கலைக்களஞ்சியம்/அப்துல் ஹமீது II

அப்துல் ஹமீது II (1842-1918) துருக்கிப் பேரரசின் 43-வது சுல்தான்; 1876-1909 வரையில் அதை ஆண்டவன்; 1839-1861 வரை அங்குச் சுல்தானாயிருந்த அப்துல் மஜீதின் மகன். இவன் தனது அண்ணனான V-ம் மூரட் என்பவனைப் பட்டத்தினின்றும் நீக்கிவிட்டுத் தானே சுல்தானானான். இவன் தன்னுடைய முதல் மந்திரியான மித்தது பாஷாவை வேலையினின்றும் நீக்கி நாடுகடத்திவிட்டான்; சட்ட சபையையும் கலைத்துவிட்டு, அரசியல் அமைப்பையே ஸ்தம்பிக்கச் செய்தான்; பிறகு தன் ஆட்சி முடியும்வரை எதேச்சாதிகாரம் செலுத்தினான். இவன் பாஸ்பரஸ் அருகிலுள்ள இல்டிஸ்கியோஸ்க் என்னும் அரண்மனையில் தனது நெருங்கிய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் வசித்து வந்தான்; இரகசியப் போலீசாரின் உதவியைக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான். இவனுடைய மந்திரிகள்கூட இவனை நெருங்க முடியாது. நடுவர் என்னும் சில ஆலோசனையாளர் வழியாகவே இவனது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இவன் காலத்தில் நிருவாகம் மாற்றியமைக்கப்பட்டது. ஹீஜாஸ் ரெயில்வே போடப்பட்டது. 1896-ல் கான்ஸ்டான்டினோபிலில் நடந்த படுகொலையும், அர்மீனிய நாட்டவரை இவனுடைய குதிரைப் படைவீரர்கள் துன்புறுத்தியதும் இவனைக் கொடியவென்ன உலகறியச்செய்தன. 1897-ல் இவன் கிரீசோடு ஒரு சிறு போர் புரிந்தான். 1908-ல் ஏற்பட்ட இளந்துருக்கியர் இயக்கம் வலிவடைந்ததும், இவன் சட்ட சபையை மறுபடியும் கூட்டினான். ஆயினும், 1909-ல் இவன் படையுதவிகொண்டு பிற்போக்கில் ஈடுபடவே, முடிதுறந்து, நாட்டை வீட்டு கலேனிகாவிற்கு ஓடும்படியாயிற்று. 1912-ல் இவன் கான்ஸ்டான்டினோபிலுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டான். 1915-ல் அனட்டோலியாவின் தென் மேற்கில் உள்ள மானிகா என்னும் இடத்திற்குக் கடத்தப்பட்டு, அங்கு 1918-ல் இறந்தான்.