கலைக்களஞ்சியம்/அபயன்

அபயன் : இவன் அபய குலசேகரன் எனவும் பெறுவான். திருமுறை கண்ட புராணம் பாடிய உமாபதி சிவாசாரியர் ‘அலகில் புகழ்பெறு ராசராச மன்னன் அபயகுல சேகரன்' எனக்கூறுவர். இதனை ஆதரித்தே, கா. சுப்பிரமணிய பிள்ளை திருமுறை கண்ட சோழன் முதல் இராசராசன் என்பர். ஆனால் கலிங்கத்துப் பரணி, முதற்குலோத்துங்கனே அபயன் என்னும். தேவாரப் பதிகங்கள் சிதம்பரத்தில் இருப்பதை நம்பியாண்டார் நம்பியால் அறிந்த சோழ மன்னன், அவரைக் கொண்டே அவற்றைத் திருமுறைகளாக அடைவுபடுத்தினான் என்பர். நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியார் சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன்னால் வேய்ந்த முதல் ஆதித்தன் காலத்தின் இறுதியில் இருந்தாரெனச் சதாசிவ பண்டாரத்தார் பிற்காலச் சோழர்கள் சரித்திரத்தில் கூறுவர். அவர் கருத்தின்படி அபயன் என்பவன் முதல் ஆதித்தன் அல்லது அவன் மகன் முதற்பராந்தகன் ஆதல் வேண்டும். முதல் ஆதித்தன் காலம் கி. பி. 871-907; முதற் பராந்தகன் காலம் 907-953; முதல் இராசராசன் காலம் 985-1014; முதற் குலோத்துங்கன் காலம் 1070-1120

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அபயன்&oldid=1455856" இலிருந்து மீள்விக்கப்பட்டது