத்வைத மதத்திலுள்ள பேதங்களை வகுத்துச் சித்தாந்தலேச சங்கிரகம் என்னும் நூலை அப்பையர் இயற்றினார். ஏனைய அத்வைத நூல்களின் முக்கியமான சில கிரந்தங்கள் : சர்வஞ்ஞாத்ம முனியின் சம்க்ஷேய சாரீரகம் : ஸ்ரீஹர்ஷரின் கன்டனகண்டகாத்யம் ; சித்சுகரின் தத்வப்பிரதீபிகை ; மதுசூதன சரஸ்வதியின் அத்வைதசித்தி ; தர்மராஜரின் வேதாந்த பரிபாஷை : சதானந்தரின் வேதாந்த சாரம். சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற மொழிகளிலும் வேதாந்த நூல்கள் உண்டு. இந்தியில் நிச்சலதாசர் எழுதிய விசார சாகரம், விருத்திப் பிரபாகரம் என்னும் நூல்களும், தமிழில் தாண்டவராய சுவாமிகள் எழுதிய கைவல்லிய நவநீதம் என்னும் நூலும் மக்களுக்கு மிகவும் உபயோகமுள்ளவை.
அத்வைத மதத்தில் ஆறு அளவைகள் அல்லது பிரமாணங்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. அவையாவன: பிரத்தியட்சம், அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி, சப்தம். (1) பிரத்தியட்சப் பிரமாணம் என்பது சாதாரணமாக இந்திரியங்களுக்கும் விஷயங்களுக்கும் உள்ள சேர்க்கை. இதனால் ஏற்படும் ஞானம் பிரத்தியட்ச ஞானம். உதாரணமாகக் கண்களுக்கும் ஒரு விஷயத்தின் உருவத்திற்கும் சம்பந்தம் உண்டாகும்போது காட்சி யேற்படுகின்றது. வெளியேயுள்ள பொருள்களை யறிவதற்குத்தான் இந்திரியங்களின் உதவி வேண்டும். நம் மனத்திலுள்ளவற்றை யுணர்வதற்கு மனமேதான் காரணம். இதற்கு மானதப் பிரத்தியட்சம் என்று பெயர். (2) அனுமானம் என்பது ஒரு குறியின் ஞானத்தின் வாயிலாக, அது எதைக் குறிக்கின்றதோ அதையறிவது. புகையைக் கண்டு, நெருப்பை அனுமானிக்கிறோம். குறிக்கு ஏது வென்றும், குறிக்கப்படும் பொருளுக்குச் சாத்தியம் என்றும் பெயர். இவ்விரண்டுக்கும் உள்ள சம்பந்தம் வியாப்தி, விரிவாகவுரைக்கப்படும் அனுமானத்திற்கு ஐந்து அவயவங்கள் உள்ளன. உதாரணமாக: குன்றில் நெருப்பு உள்ளது (பிரதிஞ்ஞை); அங்கே புகையிருப்பதால் (ஏது); எங்கெங்குப் புகையுளதோ அங்கங்கு நெருப்புளது, அடுக்களையிலுள்ளதுபோல (உதாரணம்); நெருப்பால் வியாபிக்கப்பட்ட புகை குன்றில் உளது (உபாயம்); ஆகையால் குன்றில் நெருப்புளது (நிகமனம்). (3) உபமானம் என்பது இரண்டு பொருள்களை ஒப்பிட்டுப் பார்ப்பது. இதனால் ஏற்படும் ஞானம் உபமிதி. கவயம் என்ற விலங்கு பசுவைப் போன்றது என்று ஒருவன் கேள்வியினால் தெரிந்துகொள்கிறான். பின்னர் வனத்திற்குச் சென்று கவயத்தைப் பார்க்கிறான். அப்பொழுது தான் காணும் விலங்கைப் போலுள்ளது பசு என்று உணர்கிறான். இது உபமிதி ஞானம். (4) அர்த்தா பத்தி என்பது, ஒரு விஷயம் நேரிடையாக விளங்கவில்லையானால், அதை விளக்கக் கூடிய ஒன்றைக் கற்பிப்பது. ஒருவன் பகற்பொழுதிலே சாப்பிடுவதில்லை; ஆனால் இளைக்காமல் இருக்கிறான். இவ்விரண்டையும் பொருத்துவதற்காக "அவன் இரவில் உண்கின்றான்" என்று ஊகிக்கின்றோம். (5) அனுபலப்தி என்பது ஒரு பொருளின் இன்மையை உணர்வது. "தரைமீது குடம் இல்லை" என்று குடத்தின் இன்மையை அனுபலப்தி மூலம் அறிகின்றோம். (6) சப்தம் என்பது கேள்விஞானம். பதங்களின் சேர்க்கைகளாகிய வாக்கியங்களினின்று அறிவு ஏற்படுகின்றது. சப்தப் பிரமாணம் மற்றப் பிரமாணங்களைவிட முக்கியமானது ; ஏனெனில், ஆத்ம ஞானம் உபநிஷத வாக்கியங்களிலிருந்துதான் ஏற்படவேண்டும். மீமாம்சகர்கள் வேதங்களின் தாற்பரியம் கர்மம் என்று வாதிக்கின்றார்கள். ஏனென்றால், அவர்களுடைய கொள்கைப்படி, செயலை யொட்டியே ஒரு வாக்கியத்திலுள்ள பதங்கள் பொருளைத் தெளிவுறுத்துகின்றன. வேதாந்திகளோ என்றால், செயலோடு சம்பந்தப்படாத ஒரு பொருளையும் வாக்கியத்தினின்று அறியலாம் என்கிறார்கள், மிகவும் ஒளி பெற்றவன் சந்திரன் என்றபோது சந்திரனின் சொரூபத்தையுணர்கிறோம் ; இங்குச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை. உபநிஷதங்கள் ஆத்ம-பிரம்ம வஸ்துவை இவ்வாறே உணர்த்துகின்றன.
அறிவது என்ற வியவகாரத்தில் நான்கு அமிசங்கள் உள்ளன. (1) அறிபவன் (2) அறியப்படும் பொருள் (3) அறியும் வழி (4) அறிவு. இந்நான்கும் ஒரே ஆத்ம வஸ்துவின் பேதங்கள் என்பது அத்வைதத்தின் கொள்கை. ஆத்ம சைதன்னியம் அந்தக்கரணத்தில் பிரதிபலித்து, அறிபவன் (பிரமாதா) என்ற பெயரையடைகின்றது. அறியப்படும் பொருளிலும் அதே சைதன்னியம் உள்ளது (விஷயம்). அஞ்ஞானத்தால் இவ்விரண்டும் வேறாகக் காணப்படுகின்றன. பிரமாணவியவகாரத்தால் இவ்விரண்டிற்கும் சம்பந்தம் ஏற்படுகின்றது. இதை ஏற்படுத்தும் கருவி விருத்தி யென்னும் மனத்தின் பரிணாமம். விருத்தியிலும் (பிரமாணம்) சைதன்னியம் விளங்குகின்றது. விருத்தியின் வியாபாரத்தினால் ஞானம் (பிரமிதி) உதிக்கின்றது. இதுவும் ஆத்ம சைதன்னியமே. இவ்வாறு பிரமாண வியவகாரத்தை ஆராய்ந்தாலும்கூட "ஆத்மா வொன்றே உளது ; அதன் சொரூபம் ஞானம்" என்பது விளங்கும்.
இனி, உண்மை எது, பொய் எது என்று விசாரிப்போம். உண்மை யென்பது ஞானத்தின் தன்மை ; ஒரு ஞானம் பொய்யாவது ஞானத்தின் வெளியேயுள்ள சில சந்தர்ப்பங்களினால் ஆகும். இதை சமஸ்கிருதத்தில் "ப்ராமாண்யம் ஸ்வத: அப்ராமாண்யம் பரத" என்பார்கள். பொய்ஞ்ஞானம் என்பதே அஞ்ஞானம். முத்துச்சிப்பியை வெள்ளியென்று மதிப்பது அஞ்ஞானத்தால். அஞ்ஞானத்தின் விஷயத்தில் சொரூபத்தைப் பற்றிய விவாதம் இந்திய தரிசனங்களிடையேயுண்டு. (1) பௌத்த மதத்தின் ஒரு சாராரான சூனியவாதிகள், இல்லாதது தோன்றுகின்றது என்று கூறுகிறார்கள் (அஸத்க்யாதி), (2) பௌத்த மதத்தின் மற்றொரு சாராரான விஞ்ஞான வாதிகள் உள்ளே விஞ்ஞான ரூபமாயுள்ள பொருள் தவறாக வெளியே தோன்றுகின்றது என்கிறார்கள் (ஆத்மக்யாதி). (3) மீமாம்சை மதத்தின் ஒரு சாராரான பிராபாகரர்களும் சாங்கியர்களும் இவ்வாறு உரைக்கின்றனர். "இது வெள்ளி" என்று சொல்லும்போது, இது என்ற ஞானமும், வெள்ளியென்ற ஞானமும் தனித்தனியே உண்மைதான். இது என்பதை நேரிடையே பார்க்கிறோம். முன் பார்த்த வெள்ளியை நினைவு கூர்கின்றோம் (ஸ்மரிக்கிறோம்). தவறாக இவ்விரண்டையும் சேர்த்து, “இது வெள்ளி” யென்று நினைக்கிறோம். இதுவே அஞ்ஞானம் (அக்யாதி). (4) மீமாம்சை மதத்தின் மற்றொரு சாராரான பாட்டர்களும், நையாயிகர்களும் பொய்யென்பது ஒன்றை மற்றொன்றாக மதிப்பது என்று கருதுகிறார்கள். கடையிலுள்ள வெள்ளியை இங்கே காண்கிறோம். இதற்குக் காரணம் முத்துச் சிப்பிக்கும் வெள்ளிக்கும் உள்ள ஒப்பு, சாதிருசியம் (அன்யதாக்யாதி). (5) அத்வைதிகள் இவ்வாறு பகர்கின்றனர் :- பொய்யாகத் தோன்றும் வெள்ளி உள்ளதும் அன்று, இல்லாததும் அன்று. அது தோன்றுவதால் “அது இல்லை' என்று சொல்லிவிடலாகாது. முத்துச் சிப்பியின் உண்மை ஞானம் உதயமாகும்போது வெள்ளி மறைந்துவிடுவதால் அதை உள்ளது என்றும் கூற முடியாது. ஆகையால் அது அநிர்வசனீயம் (விவரிக்க முடியாதது) ; அவித்தையினால் உற்பத்தி செய்யப்பட்டது ; ஞானத்தினால் அழிவையடைவது (அநிர்வசனீயக்யாதி). க்யாதி என்பது பொய்யைப் பற்றிய வாதம்.
உண்மையின் இலக்கணம் 'என்றும் உள்ளது ; காலம் முதலிய அளவிற்கு உட்படாதது' என்பதாம். இவ் விலக்கணத்தின்படி பார்த்தால், பிரமம் அல்லது ஆத்மா வொன்றே உண்மை. இதற்குக் குணங்கள் இல்லை ; குறிகள் இல்லை. இது சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாதது. ஆகையால்தான் உபநிஷதங்கள் இது அன்று, இது அன்று (நேதி நேதி) என்று விலக்கல் வாயிலாகப் பிரமத்தின் சொரூபத்தைப் போதிக்கின்றன. இதுவே நிர்க்குணப் பிரமம். நம்முடைய புத்திக்குச் சகுணமாக (குணங்களோடு கூடியதாக)த் தோன்றுகிறது. இந்த நிலையில் பிரமம் உலகத்திற்குக் காரணம். சகுணப் பிரமம் அல்லது ஈசுவரன் உலகிற்கு நிலத்த காரணம் மாத்திரம் அல்ல ; உபதான காரணமும் அப்பொருளே. பிரமத்தினிடமிருந்து உலகம் பிறக்கின்றது ; பிறந்தபின் அதனிடத்தே கலக்கின்றது; இறுதியில் அதனுள்ளே அடங்குகின்றது. ஆனால் உலகம் பிறப்பதும், நிலைப்பதும், அடக்குவதும் வாஸ்தவம் அல்ல. பால் தயிராக எவ்வாறு மாறுகிறதோ, அவ்வாறு பிரமம் உலகாகப் பரிணமிப்பது கிடையாது. கயிற்றினிடத்தே பாம்பு தோன்றுவது போல, பிரமத்தை ஆதாரமாகக் கொண்டு உலகம் தோன்றுகிறது. இந்தக் கொள்கைக்கு விவர்த்த வாதம் என்று பெயர். அதாவது பிரபஞ்சம் மாயை அல்லது மித்யை (பொய்த் தோற்றம்) என்பதாம்.
உலகம் மாயை யென்று சொல்வதால் அத்வைதத்திற்கும் சூனியவாதத்திற்கும் வேறுபாடில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது தவறு. சூனிய வாதம் “உண்மை என்பது ஒன்றுமில்லை” என்று கூறுகின்றது. அத்வைதம் ”பிரமம் ஒன்றே உண்மை” என்று போதிக்கின்றது. ”பாம்பும் உண்மையன்று, கயிறும் உண்மையன்று. இல்லாதது வியவகாரத்தில் கயிறாகவும் பிரமத்தில் பாம்பாகவும் தோன்றுகிறது” —இது சூனியவாதம். "உண்மை பிரமம் ஒன்றே. இது வியவகாரத்தில் கயிறு முதலியனவாகவும் பிரமத்தில் பாம்பு முதலியனவாகவும் தோன்றுகிறது” -இது அத்வைதம். இத் தோற்றத்திற்குக் காரணம் மாயை. மாயை ஒரு பாவ பதார்த்தம், அதாவது அது ஞானத்தின் அபாவம் அன்று ; அது மித்யா ஞானம். மேலும், அது அனாதி, அதாவது ஆதியற்றது. காலம் மாலையின் காரியமானபடியால், மாயை எப்பொழுது தோன்றிற்று என்னும் கேள்விக்கு அர்த்தமில்லை. ஆகையால் மாயை அனாதி. ஆனால், அது நித்தியமன்று. நித்தியமான வஸ்து பிரமம் ஒன்றே, மாயை எவ்வியல்புடையது என்று வினவுங்கால் நாம் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. அது சத்தும் அன்று ; அசத்தும் அன்று. ஆகையால், அது அநிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. அது எத்தகையது என்று சொல்ல இயலாது. ஆனால், ஞானம் உதயமாகும்போது, எவ்வாறு சூரியன் முன் இருள் நிலைக்காதோ, அவ்வாறு மாயை நில்லாது மறைந்துவிடுகிறது.
அவித்யை அல்லது அஞ்ஞானத்தினால், ஜீவன் தான் வேறு, பிரமம் வேறு, என்று கருதுகிறான் ; தானல்லாதவற்றைத் தானாகப் பாவிக்கிறான். இதற்கு அத்தியாசம் என்று பெயர். ஆத்ம தருமங்களை அனாத்மாவிலும், அனாத்ம தருமங்களை ஆத்மாவிலும் ஏற்றி, ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது அத்தியாசம். இதனால்தான் ”நான் இது”, ”என்னுடையது இது” என்ற வியவகாரம் ஏற்படுகிறது. மகன், மனைவி முதலியவர்கள் இன்புற்றோ துன்புற்றோ இருந்தால், ஒருவன் ”நான் இன்புற்றுள்ளேன், நான் துன்புற்றுள்ளேன்” என்று கருதுகிறான். அதுபோலவே, தேகம், இந்திரியங்கள், மனம் முதலியவற்றின் தருமங்களை ஆத்மாவின்மீது ஆரோபிக்கிறோம். “நான் பருத்திருக்கிறேன், இளைத்திருக்கிறேன். நான் குருடு, செவிடு; நான் எண்ணுகிறேன், விரும்புகிறேன்” என்று தவறாக நாம் மதிக்கிறோம். உண்மை இதுவன்று. ஜீவாத்மாவின் வாஸ்தவ சொரூபம் பிரமம். இந்த உண்மையை தத் த்வம் அசி முதலிய மகாவாக்கியங்கள் போதிக்கின்றன.
இம் மகாவாக்கியங்கள் ஜீவனுக்கும் பிரமத்துக்கும் உள்ள அபேதத்தைப் போதிக்கின்றன. தத் த்வம் அசி என்ற வாக்கியத்திற்கு ”அது நீ, நீ அதுவாய் இருக்கின்றாய்” என்பது பொருள். இது வாச்சியப் பொருள் அன்று, லட்சியப் பொருள். வாச்சியம் என்பது ஒரு சொல்லுக்குள்ள நேரான பொருள். வாட்சியம் என்பது குறிப்புப் பொருள். சிங்கம் என்னும் சொல்லின் வாச்சியம் வனத்திலுள்ள ஒரு விலங்கு ; ஒரு மனிதனைக் குறிப்பிட்டு ”அவன் சிங்கம்” என்று சொன்னால், இங்கே சிங்கத்தின் சில குணங்களைப் பொருளாகக் கொள்ளவேண்டும். இலட்சியப் பொருள். தத் த்வம் என்ற பதங்களுக்கும் இலக்கணையால் பொருள் கொள்ள வேண்டும். தத் என்ற சொல்லுக்கு வாச்சியம், சர்வ சக்தி முதலிய குணங்கள் வாய்ந்த ஈசுவரன் ; த்வம் என்ற சொல்லுக்கு அற்ப சக்தி முதலிய குணங்கள் படைத்த ஜீவன். இவ்விரண்டிற்கும் அபேதம் இருக்க முடியாது. ஆகையால் தத் த்வம் என்ற இரண்டு பதங்களுக்கு லட்சியமான பிரமத்தைப் பொருளாகக் கொள்ளவேண்டும். இது மகா வாக்கியத்தின் அகண்டார்த்தம் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையைச் சாட்சாத்கரிப்பது மோட்சம்.
மோட்சத்தைப் பெறுவதற்கு வழி ஞானம். கருமம் சாதனமாகாது. கருமத்தினால் இல்லாத ஒரு பொருளை உற்பத்தி செய்யலாம் (உற்பத்தி); ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை யடையலாம் (பிராப்தி); ஒன்றை மற்றொன்றாக மாற்றலாம் (விகாரம்); மலினமாயுள்ள வொன்றைத் துடைத்துச் , சுத்தமாக்கலாம் (சம்ஸ்காரம்); ஆத்மா எப்பொழுதும் உள்ளது, எங்கும் உள்ளது; நிர்விகாரமாய், நித்திய சுத்தமாய் விளங்குவது. ஆகையால் அது கருமத்திற்கு விஷயமாகாது. அதையடைவது என்று சொல்வதுகூட ஔபசாரிகம். எவ்வாறு ஒருவன் தான் அணிந்த மாலை தன் கழுத்திலிருக்க, அதை மறந்து, அங்குமிங்கும் தேடி அலைவானோ, அது போல நாம் ஆத்மாவைத் தேடுகிறோம். எவ்வாறு கழுத்திலுள்ள மாலையை யடைய வழி, அதைத் தெரிந்து கொள்வதோ, அவ்வாறே ஆத்மாவையடைய மார்க்கம் ஞானம். நிஷ்காமகருமத்தினால் மனம் சுத்தமடைகிறது; உபாசனையால் ஒருமுகப்படுகிறது. அப்பொழுது ஒருவன் ஞானமார்க்கத்திற்கு அதிகாரியாகிறான் ; வேதாந்த விசாரத்தில் ஈடுபடுகிறான்.
வேதாந்த விசாரத்தை யாரம்பிப்பதற்குமுன் நான்கு சாதனங்களை ஒருவர் பெறவேண்டும் என்று சங்கரர் கூறுகின்றார். (1) நித்தியானித்திய வஸ்து விவேகம் : அழியாதது ஆத்மா, அழியக்கூடியவை மற்றப்பொருள்கள் என்ற பகுத்தறிவு. (2) இஹாமுத்ரார்த்தபலபோக விராகம் : இந்த லோகத்திலும் பரலோகத்திலும் நாம் அடையக்கூடிய சுகத்தை நாடாதிருத்தல். (3) சமாதி சட்க சம்பத்து : சமம் முதலிய ஆறு குணங்கள், சமம் மனத்தை அடக்குதல் ; தமம் இந்திரியங்களைத் தத்தம் விஷயங்களிலிருந்து திருப்புவது ; உபரதி - திருப்பிய இந்திரியங்களை மறுபடியும் வெளிப்போகாது காத்தல் ; திதிட்சை-வெப்பம், குளிர் முதலிய இரட்டை யனுபவங்களைப் பொறுத்தல்; சமாதானம்- மனத்தை ஒரு நிலையில் வைப்பது; சிரத்தை - வேதாந்த போதனையில் ஆர்வம் கொள்ளுவது. (4) முமுட்சுத்துவம் : மோட்சத்தைப் பெறவேண்டும் என்ற இச்சை. இந்த நான்கு சாதனங்களையும் பெற்ற ஒருவன் வேதாந்த விசாரம் செய்ய வேண்டும். சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பவை ஞானமார்க்கத்தின் பகுதிகள். சிரவணம் என்பது வேதாந்த வாக்கியங்களின் அர்த்தத்தைக் குருவினிடமிருந்து கேட்பது. மனனம் என்பது கேட்ட பொருளைச் சிந்திப்பது. நிதித்தியாசனம் என்பது சிந்தித்துத் தெளிந்ததை இடைவிடாது தியானிப்பது. ஆத்ம சாட்சாத்காரம் பெற நேரிடையான சாதனம் சிரவணமா? தியானமா? என்ற விவாதமொன்று அத்வைதிகளிடையே உளது. விவரணப் பிரஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் சிரவணம் என்றும், பாமதீப் பிரஸ்தானத்தைப் பின்பற்றுபவர்கள் தியானம் அல்லது பிரசங்கியானம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இவ்விரு வகுப்பினரும், “சிரவணத்தினாலோ அல்லது பிரசங்கியானத்தினாலோ ஞானம் உதயமாகின்றது. இதுவே மோட்சத்திற்குச் சாதனம்” என்று ஒப்புக் கொள் கின்றனர்.
இந்தப் பிறப்பிலேயே நாம் மோட்சத்தைப் பெறலாம். அவ்வாறு மோட்ச மடைந்தவர்கள் ஜீவன் முக்தர்கள். மோட்சம் என்பது நம்முடைய சொரூபமானபடியால், அதை வேறு தேசத்திலோ வேறு காலத்திலோ அடைய வேண்டும் என்பதில்லை. மோட்சத்தை மறைத்து நிற்பது அஞ்ஞானமானபடியால், அஞ்ஞானத்தின் அழிவே மோட்சம். ஜீவன் முக்தர்கள் தேகம் தாங்கி ஜீவிப்பவர்கள் போல நம்முடைய அனுபவத்திற்குக் காணப்படுகிறார்கள். உண்மையில் அவர்களுக்குத் தேகமேயில்லை. அவர்கள் அவ்வாறு காணப்படுவது நம்மையும் முக்தர்களாக ஆக்குவதற்காக. அத்வைத அனுபவத்தைச் சங்கரர் உபதேச ஸாஹஸ்ரீயில் இவ்வாறு விளக்குகிறார் : ”ஞானமே உருவாயும், ஆகாயத்தைப் போல மேலான தாயும், எப்பொழுதும் ஒரே பிரகாசமாயும், பிறப்பற்றும், ஒன்றாகவும், அழிவற்றும், மலமற்றும், எங்கும் வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நான்— எப்பொழுதும் முக்தன் நான்”. டி. எம். பி. ம.
தமிழ் நூல்களில் அத்வைதம் : தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுந்தது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இங்கு அத்வைதக் கொள்கையைக் காண்கிறார்; காஞ்சித்திணைச் சூத்திரத்தில் 'வரும் பாங்கரும் சிறப்பின்' என்ற சொற்றொடர் துவைதமற்ற கைவல்ய மோட்ச நிலையையும் பாடாண் திணையில் வரும் கந்தழி என்பது மற்றொரு பற்றுக்கோடு வேண்டாது தன்னிற்றானே ஒளிரும் பிரமத்தையும் குறிப்பதாகக் கருதுகின்றார். 'மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்' என்று எழுத்ததிகாரம் கூறுவது, ”எழுத்துக்களில் அகரமாகின்றேன்” என்று கீதை கூறும் கருத்தே ஆம்.
கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தினைச் சுற்றிப் பிறந்த சங்க நூல்களிலும் அத்வைதக் கொள்கையை இந்த உரையாசிரியர் காண்கிறார். திருமுருகாற்றுப்படை பிரமோபதேசமாம், ”புலம் பிரிந்து உறையும் செலவு,” ”உலகத்து ஒருநீயாகத் தோன்ற” என்ற தொடர்களை அவர் வற்புறுத்துகின்றார். மதுரைக்காஞ்சியில் ‘நின்னொடு முன்நிலை எவனோ?' (ஆன்மாவாகிய நினக்கு உன்முன் நிற்கும் உலகப் பொருள்களோடு என்ன உறவு?), 'கெடுக நின் அவலம்' (நின் மாயை கெடுவதாக), 'கொன் ஒன்று' (பெரிதான அத்வைதம் பிரமம்), 'தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட' (பிரம வித்துக்கள் பிரமானுபவக் கொள்ளையை அனுபவித்த) என்று வருவன எல்லாம் வேதாந்தமே பேசுவனவாக உரை கூறுகிறார். பரிபாடலில் வரும் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் அத்வைத அனுபவத்தின் எதிரொலிகள் பல கொண்டு விளங்குகின்றன. ஆனால் அனைவரும் இந்த உரைகளை ஒப்புவதில்லை.
திருக்குறளின் முதற் குறள் அத்வைதமே பேசுகின்றது என்பது பற்றிய போராட்டம் சென்ற நூற்றாண்டில் எழுந்தது. துறவியலின் ஞானப் பகுதியில் அத்வைதிகள் தங்கள் கருத்தினைக் காண்பது அருமையன்று. சார்பு கெட ஒழுகுதல், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்டல், வாய்மை வேண்டல் (சோகம் பாவனை), இருள் (அவிச்சை) முதலிய குறிப்புக்கள் அதற்கு வாய்ப்பானவை. பொது நூலாகச் சிறந்தது எவருக்கும் இடங் கொடுப்பதில் வியப்பில்லை.
அனுபூதிமான்களின் காட்சி அத்வைதக் காட்சியே. அவர்கள் பாடலுக்குப் பொருள் கொள்வோரும் அத்வைதம் என்ற சொல்லுக்குப் பல்பொருள் கொள்வது போலப் பலவகையாகப் பொருள் கொள்வதும் இயல்பே. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச் செய்த நாலாயிரமும் பன்னிரு திருமுறைகளும் அனுபூதிப் பாடல்களாகும். உபநிடதம்போல, இவை தென்னாட்டின் திருமறைகள். சைவர்களும் வைணவர்களும் இவற்றைத் தங் கொள்கையின் ஆணிவேராகக் கொள்வதுபோல அத்வைதிகளும் கொள்கின்றனர். தத்துவ ராயர் தம்முடைய பரணிகளில் இவற்றைப் பொன்னே போல் போற்றிக் கையாள்வதனைக் காணலாம்; அவர் திரட்டிய பெருந்திரட்டில் அனுபூதிப்பணையில் இந்த அனுபூதிப் பாடல்களே நிறைந்திருக்கக் காணலாம்.
நச்சினார்க்கினியரும் திருவாசகப் பாடல்களை அத்வைதப் பாடல்கள் என எடுத்துக் காட்டுவார். ”எல்லாம் பிரமம்; எல்லாம் நான் ; எல்லாம் மித்தை” என்பவற்றில் எல்லாம் பிரமம் என்பது எங்கும் பேசப்படக் காணலாம். ”பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதை குண மாகாமே” என்பது எல்லாம் மித்தை என்பதனை வற்புறுத்துகின்றது என்பர் அத்வைதிகள். சிவமாக்கி எனையாண்ட, நீயலால் பிறிதுமற்றின்மை, ஒன்று நீ அல்லை அன்றி ஒன்றில்லை என்ற பகுதிகளையும் எடுத்துக் காட்டுவர். பிறமதத்தினர் இவற்றிற்கு வேறு வகையாகத் தங்களுக்கு ஏற்பப் பொருள் கொள்வர். மாயாவாதச் சண்டமாருதம் என வரும் பகுதி பௌத்தம் முதலிய பிற மதங்களைக் குறிப்பதாகவும் கொள்வர். இவ்வாறு பிற அருளிச்செயல்களிலிருந்தும் எடுத்துக் காட்டலாம்.
சங்கரரே அத்வைதக் கொள்கையை உருப்படுத்தியவர். இவர் பிறந்தது மலையாள நாட்டுக் காலடி என்னுமிடம். சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்வாரும் உண்டு. மலையாள நாடு, தொல்காப்பியர் காலமுதல், சேரமான் பெருமாள் நாயனார், வேணாட்டடிகள் முதலியோர் காலம்வரை மிகச் சிறந்த தமிழ்நாட்டுப் பகுதியாகவே விளங்கியது. ஆதலின் சங்கரர் தமிழ் நாட்டவரே. அவர் தந்த கொள்கை அந்த வகையில் தமிழ்நாட்டுப் புதையலே ஆம். சௌந்தரிய லகரி அவர் பாடியதானால், அதில் திராவிட சிசுவெனத் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைப் புகழ்ந்து பாடி, அவர் பாடல்களின் இனிமை பெருமைகளில் மனமுருகி ஈடுபடுகின்ற இவர், தமிழை நன்குணர்ந்தவராதல் வேண்டும். திருஞான சம்பந்தர், “ஈறாய்த் திசை தானாய் வேறாய் உடனானான்“, “தனதுரை எனதுரையாக“ எனப் பாடும் இடங்கள் அத்வைதிகள் பாராட்டும் இடங்கள். சங்கரர் நிலைநாட்டிய காமகோடி பீடம் காஞ்சியிற் பிறந்து இன்றளவும் அத்வைதக் கொள்கையை வளர்த்து வருகிறது. தமிழ் நாட்டுச் சுமார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள் என்ற நிலைமை ஏற்பட்டுள்ள தன்றே?
அத்வைதக் கொள்கை இந்திய நாடு முழுவதும் பரந்த பெருமை பெற்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்ந்ததற்கு இதுவே சிறந்த சான்றாம். பல பல நுட்ப வேறுபாட்டுடன் தழைத்துக் கிளைத்து இது இங்கு வளர்ந்தோங்கியது என்பதனை அப்பைய தீட்சிதரது சித்தாந்த லேச சங்கிரகம் தெளிவுறுத்துகிறது. அண்மைக் காலம்வரை அத்வைதத்தை வளர்த்த வடமொழி நூல்களும் தமிழ் நாட்டில் தோன்றி வந்தமைக்குத் திருவாரூரில் பிறந்த தர்மராஜ தீட்சிதரது வேதாந்த பரிபாஷையை எடுத்துக் காட்டலாம். வித்தியாரண்யரது நிழலில் தோன்றிய விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டிலும் பரந்தபோது, வித்தியாரண்யரது கருத்துக்கள் பெருவழக்குப் பெற்றுத் தமிழர் மனத்தினையும் கவர்ந்திருத்தல் வேண்டும். கோவிந்த தீக்ஷிதர் முதலானோர் தமிழ் நாட்டரசர்களது அமைச்சர்களாய் அத்வைதக் கொள்கையை வளர்த்த வரலாறும் உண்டு.
அத்வைதம் தமிழ்நாட்டில் வடமொழியில் வளர்ந்த வரலாற்றினும் தமிழ் மொழியில் வளர்ந்த வரலாறே சுவை மிக்கதொன்றாம் ; புதுமை நிறைந்ததொன்றாம். மேலே கூறிய சித்தாந்த லேச சங்கிரகம் ஒரு கொள்கையைச் சுட்டுகின்றது, (1.134) அத்வைதத்தினை வடமொழி உபநிடதச் சொற்கள் கொண்டு ஓதியுணர வேண்டுமேயன்றி, நாட்டு மொழி கொண்டு உணரலாகாது என்பதே அக்கொள்கை. தமிழ் மொழியிலும் அத்வைதக் கொள்கையை விளக்கும் நூல்கள் பரவியதால், முதல் நூல் ஆராய்ச்சி குன்றும் என்ற அச்சமே இந்தக் கொள்கை எழுந்ததற்குக் காரணமாகும். அத்வைதம் பேசும் தமிழர் வாயினையும் எழுதும் கையினையும் பூட்டி விலங்கிட எழுந்த இந்த முயற்சி பயனற்றுப் போயிற்று. தத்துவராயர் திரட்டிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில் எத்தனையோ அத்வைத நூல்கள் தமிழ் நாட்டில் உலவியதனை அறிகின்றோம். நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அழகிய மணவாள நாயனார் முதலிய பெரியோர்கள் இக்கொள்கைக்கு மாறாகத் தொல்காப்பியர், திருவள்ளுவர், நம்மாழ்வார் முதலியோரது பாடல்களைத் திருமறை எனப் புகழ்ந்து போற்றி வற்புறுத்தி வந்தனர்.
மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தவை சிறந்த பாவாணர் வழிவந்ததே இங்குள்ள பெருமை. வேம்பத்தூரார் என்ற அந்தணக் கூட்டத்தினர் தமிழ்ப் பாடல்கள் பாடுவதில் தலைசிறந்தவர்கள். அவர்களைச் சேர்ந்த ஆளவந்தான் மாதவ பட்டர் ஞானவாசிட்டத்தின் ஒரு பகுதியினைத் தமிழில் மொழிபெயர்த்தார் இதன் வழியே திருஷ்டி சிருஷ்டி வாதம் கூறும் பழுத்த வேதாந்தம் பரவலாயிற்று. ஸ்ரீ பட்டர் என்பவர் பகவற்கீதையைப் பரமார்த்த தரிசனம் என்ற பெயரால் அழகாக விருத்தத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் வெண்பாவில் ஒரு மொழிபெயர்ப்பும் வந்தது.
தமிழ் நாட்டில் அத்வைதத்தினை வளர்த்த தனிப் பெருமை தத்துவராயரைச் சேரும். இவர் சூத சங்கிதையிலுள்ள ஈசுவர கீதையை அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய குருவான சொரூபானந்தர், சொரூபசாரம் என்ற அத்துவித அனுபூதி நூலைத் தெள்ளத் தெளிய அருளிச் செய்துள்ளார். இந்தச் சொரூபானந்தருடைய குருவான சிவப்பிரகாசரே பெருந்திரட்டினைத் திரட்டினார் என்ற கொள்கையும் வழங்குகிறது. கலைக் கட்டளை, அனுபூதிக் கட்டளை என்ற இரண்டு பிரிவில் பலவகைக் கொள்கைகளையும் பலவகைக் கருத்துக்களையும் விளக்கும் பாக்களைப் பல நூல்களிலிருந்தும் திரட்டிய பாடல் தொகுதியே பெருந்திரட்டு. இதனைத் திரட்டியவர் தத்துவராயர் என்றும் கூறுவர். இதிலிருந்து தத்துவராயர் குறுந்திரட்டு என்ற அரிய நூலையும் தொகுத்துத் தந்துள்ளார். இவை தத்துவ நூற்களஞ்சியங்களாகும். புலவர்கள் பாராட்டும் கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்த வகைகளைத் தம் ஆசிரியர் மேல் பாடி, அடங்கன் முறை என இவர் உலகிற்கு உதவியுள்ளார். இவை அத்வைத ஊற்றுக்கள். அஞ்ஞானத்தோடும், மோகத்தோடும் எழுந்த போராட்டத்தில் அறிவு வெல்லும் வெற்றியைப் பாடுவனவே அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும். இன்று தமிழ் நாட்டில் வேதாந்தத்தினைக் கற்க விரும்புவார் முதன்முதல் விரும்பிக் கற்கும் சசிவன்ன போதம் என்ற நூல் மோக வதைப் பரணியில் வருவதே ஆம். இந்த நூல்கள் கற்றோருக்கு அன்றி மற்றோருக்குப் பயன் தாராமை நோக்கி அனுபூதிப் பாடல்களை நாடோடிப் பாடல்களாகத் தச்சன் பாட்டு, வண்ணான் பாட்டு, பல்லிப் பாட்டு என்று பலவகையில் பாடிப் பாடுதுறை என்ற பெயரோடு வேறோர் உலகிற்கு உதவியுள்ளார். இந்த முறையில் வேதாந்தத்தினைப் பரப்பும் முயற்சி இந்தத் தமிழ் நாட்டில் வேர் கொண்டுவிட்டது எனலாம். மெய்ஞ்ஞானத் தங்கம், மெய்ஞ்ஞானக் கொம்மி, ஞானக்குறவஞ்சி போன்ற நூல்கள் சென்ற நூற்றாண்டுவரை எழுந்து மக்கள் மனத்தினைக் கவர்ந்துவரக் காண்கிறோம். தத்துவராயரது காலத்தினை அறுதியிட்டுக் கூறுவதற்கு இல்லை. பெருந்திரட்டில் சேர்ந்த நூல்களையும் சேராத நூல்களையும் மனத்தில் வைத்துப் பார்த்தால் இவர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று ஒருவாறு கூறலாம்.
தமிழில் வழங்கும் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்லிய நவநீதமேயாம். இதன் தெளிவும் இனிமையும் சுவையும் வேறெங்கும் நாம் காணாதவை. இதனை இயற்றியவர் தாண்டவராயர். இது தமிழ் நாடு, மலையாள நாடு முதலியவற்றில் எங்கும் வழங்குவதொன்று. தெலுங்கு நாட்டிலும் இதன் மொழிபெயர்ப்பு, மக்கள் மனத்தினை உருக்குகின்றது. வடமொழியில் சங்கு கவி என்பார் இதனை மொழிபெயர்த்துள்ளார். ஆனால், அம் மொழிபெயர்ப்பினை வெளியிட்டவர் தமிழ் நூலே மொழிபெயர்ப்பு என்று மன்றாடுகிறார். இந்த நூல் 18-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது எனலாம்; பாமதீ வியாக்கியானம் பரவுவதற்கு முன் எழுந்த நூல் என்று கூறலாம்.
பிரபோத சந்திரோதயம் என்பது மாதை திருவேங்கட நாதர் என்ற அரச வள்ளல் 18ஆம் நூற்றாண்டில் இயற்றிய தமிழ் நூலாகும். இப்பெயர் கொண்ட வடமொழி அத்வைத நாடகம் உண்டு. அதன் மொழி பெயர்ப்பெனப் பெயரைக் கண்டுமட்டும் முடிவு செய்தல் ஆகாது. அதனைத் தழுவித் தமிழ் நூல்களின் கருத்துக்களை ஒட்டி எழுதிய காப்பியமாகும் இந்த நூல்.
ரிபு கீதை என்பது நடராசன் என்பவரால் மிக வெள்ளையான நடையில் எழுதப் பெற்ற நூலாகும். இந்த எளிமை ஒன்றே இதனைத் தமிழ் நாட்டில் பெருவழக்கினதாகச் செய்தது.
பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் முதலில் படிக்கின்றவர்களுக்குத் தத்துவக் கருத்துக்களை எளிதில் விளக்கும் நூல்கள் சைவ மடங்களிலிருந்து கட்டளைகள் என்ற பெயருடன் பல எழுந்தன. இந்த வகையில் அத்வைதக் கொள்கையை விளக்கும் நூல் ஒன்று நானா சீவ வாதக் கட்டளை என்ற பெயருடன் வெளிவந்தது. கட்டளை நூல்களில் இது தலை சிறந்து விளங்குகிறது. அத்வைதக் கொள்கைகளைப் பயில்வோர் முதன்முதல் படிக்கும் நூல் இதுவே ஆகும். தமிழில் இவ்வாறு பல நூல்கள் எழுந்ததன் பயனாகப் பார்ப்பனர் அல்லாதாரும் இக்கொள்கையைத் தெள்ளத் தெளிய அறிந்து ஒழுகலாயினர். பலர் துறவறம் பூண்டு அனுபூதி கைவரப்பெற்றனர். சில பெண் மக்களும் இதிலீடுபட்டு, அனுபூதி பெற்றுப் பல பெண்களை உய்வித்தனர். சாதி மதச் சழக்கினை அறுத்து, மக்களது ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை வளர்க்கும் பெருநெறியாக அத்வைதம் இந்த வழியில் வளர்ந்தது ; சூத்திர வேதாந்தம் என்று ஒரு சிலரால் இகழப்பட்டபோதும் அஞ்சாது நாட்டிற்குப் பெருந்தொண்டு புரிந்தது. சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் அருணாசல சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், பொன்னம்பல சுவாமிகள், நாராயண யோகீந்திரர், இரத்தின செட்டியார், கோ. வடிவேலுச் செட்டியார் முதலியோர் தமிழ் நாட்டின் ஊர்தோறும் சென்று, இக்கொள்கையைப் பொதுமக்களிடம் பரப்பினர்; நூல்கள் பதிப்பித்தனர் ; உரைகள் எழுதினர். இதனால் பல மடங்கள் சில நூற்றாண்டுகளாக எழுந்தோங்கி வருகின்றன. காமகோடி பீடத்தினை முன்னரே குறித்தோம். செட்டி நாட்டில் காரைக்குடிக்கருகில் உள்ள கோவிலூர் மடம் பார்ப்பனரல்லாதாரது அத்வைத மடமாகச் சிறந்து தொண்டாற்றி வருகிறது. இராமகிருஷ்ணரது அடிச்சுவட்டினைப் பின்பற்றிய விவேகானந்தரது இயக்கத்தில் ஈடுபட்ட மடங்கள் பல தோன்றியுள்ளன. தமிழ் நூல்களும் அச்சாகியுள்ளன. திருவண்ணாமலை இரமண நிலையத்திலிருந்தும் நூல்கள் வெளிவருகின்றன.
பாரதியாரது வேதாந்தப் பாடல்கள் இந்தப் பொது நெறியே செல்வனவாம். சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் சமரசப்படுத்தி, வேதாந்தத்தினை நிலைநாட்ட எண்ணி முயன்ற பெரியோர்கள் பலர். தாயுமானவர், அவிரோத வுந்தியார் பாடிய சாந்தலிங்கர், குமாரதேவர், கண்ணுடைய வள்ளலார்- இந்நால்வர் நூல்களிற் சிலவற்றிற்கு உரை எழுதிய சிதம்பர சுவாமிகள், இராமலிங்க அடிகள் முதலியோரும் இந்தப் பொதுநெறியைச் சேர்ந்த அத்வைதக் கொள்கையினர். இவ்வாறு நாம் கூறுவதனை மறுப்பவர்களும் உண்டு.
வடமொழியல்லாத பிறமொழிகளிலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இராமகிருஷ்ணர், விவேகானந்தர், இராமதீர்த்தர் முதலியோருடைய நூல்கள் எத்தனையோ முறை தமிழில் வெளிவருகின்றன. மொழிபெயர்ப்பு நூலையும் காப்பியப் புலவரான சிவப்பிரகாச சுவாமிகள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகிற்கு உதவினார்; கன்னட மொழியில் நிஜகுண முனிவர் எழுதிய வேதாந்த சூளாமணியை இப்பாவலர் பெருமானே மொழிபெயர்த்தார். வேதாந்தம் கற்பார் மிக விரும்பும் நூல்களில் இதுவும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தி மொழியில் உள்ள நூல்களில் ஈடுபட்ட தமிழர் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் சில சிறந்த மொழிபெயர்ப்புக்களைத் தமிழர்க்குத் தந்திருக்கின்றனர். நிச்சலதாசர் பெயரினை இந்தியாவில் எங்குள்ளவரும் அறிவர். அவருடைய விசார சாகரம் அனுபூதிவெள்ளம் ; தென்னாட்டில் கைவல்லிய நவநீதம் போல வடநாட்டில் பெருவழக்காக வழங்குவது. அவரியற்றிய விருத்திப் பிரபாகரம் ஒரு பெருஞ்சிக்கல் ; வருந்திப் படிப்பார்க்கு மிகத் தெளிவு. வேதாந்தக் கலைக்களஞ்சியம் என இதனைக் கூறலாம். இந்த இரண்டு நூலையும் குப்புசுவாமி ராஜு என்ற பெரியார் மொழிபெயர்த்து உதவினார். இவரும் பிறரும் மொழிபெயர்த்த நூல்கள் இன்னும்பல. வடமொழியிலிருந்தும் பஞ்சதசி, நைஷ்கர்ம்ய சித்தி, சுவராஜ்ய சித்தி, சங்கரர் பேருரை முதலிய நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அத்வைதம் ஒரு பேரனுபவம். அந்த வகையில் அனுபவப் பாடலில் எங்கும் அதனைக் காணலாம். சங்கரர் என்ற தமிழ் மகனார் அதனைக் கொள்கையாக நிலைநாட்டி உலகில் பரப்பினார். பிராமணப் பெருமக்களிடையே சாதி ஒழுக்கத்தினை ஒட்டி அது வளர்ந்து, சுமார்த்தரது பிறப்புக் கொள்கையாகி விட்டது ; பிறரிடம் சாதிமதச் சழக்கினை ஒழித்து, ஓர் ஒற்றுமையைத் தமிழ் நாட்டில் நிலைநாட்டி வருகிறது. சித்தர்களில் பலர் இந்தக் கொள்கையை நிலைநாட்டக் காண்போம். இவர்கள் சமுதாயத் தொண்டில் ஈடுபட்டு வந்ததையும் காண்கிறோம், தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர் அத்வைதப் பெருநூல்கள் எழுதியிருக்கக் காண்கிறோம். பொதுமக்கட் காப்பியங்களாகப் பல நூல்கள் வெளிவந்திருக்கவும் காண்கிறோம். இன்றும் இந்த உணர்ச்சி தேங்கித் தடைபொது புத்துயிரோடு ஓடி உலாவி, மக்களைத் தட்டி எழுப்பி வரவும் காண்கிறோம். தெ. பொ. மீ.