கலைக்களஞ்சியம்/அமிர்த கவிராயர்

அமிர்த கவிராயர் (கி.பி. 1637-72) பாண்டி நாட்டிலே பொன்னாங்கால் என்னும் ஊரிலே தோன்றியவர்; இராமநாதபுர மன்னர் இரகுநாத சேதுபதி அவைக்களப் புலவராயிருந்தவர். ஒரு நாள் சேதுபதியவர்கள் அகப்பொருள் துறை ஒவ்வொன்றிற்கும் பல பாடல்கள் பாட இயலுமோ எனப் புலவர்கள் பலரையும் வினவினர் எனவும், பிற புலவர்கள் ஒன்றுங் கூறாமல் இருக்க, அமிர்த கவிராயர் மட்டும், “நான் நூறு பாடுவேன்“ என்றார் எனவும், பொறாமை கொண்ட புலவர்கள், “இவர் ஒவ்வொரு துறைக்கும் நானூறு பாடுவேன்“ என்கிறார் என வுரைத்தனரெனவும், இவர் அவ்வாறே நாணிக்கண் புதைத்தல் என்னும் துறைக்கு நானூறு பாடி, ஒரு துறைக்கோவை என்னும் நூலாகத் தந்தார் எனவும் கூறுவர். இந்நூல் வெளியாகியுள்ளது.

அமிர்த கவிராயர் தொண்டைமண்டலத்துப் பாலூரில் இருந்தவர் ; கோகுல சதகம் பாடியவர்.