கலைக்களஞ்சியம்/அமரில்லிடேசீ

அமரில்லிடேசீ (Amaryllidaceae) பெரிய ஒரு விதையிலைக் குடும்பம். இதில் இந்தியாவுக்கே உரிய இனங்கள் சிலவே. இது லில்லிக் குடும்பத்துக்கு மிக நெருங்கியது. லில்லியேசீயில் சூற்பை மேல் தோன்றுவது (Superior ovary). இந்தக் குடும்பத்துப் பூக்களின் சூற்பை உள்ளடங்கியது (Inferior ). விஷ மூங்கில், நில சம்பங்கி, நிலப்பனை, நார்க் கற்றாழை முதலியவை இதைச் சேர்ந்தவை. யூகாரிஸ் லில்லி, பான்கிரேஷியம், செபிராந்தஸ், நார்சிஸ்ஸஸ் முதலிய பல பூச்செடிகளும் இந்தக் குடும்பத்தினவே. இதில் 80க்கு மேற்பட்ட சாதிகளும் 1000க்கு மேற்பட்ட இனங்களும் உண்டு. இவை பெரும்பாலும் சிறு பூண்டுகள்; நார் போன்ற சிம்பு வேருடையவை; நிலத்தின்கீழே பூண்டு, கந்தம், கிழங்கு, மட்டத்தண்டுக் கிழங்கு எனத் தண்டு பல வகையாக இருக்கும். இந்தத் தரைக்கீழ்த் தண்டுகளின் உதவியால் இச்செடிகள் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கும். இலை அடித்தண்டிலை. சிலவற்றில் ஒரு குறுகிய தண்டின் முனையில் அடர்ந்திருக்கும்; ஒருபோகு நரம்புள்ளது. பூக்கள் சில சேர்ந்து குடைமஞ்சரியாக இருக்கலாம். சில செடிகளில் ஒரே பூ உண்டாகும். சிலவற்றில் பல பூக்கள் கலப்பு மஞ்சரியாக இருக்கும்; சாதாரணமாக இருபாலின; ஒழுங்கான அமைப்புள்ளவை ; சிலவற்றில் சற்று ஒருதளச்சமமாக இருக்கலாம். இதழ்கள் சூலகத்துக்குமேல் வளர்வன. ஆறு பிரிவுள்ளவை. சிலவற்றில் அவற்றின் வாயில் உப மகுடம் இருக்கும். மகரந்த கேசரங்கள் ஆறு சாதாரணமாக இதழ்களின் அடியில் ஒட்டியிருக்கும். சூலகம் உள்ளடங்கும் சூற்பையுள்ளது. இணைத்த சூலறை. மூன்று அறைகளுள்ளது. சூல்கள் பல, சூல் தண்டின்மேல் சூல்முடி ஒன்றாக இருக்கும்; அல்லது மூன்றாகப் பிரிந்திருக்கும். கனி சாதாரணமாக அறைவெடிக்கும் உலர்கனி, சிலவற்றில் சதைக்கனி யுண்டு. விதைகள் சில அல்லது பல. கருவைச் சுற்றி முளைசூழ்தசை யுண்டு. (மேற் குறித்த செடிகளைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு.)