கலைக்களஞ்சியம்/அமிலங்கள்

அமிலங்கள் (Acids) : ரசாயனத்தில் அமிலம் என்பது உலோகத்தினால் பிரதியீடு செய்யத்தக்க ஹைடிரஜனைக்கொண்ட கூட்டு. இந்த மாற்றத்தினால் ஒரு ரசாயன உப்புத் தோன்றும். நீரிற் கரைத்தால் ஹைடிரஜன் அயான்களைத் தரும் பொருள் எனவும் இதை வரையறுப்பதுண்டு. சாதாரணமாக அமிலங்கள் புளிப்பான சுவையை யுடையவை. இவை காரங்களையும், பல உலோகங்களையும் கரைக்க வல்லவை. லிட்மசைப் போன்ற பல தாவர நிறப்பொருள்களை இவை நீலம் அல்லது ஊதா நிறத்திலிருந்து செந்நிறமாக மாற்றும்.

மதுவைப் புளிக்கவைத்துப் பெறப்படும் காடி என்ற அசிட்டிக அமிலம் பழங்காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ளது. நைட்ரிக அமிலத்தையும், கந்தக அமிலத்தையும் இந்திய நாட்டு ரசவாதிகள் அறிந்திருந்தனர். ராபர்ட் பாயில் என்ற ரசாயன அறிஞர் பல அமிலங்களை ஆராய்ந்து, அவற்றின் பொது இயல்புகளைக் கண்டுபிடித்தார். இதன் பின்னர்ப் பிரெஞ்சு அறிஞர் லவாய்சியர் எல்லாப் பொருள்களையும் அமிலங்கள், உப்பு மூலங்கள், உப்புக்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். ஆக்சிஜனே அமிலங்களைத் தோற்றுவிக்கிறது என அவர் கருதினார். ஹைடிரஜன் சல்பைடு, ஹைடிரோகுளோரிக அமிலம் போன்ற பல கூட்டுக்களில் ஆக்சிஜன் இல்லாவிட்டாலும், அவை அமிலங்களின் இயல்புகள் கொண்டிருப்பது அறியப்பட்டபின், இக்கருத்துத் தவறானது என்பது தெளிவாகியது. அமிலங்களில் ஹைடிரஜனே முக்கியமான உறுப்பு என்னும் கருத்துத் தோன்றியது. 1838-ல் லீபிக் என்ற ஜெர்மானிய அறிஞர் கரிம அமிலங்களை ஆராய்ந்து, உலோகங்களால் பிரதியீடு செய்யத்தக்க ஹைடிரஜன் அணுக்களைக் கொண்ட கூட்டு என அமிலத்தை வரையறுத்தார். சில அமிலங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட ஹைடிரஜன் அணுக்களை இவ்வாறு பிரதியீடு செய்யலாம். இதனால் ஒரே அமிலம் ஓர் உலோகத்துடன் வினைப்பட்டு, ஒன்றிற்கு மேற்பட்ட உப்புக்களைத் தரக்கூடும். மின்பகுப்பு (த. க.) என்னும் விளைவை விளக்க அரானீயூஸ் வெளியிட்ட கொள்கையின்படி ஓர் அமிலத்தை நீரிற் கரைத்தால் அது அயான்களாகப் (த. க.) பிரிகிறது. இப்பிரிவை அடிப்படையாகக் கொண்டு அமிலங்களின் சிறப்பியல்புகளை விளக்க முடிகிறது. தற்கால அணு அமைப்புக் கொள்கையும் அரானீயூஸின் கருத்திற்கு ஆதரவு தருகிறது. ஓர் அமிலத்தை நீரிற் கரைத்த பின்னரே, அது தன் இயல்புகளை வெளிக்காட்டுகிறது. ஆகையால் ஹைடிரஜன் அயான் நீர் மூலக்கூற்றுடன் இணைந்து H30 என்னும் நேரயானாகி அமிலத்தின் பண்புகளைத் தோற்றுவிக்கிறது எனத் தற்கால ரசாயன அறிஞர் பலர் கருதுகிறார்கள்.

கரிம அமிலங்கள் : கரிம அமிலங்களிற் பெரும்பான்மையானவை COOH என்னும் கார்பாக்சிலிகத் தொகுதியைக் கொண்டிருக்கும். இவை அலிபாடிக அமிலங்கள் என்றும், அரோமாடிக அமிலங்கள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. கரிம அமிலங்கள் உப்பு மூலங்களுடன் வினைப்பட்டு உப்புக்களை அளிக்கும் ; ஆல்கஹால்களுடன் வினைப்பட்டு எஸ்டர்களை அளிக்கும். பல பழங்களில் கரிம அமிலங்கள் உள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் சிட்ரிக அமிலமும், புளியிலும் திராட்சையிலும் டார்ட்டாரிக அமிலமும், ஆப்பிளில் மாலிக அமிலமும் உள்ளன.

முக்கியமான தாது அமிலங்களான கந்தகாமிலம், நைட்ரிக அமிலம், ஹைடிரோகுளோரிக அமிலம் ஆகியவை மிக அடிப்படையான மூலப்பொருள்கள். இவை பல தொழில்களில் பயனாகின்றன. புல அமிலங்களின் நீர்த்த கரைவுகள் மருந்துகளாகப் பயனாகின்றன.