கலைக்களஞ்சியம்/அனுமானம்
அனுமானம்: பிரமாணங்களுள் முதலாவது பிரத்தியட்சம் ; இரண்டாவது அனுமானம்.
புகையை நாம் பிரத்தியட்சமாகக் காண்கிறோம். அதைக் காணும் எல்லாவிடங்களிலும் அக்கினியையும் காண்கிறோம். இப்படிப் புகை உள்ள இடங்களில் அக்கினி யிருப்பதைப் பல தடவை காண்பதோடு அக்கினி இல்லாத இடங்களில் புகையில்லாமையையும் காண்கிறோம். இதனால் புகைக்கும் அக்கினிக்கும் எப்பொழுதும் அறாத ஒரு சம்பந்தம் உண்டென்று நிச்சயிக்கிறோம். எவ்விடத்திலும் எக்காலத்திலும் நீங்காது இயல்பாயுள்ள இச்சம்பந்தம் வியாப்தி எனப்படுகிறது. இவ்வியாப்தி இருவிதமாகக் காட்டப்பெறும். புகையிருக்குமிடமெல்லாம் அக்கினி இருக்குமென்பது ஒரு விதம். இது அன்னுவய வியாப்தி எனப்படுகிறது. அக்கினி இல்லாத இடத்தில் புகையிராது என்பது மற்றொரு விதம். இது வியதிரேக வியாப்தி எனப்படுகிறது. இவற்றை முறையே உண்மை வியாப்தி, இன்மை வியாப்தி என்னலாம். புகையுள்ள விடங்களில் எங்கும் அக்கினி உண்டு. அதாவது அவ்விடத்திலெல்லாம் அக்கினி வியாபிக்கின்றது. ஆனால் அக்கினி உள்ளவிடமெல்லாம் புகையுண்டு என்பதில்லை. பழுக்கக் காய்ந்த இரும்பில் அக்கினி உண்டு, புகையில்லை. ஆகையால் அக்கினி இருக்குமிடத்தில் புகையின் வியாப்தி இல்லை. எது வியாபிக்கின்றதோ அதற்கு வியாபகமென்றும் எது வியாபிக்கப்படுகின்றதோ அதற்கு வியாப்பியமென்றும் பெயர். அக்கினி வியாபகம்; புகை வியாப்பியம். இவற்றிற்கு இடையேயுள்ள மாறாத சம்பந்தம் வியாப்தி.
இந்த வியாப்தியை உணர்ந்த ஒருவன் ஒரு மலையில் புகையைக் காணும்போது அங்கு அக்கினி இருக்கிறதென்று அறிகிறான். இவ்வறிவே அனுமிதி எனப்படுகின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றதெனில், மலையில் புகையிருப்பதைப் பிரத்தியட்சத்தினால் அறிகின்றான்; பிறகு புகை அக்கினியோடு வியாப்தி உள்ளது என்று, தான் முன்பு உணர்ந்த வியாப்தியை நினைக்கிறான்; இவ்விரண்டையும் சேர்த்து அக்கினிக்கு வியாப்பியமான புகையுள்ளது இம்மலை என்ற உணர்வைப் பெறுகிறான். இவ்வுணர்வு பராமரிசம் எனப்படுகின்றது. உடனே இம் மலையில் அக்கினி இருக்கின்றது என அறிகிறான். பராமரிசத்தினால் இவ்வறிவு உண்டாகிறது. இவ்வறிவு அனுமிதி எனப்படும். அனுமானமென்ற சொல்லுக்கு அனுமிதிக்குக் காரணமாயிருக்குமது என்றும் பொருளுண்டு. இப்பொருளைக் கொண்டு காரணமான பராமரிசத்தையே அனுமானமென்பர்.
ஒருவன் இவ்வாறு அனுமானம்-ஸ்வார்த்தானுமானம் செய்ததைப் பிறர்க்கு உணர்த்த விரும்பி அதற்குரிய சில வாக்கியங்களைக் காட்டலாம். இவ்விதச் சொற்றொடர் பிறர்க்கான அனுமானம்-பரார்த்தானுமானம் எனப்படும். இதில் ஐந்து உறுப்புக்கள் அல்லது பாகங்கள் உண்டு. அவையாவன : 1. இம்மலையில் அக்கினி இருக்கின்றது; 2. புகையிருக்கின்றதாதலின்; 3. எங்குப் புகையுண்டோ அங்கு அக்கினி உண்டு, சமையலறையிற் போல ; எங்கு அக்கினி இல்லையோ அங்குப் புகையிராது, மடுவிற் போல ; 4. மலையில் புகை உளது; 5. ஆகையால் அக்கினி உண்டு. இவற்றிற்கு முறையே பிரதிஞ்ஞை, ஏது, உதாரணம், உபநயம், நிகமனம் எனப் பெயர்.
இவற்றில் முதல் உறுப்பான பிரதிஞ்ஞை மலையில் அக்கினி இருக்கின்றது என்றவாறு ஓரிடத்தில் ஒரு பொருளிருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரண்டில் மலை பட்சமெனவும், அக்கினி சாத்தியமெனவும் படும். புகை உதாரணத்தில் அடங்கிய சமையலறையைச் சபட்சமென்றும் மடுவை விபட்சமென்றும் கூறுவர். எங்கு ஒன்றை அனுமிக்கின்றோமோ அந்த இடம் பட்சம். எதை அனுமிக்கின்றோமோ அது சாத்தியம். எதனால் அனுமிக்கின்றோமோ அது ஏது; இது லிங்கமெனவும் படும். ஏதுவுக்குச் சாத்தியத்தோடுள்ள அன்னுவய அல்லது உண்மை வியாப்தியை எங்குக் கண்டு அறிகின்றோமோ அது சபட்சம். வியதிரேக அல்லது இன்மை வியாப்தியை எங்குக் கண்டு அறிகின்றோமோ அது விபட்சம் என்றதாயிற்று.
இதனால் ஒரு பொருள் ஓரிடத்தில் மற்றொரு பொருளை அனுமானம் செய்வதற்கு ஏதுவாகுமாயின் அது பட்சத்திலிருத்தல், சபட்சத்திலிருத்தல், விபட்சத்திலிராமை. ஆக இம்மூன்று தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டுமென்பது விளங்குகின்றது. ஓர் ஏதுவுக்கு இத்தன்மைகளில் ஒன்றோ பலவோ இராமலிருக்குமாயின் அது போலி ஏது; ஏத்வாபாஸம். அதனால் அனுமிதி உண்டாகாது. உண்டானாலும் அது பொய் அனுமிதியாகும்.
ஓர் ஏதுவினால் ஓரிடத்தில் ஒரு சாத்தியத்தை அனுமிக்கும்போது வேறொரு வலிய பிரமாணத்தினால் அங்கு அந்தச் சாத்தியமில்லை என்பது நிச்சயிக்கப்படுமாயினும், அங்கு அந்தச் சாத்தியமில்லை என்று அனுமிப்பதற்குரிய மற்றோர் ஏது காணப்பெறுமாயினும் முதல் ஏது போலி ஏதுவேயாம்.
சபட்சங்களில் சாத்தியம், ஏது இவ்விரண்டுமிருப்பதையும், விபட்சங்களில் இவ்விரண்டுமில்லாமையையும் கண்டு, அவற்றுக்கிடையேயுள்ள வியாப்தியைக் கிரகிப்பது, இதற்குப் பிறகு மற்றோரிடத்தில் ஏதுவைக் கண்டு பராமரிசம் உண்டாகப் பெற்றுச் சாத்தியத்தை அனுமிப்பது, ஆக இவ்விரண்டு அமிசங்கள் அனுமான ஆராய்ச்சியில் பிரதானமாயிருக்கின்றன. இவற்றை முறையே தொகுப்பு அனுமானம் (Induction), பகுப்பு அனுமானம் (Deduction) என்பர். கே. சீ. வ.