கலைக்களஞ்சியம்/அனுகரணம்
அனுகரணம் (Imitation) ; இயல்பூக்கங்கள் (Instincts) பல. இவை இயற்கையாகவே நம்மில் அமைந்துள்ளன. இவற்றில் ஒத்துவாழும் (Gregarious) இயல்பூக்கமும் ஒன்று. தம் இனத்துடன் ஒருமித்துக் கூடுவது விலங்குகளிலும் மனிதரிலும் காணப்படும் ஒரு செயல். இந்த இயல்பூக்கம் நம் நினைவிலும், உணர்ச்சியிலும், செயலிலும் வெளிப்படும். இரண்டே பேர்கள் கூடினாலும் இதைத் தெளிவாகக் காணலாம். ஒருவருடைய கருத்துக்களும் நினைவுகளும் மற்றவர் உள்ளத்தில் பதிகின்றன. ஒருவர் கூறும் காரணங்களை அறிந்து, ஆராய்ந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வது ஒருவகைச் செயல். அறியாமலேயே, அவருடைய எண்ணங்களை ஏற்றுக்கொள்வது மற்றொரு வகைச் செயல். இதுபோன்ற செயல் உணர்ச்சிகளிலும் நிகழ்கிறது. ஒருவருடைய செயலைப் பார்த்து நமக்கும் அது போலவே செய்யத் தோன்றுகிறது. நடு வீதியில் ஒருவர் எதையாவது குனிந்து பார்த்தால் நாமும் அதுபோலவே செய்கின்றோம். இதுவே அனுகரணம் எனப்படும். நம்மிடத்துள்ள ஒத்துவாழும் இயல்பூக்கம் செயல் வழியாய் வெளிப்படுவதே அனுகரணம்.
இந்த இயல்பூக்கம் இயற்கையிலேயே உயிர்களிடத்தில் அமைந்திருப்பதனால், அனுகரணமும் அவைகளிடத்தில் இயற்கையாகக் காணப்படுகின்றது. இது இரண்டு பேர்களிருக்குமிடத்தில் தோன்றினும், இதைப் பல பேர்கள் சேரும் இடங்களில் தெளிவாகக் காணலாம். ஒரு கூட்டத்தில் ஒரு தலைவரிருந்தால் அவரைப் பின்பற்றி எல்லோரும் தங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் மாற்றிக்கொள்வதை யாவரும் காணலாம். குழந்தைகளிடம் அனுகரணம் நன்றாகக் காணப்படுவதைக்கொண்டு, அது குழந்தைகட்கே உரியதென நினைப்பது தவறு. அது வயதானவர்களிடத்தும், குழந்தைகளிடத்தும், விலங்குகளிடத்தும் இயற்கையாகவே உள்ளது.
அறியாமல் செய்வது (Unwitting), அறிந்து செய்வது (Witting) என அனுகரணம் இரண்டுவகைப்படும். வேறு குழந்தைகளைப் போலவோ, பெரியவர்களைப் போலவோ பேசுவதும் நடிப்பதும் குழந்தைகட்குத் தம்மை யறியாமலே வரும். தவிரவும், மற்றவர்களின், முக்கியமாகப் பெரியவர்களின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்தறிந்து அவற்றைப் பின்பற்றுவது குழந்தைகளின் இயல்பு. இதுபோலவே பெரியவர்களும் நடப்பதுண்டு. நாலுபேர் ஓர் இடத்தை நோக்கி ஓடினால், அதைக் கண்ட மற்றவர்களும் அதே இடத்திற்கு ஓடுகிறார்கள். இது அறியாமல் செய்வதாகும். அறிந்து செய்வதில், நாம் ஒருவரின் நடத்தையையோ, பேச்சையோ கவனித்து, அதைப்போல் செய்ய முயலுகிறோம். அவருடைய பேச்சைக் கவனித்துப் பல தடவைகள் முயற்சி செய்து, அதைப்போல் பேசப் பழகுகிறோம். ஆனால் இதில் நமக்கு முடிகின்றவற்றையே செய்யலாம். நமது சக்திக்கு மேற்பட்டவைகளை எவ்வளவு கவனமாகப் பார்த்துச் செய்ய முயன்றாலும் இயலாது. பறவையைப்போல் பறக்க நினைத்தால், நம்மால் முடியாது.
இவ்விதம் மனிதனிலும் விலங்குகளிலும் அனுகரணம் இயற்கையாகக் காணப்படுவதால் இது ஓர் இயல்பூக்கம் என்று கூறத் தோன்றும். ஆனால் அப்படிக் கூறுவது சரியன்று. ஓர் இயல்பூக்கம் ஒரு தனிப்பட்ட (Specific) தூண்டுதலினாலேயே (Stimulus) ஒரு துலங்கலாக (Response) வெளிப்படும். அவ்வாறு வெளிப்படும் துலங்கல் ஒரு தனிப்பட்ட வகையைச் சேர்ந்ததாயிருக்கும். சான்றாக, சண்டையிடும் இயல்பூக்கம் (Combat Instinct) நம்மிடத்திலுள்ளது. நமது எண்ணத்திற்கு இடையூறு உண்டாக்குவது எதுவோ அது இந்த இயல்பூக்கத்தைத் தூண்டிவிடும். இந்த இடையூற்றை மாற்றுவதே இதன் துலங்கலாகும். இது போலவே மற்ற இயல்பூக்கங்களும். அனு கரணம் இவ்விதமான ஓர் இயல்பூக்கமன்று; அது ஒரு தனிப்பட்ட தூண்டுதலினால் வெளிப்படுவதுமன்று; தனிப்பட்ட துலங்கலுடையதுமன்று.
அனுகரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் தோன்றுவதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை அறிந்து குழந்தைகள் நல்வழியில் நடக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அ. சு. நா. பி.