கலைக்களஞ்சியம்/அனிலீன்

அனிலீன் (Aniline ) முதலில் அவுரிச் சாயமான நீலியிலிருந்து தயாரிக்கப்பட்டதால் இப் பெயர் பெற்றது. இது அரோமாடிக அமின்களில் முக்கியமானது. இது பீனைலமின் என்ற பெயராலும் வழங்கும். நிறமற்ற, எண்ணெய் போன்ற திரவமான இதன் கொதி நிலை 189°; ஒப்பு அடர்த்தி 1.024. இது நீரிற் கரையும். காற்றிலுள்ள ஆக்சிஜனை ஏற்றுச் சிறிது சிறிதாகப் பிசினாகும். இது கொடிய நஞ்சு.

வலிவற்ற மூலமான இது அமிலங்களுடன் கூடி உப்புக்களை அளிக்கும். அனிலீன் ஹைடிரோகுளோரைடு என்ற உப்பை 'அனிலீன் உப்பு' என்று வணிகர் வழங்குகிறார்கள். நிறமற்ற படிகமான இது நீரிற் கரையும்; காற்றுப்பட்டால் பச்சை நிறம் பெறும்.

இதிலுள்ள அமினோத் தொகுதியை நீக்கி, ஓர் அமிலத் தொகுதியை இணைத்தால் அனிலைடு என்ற வகையான பொருளாக ஆகும். இவ்வகைப் பொருள்களில் அசிடனிலைடு என்பதும் ஒன்று. அசிடிக அமிலத்தையும் அனிலீனையும் வினைப்படுத்தி இதைப் பெறலாம். ஆன்டிபெப்ரின் (Antifebrin) என்ற பெயருடன் இது சுரம் தணிக்கும் மருந்தாகப் பயனாகி வந்தது.

அமிலக் கரைவில் அனிலீனை நைட்ரச அமிலத்துடன் வினைப்படுத்திட யசோனிய உப்பாக மாற்றலாம். (பார்க்க: டயசோக் கூட்டுக்கள்). இதை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான பல சாயப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. (பார்க்க: சாயங்களும், சாய இடைப் பொருள்களும்) பல மருந்துகளும் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆகையால் அனிலீன் ஒரு முக்கியமான ரசாயன மூலப்பொருள். இரும்புத் தூளையும் ஹைடிரோகுளோரிக அமிலத்தையும் கொண்டு நைட்ரோ பென்சீனைக் குறைத்து இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையிற் கிடைக்கும் பொருளை நீராவியில் வாலை வடித்துச் சுத்தப்படுத்தவேண்டும். குளோரோ பென்சீனை உயர்ந்த அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் ஓர் ஊக்கியின் உதவியால் வினைப்படுத்தி அனிலீனைத் தயாரிப்பதுமுண்டு. பார்க்க : அமின்கள். எஸ். ர.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனிலீன்&oldid=1465033" இலிருந்து மீள்விக்கப்பட்டது