கலைக்களஞ்சியம்/அந்தமானியர்

அந்தமானியர் : முற்காலத்தில் அந்தமானியர் பத்துச் சாதியர்களாகப் பத்து இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் குடும்பங்களாகப் பிரிந்திருந்தனர். மேலும் அவர்கள் கடற்கரையில் வாழ்வோர், காட்டில் வாழ்வோர் என்று இரு பிரிவினராகவும் பேசப்படுவர். கடற்கரைக்காரர் கடலில் மீனும் ஆமையும் பிடிப்பர். காட்டுக்காரர் வேட்டையாடுவர்; உப்பங் கழிகளில் மீன் பிடிப்பர்.

காட்டு மக்கள் பெரும்பாலும் இருந்த இடத்திலேயே இருப்பவர்கள். கடற்கரை மக்களோ, அடிக்கடி இடம் மாறுவார்கள். ஆயினும் தலைமையிடம் ஒன்றிருக்கும். யாரேனும் இறந்து போனால், இவர்கள் உடனே வேறிடம் சென்று, இரண்டு மூன்று மாதங்கள் இருந்துவிட்டுத் திரும்புவர் ; வேட்டையாடச் செல்லும்போது, போகும் இடங்களில் தழைகளால் குடிசைகள் கட்டிக் கொள்வர்.

அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வர். ஆண்மகன் வேட்டையாடியோ, மீன் பிடித்தோ மாமிச உணவு தேடுவான். பெண் மகள், காய் கனிகளையும் விறகையும் நீரையும் சேகரிப்பாள். முதலில் அவர்களிடம் நாய்கள் கிடையா. நாய்கள் வந்தபின் வேட்டையாடுதல் எளிதாயிற்று.

அவர்களிடம் தனிச் சொத்துரிமை காணப்பட்டாலும் பொதுவாக அவர்களுடைய பொருளாதார அமைப்புப் பொதுவுடைமையை ஆதாரமாக வுடையது. அவர்கள் வேட்டையாடும் காடு முழுவதும் சமூக முழுவதற்குமே சொந்தம். தனி ஒருவனுக்குச் சொந்தமாயிருப்பன, மரங்கள், வேட்டையாடிய மிருகங்கள், அவனாகச் செய்த ஆயுதங்கள் ஆகியனவே. பெண்ணுக்கும் இது போன்ற உரிமை உண்டு. மனைவியின் சொத்தில் கணவனுக்கு உரிமை கிடையாது. ஒருவர்க்கொருவர் பரிசு கொடுக்கும் வழக்கம் உண்டானதற்கு இதுவும் ஒரு காரணம்.

அந்தமானியரிடையே ஒழுங்காயமைந்த அரசியல் இருந்ததில்லை. வயதான ஆண்களும் பெண்களும் சமூக விவகாரங்களை நடத்தி வந்தனர். மூத்தோர்க்கு அடங்கி நடக்குமாறு இளைஞர் பயிற்றப்பட்டார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் அதிகாரப் பதவிகள் வகித்தனர். குழந்தைகளை ஒருபொழுதும் கடுமையாக நடத்துவதில்லை. ஆணும் பெண்ணும் பருவம் அடைந்ததும் மணம் ஆகும்வரை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடக்கப் பயிற்றப்பட்டு வந்தார்கள்.

நெருங்கிய உறவினருக்குள் மணம் செய்தலாகாது என்ற விதி இருந்தது. அதாவது ஒருவன் தன் உடன் பிறந்தவளையோ, அல்லது மாற்றாந்தாயின் மகளையோ, அல்லது தாய் தந்தையருடன் பிறந்தவளையோ, அல்லது சகோதர சகோதரிகளின் மகளையோ மணத்தலாகாது. அந்தமானியப் பெண் தன்னைவிட இளையவனை மணக்க வெறுப்பாள். அதனால் விதவை கொழுந்தனை மணப்பது என்பது அவர்களிடம் கிடையாது. விதவையானவள் கணவன் இறந்து ஓர் ஆண்டு ஆவதற்கு முன் மறுமணம் செய்து கொள்ளலாகாது. பொதுவாக அந்தமானியர்களிடையே உறவு முறை காட்டும் சொற்கள் கிடையா. ஆயினும் வட அந்தமானியர் வயது சென்ற ஆண்களை மையா என்றும், வயது சென்ற பெண்களை மிமி என்றும் விளிப்பர்.

அந்தமானியர் நான்கு பிரிவினராக உளர். ஒவ்வொரு பிரிவினரும் தனித்து வாழ்கின்றனர். அப்படித் தனித்து வாழ்வதாலும், தங்கட்குள்ளேயே இப்பொழுது மணம் செய்துகொள்வதாலும், பாரம்பரிய முறையில் நலிந்து வருகிறார்கள். அந்த நான்கு பிரிவினர் :—
1. பெரிய அந்தமான் தீவுகளிலுள்ள அந்தமானியர்.
2. மேற்குக் கடற்கரை ஓரத்தில் தென் அந்தமான் தீவின் தென்கோடியிலிருந்து நடு அந்தமான் தீவின் தென்கோடிவரை பரவியுள்ள ஜாராவாக்கள்.
3. சிறு அந்தமான் தீவிலுள்ள ஓஞ்சிகள்.
4. வட சென்டினல் தீவிலுள்ள சென்டினல்கள்.
1. பெரிய அந்தமான் தீவினர் : இவர்கள் இந்திய அரசாங்கத்திடம் நட்புடையவர்கள். 1951 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கின்படி, இவர்கள் தொகை 40 மட்டுமே. 19 ஆம் நூற்றாண்டில் ஆறாயிரமாக இருந்தவர்கள் இவ்வாறு குறைந்துவிட்டனர். அவர்கள் தொகை 1901-ல் 1882 ஆகவும் 1931-ல் 90 ஆகவும் இருந்தது. இப்போதுள்ள 40 பேருடைய நிலைமை மிகவும் கேவலமாக இருக்கிறது. அவர்களுடைய சமூக வாழ்வு முற்றிலும் சீர்குலைந்துளது. மணங்கள் நீடித்து நிற்பதில்லை.
2. ஜாராவாக்கள் : அந்தமானியர் இந்திய அரசாங்கத்திடம் நட்புடையவர்களாக இருப்பதுபோல் இவர்கள் இருக்கவில்லை. இவர்களுடைய பகைமை உணர்ச்சி மிகுந்து வருவதாகவே தெரிகிறது. இவர்களைப்பற்றி எதுவும் நன்கு தெரிய முடியாமலிருக்கிறது. 3. ஓஞ்சிகள் : கிழக்குக் கரையிலும் தெற்குக் கரையிலுமுள்ள ஓஞ்சிகள் நட்புடையவர்களாயிருக்கிறார்கள். ஆனால் மேற்குக் கரையிலுள்ளவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
4. சென்டினல்கள் : இவர்களும் ஜாராவாக்கள் போலவே பகைமையுடையவர்களாயிருக்கிறார்கள், இவர்களுடைய தீவு தனித்திருப்பதால் இங்கே யாரும் அண்மையில் செல்ல முயற்சி செய்யவில்லை.

அந்தமானியர் அனைவரும் நெக்ரிட்டோ இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கம்பளி போன்ற மயிரும், புகைபோன்று மங்கலான கரிய மேனியும், சிறுத்து அகன்ற தலையும் முகமும், நேரான மூக்கும், சிறிய அடிகளும், அளவாக அமைந்த உடலும் உடையவர்கள். நேசப்பான்மை உடைய அந்தமானியர் கலப்பு மணங்கள் செய்து வந்த காரணத்தால் அவர்களுடைய தேக அமைப்பில் ஓரளவு மாறுபாடுகள் தோன்றியிருக்கின்றன.

பிரிட்டிஷார் 1790 ஆம் ஆண்டில் அந்தமான் தீவைக் குற்றவாளிகளைக் குடியேற்றும் இடமாகச் செய்ய விரும்பினர். ஆனால் அது உடல் நலத்துக்கு ஒவ்வாத நிலமாயிருந்ததால், அந்த எண்ணத்தை 1796-ல் கைவிட்டனர். ஆயினும் இந்தியாவில் 1857 ஆம் ஆண்டில் சிப்பாய்க் கலகம் ஏற்படவே, அந்தமான் தீவைச் சிறை நிலமாகவே செய்தனர்.

அந்தமானியர் வெள்ளைக்காரருடைய உறவினாலும் நாகரிகத்தாலும் நாளடைவில் அழியத் தொடங்கினர். முதலில் வெள்ளைக்காரருடன் நடந்த சண்டையில் பலர் இறந்தனர். அதன்பின் மேகக் கிரந்தி போன்ற நோய்கள் புகுந்து சூறையாடின. ஆகவே இப்போது அவர்கள் அழிந்து மறையும் தறுவாயில் இருக்கின்றனர். எஸ். எஸ். ச.