கலைக்களஞ்சியம்/அமுதசுரபி

அமுதசுரபி மணிமேகலை என்னும் தமிழ் நூலில் சொல்லப்படுகிறது. தென்மதுரையில் கலா நியமத்துள்ள சிந்தாதேவியால் ஆபுத்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வத் தன்மையுள்ள பாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாத அன்னமுடையது. இதைக்கொண்டு ஆபுத்திரன் உயிர்களது பசிப்பிணியைப் போக்கி வந்தான். அவன், வாழ்வோர் யாருமில்லாத மணிபல்லவத் தீவில் சேர்ந்தபோது பிற உயிர்களைக் காக்கும் பாத்திரத்தைக் கொண்டு தன்னுயிரை மட்டும் காக்க விரும்பா தவனாய், அதைக் கோமுகி என்னும் பொய்கையில் விட்டு விட்டு உயிர் துறந்தான். அப்பால் அது அந்தத் தீவுக்கு வந்த மணிமேகலை கையில் சேர்ந்தது. அவள் காவிரிப்பூம்பட்டி னம் வந்து, துறவுக்கோலம் பூண்டு, அதைக் கையிலேந்தி, ஆதிரை என்னும் கற்பிற் சிறந்தவளிடம் முதலிற் பிச்சை ஏற்றனள். அவள், 'உலகமெங்கும் பசிப்பிணி நீங்குக' என அதில் பிச்சை இட்டனள். அதிலிருந்து ஒரு பிடி சோறு வாங்கியுண்டு, காயசண்டிகை என்னும் விஞ்சையர் பெண்ணொருத்தி தனக்கிருந்த தீராப் பசி நோய் தீர்ந்தனள். பின்னர் மணிமேகலை, உலகவறவி யென்னும் ஊரம்பலம் சேர்ந்து, பலருக்கும் பசிப்பிணியைப் போக்கி வந்தாள்.

பாரதக் கதையில், வனவாச காலத்திலே பாண்டவர்கள் தங்களோடிருந்த பன்னீராயிரம் பிராமணர்களுக்கு உணவு கொடுக்கும்படி, கதிரவனாற் கொடுக்கப் பட்ட அட்சய பாத்திரமும் இவ்வகையைச் சேர்ந்ததே.