கலைக்களஞ்சியம்/அந்தமான் தீவுகள்
அந்தமான் தீவுகள் வங்காளக் குடாக் கடலில் உள்ள தீவுகள். இக்கூட்டத்தில் 204 தீவுகள் உள்ளன; சென்னையிலிருந்து 740 மைல் தொலைவில் உள்ளன; சென்னையிலிருந்து பினாங்கு செல்லும் கடல் மார்க்கத்தில் உள்ளன. தெற்கு வடக்கில் இத்தீவுகளின் மொத்த நீளம் 219 மைல். இவை பெரிய தீவுகள்
என்றும், சிறிய தீவுகள் என்றும் இரு பகுதியாகவுள்ளன. இத்தீவுகளில் மலைகளும் காடுகளும அடர்ந்துள்ளன. இம்மலைகளில் சாடில் உச்சி (12,400 அடி) மிக வுயரமானது. போர்ட் பிளேர், கார்ன்வாலிஸ், எல்பின்ஸ்டன் என்பவை முக்கியமான துறைமுகங்கள். போர்ட் பிளேரில் ஒரு வானவியல் நிலையம் நிறுவப்பட் டுள்ளது.
இத்தீவுகளில் காடுகள் அடர்ந்திருப்பதால், வேலைக்கான தேக்கு முதலிய பலவகை மரங்களும், தென்னையும், விறகுக்காகும் ஏராளமான மரங்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியாகின்றன. ஒருவகைப் பன்றியும், எலிகளும், வௌவால்களும் இத்தீவுகளில் மிகுதியும் காணப்படுகின்றன. இங்குக் கிடைக்கும் மீன்களும் ஆமைகளும் வங்காளத்தில் விலையாகின்றன.
இத்தீவுகளில் வசிக்கும் மக்கள் மிகமிகப் பண்டைய மக்களினத்தைச் சார்ந்தவர்கள் ; சராசரி 4 அடி உயரமுள்ளவர்கள். 1789-ல் காப்டன் பிளேர் என்பவன் வங்காள அரசாங்கத்திடம் உத்தரவு பெற்று, இத்தீவில் ஒரு குடியேற்றம் அமைத்தான். 1858-லிருந்து ஆங்கில ஆட்சி இத்தீவுகளைக் கொடுங் குற்றவாளிகளுக்குரிய தீவாந்தரச் சிறையாக மாற்றி வைத்தது. இங்கிருந்த சதுப்பு நிலங்களால் வரும் பலவித நோய்களால் இத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டோரில் பலர் மடிந்தொழிந்தனர். மேயோ பிரபு என்னும் இந்திய வைசிராய் ஒருமுறை (1872) இங்குச் சென்றிருந்தபோது ஒரு கைதி அவ் வைசிராயைக் குத்திக் கொன்றுவிட்டான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது 1942-லிருந்து இத்தீவுகள் இந்திய சுதந்திர சர்க்கார் (அசாத் இந்து சர்க்கார்) ஆட்சியின் கீழ் இருந்தன; இப்போது இந்திய அரசியலமைப்பில் முதல் தபசில் ஈ பாகத்தில் குறிப்பிட்ட இராச்சியங்களில் ஒன்றாக இந்திய ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இங்கு அரசாங்கம் ஒரு பிரதம கமிஷனர் மூலம் நடத்தப் பெறுகிறது. இவருக்கு 5 அங்கத்தினர்கள் அடங்கிய ஆலோசனைச் சபையொன்றுண்டு. தலை நகரம் போர்ட் பிளேர். மொத்த மக் : 30,963 (1951).மொத்த நிலப்பரப்பு: 3,143 ச.மைல்.