கலைக்களஞ்சியம்/அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் : இருப்பிடமும் பரப்பும் : இது உலகிலேயே ஒரு மிகப் பெரிய இராச்சியம் ; பரப்பு : 35,58,850 சதுர மைல்கள் ; வட அமெரிக்காக் கண்டத்தின் மித சீதோஷ்ண மண்டலத்தில் அமைந்துள்ளது ; வடக்கே கானடாவும்,

பிளாரிடா ஆறு

உதவி : அ. ஐ. நா. செய்தி இலாகா, சென்னை.

தெற்கே மெக்சிகோவும், லத்தீன் அமெரிக்காவும். கீழ்ப்புறம் அட்லான்டிக் சமுத்திரமும், மேல்புறம் பசிபிக் சமுத்திரமும் உள்ளன.

முக்கிய இயற்கை அமைப்புக்கள் மூன்று : (1) மேற்கு மலத்தொடர்கள், (2) இடையேயுள்ள தாழ்நிலங்களோடு கூடிய சமவெளிகள், (3) அப்பலேச்சிய மலைகள்.

நயாகார நீர்வீழ்ச்சி
உதவி:அ. ஐ. நா. செய்தி இலாகா, சென்னை.

மேற்கு மலைத்தொடர்கள் : பசிபிக் மலைத் தொடர்களும், ராக்கிமலைத்தொடர்களும், இவற்றினிடையே உள்ள மலையிடைப் பீடபூமிகளும் கூடியவை. அப்பலேச்சிய மலைத்தொடர்கள் அட்லாண்டிக் கரையை அடுத்துச் செல்லும் மடிப்பு மலைகளாம். வடக்கே ஐக்கிய நாடுகளுக்கும் கானடாவிற்கும் இடையே பெரிய ஏரிகள் இருக்கின்நன, இடைப்பட்ட தாழ்நிலங்கள் வழியே மிசிசிப்பி-மிசௌரி தன் உபநதிகளோடு கலந்து, தெற்கு நோக்கிப் பாய்ந்து, மெக்சிகோ வளைகுடாவில் கலக்கின்றது. ராக்கி மலைத்தொடருக்கு மேல்புறமும், அப்பலேச்சியனுக்குக் கீழ்ப்புறமும் பல சிறு ஆறுகள் ஓடுகின்றன. செசபிக், டெலாவேர் விரிகுடாக்கள் சமீப காலத்தில் நிலம் முழ்கி ஏற்பட்ட நீர்ப்பரப்புகள் என்று கருத இடம் உண்டு.

சீதோஷ்ண நிலை: அ. ஐ. நாடுகளில் பல சீதோஷ்ண நிலைகள் உண்டு. 1. வடமேற்கில் மழை மிகுதியான குளிர்ந்த மீத சீதோஷ்ணப் பகுதி, 2. காலிபோர்னியாவில் குளிர்கால மழையுடைய மத்தியதரைச் சிதோஷ்ண மண்டலம், 3. மலையிடை நிலங்களில் பாலைவனச் சீதோஷ்ணம், 4. இருபது அங்குவத்திற்குக் குறைந்த மழை பெய்யும் உள்நாட்டு மித சீதோஷ்ண நிலை, 5.தென்கிழக்குப் பகுதியில் 32° பா. குறையாத வெப்பநிலையையுடைய வெப்பச் சீதோஷ்ண மண்டலம், 6. வட கிழக்கே, 20°க்கு மேற்பட்டு மழை பெய்யும் பகுதி. இப் பகுதியில் நாள்தோறும் சீதோண நிலை மாறுபடுகிறது.

இயற்கைத் தாவரங்கள் : இங்குள்ள முக்கியமான காடுகளில் கிழக்குப் பகுதி அப்பலேச்சிய மலைகள் மீதும் மேற்குப் பகுதி ராக்கி மலைகள் மீதும் இருக்கின்றன. இவற்றிடையேயுள்ள சமவெளி பரந்த புல்வெளிப் பிரதேசம். கீழைப் பிரதேசத்தில் இருந்த இலையுதிர் காடுகளைப் பெரும்பாலும் அழித்து விட்டார்கள்.

அமெரிக்க உச்ச நீதி மன்றம்
உதவி:அ. ஐ. செய்தி இலாகா, சென்னை.
மேலைப்பிரதேசத்தில் உள்ள காடுகளை அதிகமாகப் பயன்படுத்தவில்லை. இவை டக்ளஸ் பெர் (Dougla5 Fir), ஹெம்லாக் (Hemlock), சிவப்புச் சிடார் (Red Cedar) முதலிய பயன்படும் பெருமரங்கள் அடர்ந்த

(Upload an image to replace this placeholder.)

ஊசியிலேக் காடுகள், பிரேயரிகளில் நெடும்புல் வகைகளும், மேலேச் சமவெளிகளில் குறும்புல் வகைகளும் காணப்படும். பாலே நிலங்களில் வளர்ச்சி குறைந்த சேஜ் பிரஷ் போன்ற புதர்களே காணப்படுகின்றன.

மக்கள் தொகை விவரம்

ஆண்டு மக்கள் தொகை (ஆயிரக் கணக்கில்)
வெள்ளையர் நீக்ரோக்கள் பிறர் மொத்தம்
1900 66,800 8,834 351 75,975
1910 81,732 89,828 413 91,975
1920 94,821 10,463 427 1,05,711
1930 1,10,287 11,891 597 1,22,775
1940 1,18,215 12,866 589 1,31,669

1950-ல் மதிப்பிட்டபோது மக்கள் தொகை சுமார் 1540 இலட்சம்; மக்கள் தொகைச் செறிவு சதுர மைலுக்கு 43 பேர். இந்நாட்டு மக்களில் 1880-ல் 28.6% ம், 1910-ல் 45.8% ம், 1920-ல் 51.4 %ம், 1940-ல் 56.5% ம் நகரங்களில் வசித்தனர். மொத்த மக்கள் தொகையில் 4/5 பங்கு கிழக்குப் பாகத்தில் வசிக்கின்றனர். சதுர மைலுக்கு 120 பேர் அடங்கியுள்ள வட கிழக்குப் பிரதேசம் உலகிலேயே மிக அடர்த்தியான மக்கள் தொகையுள்ள பெரும் பாகங்களில் ஒன்று. நியூயார்க் (மக் : 78,35,000) மிகப்பெரிய பட்டணம். சிக்காகோ (மக் : 36,06,000) பல தொழிற்சாலைகளடங்கிய ஒரு பெரிய ரெயில்வே நிலையம். பிலடெல்பியா (மக் : 20,64,794); லாஸ் அஞ்ஜலிஸ் (மக்: 19,57,692); டெட்ராய்ட் (மக் :18,38,517) முதலியவை பிற முக்கியமான நகரங்கள். தலைநகர் வாஷிங்டன்.

விவசாயம்: 20" வருடாந்தர சமமாரிக்கோடு இந்நாடுகளை இரண்டாகப் பிரிக்கிறது. விளைநிலங்களில் 9/10 பங்கு மழை மிகுந்த கிழக்குப் பகுதியில் அடங்கியிருக்கிறது. கிழக்குப்புறத்தில் தெற்கே கடற்கரையை அடுத்துக் கரும்பும் நெல்லும் விளையும் நிலங்களும், வடக்கே பருத்தி, சோளம், கோதுமை விளையும் நிலங்களும் முறையே காணப்படும். மேல் புறத்தில் மலைச்சரிவுகளில் மேய்ச்சல் நிலங்களும், பழ வகை பயிரிடப்படும் பசிபிக் கரையோரப் பிரதேசங்களும் அமைந்துள்ளன.

உலகின் மக்காச் சோளப் பயிரில் 3 4 பங்கு அமெரிக்காவிலேயே விளைகிறது. பெரிய ஏரிகளுக்குத் தெற்கிலும் தென்மேற்கிலும் உள்ள பிரதேசம் முழுவதிலும் இச் சோளம் விளைகிறது. விளைவில் 80-90% கோழி, பன்றி, பசுக்களின் உணவாகப் பயன்படுவதால் இப்பிரதேசத்தில் அவைகள் மிகுந்திருக்கின்றன மக்காச்சோளம் பயிராகும் பிரதேசத்திற்கும் பருத்தி பயிராகும் பிரதேசத்திற்கும் இடையே கோதுமை பயிராகிறது. பருத்தி விளைச்சல் அமெரிக்காவில் மிகுந்ததம்குக் காரணம், அங்குள்ள நீக்ரோக் கூலியாட்கள் மலிவாகக் கிடைப்பது தான். அ. ஐக்கிய நாடுகளில் 155 இலட்சம் பேல் பருத்தி (உலக உற்பத்தியில் 60%) உற்பத்தி செய்யப்படுகிறது.

1949-50-ல் அ. ஐ. நாடுகளின் உணவு தானியங்களின் நிலை

உணவு தானிய வகை 1949-ல் │ 1950-ல்
விளை நிலப்
பரப்பு
(மில்லியன்
ஏக்கர்கள்)
விளைவின்
மதிப்பு
(மில்லியன்
புஷல்கள்)
மக்காச் சோளம் 86.7 3131
கோதுமை 76.8 10.27
ஓட்ஸ் 40.6 1465
ரை 1.6 23
பார்லி 9.9 301
சோயா அவரை 9.9 287

அ. ஐக்கிய நாடுகளில் 610 இலட்சம் மாடுகள் இருக்கின்றன. ரோமத்திற்காக 500 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவையன்றி, 370 இலட்சம் பன்றிகளும், 40 கோடி கோழிகளும் உண்டு (1950).

மீன் பண்ணைகள் : அ. ஐ. நாடுகளில் உள்ள மீன் பண்ணைகள் உலகிலேயே மிக முக்கியமானவை. 1. அட்லான்டிக் மீன் பண்ணைகளில் காட், ஹாடக், ஹாலிபட் முதலிய வகை மீன்கள் கிடைக்கின்றன. 2. பெரிய ஏரி மீன் பண்ணைகளும் 3. சாமன் (Salmon) மீன் விசேடமாகக் கிடைக்கும் பசிபிக் மீன் பண்ணைகளும் குறிப்பிடத்தக்கவை.

தாதுப் பொருள்கள் : அ. ஐ. நாடுகளில் உலகிலேயே மிக அதிகமாக நிலக்கரி உற்பத்தியாகிறது. அப்பலேச்சிய நிலக்கரிக் கனிகளில் நாட்டு உற்பத்தியில் 75% கிடைக்கிறது. உலகப் பெட்ரோலிய உற்பத்தியில் 60% இந்நாடுகளில் கிடைக்கிறது. இந்நாடுகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் விரைவில் வற்றிப்போவதால் அமெரிக்கா இப்பொழுது எண்ணெய் இறக்குமதி செய்யவும் தொடங்கியுள்ளது. அமெரிக்க எண்ணெய்க் கிணறுகளின் சராசரி வயது 7 ஆண்டுகளே. சுபீரியர் ஏரியை யடுத்த பிரதேசங்களில், நாட்டில் எடுக்கும் இரும்பில் 80% கிடைக்கிறது. சிலி, சுவீடன் நாடுகளிலிருந்தும் இரும்புத் தாது இறக்குமதி யாகிறது. அலுமினியம், வெள்ளி, காரீயம், துத்தநாகம், செம்பு முதலானவையும் அ. ஐ. நாடுகளிலேயே மிக அதிகமாகக் கிடைக்கின்றன.

அ. ஐக்கிய நாடுகளில் 110 இலட்ச கிலோவாட் நீர் மின்சாரசக்தி உருவாக்கப்படுகிறது. இது உலக உற்பத்தியில் 1/3 பங்கு.

செய் தொழில்கள் : இரும்பு, எஃகு உற்பத்தி இங்கு மிகவும் முக்கியமானது. உலக எஃகு உற்பத்தியில் 40% இங்கு உண்டாகிறது; அடுத்தபடியாக, நெசவுத் தொழில் மிக முக்கியமாக நடைபெறுகிறது.

போக்குவரத்து : 2,43,000 மைல் நீளமுள்ள ரெயில்வேக்கள் (உலக ரெயில்வேக்களின் நீளத்தில் 45%) அ. ஐ. நாடுகளில் இருக்கின்றன. இவற்றுள் கண்டங்கடக்கும் ரெயில்வேக்கள் சிறப்பானவை. ஏராளமான கான்கிரீட் சாலைகள் இருக்கின்றன. பெரிய ஏரிகளும், மிசிசிப்பி-மிசௌரியும் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு மிகவும் பயன்படுகின்றன. எல்லா முக்கியப் பட்டணங்களுக்கும், கானடாவிற்கும், தென் அமெரிக்காவிற்கும், அட்லான்டிக் பசிபிக் சமுத்திரங்களைக் கடப்பதற்கும் விமானப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. அ. ஐ. நாடுகளுக்குப் பட்டு (ஜப்பான், சீனா), தேயிலை (ஜப்பான், இந்தியா), சணல், தோல் (இந்தியா), ரப்பர், வெள்ளீயம் (மலேயா), கம்பளியிழை (ஆஸ்திரேலியா), காகிதம் (கானடா), சுகபோகப் பொருள்கள் (ஐரோப்பா) முதலியவை இறக்குமதி யாகின்றன. பருத்தி, புகையிலை, கார்கள், எஃகு செய் பொருள்கள் முதலியவை விசேடமாக ஏற்றுமதியாகின்றன. ஏ. சீ.

வரலாறு : 17-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரெஞ்சு, ஸ்பானிய, ஆங்கிலேய, சுவீடிஷ், டச்சு மக்கள் ஏற்படுத்திய குடியேற்றங்களிற் சில பிற்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளாகப் பரிணமித்தன. சுவீடிஷ், டச்சுக் குடியேற்றங்கள் 17ஆம் நாற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலேயர்கள் வசமாயின. 1-ம் எலிசபெத் அரசியின் காலத்தில் முதல் முதல் ஆங்கிலக் குடி யேற்றங்கள் அமெரிக்காவில் தோன்றலாயின. சர் ஹம்ப்ரி கில்பர்ட் என்பவர் 1583-ல் நியூபவுண்டுலாந்தில் ஒரு குடியேற்றம் நிறுவ முயன்றது பயனின்றிப் போயிற்று. கில்பர்ட்டின் சகோதரரான சர் வால்ட்டர்ராலி 1584-ல் நியூபவுண்டுலாந்திற்குத் தெற்கே ஏற்படுத்திய குடியேற்றத்தை யொட்டி, 1585-ல்வர் ஜீனியா என்னும் குடியேற்றத்தை நிறுவினார். அமெரிக்கக் குடியேற்றக்காரர்கள் தொடக்கக் காலங்களில் அமெரிக்க ஆதிக்குடிகளான செவ்விந்தியர்களோடு போர் புரிந்து, தங்கள் சூடியேற்றங்களைக் காத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

1-ம் எலிசபெத் காலத்தில் நிரந்தரமான குடியேற்றம் ஒன்றும் நிறுவப் படவில்லையாயினும், 1-ம் ஜேம்ஸ் காலத்தில் அரசனுடைய சாசனம் பெற்று, வர்ஜீனியா கம்பெனி என்று ஒன்று 1606-ல் ஏற்பட்டது. 1609-ல் அக் கம்பெனிக்கு மிகுதியாக அதிகாரம் அளிக்கப்பட்டது. புகையிலை பயிரிடுவதும், கூலிக்கு அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதும், அப்பொழுது ஏற்பட்ட பழக்கங்கள். 1619-ல் வர்ஜீனியக் குடியேற்றத்தில் பிரதிநிதி சபையொன்று ஏற்படுத்தப்பட்டது. 1623 லிருந்து அக் கம்பெனியின் சாசனம் மாற்றியமைக்கப்பட்டுக் கவர்னரை நியமிக்கும் அதிகாரத்தை ஆங்கில அரசாங்கமே மேற்கொண்டது. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் இருந்த அரசியல் முறை இங்கிலாந்தில் இருந்ததைவிட முற்போக்காயிருந்தது. ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டு வரையில் இங்கிலாந்தில் வாக்குரிமை நிலை திருந்தவில்லை. ஆயினும் குடியேற்றங்களில் முதலிலிருந்தே பெரும்பாலோருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு வந்தது.

1-ம் சார்லஸ் காலத்தில் அவன் மனைவி ஹென்ரிட்டா மேரியா பெயரால் மேரிலாந்து குடியேற்றம் தாபிக்கப்பட்டது. அக்குடியேற்றத்தின் உரிமைகளைச் சர் ஜார்ஜ் கால்வர்ட் என்னும் தனி மனிதருக்கு இங்கிலாந்து மன்னர் அளித்தார்.

17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பியூரிட்டன் சமயப் பற்றுள்ளவர்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. அவர்களிற் பலர் தங்கள் தாய்நாட்டை விட்டுச் சென்று குடியேறுவதென்று தீர்மானித்தனர். 1620-ல் யாத்திரைப் பெரியார்கள் (The Pilgrim Fathers) மே பிளவர் (May-flower) என்னும் கப்பலிற் புறப்பட்டு, வட அமெரிக்காவை யடைந்து, பிளிமத்தில் குடியேறினர். இந்தக் குடியேற்றம் பிறகு மசசூசிட்ஸ் இராச்சியத்தில் அடங்கிவிட்டது.

குடியேறியவர்கள், காடு செறிந்த வட அமெரிக்கப் பிரதேசத்தில் மிகவும் உழைத்துக் காடழித்து நாடாக்கி வேளாண்மைக்குத் தக்கதாக நிலத்தைப் பண்படுத்தி, நிலத்தினால் வரும் வளங்களைப் பெற வேண்டிய நிலையில் இருந்தனர்.

மசசூசிட்ஸ் இராச்சியத்திற்குக் கவர்னரைத் தானே நியமித்துக்கொள்ளும் உரிமையும் பிரதிநிதிசபை ஒன்றும் ஏற்பட்டன. இந்த இராச்சியத்திலிருந்து சிலர் கனெக்டிகட் ஆற்றின் வழியே சென்று, கனெக்டிகட் குடியேற்றத்தை நிறுவினர். மசசூசிட்ஸ் ஆட்சி முறையில் அதிருப்தியடைந்த ரோஜர் வில்லியம்ஸ் ரோடு தீவு (Rhode Island) குடியேற்றத்தை நிறுவினார். அக்குடியேற்றத்தில் பூரண சமயப் பொதுநோக்கு இருந்தது. நியூ ஹாம்ட்ஷயர், மெயின் ஆகிய இரு குடியேற்றங்களும் மசசூசிட்ஸிலிருந்து பிரிந்து ஏற்பட்டவை. மெயினிலிருந்து கனெக்டிகட்வரை இருந்த குடியேற்றங்களுக்கு நியூ இங்கிலாந்து குடியேற்றங்கள் என்று பெயர். இங்குக் குடியேறியவர்கள் கல்வியிலும் தொழில் ஆற்றலிலும் சிறந்தவர்கள். சரிவரப் பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயிரிட்டுப் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில், சுதேசிகளுடைய பகைமையையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. எல்லைப்புறங்களில் சுதேசிச் செவ்விந்தியர்களுக்கும் குடியேறிய வெள்ளையர்கள் நடந்த பல சண்டைகளில் சுதேசிகள் தோற்றுப் போனதால், அவர்கள் மேலும் மேலும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

நியூ இங்கிலாந்து குடியேற்றங்களில் இருந்த வாழ்க்கை முறையும் தென் குடியேற்றங்களில் இருந்த வாழ்க்கை முறையும் வேறுபட்டிருந்தன. நியூ இங்கிலாந்து குடியேற்றங்களுடைய சீதோஷ்ண நிலை ஏறத்தாழ இங்கிலாந்தைப் போலவே இருந்தது. ஆகையால் இங்கிலாந்தில் உற்பத்தியான பொருள்களைவிட அதிகமாக ஒன்றும் அங்கு உற்பத்தியாகவில்லை. ஆனால் வர்ஜீனியாவிலும் மேரிலாந்திலும் புகையிலை முதலிய வெப்பப் பிரதேசத்துப் பயிர்களும் விளைந்தமையாலும் அவ்விளைபொருள்கள் ஐரோப்பாவில் விலைபோயினமையாலும் தென் குடியேற்றங்கள் பொருளாதார முறையில் அதிக இலாபகரமானவையாகக் கருதப்பட்டன.

1641-ல் நியூ இங்கிலாந்து குடியேற்றங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டத்தை அமைத்துக்கொண்டன ; இவ்வமைப்பு 1643-ல் நன்கு வளர்ச்சியுற்றது. மசசூசிட்ஸ், பிளிமத், கனெக்டிகட், நியூ ஹேவன் என்னும் நாடுகள் இதில் சேர்ந்து கொண்டன. ரோடு தீவும் மெயினும் நீக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மசகு சிட்ஸே முக்கியமாக இருந்தது. செவ்விந்திய, பிரெஞ்சுத் தாக்குதல்களை எதிர்க்கவும், இங்கிலாந்தின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பட்டது. ஆயினும் 17ஆம் நூற்றாண்டிறுதியில் இது கலைந்துவிட்டது.

1621-ல் நிறுவப்பட்ட டச்சு மேற்கிந்தியக் கம்பெனி ஏற்படுத்திய குடியேற்றங்கள், நியூ ஆம்ஸ்டர்டாம், நியூ ஜர்சி, டெலவேர் என்பவை. இக்கம்பெனி முதலில் நிறுவிய குடியேற்றம் ஆரஞ்சுக்கோட்டை என்பது. 1626-ல் மான்ஹாட்டன் தீவு சுதேசிகளிடமிருந்து விலைக்கு வாங்கப் பெற்றது. ஆங்கிலக் குடியேற்றங்களும் டச்சுக் குடியேற்றங்களும் அடுத்தடுத்திருந்தமையால் அவைகளுக்குள் சண்டை மூண்டது. 1667-ல் ஏற்பட்ட பிரேடா (Breda) உடன்படிக்கைப்படி நியூ ஆம்ஸ்டர்டாம், நியூ ஜர்சி, டெலவேர் ஆகிய மூன்று குடியேற்றங்களும் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமாயின. டச்சுக்காரர்களது நியூ ஆம்ஸ்டர்டாம் நியூயார்க் என்று பெயர் பெற்றது.

1681-ல் வில்லியம் பென் பென்சில்வேனியா குடியேற்றத்தை நிறுவினார். அதற்கு ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டு, நிருவாக சபையும், சட்ட சபையும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு நிறுவப்பட்டன. சுதேசிகளோடு போர்புரியக் கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர். இங்கு வேளாண்மை, சுரங்கத் தொழில், சில கைத்தொழில்கள் முதலியவை முன்னேற்றமடைந்தன. 1663-ல் 11-ம் சார்லஸ் தென் வர்ஜீனியா பிரதேசத்தில் ஒரு குடியேற்றம் நிறுவுவதற்காகச் சிலருக்கு அனுமதியளித்தார். அவர்கள் தென், வட கரோலினாக்களை நிறுவினர். வட கரோலினாவைவிடத் தென் கரோலினா மிக விரைவில் பல வகையிலும் முன்னேறிற்று. 1786-ல் சுதேசிகளுக்கும் தென் கரோலினாக்காரர்களுக்கும் சண்டை மூண்டது. அதில் குடியேறியவர்கள் வெற்றி பெற்றனர். 1719-ல் சட்ட சபை கவர்னரை நீக்கிவிட்டுத் தானே கிரௌன் குடியேற்றம் என்கிற முறையில் நிருவாகம் நடத்த விரும்பியதை லண்டன் அரசாங்கம் எதிர்க்கவில்லை. 1732-ல் ஜெனரல் ஓகல்தார்ப் (Oglethorpe) என்பவரால் ஜார்ஜியா நிறுவப்பட்டது. இங்கிலாந்தில் கடன்பட்டுப் பிழைக்க வழியற்றுப் போனவர்களுக்கு ஒரு வழி செய்ய விரும்பியே இக்குடியேற்றம் நிறுவப்பட்டது. ரம் என்னும் சாராய விற்பனையும், நீக்ரோ அடிமை வியாபாரமும் இங்குத் தடை செய்யப்பட்டன. ஆயினும் சிலகாலம் கழித்து இக் குறிக்கோள்கள் மறந்துபோகவே, அடிமைகளைக் கொண்டு வேளாண்மை நடத்தும் முறை. பயிற்சியில் வந்துவிட்டது.

ஸ்பானியர்களும், போர்ச்சுகேசியர்களும் நிறுவிய அமெரிக்கக் குடியேற்றங்களைப்போலத் தாங்களும் நிறுவ வேண்டும் என்று விரும்பிய ஆங்கிலேயர்கள் பொன் முதலிய விலையுயர்ந்த உலோகங்கள் வட அமெரிக்காவில் மிகுதியாகக் கிடைக்கும் என்று கருதியே இத்துறையில் இறங்கினர். ஆயினும் செழிப்பு மிகுந்த ஒரு கண்டத்தின் ஒரு பகுதி தங்கள் கையில் அகப்பட்டுவிட்டதால், அதைக் கைவிட அவர்கள் விரும்பவில்லை. அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து, குடியேற்ற நாடுகளோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியிருந்ததால், கப்பல் வாணிபமும் நாவாய் கட்டும் கலையும் இங்கிலாந்தில் வளர்ச்சியடைந்தன.

மேற்கூறிய குடியேற்றங்கள் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே அவை இங்கிலாந்தின் ஆதரவையும் பாதுகாப்பையும் எதிர்பார்த்தே நின்றன. தாய்நாட்டுச் செல்வம் ஏராளமாகச் செலவழிக்கப்பட்டு, இக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டன ; அன்றியும் தாய்நாட்டுத் துருப்புக்கள் இக்குடியேற்றங்களின் பாதுகாப்பிற்குத் தேவையாயிருந்தன. தூர நாடுகளில் குடியேற்றங்களை நிறுவுவதிற் செலவாகும் பணத்தை, அக்குடியேற்றங்களோடு செய்யும் வியாபார மூலம் இலாபமாகத் திரும்பப்பெறும் ஏகாதிபத்திய முறையில் தவறு ஒன்றுமில்லை என்று அக்காலத்தவர்கள். நினைத்தார்கள். ஆயினும் அமெரிக்கக் குடியேற்றங்கள் இங்கிலாந்திலிருந்து ஆயிரம் மைல் தொலைவில் இருந்ததால் சமாசாரப் போக்குவரத்திற்குச் சாதாரணமாகக் குறைந்தது மூன்று மாதம் பிடித்தது. ஒவ்வொரு விஷயத்திற்கும் இங்கிலாந்தைக் கேட்டே நடப்பது இயலாத காரியமாயிருந்தது. ஆகையால் குடியேற்றங்கள் பெரும்பாலும் தங்கள் விவகாரங்களைத் தாங்களே கவனித்துக்கொண்டு வந்தன. ஆயினும் வியாபாரமும் அரசியல் மேலதிகாரமும் தாய்நாட்டிற்கே இருந்துவந்தன.

தொடக்கத்தில் தனியாள் உரிமை வழங்கப்பட்டிருந்த பட்டயங்கள் மூலம் குடியேற்றங்கள் ஒவ்வொரு தனி மனிதருக்கோ, அன்றிக் கம்பெனிகளுக்கோ சொந்தமாயிருந்தன, 18ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திற்குள் அவையெல்லாம் கவர்னர், சட்ட சபை முதலிய அரசாங்க அங்கங்களைப் பெற்றுவிட்டன. அரசியல் அதிகாரமும் லண்டனிலிருந்து செலுத்தப்பட்டு, அவை கிரௌன் குடியேற்றங்களாயின. 11-ம் சார்லஸ் காலத்தில் 'வியாபார, வெளிநாட்டுத் தோட்டக் கவுன்சில்' (Council of trade and foreign plantations) என்று ஒரு கவுன்சில் நியமிக்கப்பட்டு, அது குடியேற்ற நாட்டு விவகாரங்களைக் கவனித்து வந்தது. அது ஆங்கிலேயப் பிரிவி கவுன்சிலின் ஒரு கமிட்டியே யாகும். கவுன்சில் உத்தரவுகள் மூலம் அது தன் அதிகாரத்தைச் செலுத்தி வந்தது. இங்கிலாந்திலும் குடியேற்றங்களிலும் ஒரே வகையான சட்டமுறையே அமலிலிருந்தது. பிரிட்டிஷ் பார்லிமென்டு, குடியேற்ற நாடுகள் சம்பந்தமாகவும் சட்டம் இயற்ற முடியும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1688க்குப் பிறகு, செலாவணி, தபால், கப்பல் வியாபாரம் முதலிய விஷயங்களைப்பற்றி இங்கிலாந்தே சட்டமியற்றியது. 1660-ல் இயற்றப்பட்ட ஒரு குடியேற்றச் சட்டப்படி குடியேற்ற நாட்டு வியாபாரம் முழுவதும் பிரிட்டிஷ் கப்பல்கள் வாயிலாகவே நடைபெறவேண்டும் என்று ஏற்பட்டது ; 1664-ல் செய்த ஒரு சட்டப்படி, குடியேற்றங்கள் இங்கிலாந்தைத் தவிர வேறு நாடுகளோடு வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டது. 1673-ல் மற்றொரு சட்டப்படி ஒரு குடியேற்றத்திற்கும் மற்றொரு குடியேற்றத்திற்கும் இடையே நடைபெறும் வியாபாரத்திலும் சில பொருள்களுக்கு வியாபார வரி விதிக்கப்பட்டது. . இச்சட்டங்களால் ஆங்கிலேய வியாபாரமும் கப்பல் முதலாளிகளின் நலன்களும் முன்னேறின. வியாபார சம்பந்தமாகச் செய்யப்பட்டிருந்த விதிகளை வியாபாரிகள் அதிகமாகப் பொருட்படுத்தாமலிருந்தனர். சட்டங்களை மீறின வியாபார முறைகளை ஆங்கிலேயக் கப்பல் மாலுமிகள் கைக்கொண்டனர். வால்ப்போல் (Walpole 1676-1745) காலத்தில் இச்சீர்கேடு உச்சநிலையை அடைந்திருந்தது. இவ்வொழுங்கீனத்தால் குடியேற்ற நாடுகள் எவ்வித மனக்கசப்பையும் கொள்ளவில்லை. III-ம் ஜார்ஜ் (1738- 1820) காலத்தில் வியாபார விஷயமாகப் புதுவிதிகள் ஏற்பட்டதே குடியேற்றங்கள் தாய்நாட்டை எதிர்த்துப் போரிட்டதற்கு முக்கிய காரணமாகும்.

செயின்ட் லாரன்ஸ் நதிக்குத் தெற்கே ஆங்கிலக் குடியேற்ற நாடுகள் ஏற்பட்டபோதே அவ்வாற்றின் கரையில் அக்காடி (Acadie 1604), குவிபெக் (1608) முதலிய குடியேற்றங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் நிறுவினர். அக்காடியில் ஸ்காட்லாந்துக்காரர்கள் சிலர் நோவாஸ்கோஷியா(Nova Scotia) என்னும் வேறொரு குடியேற்றத்தைப் பிறகு நிறுவினர். 1627-9-ல் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடந்த போரின் முடிவாக இங்கிலாந்து நோவாஸ்கோஷியாவை இழந்தது. 1697-ல் லூசியானாவும், 1718-ல் நியூ ஆர்லியன்சும் பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்டன. 1689-1713-ல் நடந்த ஆங்கில -பிரெஞ்சு யுத்தத்தில் எல்லைப்புறச் சண்டைகள் நடந்தன. நியூ இங்கிலாந்து குடியேற்றங்கள் ஹட்ஸன் வளைகுடாக் குடியேற்றங்களைத் தாக்கின. முடிவில் 1713-ல் யூட்ரெக்ட் உடன்படிக்கைப்படி. நியூ பவுண்டுலாந்து இங்கிலாந்திற்குக் கிடைத்தது.

குவிபெக், மான்ட்ரியால், கிரௌன்பாயின்ட், நயாகரா கோட்டை முதலிய மதிலிட்ட நகரங்கள் பிரெஞ்சுக்காரர்களால் ராணுவ நிலையங்களாக நிறுவப்பட்டன. இக் கோட்டைகள் மூலம், பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தை வட அமெரிக்காவில் நிலை நிறுத்திக் கொள்வதோடு, ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கம் வளரவிடாமலும் தடுக்க வேண்டும் என்றும் விரும்பியிருக்கக் கூடும். அக் காலத்தில் பிரெஞ்சுக்காரர்களுடைய ராணுவ நிலைமை ஆங்கிலேயர்களுடையதைவிடச் சிறந்ததாயிருந்தது.

18ஆம் நூற்றாண்டின் இடையில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஓய்வின்றி வட அமெரிக்காவில் சண்டை நடந்துகொண்டிருந்தது. 1757-ல் வில்லியம் பிட் பிரிட்டிஷ் இராச்சிய செக்ரடரி (Secre- tary of State)யானபோது குடியேற்ற நாட்டுப் போரைத் திறம்பட நடத்தத் தொடங்கிப் பல வெற்றிகளையடைந்தார். அதன் விளைவாகப் பிரெஞ்சு ஆதிக்கம் குவிபெக், மான்ட்ரியால் ஆகிய இரு நாடுகளோடு நின்றது. 1759-ல் உல்ப், மான்ட்காம் என்னும் இரு பிரிட்டிஷ் ஜெனரல்கள் குவிபெக்கையும் தாக்கிக் கைப்பற்றினர். இப்போரில் அவ்விரு தளபதிகளும் கொல்லப்பட்டனராயினும், வட அமெரிக்காவில் பிரெஞ்சு ஆதிக்கம் ஒருவாறாக முடிவுற்றது. 1763-ல் பாரிஸ் உடன்படிக்கைப்படி மிசிசிபிக்குக் கிழக்கேயுள்ள எல்லாப் பிரெஞ்சுக் குடியேற்ற உடைமை நாடுகளும் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டன. 1760-ல் ஸ்பெயினிடமிருந்து பிளாரிடா இங்கிலாந்திற்குக் கிடைத்தது.

1763-ல் ஏற்பட்ட பாரிஸ் உடன்படிக்கையால் வட அமெரிக்காவிலிருந்த இடங்களைப் பிரான்சு இழந்தது. தாய்நாட்டின் உதவியை மிகுதியும் எதிர்பார்த்திருந்த பிரிட்டிஷ் குடியேற்றங்களுக்கு அடுத்தாற்போலிருந்த பிரெஞ்சு அபாயம் நீங்கிவிட்டதால் அவை தங்கள் நாட்டு நிருவாகத்தைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியும் என்று கருதலாயின. குடியேற்ற நாடுகளுக்கு இங்கிலாந்தின்மீது பலவகையிலும் பகைமை முற்றத்தொடங்கிற்று. கிரென்வில் (Grenville) என்னும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி நேர்முக வரி விதிக்க முயன்றபோது (1760-1766)முதன் முதல் மனக்கசப்புத் தோன்றிற்று. 1767-1774-ல் டவுன்ஷெண்டு தேயிலை வரி முதலிய மறைமுக வரிகளை விதிக்க முயன்றபோது இம் மனக்கசப்பு வலுத்தது. 1774லிருந்து 1776 வரையில் இக்குடியேற்றங்கள் ஒரு காங்கிரசைக் கூட்ட முயன்றபோது குடியேற்ற நாடுகளின் ஒருமித்த நடவடிக்கை சாத்தியமாயிற்று.

ஏழாண்டுப் போருக்குப் பிறகு இங்கிலாந்திற்குப் பெரிய தேசியக் கடனைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோது, அக் கடன் சுமையில் ஒரு பகுதியைக் குடியேற்ற நாடுகளும் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கிரென்வில் எண்ணினார். குடியேற்ற நாடுகள் இதை விரும்பவில்லையாயினும் தாம் எண்ணியவாறே கிரென்வில் வரி விதிக்க விரும்பினார். ஒரு இலட்சம் பவுன் வரி வசூல் செய்து, வட அமெரிக்கப் பாதுகாப்பிற்காக அங்கு ஒரு படையை நிறுவ வேண்டும் என்று அவர் கருதினார். இவ் வரியை முத்திரைப் பணம் மூலம் வசூல் செய்யவேண்டும் என்பது அவர் கருத்து. ஆனால் பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கு அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக்கும் உரிமையில்லை என்று அமெரிக்கர் கருதினர். பிரிட்டிஷ் பார்லிமென்டில் அமெரிக்கக் குடியேற்றங்களிலிருந்து பிரதிநிதிகள் அனுப்பப்படாமையால் அப் பார்லிமென்டின் சட்டங்கள் தங்களைக் கட்டுப்படுத்தமாட்டா என்பது குடியேற்றங்களின் கொள்கை. பிரிட்டிஷ் பார்லிமென்டு முத்திரைச் சட்டத்தை 1765-ல் நிறைவேற்றிற்று. இவ் விஷயத்தைக் கேள்விப்பட்ட அமெரிக்கர் மிகுந்த கோபமடைந்தனர். போஸ்டன், நியூயார்க் முதலிய இடங்களில் கலவரம் நடந்தது. முத்திரைக் காகிதங்களைச் சேர்த்து நெருப்பு வைத்தனர். பிரிட்டிஷ் பொருள்களை அமெரிக்க வியாபாரிகள் வாங்க மறுத்தனர்; பிரிட்டிஷ் துணிகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். நெசவுக் கைத்தொழில் அமெரிக்காவில் ஆரம்பமாயிற்று. பிரிட்டிஷ் நெசவுத் தொழில் மிகவும் சீர்கெட்டது. 1766-ல் பிரிட்டனில் ராக்கிங்ஹாம் பிரதம மந்திரியானபின் முத்திரைச் சட்டம் ரத்தாயிற்று; ஆயினும் அமெரிக்கக் குடியேற்றங்கள் மீது வரி விதிக்கும் உரிமை இங்கிலாந்து பார்லிமென்டிற்கு உண்டு என்பது வற்புறுத்தப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கு இவ்வுரிமை உண்டு என்பதை அமெரிக்கர் ஒப்புக் கொள்ள மறுத்தனர். 1767-ல் புதுவிதமான மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன. இவற்றில் முக்கியமானவை இறக்குமதி வரிகள். இவற்றைச் செலுத்த முடியாது என்று மசசூசிட்ஸ், வர்ஜீனியா, வடகரோவினா முதலிய குடியேற்றங்கள் மறுத்தன. இவ்வகை வரி விதிப்புக்களைச் சாதம் (Chatham), பர்க் (Burke) முதலிய ஆங்கிலப் பெரியோர்களும் எதிர்த்தனர்.

நார்த் பிரபு 1770-ல் பிரிட்டிஷ் பிரதம மந்திரியானார். அவர் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில், தேயிலை வரியைத் தவிர ஏனையவற்றை யெல்லாம் நீக்கிவிட்டார். அமெரிக்கா மீது ஆங்கிலேயருக்கு வரி விதிக்கும் உரிமைகள் உண்டு என்று காட்டுவதற்காகத் தேயிலை மீது விதித்திருந்த வரியை நீக்காமல் வைத்திருந்தனர். இவ்வரியினால் ஆங்கிலேயருக்கு இலாபம் அதிகமாகக் கிடைக்கவில்லையாயினும், கொள்கையளவிற்கேனும் அவ்வரி இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அமெரிக்கரும் கொள்கையளவிலேயே அவ்வரியை எதிர்த்தனர். இதை ஒட்டி 1770-ல் போஸ்ட்டனில் நடந்த கலவரத்தை ஆங்கில அதிகாரிகள் பலாத்காரமாக அடக்கினர். கலவரம் செய்தவர்களில் சிலர் இறந்தனர். இதை 'போஸ்ட்டன் படுகொலை' என்று வருணித்தனர். 1772-ல் 'காஸ்பீ' (Gasree) என்னும் பிரிட்டிஷ் போலீஸ் கப்பல் கரை தட்டிற்று. அதை அமெரிக்கர்கள் எரித்துவிட்டனர். இச் செயலில் கலந்து கொண்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பியது பலிக்கவில்லை.

1773-ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலம் அமெரிக்காவிற்குப் பல கப்பல்கள் தேயிலைப் பெட்டிகளோடு வந்தன. அமெரிக்கர் தேயிலை வரி கட்டாமல் அப்பெட்டிகளைக் கப்பலை வீட்டிறக்க முடியாது. பிலடெல்பியாவிலும் நியூயார்க்கிலும் வியாபாரிகள் அப்பெட்டிகளை எடுக்க மறுத்துவிட்டனர். சார்லஸ் டவுனில் கப்பலைவிட்டிறக்கின தேயிலை கிடங்குகளிலேயே கிடந்தது. போஸ்ட்டனில் சிலர் கப்பலில் ஏறி, 18,000 பவுன் பெறுமானமுள்ள தேயிலைப் பெட்டிகளை வாரிக் கடலில் வீசினர். இதைப் 'போஸ்ட்டன் தேநீர் விருந்து' என்பர். இச் செயல்களால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர் போஸ்ட்டன் துறைமுகத்தை மூடிவிடவும், குடியேற்ற நாடுகளில் ஆங்கிலேயத் துருப்புக்களை வைக்கவும் சட்டமியற்றினர்.

தங்களுடைய சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டதையுணர்ந்த குடியேற்றங்கள் பிலடெல்பியாவில் கூடிய ஒரு காங்கிரசில் இங்கிலாந்தின் போக்கைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின. 1775-ல் காங்கிரசு இத்தகராறை நல்ல முறையில் தீர்க்கும்படி பிரிட்டிஷ் மன்னருக்கு ராஜ விசுவாசத்தைக் கூறிக்கொண்டு ஒரு விண்ணப்பத்தை அனுப்பிற்று.

III-ம் ஜார்ஜ் இவ்விண்ணப்பத்தை ஏற்க மறுத்து விட்டார். அதே ஆண்டில் காங்கிரசின் படைகள் கானடாவைத் தாக்கின. 1776-ல் தாய்நாட்டோடு பெரும்பகை மூண்டது. கப்பல் வர்த்தகச் சட்டங்களை மீறி, எல்லா நாடுகளோடும் அமெரிக்கா வியாபாரம் செய்யத் தொடங்கிற்று. 1776 ஜூலை 4 ஆம் நாளில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்தன.

1775-க்குப்பின் காங்கிரசு சபை இரண்டாவது முறையாகக் கூடி, அமெரிக்கப் போர்ப்படைகளை நன்கு அமைத்து, அவற்றிற்கு வர்ஜீனியாவைச் சார்ந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்பவரைத் தலைமைத் தளபதியாக நியமித்தது. மசசூசிட்சில் கவர்னராயிருந்த கேஜ் (Gage) குடியேற்றப் படைகளை அடக்க முயன்றது பலிக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து போதிய அளவு படை வரவில்லை; பிரிட்டிஷ் கப்பற்படையின் தரமும் குறைந்திருந்தது. 1775-ல் பங்கர் ஹில் என்னுமிடத்தில் நடந்த சிறு சண்டையில் பிரிட்டிஷ் படைகள் பெருத்த நஷ்டத்தோடு வெற்றியடைந்தன. 1775-ல் போஸ்ட்டனைக் கைவிட்டுவிட்டு, பிரிட்டிஷ் படைகள் நியூயார்க்கைத் தங்கள் ராணுவத் தலைமையிடமாகக் கொண்டன. காரன்வாலிஸ் என்னும் பிரிட்டிஷ் தளபதி நியூஜெர்சியைக் கைப்பற்றியதும், வாஷிங்டன் தாமே பிரிட்டிஷ் படைகளைத்தாக்கி நியூஜர்சியை மறுபடியும் கைப்பற்றினார். 1777-ல் ஹோவிற்குப் பதிலாகப் பர்காயன் (Burgoyne) பிரிட்டிஷ் தளபதியானார். ஆங்கிலப்படைத் தலைவர் களான கிளின்டன், ஹோ, காரன்வாலிஸ் ஆகிய மூவரும் 1777-ல் சேர்ந்து செய்த போரில், வாஷிங்டன் பிராண்டிவைன் முதலிய இடங்களில் தோற்கடிக்கப்பட்டார்; ஆயினும் பர்காயனுடைய படையொன்று சரடோகாவில் ஜெனரல் கேட்ஸ் (Gates) என்பவரிடம் தோற்றுச் சரண்புகுந்தது.

இக்காலத்தில் தான் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் சண்டை மூண்டது. ஹோ, காரன்வாலிஸ் இருவரும் சார்லஸ் டவுனில் குடியேற்றப் படையைத் தோற்கடித்தனர். ஆயினும் பார்க் டவுனில் காரன்வாலிஸ் வாஷிங்டனுக்குத் தோற்று, அமெரிக்கரிடம் சரணடைந்து விட்டார்.

1782 நவம்பரில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்திற்கும் சமாதானம் ஏற்பட்டது. இங்கிலாந்து அமெரிக்க சாம்ராச்சியத்தில் முக்கியமான பகுதியை இழந்தது. ஒரு புதிய வலிய இராச்சியம் எழுந்தது. குடியேற்ற நாடுகளை வலக்கட்டாயத்தால் ஆள எண்ணுவது மடமை என்பது ஆங்கிலேயருக்கு விளங்கிற்று.

சுதந்திரம் பெற்ற குடியேற்ற நாடுகள் தத்தமக்கு வேண்டிய அரசியல் முறைகளை வகுத்துக் கொள்ளத் தொடங்கின. இவற்றில் மக்களின் அடிப்படை உரிமைகள் விவரிக்கப்பட்டன. பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்த போதிலும், எல்லா இராச்சியங்களிலும் ஒரே மாதிரியான அரசியல் அமைப்பு ஏற்பட்டது என்று கூற முடியாது. இந்நாடுகள் எல்லாம் அமெரிக்க ஐக்கியம் என்னும் ஒரு பெரிய அரசியல் ஸ்பானத்திற்குட்பட்டவையாக இருக்கவில்லை. 1775 லிருந்து 1781 வரையில் 13 இராச்சியங்களே அமெரிக்க இராச்சியங்களாயிருந்தன. 1777-ல் இவ்வீராச்சியங்கள் தமக்குள் ஒரு நாட்டுக் கூட்ட (Confederation) உடன்படிக்கை செய்து கொண்டன. இதன்படி காங்கிரசு ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடவேண்டும்; அதற்கு இராச்சியங்கள் மீது அதிகாரம் உண்டேயன்றி, அவ்விராச்சிய மக்கள் மீது நேரடியாக அதிகாரம் இல்லை என்று ஏற்பட்டது.

1786 வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி, அல்லிகனி மலைகளுக்கும் மிசிசிபிக்கும் இடையே உள்ள பிரதேசம் அமெரிக்காவிற்குச் சொந்தமாயிற்று. 1787-ல் வட மேற்குப் பிரதேசச் சட்டம் ஒன்று ஏற்பட்டு, அப்பிர தேசமும் அமெரிக்க இராச்சியங்களுக்குச் சொந்தமா யிற்று. அப்பிரதேசத்தில் ஓஹியோ, இண்டியானா, இல்லினாய்ஸ், மிச்சிகன், விஸ்கான்சின் என்பவை அடங்கியிருந்தன ; இந்த இராச்சியங்களில் வடக்கே இருந்தவற்றில் கைத்தொழில் முன்னேறியதால் அடிமை நிலை நடைமுறையில் இல்லை. தெற்கே யிருந்த விவசாய இராச்சியங்களில் குறைந்த செலவில் அதிக ஆட்கள் வேண்டி யிருந்ததால் அடிமை நிலை நடைமுறையில் இருந்தது.

அமெரிக்க இராச்சியங்களின் படைத் தலைவராயிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் விரும்பி யிருந்தால் படை வலிமை கொண்டு அந்நாட்டு மன்னராகி யிருக்கலாம். ஒரு சிறிதும் தற்பெருமையில் விருப்பமில்லாத அப்பெரியார் அரச பதவியை வெறுத்தார். முதலில் இராச்சியங்கள் தத்தம் சுதந்திரத்திலேயே கருத்தாக இருந்ததால், ஒற்றுமைப்பட வழியில்லாமலிருந்தது. ஆனால் தனித்திருப்பதால் தங்கள் சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்படும் என்று உணர்ந்த அவ்விராச்சியங்கள் தங்களுக்குள் ஓர் ஒற்றுமையான அரசியல் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தன. அரசியல் சட்டக் கன்வென்ஷன் 1787-ல் நிறுவப்பட்டது. கூட்டாட்சிக் கட்சி, கூட்டாட்சி எதிர்க்கட்சி என்று இரண்டு அரசியல் கட்சிகள் தோன்றின. அறிஞர்களான பெஞ்சமின் பிராங்கிளின், ஜேம்ஸ் மாடிசன், அலெக்சாந்தர் ஹாமில்ட்டன், எட்மண்டு ராண்டால்ப், வில்லியம் பேட்டர்சன் போன்றவர்கள் அந்தக் கன்வென்ஷனில் உறுப்பினரா யிருந்தனர். அவர்களுடைய நன்முயற்சியால் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சட்டம் உருவாயிற்று. இதை ஒவ்வொன்றாக எல்லா இராச்சியங்களும் ஒப்புக்கொண்டன. ஒரு பெரிய நாட்டிற்கு மன்னனில்லாத குடியரசு முறைப்படி ஜன நாயக ஆட்சித் திட்டம் முதன் முதலாக வரலாற்றிலேயே அந்நாட்டில் ஏற்பட்டது. ஜனாதிபதியாக யாரை நியமிப்பது என்பதைப் பற்றி யாருக்குமே ஐயமில்லை. அரசியல் அறிவிலும், தைரியத்திலும், பண்பாட்டிலும், பெருமையிலும் நிகரற்று விளங்கிய பெரியாராகிய வாஷிங்டன் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதியாக ஒருமுகமாக 1789-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே அடுத்த முறையும் ஜனாதிபதியானார். 1953 வரை (164) ஆண்டுகள், 33 ஜனாதிபதிகள் அந்நாட்டில் ஆட்சித் தலைவராக இருந்தனர்.

ஜெபர்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் லூயீசியானா பிரதேசம் பிரான்சிடமிருந்து 160 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்கப்பட்டது. 1810-12-ல் பிளாரிடா பிரிட்டிஷாரிடமிருந்து அமெரிக்காவிற்குக் கிடைத்தது. ஐரோப்பாவில் நெப்போலிய யுத்தங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், அமெரிக்க வியாபாரத்திற்குக் கேடு விளைந்ததால், அமெரிக்கருக்கும் பிரிட்டிஷாருக்கும் போர் மூண்டது. 1814-ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் அமெரிக்காவின்மேற் படையெடுத்து வாஷிங்டன் என்னும் நகரைக் கைப்பற்றின. ஆயினும் ஆண்டிரூ ஜாக்சன் என்பவர் பிரிட்டிஷ் படைகளை முற்றிலும் தோற்கடித்தார். 1814-ல் கென்ட் (Ghent) உடன்படிக்கைப்படி ஆங்கிலோ-அமெரிக்க சமாதானம் ஏற்பட்டது. 1867-ல் ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா 72 இலட்சம் டாலர்களுக்குப் பெறப்பட்டது. 1898-ல் ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மேற்கிந்தியத் தீவுகளைப்பற்றி ஒரு போர் மூண்டது. அப்போரில் அமெரிக்காவே வெற்றிகண்டது. அதனால் கியூபா, போர்ட்டோ ரிகோ, வவாய், பிலிப்பைன் தீவுகள் ஆகியவை அமெரிக்காவுக்குச் சொந்தமாயின. போர்ட்டோ ரிகோவும், ஹவாயும் 1900-ல் அமெரிக்கப் பிரதேசத்தின் பகுதியாகிவிட்டன. கியூபா 1901-ல் சுதந்திரம் பெற்றது. பிலிப்பைன் தீவுகள் 1946-ல் கதந்திரமடைந்தன.

1817-1825-ல் ஜனாதிபதியாயிருந்த ஜேம்ஸ் மன்ரோ காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் பலவகையிலும் முன்னேற்றமடைந்தன. மிசிசிபி, இல்லினாய்ஸ், ஆலபாமா, மெயின், மிசௌரி ஆகிய இராச்சியங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. “அமெரிக்கக் கண்டத்தின் விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள் தலையிடக்கூடாது. ஐரோப்பாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது“ என்னும் கொள்கையை மன்ரோ வெளியிட்டார். இக்கொள்கையே பெயர் பெற்ற ‘மன்ரோக் கொள்கை' என்பது. ஜாக்சன் 1829-1837-ல் ஜனாதிபதியாயிருந்த காலத்தில் ஜனநாயகக் கட்சி உதயமாயிற்று.

1861-1865-ல் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம்லின்கன், வாஷிங்டனுக்கு நிகரான பெருமையுடையவர். தென் ராச்சியங்களிலிருந்த அடிமைநிலை ஆதரவாளர்களுக்கும், வடராச்சியங்களிலிருந்த அடிமை நிலை எதிர்ப்பாளர்களுக்குமிருந்த மனவேறுபாட்டால் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒற்றுமைக்கே கேடு விளையக்கூடிய நிலைமை ஏற்பட்டது. எவ்வாறாயினும் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டி, அமெரிக்க ஐக்கியத்தைக் காத்து, அடிமைநிலையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு ஜனாதிபதியாக வந்த லின்கனிடம் தென் இராச்சியங்களுக்குப் பகை உண்டாயிற்று. இக்காரணத்தால் (1861-1865-ல்) உண்டான உள்நாட்டுப் போர் இறுதியில் ஆபிரகாம்லின்கன் கட்சிக்கு வெற்றியில் முடிந்தது. அமெரிக்க ஐக்கியத்திற்கு ஏற்பட்ட பெரிய அபாயம் நீங்கி, அடிமைநிலையும் அகற்றப்பட்டது. ஆயினும் வெற்றி கிட்டிய சில நாட்களுக்குள்ளேயே ஆபிரகாம் லின்கன் ஒரு நாள் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

லின்கன் காலத்திற்குப் பிறகு அமெரிக்க ஐக்கியத்திற்கு எவ்வித அபாயமும் ஏற்படவில்லை. பொருளாதாரத் துறையிலும், அரசியல் அதிகாரத்திலும் உலகில் இணையற்று விளங்குவதற்குத் தேவையான வசதிகள் முழுவதும் அந்நாட்டுக்கு ஏற்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே கைத்தொழில் முன்னேற்றம் விரைவில் ஏற்பட்டது. கச்சாப் பொருள்களில் ஒரு சிறிதும் குறைவில்லாத அமெரிக்க ஐக்கிய நாடுகள் கைத்தொழில் முன்னேற்றம் அடைந்ததில் வியப்பில்லை. ராக்பெல்லர் (Rockefeller), போர்டு (Ford), கார்னெகி (Carnegie) முதலிய பெரிய முதலாளிகளால் தொடங்கி நடத்தப்பட்ட மிகப் பெரிய கைத்தொழில் நிலையங்கள் அந்நாட்டில்தான் ஏற்பட்டிருக்கக்கூடும்.

20 -ஆம் நூற்றண்டில் தோன்றிய அமெரிக்க ஜனாதிபதிகளில் தியடோர் ரூஸ்வெல்ட்டும், வில்சனும், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டும் முக்கியமானவர்கள். தியடோர் ரூஸ்வெல்ட் காலத்தில் அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை ஏற்பட்டதால் அமெரிக்காக் கண்டத்து நாடுகள் ஒற்றுமையோடு செயலாற்றத் தொடங்கின. 1914-18-ல் உலக யுத்தத்தின் போது மன்ரோக் கொள்கையைக் கைவிட்டு, அமெரிக்கா ஐரோப்பிய விவகாரங்களில் தலையிட்டது. அந்த யுத்தத்தின் இறுதியில் அமெரிக்க - ஜனாதிபதி வில்சன் பதினான்கு அமிசங்கள் கொண்ட ஒரு நிரந்தர அமைதித் திட்டத்தை வெளியீட்டார். அவ்வடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச சங்கத்தில் அமெரிக்கா உறுப்பு நாடாக இருக்கவில்லை.

1931-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் அமெரிக்காவை மிகுதியும் பாதித்தது. 1937-ல் ஜனாதிபதியாக வந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் புகுத்திய புதுமுறை ஏற்பாட்டை (New Deal) அமெரிக்காவில் பலர் எதிர்த்தனராயினும், பொருளாதார நெருக்கடி ஓரளவு சமாளிக்கப்பட்டது. இவர் ஒருவரே மூன்று முறை (மொத்தம் 12 ஆண்டு காலம்) ஜனாதிபதியாக இருந்தவர். இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டு நேச நாடுகளைக் காப்பாற்ற முன்வந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளோடும் அமெரிக்கா போர் தொடுத்தது. கம்யூனிஸ்ட் தலைவரான ஸ்டாலினும், முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களான சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும், ஒற்றுமையாகப் போரிட்டுச் சர்வாதிகாரத்தை எதிர்த்து வென்றனர். ரூஸ்வெல்ட்டும், சர்ச்சிலும் 1941-ல் அட்லான்டிக் சாசனம் என்னும் அறிக்கையை வெளியிட்டனர். “உலகத்தினின்றும் சுதந்திரம் மறையக் கூடாது“ என்று ஆங்கிலோ-அமெரிக்கர்கள் தீர்மானித்துக் கொண்டதாக அச்சாசனம் கூறிற்று. அ. ஐ. நாடு அந்த யுத்தத்தின் இறுதியில் ஜெர்மனியை வெல்ல இரண்டாம் போர் முனையை நிறுவ உதவிற்று; ஜப்பான் மீது 1945-ல் அணுகுண்டுகளை வீசி அணுகுண்டு சகாப்தத்தைத் தோற்றுவித்தது.

1945-ல் சான் பிரான்சிஸ்கோவில் கூடிய ஐக்கிய நாட்டுச் சங்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு முக்கியமான ஸ்தானம் வகித்தது. அன்றியும் அகில அமெரிக்க ஐக்கியம் (த. க.) உருவானதிலிருந்து அமெரிக்காக் கண்டத்தில் தலைமை ஸ்தானம் வகித்துவரும் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐ. நா. சங்கக் கூட்டங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் நாடாகவும் இருந்து வருகிறது.

கச்சாப் பொருள்கள், கைத்தொழில், வேளாண்மை, ஆள்பலம், படைவலிமை, கல்வித்துறை முதலிய எல்லா வகைகளிலும் முன்னணியில் நின்றுவரும் அமெரிக்க ஐக்கிய நாடு, உலகத்தின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் பெரிதும் பாடுபடும் என்று பலர் எதிர் பார்க்கின்றனர். அ. மு.

பொருளாதார வரலாறு : தோற்றுவாய் : அமெரிக்காவின் பொருளாதார வரலாறு வேறொரு நாட்டி.லிருந்து செல்வம் மிகுந்த புதியதொரு நாட்டிற் குடிபுகுந்த மக்களின் வரலாற்றைப் பற்றியதாதலின், அது பிறநாடுகளின் வரலாறுகளினின்றும் சிறிது வேறுபடுகின்றது. அமெரிக்கப் பொருளாதார வரலாறு கி. பி. 15ஆம் நூற்ண்டின் இடைப்பகுதியிலிருந்து, தொடங்குகிறது. அக்காலம் மறுமலர்ச்சி, சமயச் சீர்திருத்தம், புதுநாடு காணல் முதலிய இயக்கங்கள் தழைத்த காலம். தூரக்கிழக்கு நாடுகளில் கிடைக்கும் இலவங்கம் முதலிய வாசனைப் பொருள்களைத் தேடிப் புறப்பட்ட மாலுமிகள் அமெரிக்காவை அடைந்தனர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் இக் கடற் பிரயாணங்களில் முன்னணியில் நின்ற நாடுகள், 1589-ல் ஸ்பானியர்கள் தோற்றுப்போய் அமெரிக்காவில் தங்களுக்கு இருந்த செல்வாக்கை இழந்தபோது, பிரிட்டனிலிருந்தும் ஹாலந்திலிருந்தும் மக்கள் ஸ்பானியர்களைப் பின்பற்றினர். இந்நாடுகளிலிருந்து வியாபாரிகளும், அரசியல் அகதிகளும், சமயவாதிகளும் மற்றோர்களும் சேர்ந்து அமெரிக்கக் கீழ்க் கரையில் குடியேறினர்.

தொடக்கக் காலப் பற்றிடங்கள் : முதன் முதலில் குடியேறியவர்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர். வடக்கேயிருந்த குடியேற்றங்கள் சிறிய அளவில் சாகுபடி செய்து வந்தன ; தென் குடியேற்றங்கள், புகையிலை, அவுரி, நெல் முதலியன சாகுபடி செய்வதற்கான பெரிய பண்ணைகள் ஏற்படுத்தி வந்தன. வடக்கே ஒரு பண்ணையின் பரப்பு சராசரி 100 ஏக்கர் ; தெற்கே 5,000 ஏக்கர். நெய்தல், தூற்றல், செருப்புத் தைத்தல், இரும்பு உருக்குதல், மரம் வெட்டல், காகிதம் செய்தல், கண்ணாடி செய்தல் முதலிய அடிப்படைக் கைத்தொழில்கள் அக்காலத்தில் குடியேறியவர்கள் செய்துவந்த தொழில்கள். அவர்களின் எண்ணிக்கைக் குறைவால் தொழிலாளிப் பஞ்சம் இருந்து வந்தது. ஆகையால் அடிமைகளை இறக்குமதி செய்யும் பழக்கம் ஏற்பட்டது. இவ்வடிமை - வியாபாரத்தில் ஸ்பானிய, போர்ச்சுகேசிய வியாபாரிகளோடு ஆங்கில நாட்டு டிரேக், ராலி முதலியவர்கள் போட்டியிட்டனர். போக்குவரத்துச் சாதனக் குறைவால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்த பெரிய ஆறுகளையும் ஏரிகளையுமே அவர்கள் போக்குவரத்துச் சாதனங்களாகக் கொள்ளவேண்டியிருந்தது. மீன், மரம், புகையிலை, அரிசி, மிருகங்களின் மென்மயிர் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன ; கம்பளம், இரும்பு, சாராயம், பழம், மற்றும் பல செய்தொழிற் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பெரும்பான்மை வியாபாரம் இங்கிலாந்தோடுதான் நடைபெற்றது. ஆனால் இங்கிலாந்தின் காப்புவரிக் கொள்கைகள் குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே மனவருத்தத்தையுண்டாக்கின, 1624 லிருந்து குடியேற்ற நாடுகளுக்கு வியாபாரச் சுதந்திரம் இருந்தபோதிலும், பிற்காலத்தில் இங்கிலாந்து குடியேற்ற நாடுகளின் வியாபாரத்தைப் பாதிக்கக்கூடிய பல சட்டங்களை யியற்றிற்று. 1624-ல் ஒரு சட்டம் குடியேற்ற நாட்டுப் புகையிலை முழுவதும் இங்கிலாந்திற்கே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்று விதித்தது. இன்னும் பல சட்டங்கள் குடியேற்ற நாட்டு வியாபாரத்தைப் பெரிதும் பாதித்தன. இங்கிலாந்தில் தொழிற் புரட்சிக்குப் பிறகு இங்கு இச்சட்டங்கள் மிகவும் வன்மையோடு அமல் செய்யப்பட்டன.

சுதந்திரப் போர் : குடியேறியவர்கள் இவ்வகையான இடையூறுகளைப் பொருட்படுத்தவில்லை. சுதந்திரத்தை விரும்பிக் கடல்கடந்து வந்து, புது நாடுகளிற் குடியேறியவர்களா யிருந்ததும், பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உண்டாகும் சட்டங்களை மீறுவதற்குப் போதிய வசதி இருந்த்தும், பிரெஞ்சு செவ்விந்தியப் போட்டிகளும் அவர்கள் அவ்விடையூறுகளைப் பொருட்படுத்தாதற்குக் காரணங்களாகும். ஆனால் ஏழாண்டுப் போரின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சி வடஅமெரிக்காவில் நன்கு ஊன்றிக்கொண்டு, குடியேற்ற மக்களிடமிருந்து நாட்டின் தற்காப்புச் செலவில் ஒரு பகுதியை வரியாக வசூல் செய்ய விரும்பியது அவர்களுடைய ஆத்திரத்தைக் கிளப்பியது. சில பொருள்கள் இங்கிலாந்திற்கே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும், பிரெஞ்சு மேற்கிந்திய நாடுகளோடு வியாபாரம் செய்யவே கூடாது என்றும் 1764-ல் சட்டம் ஏற்பட்டது; வரி வசூல் செய்வதற்காகவே முத்திரைச் சட்டம் ஒன்று 1765-ல் இயற்றப்பட்டது. 1766-ல் இச்சட்டம் மாற்றப்பட்டதாயினும், பிரிட்டிஷ் பார்லிமென்டிற்குக் குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக்கும் உரிமையுண்டு என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. மக்களின் தீவிரக் கிளர்ச்சியால் தேயிலை ஒன்றைத் தவிர மற்றப் பொருள்கள் மீது விதித்திருந்த வரிகள் நீக்கப்பட்டன. ஆயினும் பார்லிமென்டின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கெனவே தேயிலை வரி நீக்கப்படாமலிருந்தது. குடியேற்றக்காரர்களுடைய கோரிக்கை பூர்த்தி செய்ய இங்கிலாந்து விரும்பினும், அவர்கள் மேலும் மேலும் கிளர்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டது ; அமெரிக்கப் பொருளாதார வாழ்க்கை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வந்தது. அரசாங்கம் பலாத்காரத்தைக் கையாண்டபோது குடியேறியவர்கள் பிரிட்டிஷ் சரக்குகளைப் பகிஷ்காரம் செய்யத் தொடங்கினர். 'போஸ்ட்டன் தேநீர் விருந்து' அமெரிக்க-பிரிட்டிஷ் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ; போரின் முடிவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தோன்றின.

சுதந்திரத்திற்குப் பின் : அரசியல் கநந்திரம் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளித்தது. மற்ற நாடுகளோடு நேச உறவு ஏற்பட்டதால் வியாபாரமும் வாணிபமும் தழைத்தன; விவசாயமும் கைத்தொழிலும் முன்னேறின. 1808க்குப் பிறகே அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறத் தொடங்கின. இதற்குப் பிரிட்டிஷ் யுத்தமும், நெப்போலியப் போர்களும் முக்கிய காரணங்கள் எனலாம். கைத்தொழிலில் சுயதேவைப் பூர்த்தி நிலையும், மக்கள் தொகை வளர்ச்சியும், நகரங்களின் பெருக்கமும், வரவரத் தோன்றலாயின. 1790-ல் 39 இலட்சமாயிருந்த மக்கள் தொகை 1810-ல் 72 இலட்சமாக வளர்ந்து விட்டது.

1784க்கும் 1820க்கும் இடையே வரி வசூலுக்காகவும் பொதுக் கடனைத் தீர்ப்பதற்கும் நில விற்பனை மேற்கொள்ளப்பட்டது. 1820க்குப் பிறகு நாட்டு முன்னேற்றத்தைக் கருதிய விவசாயக் கொள்கை ஏற்பட்டது. வட குடியேற்றங்களில் விவசாயம் உயர்தரமான முறையில் நடைபெற்றது. சொந்தப் பண்ணைகளும் கூலிக்காரர்களைக்கொண்டு நடத்தப்பெறும் பண்ணைகளும் அங்கு அதிகம். தென் குடியேற்றங்களில் அடிமைகளைக்கொண்டு நடத்தப்படும் பெரிய பண்ணைகள் இருந்தன. இங்குக் கரும்பு, புகையிலை, பருத்தி, நெல் முதலியன பயிராக்கப்பட்டன. விவசாயக் கூட்டுறவு சங்கங்களும் எந்திரச் சாதனங்களும் அமெரிக்க வேளாண்மையில் பெருத்த மாறுதல்களை யுண்டாக்கின. கைத்தொழிலில் முன்னேற்றமடைந்த ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து கச்சாப் பொருள்களையும் உணவுப்பொருள்களையும் மேலும் எதிர்நோக்கத் தொடங்கிற்று. அமெரிக்காவில் கைத்தொழிற் புரட்சி சுதந்திரப் போருக்குப் பிறகு ஆரம்பித்தது. அந்நாட்டின் அளவற்ற கச்சாப் பொருள் வசதி அமெரிக்காவைக் கைத்தொழில் நாடுகளின் முன்னணிக்குக் கொண்டுவந்து விட்டது. மிகை வரிகளும், தடைசெய்யும் பழக்க வழக்கங்களும் இல்லாமையோடு, வேறு கைத்தொழில் - நாடுகளினுடைய போட்டியின்மையும் வாணிபக் காப்புக் கொள்கையும் சேர்ந்து, அமெரிக்காவின் கைத்தொழில் முன்னேற்றத்துக்கு உதவின. கைத்தொழில் முன்னேற்றமடைந்த வடஇராச்சியங்கள் காப்பு வரிக் கொள்கையை விரும்பின; விவசாய முன்னேற்றமடைந்த தென்னாடுகள் காப்புக் கொள்கையை எதிர்த்தன. இக்கொள்கை வேறுபாடு உள்நாட்டு யுத்தம் முடியும்வரை இருந்து வந்தது.

சுதந்திரம் அடைந்த பிறகு கூட்டாட்சி அரசாங்கமும், இராச்சிய அரசாங்கங்களும், உள்நாட்டுப் போக்குவரத்துச் சாதனங்களை விருத்தி செய்தன. சாலைகள் கட்டப்பட்டன; கால்வாய்கள் வெட்டப்பட்டன. 1823-ல் ஈரி கால்வாய் கட்டி முடிந்தது. 1826-ல் முதல் ரெயில்வே அமைக்கப்பட்டது; 1860-ல் அ ஐ. நாடுகளில் 30,626 மைல் ரெயில்வேயும் 25 இலட்சம் டன் நிறையுள்ள கப்பல்களும் இருந்தன.

மேற்கு நோக்கிய போக்கு : அமெரிக்காவின் சமூகப் பொருளாதார வரலாறு எப்போதும் மாறுபட்டுக் கொண்டே யிருந்த எல்லைப் புறத்தைப் பொறுத்தேயமைந்தது. குடியேற்றக்காரர்களின் விடா முயற்சியும், நிரம்ப நிலம் கிடைக்கும் என்னும் ஆசையும் மேற்குக் கடற்கரையை நோக்கி அவர்களை யீர்த்துச் சென்றன. போக்குவரத்துச் சாதனக் குறைவு, நோய், அபாயம் முதலியவற்றால் அவர்கள் மனம் தளரவில்லை. நாளடைவில் கீழைக்கரையிலிருந்து மேலைக்கரை வரையில் இடைப்பட்ட நாடு முழுவதிலும் அவர்கள் குடியேறினர். இம்மேற்றிசைப் போக்கு, அமைதியான மேற்செலவுக்கும், சாம்ராச்சிய வெற்றிக்கும் சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஒருவகையான பிரதேசவாரி விசேஷப் பயிற்சியும் வேலைப் பகிர்வும் தோன்றின; இவற்றால் பொருளாதார வளர்ச்சியும், வாழ்க்கைத்தர உயர்வும், வர்த்தக விரிவும் பொது நன்மையும் வளர்ச்சியடைந்தன.

உள்நாட்டுப் போர்: கைத்தொழிலில் மிக்க வட இராச்சியங்களுக்கும், விவசாயத்தில் மிக்க தென் இராச்சியங்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்தன. அடிமைகளை வைத்து வேலை வாங்கி வந்த தென்னாட்டு விவசாய முதலாளிக்கும், கைத்தொழில் செய்பவனுக்கும் தன் சொந்தப் பண்ணையில் வேளாண்மை செய்யும் குடியானவனுமான வடக்கத்திய வேலையாளுக்கும் மிக்க வேறுபாடிருந்தது. கைத்தொழில் முன்னேற்றமடைந்துவந்த வடநாட்டவரைக்கண்டு தென்னாட்டவர் பொறாமை கொண்டனர். ஆபிரகாம் லின்கனின் தலைமையில் நடந்த உள்நாட்டுப் போரில் வட இராச்சியங்கள் வெற்றியடைந்தன. அமெரிக்காவில் தனிமனிதச் சுதந்திர விருப்பமும், வாழ்க்கையில் நம்பிக்கையுணர்ச்சியும் கொண்ட நடுத்தர வகுப்புத் தோன்றியபோது தென்னாட்டுப் பெரும் பண்ணைகள் பகுக்கப்பட்டுச் சிறு பண்ணைகள் உண்டாயின. இதற்கு அடிமைகள் கிடையாதிருந்தது முக்கிய காரணம். அதே காரணம் எந்திரசாதன வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது. மேலும் ஐரோப்பிய நெசவு நிலையங்களுக்கு அனுப்பப் பருத்தி ஏராளமாக இப்போது உற்பத்தி செய்யப்பட்டது. கைத்தொழிலும் ஊக்கமாக முன்னேறிற்று. உள்நாட்டுப் போருக்கப்புறம் வட நாட்டினரும் உழவுத் தொழிலில் ஊக்கம் காட்டத் தொடங்கினர். போர்களால் ஏற்பட்ட பணவீக்கம் மேலும் மேலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது. 1863 ஆம் ஆண்டுச் சட்டப்படி நல்லதொரு பாங்குத் தொழில் முறை ஏற்படுத்தப்பட்டது. காப்புவரித் தகராறு உள் நாட்டுப் போரோடு முடிவடைந்து விட்டது. அ. ஐ. நாடுகள் முழுக் காப்புக் கொள்கை நாடாக மாறிற்று. காப்புவரித் தடைகளால் கைத்தொழில் வளர்ச்சி நன்கு தழைத்தது. அமெரிக்கா உலகத்தில் ஒரு முதன்மை வாய்ந்த நாடாவதற்கு வழிக்கொண்டது.

உள்நாட்டுப் போருக்குப் பின் : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி அமெரிக்கத் தற்காலப் பொருளாதார வரலாற்றிற்கு அடிப்படையாகும். அந்நாட்டு மக்கள் தொகை 1810-ல் 70 இலட்சமாயிருந்தது. 1860-ல் 310 இலட்சமாகி, 1930-ல் 13 கோடியாக மிகுந்தது. உள்நாட்டுப் போரைத் தொடர்ந்த அரை நூற்றாண்டில் 360 இலட்சம் மக்கள் அமெரிக்காவில் குடி புகுந்தனர். இவர்களைச் சோதித்து உட்புக விடுவதற்குப் பல முறைகள் கையாளப்பட்டன.

விவசாய உற்பத்தியும் பலவகையிலும் மிகுந்தது. விவசாயிகள் 125 இலட்சம் பேரிருந்தனர். விசேஷ உழவு முறைகள், வாணிப விவசாயம், எந்திர சாதன உழவு முதலியவை வரவர மிகுதியாகக் கையாளப்பட்டன ; டிராக்டர்களும், எந்திரக் சலப்பைகளும், உயர்த்திகளும் அதிகமாக உபயோகப்பட்டு வந்தன. அகப்படும் நிலத்தின் மிகுதியும் அரசாங்கத்தாரின் உதவியும் உழவுத் தொழிலைப் பலரையும் மேற்கொள்ளச் செய்தன. இராச்சியங்களில் விவசாயக் கல்லூரிகள் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு இராச்சியத்திலும் 30.000 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. காட்டி யல், வானிலையியல், விவசாயம், ரசாயனம் முதலிய இயல்களைப் பற்றி ஆராயப் பல ஆராய்ச்சி நிலையங்கள் தோன்றின. இவற்றால் எந்திர விவசாயம் முன்னேற்றம் அடைந்தது.

உழைப்பைக் குறைக்கும் எந்திர சாதனங்களால் கைத்தொழில் முன்னேற்றம் அடைந்தது. உள்நாட்டுப் போரால் சரக்குகளின் தேவை அதிகப்பட்டது. காப்புக் கொள்கையினால் பிற நாட்டுப் போட்டி குறைந்தது. 1789 லிருந்து விதிக்கப்பட்டுவரும் காப்பு வரிகள் பழைய கைத்தொழில்களைக் காத்துப் புதுக் கைத் தொழில்களைத் தோற்றுவித்தன, இக்காப்புத் தடைகளுக்குப்பின் மிகப் பெரிய ஏக உரிமை நிலையங்கள் தோன்றின. அரசியல் யுக்திகளும் பொருளாதாரத் துறையில் நுகர்வோரைச் சுரண்டலும் மிகுந்தன.

அமெரிக்கப் பொருளாதாரத் துறையிலும் பல முக்கியமான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. தொழிற்கூட்டுக்களும் டிரஸ்ட்டுகளும் தோன்ற ஆரம்பித்தன. தாது எண்ணெய், இரும்பு, மோட்டார் முதலிய உற்பத்திகள் பெரிய முதலாளிகள் கையில் சிக்கின. ஆயினும் தொழிலாளிகள் புரட்சி வேண்டாமலே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டனர்.

தலையிடாமைக் கொள்கை மங்குதல் : 19ஆம் நூற்றாண்டில் தனி மனிதனின் முயற்சியாலேயே அமெரிக்கா பெரிய கைத்தொழில் நாடாக வளர்ந்ததாயினும், அந்நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், அரசாங்கம் நாட்டுப் பொருளாதாரத்தில் மிகவும் தலையிடத் தொடங்கிற்று. வாணிபம், செலாவணி, பாங்குத் தொழில், தொழிலாளி வகுப்பு, வர்த்தகச் சங்கங்கள் முதலியனவெல்லாம் அரசாங்கத்தின் தலையிடுகைக்கு இடம் கொடுத்தன. முதல் உலக யுத்தத்திற்கு முன்பே அமெரிக்கா உலகிலேயே மிக்க செல்வம் நிறைந்த நாடாக விளங்கிற்று. டாலரைப் பிற நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வெளிநாட்டிலும் தன் பொருளாதாரச் செல்வாக்கை வளர்த்துக்கொண்டது. அமெரிக்காவின் தேசிய வருமானமும் வசதிகளும் அந்நாட்டை உலகத்திலேயே ஒரு பலமுள்ள நாடாக மாற்றின. முதல் உலக யுத்தம் அமெரிக்காவிற்கு மிகுந்த இலாபத்தை யளித்தது. உலக வியாபாரச் சந்தை அமெரிக்க வியாபாரத்திற்கு அடி பணிந்தது.

மந்தம் : முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு, முதலில் விலையேற்றங்கள் தோன்றின. நிலங்களின் விலை ஏறிற்று. சில கைத்தொழில்கள் மிகவும் சிறப்பெய்தின. பிற நாடுகள் கொடுக்கவேண்டிய யுத்தக் கடன்களால் அ. ஐ. நாடுகளுக்கு ஏற்பட்ட வரும்படியும் காப்புத் தடைகளால் உண்டான சாதகச் செல்லு பாக்கிகளும், யுத்த ஈட்டுப் பணமும் ஆகிய மிகைப் பணம் பிற நாடுகளில்தாராளமாக முதலீடு செய்யப்பட்டுச் சரிக்கட்டப்பட்டது. ஆனால் போரில் தோற்ற ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான யுத்த ஈட்டுப் பணம் பெரிய வியாபார மந்தத்தில் கொண்டுவந்துவிட்டு விட்டது.

ஜெர்மனியைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கா செய்த உதவிக்குப் பதிலாக 4,626 கோடி ரூபாய் தொகையை 20 ஐரோப்பிய நாடுகள் கொடுக்கவேண்டியதென்றும், 1987 ற்குள் அத்தொகை கொடுபடவேண்டியதென்றும் ஏற்பட்டது. வட்டி கூட்டி, மொத்தத் தொகை 8,876 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. கிட்டத்தட்ட 1,200 கோடி ரூபாய் வரையில் கொடுபட்டது; அமெரிக்கா தங்கமும் வெள்ளியுமாகச் சேமித்தது. ஐரோப்பிய நாடுகளில் தங்க இருப்புக் குறைந்துபோய், பணவாட்டம் ஏற்பட்டது. பல நாடுகளின் வாணிபம் இம்முறையில் நடந்துவரவே மேற்போக்கான ஒரு சுபிட்சம் நாடெங்கும் காணப் பெற்றது. ஆயினும் திடீரென்று 1929-ல் பண உலகம் தன் உயர் நிலையிலிருந்து கீழிறங்கி விட்டது. ஒரே மாதத்தில் கையிருப்புக் கடன் பத்திரங்கள் நஷ்டமடைந்த தொகை, ஜெர்மனி 60 ஆண்டுகளில் தரவேண்டிய மொத்த யுத்த நஷ்ட ஈட்டுப் பணத்தைப்போல நான்கு மடங்காகும். கடன் பளு ஏறிற்று. நிலைமை சீர்கேடுற்றது. விலைவாசிகள் இறங்கின. பாங்குகள் மூழ்கின, சர்வதேசக் கடன்களைத் திருப்பித் தருவாரில்லை. இங்கிலாந்து தங்கப் பிரமாணத்தினின்றும் நழுவிற்று.

அப்போது அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஹூவர், நிலைமை தானே சீர்திருந்தும் என்று எண்ணிச் சும்மா இருந்துவிட்டார். உற்பத்தி குறையவில்லை ; ஆனால் வாங்குவோரில்லை என்னும் நிலைமை ஏற்பட்டது. 1933 மார்ச்சில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியானபோது, அமெரிக்க வரலாற்றிலேயே பெரிய பாங்கு நெருக்கடி தோன்றிற்று ; அந்நாட்டிலிருந்த 18,000 பாங்குகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன.

புதுமுறை ஏற்பாடு (New Deal) : ரூஸ்வெல்ட் காங்கிரசைப் பிரத்தியேகமாகக் கூட்டிப் பொருளாதார நிபுணர்களுடைய ஆலோசனைகளை ஆராய்ந்தார். பல புதுத் திட்டங்கள் நடைமுறைக்குக் கொணரப்பட்டன. பாங்குச் சட்டம், புனரமைப்புப் பொருளாதார கார்ப்பரேஷன், விவசாயச் சரிக்கட்டு நிருவாகம், வேலைக்கு ஆட் குறைத்தல், வேலையில்லாதோருக்குப் பெரும்பான்மை உதவி, பொது வேலைகளைப் பற்றிய கொள்கை முதலியன பொருளாதார மந்தத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டன. " நியாயமான இலாபத்தை யாரும் எதிர்க்கமாட்டார்கள்; ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையோர் பெருந் துயரடைந்திருக்கும்போது, இலாபமா, காருண்யமா என்பதில் ஐயமிருக்க முடியாது" என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் புதுமுறை ஏற்பாட்டை விளக்கினார்.

புதுமுறை ஏற்பாடு தங்கப் பிரமாணத்தை நிராகரித்தது; 60 சென்ட் டாலரைத் தோற்றுவித்தது. ஆயினும் அ. ஐ. நாடுகளுக்கு 33,200 இலட்சம் டாலர் பெறுமான தங்கம் சொந்தமாயிருந்தது. வேண்டுமென்றே டாலரின் மதிப்பைக் குறைத்ததால் மற்ற நாட்டுச் செலாவணிகளும் போட்டிக்காக மதிப்பைக் குறைக்கத் தொடங்கின. சர்வதேச வாணிபம் இதனால் பாதகம் அடைந்தது. புதுமுறை ஏற்பாட்டின் உள் நாட்டுக் கொள்கை ஓரளவு வெற்றிகண்டது. வேலையில்லா நிலைமை ஓராண்டிற்குள் சீர் திருந்தி, 35 இலட்சம் பேர் வேலை பெற்றனர். பொதுமக்களுடைய பணத்தின் கொள்முதல் சக்தி மிகுந்தது. புரட்சிகளையும் இரத்தஞ்சிந்து தலையும் தவிர்ப்பதற்காகப் அரசு கொள்கையொன்று புதிதாகத் தோன்றிற்று.

புது முறை ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு : 1934 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதுமுறை ஏற்பாடு ஒருவிதமான பொதுநல மேற்போக்கான வெற்றியடைந்தது. வியாபாரத்தில் இலாபம் தோன்ற ஆரம்பித்தது; பாங்குத் தொழில் திருத்தியமைக்கப்பட்டது. புதுமுறை ஏற்பாடு போட்டியைக் குறைத்தது ; உற்பத்தியையும் குறைத்தது ; விலைவாசிகளை ஏற்றிவிட்டது. சுங்கவரி உயர்த்தப்படவில்லை யாயினும், டாலரின் செலாவணி மதிப்புக் குறைக்கப்பட்டதால், சுங்கவரி 60% ஏறி நின்றது. இவற்றிற்கெல்லாம் உதவியாகப் பொதுச் செலவுகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டன. தன் நிருவாகத்தின் முதல் 4 ஆண்டுகளில் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ரூ. 6,000 கோடி வரையில் நிவாரண வேலைக்காகவும் பொது நலச் செயல்களுக்காகவும் செலவிட்டார். வியாபாரத்தை ஊக்கும் நோக்கத்தோடு இச்செலவை அவர் மேற்கொண்டாராயினும், அவர் எண்ணம் முழுவதும் ஈடேறியதாகச் சொல்ல முடியாது. சிலர் புதுமுறை ஏற்பாட்டை இடசாரி ஏற்பாடு என்றனர் ; தொழிற் சங்கங்களை நிறுவித் தொழிலாளர்களின் கூலியை உயர்த்த அவர் முயன்றது முதலாளிகளின் பகையை யுண்டாக்கிற்று. பெரிய பற்றாக்குறை வரவு செலவுத் திட்டங்களைப் பண்டைய பொருளாதாரக் கருத்துக்களையே பற்றியிருந்தவர்கள் விரும்பவில்லை. புதுமுறை ஏற்பாட்டின்படி செலவிடப்பட்ட பெருந்தொகைகள், பெரிய வியாபாரங்களை இயக்குவோரிடம் சென்று, அவர்களிடமிருந்து திரும்பவும் தேசியக் கடனாக அரசாங்கத்திற்கே வந்து சேர்ந்தன. டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்திற்கு அவர் செலவிட்டது, கனக் கைத்தொழில்களுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயந்ததாயினும், தனி முதலாளிகளின் நலன்களைப் பாதித்ததாகக் குறை கூறப்பட்டது. ஆயினும் புதுமுறை ஏற்பாட்டின் துணிகரமான முயற்சிகள் பொருளாதார வாழ்க்கையைப் பெரிதும் மாற்றிவிட்டன. அவ்வேற்பாடு முடிவுற்ற பின்னும், அதன் ஆதிக்கம் பல பொருளாதாரத் துறைகளிலும் காணப்பெற்றது. ஜனநாயக ஆட்சிகளில்கூடப் பொருளாதாரத் திட்டம் வகுத்தல் அதிகமாகக் கையாளப்பட்டது. சோஷலிசப் புரட்சியின்றியே பொதுநல ஆட்சிக்கு வழிகோலப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தமும் அதன் பிறகும் : உலகமுழுவதும் ஈடுபட்டிருந்த தளவாட உற்பத்திப் போட்டியும், இரண்டாம் உலக யுத்தமும் அமெரிக்காவிற்கு மற்றொரு வாய்ப்பை அளித்தன. சமீப கால நிகழ்ச்சிகளில் பல ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் வறுமையெய்தின ; அந்நாடுகளின் கைத்தொழில்கள் சிதைந்தன ; கப்பல்கள் பல அழிந்துவிட்டன. போரின் இறுதியில் அமெரிக்கா உலகிற்கே கடன் கொடுத்த நாடாகவும், பெரிய உற்பத்தி நிலையமாகவும் விளங்கிற்று. 1947-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகின் பிற பகுதிகளுக்கு ரூ. 10,000 கோடி அளவிற்குச் சரக்குகளும் சேவைகளும் அளித்துள்ளன; மற்ற நாடுகள் எல்லாம் சேர்ந்து அ. ஐ. நாடுகளுக்கு இவற்றிற்குப் பிரதியாக ரூ. 4,500 கோடி பெறுமானமுள்ள ஏற்றுமதிமட்டும் செய்யக்கூடிய நிலையிலே யிருந்தன. ஆகையால் மற்ற நாடுகள் ரூ. 5.500 கோடி டாலர் மதிப்பு எவ்வாறேனும் பெற்று, வர்த்தகச் சமநிலை எய்தவேண்டியிருந்தது ; போர்க்காலத்தில் இரவல் குத்தகை முறையை அமெரிக்கா ஆரம்பித்து வைத்தது.

போர் முடிவுற்றதும் இரவல் குத்தகையும் முடிவுறவே, டாலர் பற்றாக்குறையை உலகம் சமாளிக்க வேண்டியதாயிற்று. இப் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா பிரிட்டனுக்கு ரூ. 1.500 கோடி கடன் கொடுத்தது. 1948-ல் நிலைமையின் கடுமையை உணர்ந்த அமெரிக்க வெளிநாட்டுக் காரியதரிசி ஜார்ஜ் மார்ஷல் என்பவர், மார்ஷல் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இத் திட்டப்படி 16 ஐரோப்பிய நாடுகளுக்கு நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் 15 மாதங்களுக்கு மட்டும் ரூ. 2,500 கோடி அளிக்கப்பட்டது. மொத்தத்தில் இத் திட்டத்தின்படி அமெரிக்கா சுமார் ரூ. 11,000 கோடி செலவு செய்யவேண்டி வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத் தொகையில் 80% இனாமாகக் கொடுக்கப்படும். இவற்றைத் தவிர, அ.ஐ. நாடுகள் ராணுவ உதவிக்காகப் பல முன்னேற்றமடையாத நாடுகளுக்குக் கோடிக்கணக்காகச் செலவு செய்து வருகின்றன. அன்றியும் ஐ.நா.ஸ்தாபனங்களின் பல கிளைகளின் மூலம் உலகப் பொருளாதார அமைதிக்கு ஏற்பன செய்ய அ. ஐ. நாடுகள் பெரிதும் முயல்கின்றன.

இன்று அ. ஐ. நாடுகள் உலகில் பெரிய வன்மையுள்ள நாடாக விளங்குகின்றன. சமுதாய நலன்களைக் கருதித் தனித்துவம் பின்னடைந்து வருகிறது. தனித்து நிற்கும் கொள்கை போய், உலகத் தலைமையை ஏற்று நடத்தும் நிலை வந்துள்ளது. செல்வமும் வறுமைபோலத் தனித்தியங்க முடியாது என்பது விளங்கிற்று. உலகப் பொருளாதார முன்னேற்றமும், அரசியல் குழப்பமின்மையும், உலக அமைதியும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுயநலத்திற்கும் தேவையாயிருக்கின்றன. மூன்று நூற்றாண்டுகளின் முயற்சியால் ஒரு செல்வமுள்ள நாடு உலகத் தலைமை பூண்டு நடத்தும் நிலைமை எய்தியுள்ளது. அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் இன்னும் அதிகமாக உதவக்கூடிய பெரிய திறமை அந்நாட்டில் அமைந்துகிடக்கின்றது. கே. ஏ. ஜோ.

அரசியல் அமைப்பு: ஆரம்பமும் வளர்ச்சியும் : இந்நாடுகள் செய்து கொண்ட அரசியல் சட்டங்களே உலகில் முதன் முதலாக எழுதப்பெற்ற அரசியல் அமைப்புக்கள். இவைகளே முதன் முதலாக அரசியலை அமைப்பதற்கெனத் தனியே மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் செய்தவையாகும். ஒரு பொதுத் தேர்தலில் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்ற பின்னர் இவை அமலுக்கு வந்தன.

கூட்டாட்சி நிர்ணய சபை (Federal Convention) கூடிக் குடியேற்ற நாட்டுப் பிரமுகர்கள் அனைவரும் அதில் அங்கத்தினர்களாய்ச் சேவை செய்தார்கள். வாஷிங்டன், பிராங்க்ளின், ஹாமில்ட்டன், மாடிசன் முதலியோர் இச்சபையில் அங்கம் வகித்தனர். இச்சபை பிலடெல்பியாவில் 1787-ல் கூடி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அரசியல் அமைப்பைத் தயார் செய்தது. இராச்சியச் சட்ட சபைகளின் அங்கீகாரம் பெற்றதும் இவ்வமைப்பு 1789-ல் அமலுக்கு வந்தது.

இந்த அமைப்பே இன்றும் அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தின் அடிப்படை. இவ்வமைப்பு இதுவரை 22 முறை திருத்தப்பட்டிருக்கிறது. எனினும், இவற்றால் முக்கிய அமிசங்கள் எவைகளும் மாறவில்லை.

கூட்டாட்சி அரசாங்கம் (FederalGovernment): ஐக்கிய நாடுகளே உலகில் முதன் முதலில் தோன்றிய கூட்டாட்சி இராச்சியம். ஒரு கூட்டாட்சி இராச்சியத்தில் அதன் பொது சர்க்காரும் அதன் பல பகுதிகளில் தனித்தனி சர்க்கார்களும் உண்டு. அரசியல் அதிகாரங்களை இரண்டு சர்க்கார்களும் பகிர்ந்து கொள்ளும். இராச்சிய சர்க்கார்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களையே செலுத்தலாம். அரசியல் அதிகாரங்களை இருவிதமான சர்க்கார்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டுமாகையால் அரசியல் அமைப்பு, எழுத்து மூலமாயும், எளிதில் மாற்றக்கூடாததாகவும் இருப்பது அவசியம். மேலும், இராச்சியங்களுக்கு இடையே எழும் வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஓர் உச்சநீதி மன்றமும் கூட்டாட்சி இராச்சியங்களுக்கு அவசியம். இம்மூன்று கூட்டாட்சி அமிசங்களையும் ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்பில் காணலாம்.

அரசியல் அதிகாரப் பங்கீடு (Division of Powers) : கூட்டாட்சி சர்க்கார் ஈடுபட்டிருக்கும் பல அலுவல்களில் முக்கியமானவை வெளிநாட்டு விவகாரங்கள், போர்க்கால அமைதிக்கால சம்பந்தமான விஷயங்கள், நாணய சம்பந்தமான பிரச்சினைகள், அயல் நாட்டு வியாபாரம், கூட்டாட்சியில் அடங்கியுள்ள இராச்சியங்களிடையே வியாபாரம் வாணிபம் தொழில் முதலியவற்றை ஒழுங்கு செய்தல், தபால் தந்திகள், அளவைகள், குடிமை உரிமைகளை அளித்தல் முதலியன.

அரசியல் அமைப்பில் காணப்படும் பதினேழு அதிகாரங்களே கூட்டாட்சி சர்க்கார் இன்று செய்துவரும் எல்லா வேலைகளுக்கும் ஆதாரம். கூட்டாட்சியின் அதிகாரங்கள் விரிவாகப் பெருகியுள்ளன. முக்கியமாக வியாபாரம், போலீஸ், பிற நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்யும் அதிகாரம் முதலிய துறைகளில் கூட்டாட்சி இராச்சியத்தின் அதிகாரம் வளர்ந்துள்ளது.

அரசியல் அமைப்பால் கூட்டாட்சி சர்க்காருக்கு அளிக்கப்படாத பிற அதிகாரங்கள் எல்லாம் இராச்சியச் சட்ட சபைகளைச் சேர்ந்தவை. இது பொதுவிதி. ஆனால் இதற்கு விலக்குகள் பல உள்ளன. சில காரியங்களை இராச்சிய சர்க்கார்கள் செய்யக் கூடாதென்று அரசியல் அமைப்பு நிருணயித்துள்ளது. இவற்றுள் முக்கியமானவை:—பிற தேசங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல், உடன்படிக்கைகள் செய்தல், தளவாடங்களை வைத்துக்கொள்ளுதல், நாணயம் அச்சடித்தல், ஏற்றுமதிகள் இறக்குமதிகளின் பேரில் வரிகள் விதித்தல், உண்டியல்கள் கொடுத்தல் முதலியன. இக்கட்டுப்பாடுகளின் நோக்கம் கூட்டாட்சி சர்க்காரின் அதிகாரத்திற்குக் கேடு ஏற்படாமல் காப்பதேயாகும்.

குடிமை உரிமைகளைக் காப்பாற்றும் நிமித்தம் கூட்டாட்சி சர்க்காரும் இராச்சிய சர்க்கார்களும் மக்களின் உரிமைகள் சம்பந்தமான பல வகையான சட்டங்களைச் செய்யக்கூடாதென அரசியல் அமைப்பு விதித்துள்ளது. சட்ட சபைகள் ஆட்கொணர் சட்ட உரிமையைத் தாற்காலிகமாக ரத்துச் செய்யவும், மக்களுக்குச் சமமான சட்டப் பாதுகாப்பை அளிக்க மறுக்கவும், சட்ட ரீதியான வழியிலன்றி மக்களுடைய உயிர், பொருள் முதலிய உரிமைகளை நீக்கவும், அவர்களுடைய வேறு பல உரிமைகளைக் குறைக்கவும் கூடாதென அரசியல் திட்டம் வரையறை செய்துள்ளது. கூட்டாட்சி சர்க்காரும், இராச்சிய சர்க்கார்களும் இக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கின்றன.

கூட்டாட்சி சர்க்காருக்கும், இராச்சிய சர்க்கார்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள தனி அதிகாரங்கள் (Exclu- sive powers) தவிர, அவை இரண்டிற்கும் கூட்டு அதிகாரங்கள் (Concurrent powers) பல உண்டு. வரிகள் விதித்தல், கடன் வாங்குதல், கம்பெனிகள், பாங்குகள் முதலிய ஸ்தாபனங்களைப் பதிவுசெய்தல், வாணிபம், தொழில் சம்பந்தமான விதிகள் செய்தல், சமூகப் பாதுகாவலுக்கு (Social security) வேண்டியன செய்தல் முதலியன இவ்வகுப்பைச் சேர்ந்தவையாகும்.

கூட்டாட்சி சர்க்காரின் அமைப்பு : நீதிப் பகுதி, நிருவாகப் பகுதி, சட்ட சபைப் பகுதி என்னும் அரசியலின் மூன்று உறுப்புக்களைப் பிரித்து, வெவ்வேறு அதிகாரிகள் வசம் ஒப்படைப்பது அமெரிக்க அரசியல் அமைப்பின் அடிப்படையான கொள்கை, இவை ஒன்றோடொன்று தொடர்பின்றிச் சுயேச்சையுடன் வேலை செய்யும். ஒவ்வோர் உறுப்பையும் மற்ற இரண்டும் கண்காணிப்பில் வைத்திருந்து, அதன் வரம்பு கடவாமல் காக்கும். குடி உரிமைகளைப் பாதுகாக்க இவ்வித அதிகாரப் பிரிவினை அவசியம் என்பது அமெரிக்க அரசியல் சட்டத்தை அமைத்தவர்களின் நம்பிக்கை.

ஜனாதிபதி (President) : ஜனாதிபதி நிருவாகத் தலைவர். இவர் நான்கு ஆண்டு பதவி வகிக்கிறார். இவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை 21 வயதுவந்த எல்லாக் குடிகளுக்கும் உண்டு. வாக்காளர்கள் ஒரு தேர்தல் சபையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அச்சபை ஜனாதிபதியை நியமிக்கும். 35 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கக் குடிகளே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடலாம்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிகவும் விரிவானவை. நாட்டுச் சைனியங்களுக்கு இவர் பிரதானத் தலைவர். அமெரிக்கத் தூதர்கள், மந்திரிகள், உச்சநீதி மன்ற நீதிபதிகள் முதலிய உயர் உத்தியோகஸ்தர்கள் அனைவரையும் இவர் நியமிக்கிறார். செனெட் சபை இவர் செய்யும் நியமனங்களை ஆமோதிக்க வேண்டும். உச்சநீதி மன்ற நீதிபதிகளைத் தவிரப் பிற உத்தியோகஸ்தர்களை வேலையிலிருந்து இவர் நீக்கலாம். குற்றவாளிகளை மன்னிக்கும் சிறப்புரிமை இவருக்கு உண்டு.

கூட்டாட்சி நிருவாகம் இராச்சிய இலாகா (Depart: ment of State), பாதுகாப்பு, உள்நாடு, வியாபாரம், தொழில், விவசாயம் முதலிய பத்து இலாகாக்களை உடையது. இவற்றின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒரு மந்திரி சபையாக இருந்து வருகின்றனர். 'காபினெட்' என்று இச்சபையைக் குறிப்பது வழக்கம். ஆனால் பிரிட்டன், பிரான்சு போன்ற பார்லிமென்டு அரசாங்க முறையைப் பின்பற்றும் நாடுகளில் மந்திரி சபைகளுக்குள்ள நிருவாக அதிகாரங்கள் இச்சபைக்கில்லை. ஜனாதிபதி இச் சபையாரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் வீதி கிடையாது. அவர்களுடைய ஆலோசனையைக் கேட்கவேண்டும் என்றுகூட நிபந்தனை இல்லை. நிருவாகத் தனிப்பொறுப்பு ஜனாதிபதியைச் சேர்ந்தது. அவருடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஆலோசனையாளர்கள், நடந்து கொள்ளவேண்டும்.

சென்ற நூற்றைம்பது ஆண்டுகளில் ஜனாதிபதியின் அதிகாரம் வளர்ச்சியடைந்துள்ளது. யுத்த காலங்களில் ஜனாதிபதி சர்வாதிகாரியாக விளங்குகிறார். அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்த காலத்தில் ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லின்கனும், முதல் உலக யுத்த காலத்தில் ஜனாதிபதியாயிருந்த வில்சனும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் ஜனாதிபதியாயிருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டும் யுத்த காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு ஒரு வரம்பில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியிலும் அவருடைய அதிகாரம் வேண்டிய அளவுக்குப் பெருகுவதை ரூஸ்வெல்ட்டின் ஜனாதிபத்திய காலத்தில் காணலாம். மற்றைக் காலங்களில் நிருவாகம் தவிரச் சட்டங்கள் செய்வதிலும் ஜனாதிபதி முக்கியமான பாகத்தை வகிக்கிறார். ஜனாதிபதியைச் சர்வாதிகாரி என்று கூற முடியாது. எனினும் காங்கிரசின் ஒத்துழைப்பும், உச்சநீதி மன்றத்தின் ஆமோதிப்பும் இல்லாமல் நீண்டகாலம் எவ்விதமான அதிகாரத்தையும் செலுத்த இயலாது.

காங்கிரசு கூட்டாட்சியின் சட்டசபை, செனெட், பிரதிநிதிகள் சபை என்னும் இரண்டு சபை கொண்டது.

செனெட் (Senate) உயர் சபை. இராச்சியங்களுக்கு இதில் சமமான பிரதிநிதித்துவம் உண்டு. பெரிதாயினும், சிறிதாயினும் ஒவ்வொரு இராச்சியமும் இச்சபைக்கு இரண்டு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளது. இச்சபையின் மொத்த அங்கத்தினர்கள் 96 பேர். இவர்களுள் 'மூன்றில் ஒரு பங்கினரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இராச்சியமெல்லாம் ஒரே தொகுதி. ஒவ்வோர் அங்கத்தினரும் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கிறார்.

அமெரிக்க அரசியல் சட்டத்தில் செனெட் மிக முக்கியமான நிலைமை வகிக்கிறது. நிதி சம்பந்தமான மசோதாக்கள் தவிர, மற்ற எல்லா மசோதாக்களையும் நிறைவேற்றுவதில் கீழ்ச்சபையோடு சமமான அதிகாரம் இதற்கு உண்டு. நிதி சம்பந்தமான மசோதாக்களையும் திருத்தும் உரிமையை இச்சபை பெற்றிருக்கிறது. நிருவாகத்திலும் இச்சபைக்கு ஓரளவு பங்குண்டு. ஜனாதிபதி பிற தேசங்களுடன் செய்யும் உடன்படிக்கைகளையும், பல உத்தியோகங்களுக்குச் செய்யும் நியமனங்களையும் இச்சபை மூன்றில் இரு பங்கு வாக்குக்களுடன் ஆமோதிக்க வேண்டும், மேலும் ஜனாதிபதியையும் பிற உயர்ந்த உத்தியோகஸ்தர்களையும் விசாரிக்கும் ஓர் உயர் நீதி சபையாகவும் இருந்து வருகிறது.

பிரதிநிதிகள் சபை (House of Representatives) : இது 435 அங்கத்தினர்களைக் கொண்டது. சனத்தொகைக்குத் தக்கவாறு இராச்சியங்களுக்கு இதில் ஸ்தானங்கள் உண்டு. ஒவ்வோர் அங்கத்தினரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் தொகுதிகளாக நாடு முழுவதும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இராச்சியச் சட்டசபை அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள வாக்காளர்கள் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள், சாதி, நிறம், பணடைய அடிமை நிலை முதலிய எக்காரணம் பற்றியும் யாருக்கும் வாக்குரிமையை மறுக்கக் கூடாது என்று அரசியல் சட்டத்தில் கண்டுள்ளது. எனினும் தெற்கு இராச்சியங்களில் பல சாக்குகளை வைத்துக்கொண்டு ஒரு கோடி நீக்ரோ சாதியினருக்கு வாக்குரிமை இல்லாமல் செய்திருக்கின்றனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வாக்குரிமையுண்டு. பிரதிநிதிகளாக விரும்புவோர் 25 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கக் குடிகளாக இருக்கவேண்டும். மேலும் தங்கள் தேர்தல் தொகுதிகளில் வாழ்பவர்களாயும் இருக்கவேண்டும். பிரதிநிதிகள் சபைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

அரசியல் அமைப்பின்படி காங்கிரசு ஆண்டிற்கு ஒரு முறையாவது கூடவேண்டும். சட்டசபைகள், ஆண்டில் ஒன்பது மாதங்கள்வரை நீடித்திருப்பது வழக்கம். மேல் சபைத் தலைவர் உபஜனாதிபதி ; கீழ்ச்சபையின் தலைவர் அச்சபையார் தேர்ந்தெடுக்கும் ஒரு சபாநாயகர் (Speaker). இரு சபைகளிலும் பிரேரேபிக்கப்படும் மசோதாக்களைப் பரிசீலனை செய்யப் பல கமிட்டிகள் உண்டு. கமிட்டிகள் பரிசீலனை செய்து சிபார்சுகளோடு அனுப்பும் மசோதாக்களையே சட்ட சபைகள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு மசோதாவும் மும்முறை ஆலோசிக்கப்படும். இரண்டு சபைகளும் ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பெற்றபின் சட்டங்களாகும். ஜனாதிபதி இவ்வாறு நிறைவேறிய மசோதாவிற்குத் தம் சம்மதத்தை மறுத்தால், சட்ட சபைகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குக்களால் மறுபடியும் அம்மசோதாவை நிறைவேற்றினால் ஜனாதிபதியின் சம்மதமின்றியே அது சட்டமாகும். ஜனாதிபதியின் சம்மதத்தை மீறிக் காங்சிரசு இவ்வாறு சட்டங்களைச் செய்வது அசாதாரணம். காங்கிரசில் அங்கத்தினர்களுக்கும் முழு வாக்குரிமையும், பேச்சுரிமையும் உண்டு. காங்கிரசின் நடைமுறை பொதுவாக உலகில் உள்ள வேறு இராச்சிய சட்டசபைகளின் நடைமுறையைப் பின்பற்றியதே யாகும்.

ஜனாதிபதியும் காங்கிரசும் : நிருவாகத்திற்கு அவசியமான சட்டங்களைச் சட்டசபை நிறைவேற்ற வேண்டும். சட்டசபையின் கருத்தைத் தழுவி நிருவாகப்பகுதி நடந்துகொள்ளவேண்டும். நிருவாகப் பகுதியின் நடவடிக்கைகளைச் சட்டசபையார் நாள்தோறும் பரிசீலனை செய்து, தவறுகளைக் கண்டித்தும், பொதுமக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும்படி செய்தும் வந்தால் பொறுப்புள்ள ஆட்சி ஏற்படும். அமெரிக்க சர்க்காரில் நிருவாகப் பகுதியும் சட்டசபையும் ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால் அவை இரண்டும் ஒத்துழைப்பது கடினமான காரியம். அரசியல் அமைப்பின்படி அவை இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் சிலவே. ஜனாதிபதி ஒவ்வோர் ஆண்டும் காங்கிரசுக்கு நாட்டு நிலைமையைப் பற்றித் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். வேண்டும்போது காங்கிரசுக்கு அவர் நிருபம் (Messages) அனுப்பலாம் ; காங்கிரசை விசேஷமாகக் கூடும்படியும், குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசிக்குமாறும், சட்டங்கள் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளலாம். காங்கிரசில் நேரில் வந்திருந்து தாமும் பேசலாம். இத்தொடர்புகள் அரசியல் அமைப்பில் அனுமதிக்கப்பட்டவை. நிருவாகத் தலைவரும் அவர் மந்திரிகளும் சட்டசபைகளில் அங்கம் வகிக்கக்கூடாது. அங்கு மசோதாக்களைப் பிரேரணை செய்யவும், அவற்றைப்பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ளவும், நிருவாகத்தைக் குறைகூறுவோருக்குச் சமாதானம் அளிக்கவும் நிருவாகிகளுக்கு உரிமையில்லை. காங்கிரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி தம் சம்மதத்தை அளிக்க மறுக்கலாம். காங்கிரசு கமிட்டிகளின் முன்பு தோன்றி, நிருவாக அதிகாரிகள் சாட்சியம் அளிக்கலாம்.

இவை தவிர, நிருவாகப்பகுதிக்கும் காங்கிரசுக்கும் பழக்கத்தில் பல தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது அரசியல் கட்சிகளால் ஏற்பட்டுள்ள தொடர்பு. ஜனாதிபதி ஓர் அரசியல் கட்சியின் தலைவர். அவருக்கும் அவர் கட்சியைச் சேர்ந்த காங்கிரசு அங்கத்தினர்களுக்கும் நெருங்கிய உறவு எப்போதும் இருந்து வருகிறது. தமது கட்சியின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நிருவாகப்பகுதியும் சட்டசபையும் ஒத்துழைப்பது இந்த உறவினால் சாத்தியமாகிறது. மேலும் காங்கிரசில் பல கமிட்டித் தலைவர்களுடன் ஜனாதிபதி தம் திட்டங்களைக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதும் உண்டு. சட்டங்களுக்குத் தம் சம்மதத்தை மறுத்தல், சட்டசபை அங்கத்தினர்கள் விரும்பிய காரியங்களைச் செய்தல், பொது மக்களின் கருத்தை அறிதல் முதலிய பல வேறு வழிகளில் ஜனாதிபதி காங்கிரசை நிருவாகத்தோடு ஒத்துழைக்குமாறு செய்கிறார்.

நிருவாகப்பகுதியும் சட்டசபையும் தனி அதிகாரம் பெற்றிருப்பதால், இரண்டும் ஒன்றிற்கொன்று முரணாக நடப்பதும் உண்டு. ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், காங்கிரசில் பெரும்பாலோர் வேறு கட்சியினராகவும் இருந்தால், நிருவாகப்பகுதியும் சட்டசபையும் ஒன்றிற்கொன்று முட்டுக்கட்டை போட்டு, வேலை செய்யாமல் தடுக்கும். அத்தகைய நிலையில் நிருவாகப்பகுதி செய்ய நினைத்துள்ள திட்டங்களை நிறைவேற்ற இயலாமல் போகின்றது. சட்ட நிருமாண வேலை சீர்குலைகின்றது. இதேமாதிரியான சமயத்தில் பார்லிமென்டு முறையில் மந்திரி சபை ராஜிநாமா செய்யும்; அல்லதுபுதிய தேர்தல்கள் நடக்கும். ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்கச் சட்டசபையால் முடியாது ; சட்டசபையை அவரால் கலைக்கவும் முடியாது. அரசாங்கம் ஸ்தம்பித்து நிற்கும். அமெரிக்க அரசியலமைப்பில் இது ஒரு பெருங்குறை என்று எல்லா அரசியல் வாதிகளும், நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இக்குறையை நீக்குவது எப்படி என்பதுபற்றி மாத்திரம் அவர்களிடையே ஒருமித்த கருத்தைக் காணோம்.

கூட்டாட்சி நீதி மன்றங்கள் (The Federall Judiciary) : கூட்டாட்சி நீதி மன்றங்கள் மூன்று படிகளில் அமைந்துள்ளன. அடிப்படையில் 94 கூட்டாட்சி ஜில்லா நீதி மன்றங்களும், இடையே 13 கூட்டாட்சி அப்பில் நீதி மன்றங்களும், தலைமையில் ஓர் உச்சநீதி மன்றமும் (Federal Supreme Court) உள்ளன. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கூட்டாட்சிச் சட்டதிட்டங்கள், உடன்படிக்கைகள், கூட்டாட்சி அரசியல் திட்டம் முதலிய எல்லா விவகாரங்களையும் கூட்டாட்சி நீதி மன்றங்களே விசாரிக்கின்றன. இராச்சியங்களில் உள்ள இராச்சிய நீதி மன்றங்களுக்கும் இவற்றிற்கும் யாதொருவிதமான தொடர்பும் இல்லை. உச்சநீதி மன்றம் வாஷிங்டன் நகரிலும், மற்றவை ஐக்கிய நாடுகளில் பல வேறு நகரங்களிலும் உள்ளன.

கூட்டாட்சி உச்சநீதி மன்றம் 1791-ல் நிறுவப்பட்டது. இது ஒரு பிரதம நீதிபதியையும், எட்டு உப நீதிபதிகளையும் கொண்டது. இவர்களை ஜனாதிபதி செனெட் சபையின் அங்கீகாரம் பெற்று நியமிக்கிறார். நீதிபதிகள் தங்கள் வாழ்நாட்கள் முடிவுவரை பதவி வகிக்கிறார்கள். 70 வயதை அடைந்தவர்கள் முழுச் சம்பளத்துடன் வேலையைவிட்டு விலகலாம். காங்கிரசில் துரோகக் குற்றச்சாட்டு முறைப்படியே (Impeachment) அன்றி நீதிபதிகளைப் பதவியிலிருந்தும் விலக்க முடியாது ; நியமனம் ஆனபின் அவர்கள் ஊதியத்தைக் குறைக்கவும் கூடாது. நீதிபதிகளின் சுதந்திரம் இவ்வாறு முழுவதும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் அதிகாரங்களில் முக்கியமானது காங்கிரசும் இராச்சியச் சட்டசபைகளும் செய்யும் சட்டங்களை, அவை அரசியல் அமைப்பை அனுசரித்துள்ளனவா என்று நிருணயிப்பதே. காங்கிரசும், இராச்சியச் சட்டசபைகளும், செய்த பல சட்டங்கள் அரசியல் திட்டத்திற்கு முரணானவை என்று உச்சநீதி மன்றம் தீர்மானித்ததால் ரத்தாகியுள்ளன. அரசியல் அமைப்பு மிகவும் சுருக்கமானதாகையால் நீதிபதிகள் அதற்குத் தங்கள் மனம்போன வழிகளில் பொருள் செய்து, பல சட்டங்களை நிராகரித்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகளில் எந்த இராச்சிய அரசாங்கமும் உச்சநீதி மன்றத்தார் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்களைத்தான் செய்ய இயலும். இக்காரணத்தால் அரசாங்கம் மக்கள் விரும்பும் பல காரியங்களைச் செய்ய இயலாமல் போகலாம். உச்சநீதி மன்றம், அதன் முன்வந்த வழக்குகளுக்குத் தொடர்புடைய சட்டங்களை மாத்திரமே இவ்வாறு பரிசீலனை செய்யும் ; எனினும் உச்சநீதி மன்றத்திற்கு மக்களின் பிரதிநிதிகள் செய்யும் சட்டங்களை ரத்துச் செய்யும் அதிகாரத்தை விட்டுவைப்பது உசிதமானதல்ல என்பது ஒரு கருத்து. அடிப்படையான மக்கள் உரிமைகளை அவ்வப்போது சட்டசபைகளில் பெரும்பாலோர் இயற்றும் சட்டங்கள் தகர்த்துவிடாமல் காக்க, நாட்டின் உச்சநீதி மன்றத்துக்கு அதிகாரம் அரசியலமைப்புப்படியே இருத்தல் அவசியம் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

உச்சநீதி மன்றம் கூட்டாட்சியைப் பலப்படுத்துவதில் அரிய சேவை செய்துள்ளது. இராச்சியங்களிடையே ஏற்பட்ட விவகாரங்களைத் தீர்த்து, அவற்றைக் கூட்டாட்சியோடு இணைத்து, நாட்டு மக்களிடையே ஐக்கிய உணர்ச்சியையும் தேசியத்தையும் வளர்த்துள்ளது. அமெரிக்க மக்கள் உச்சநீதி மன்றத்திற்குப் பெருமதிப்பு அளிக்கின்றார்கள்.

இராச்சியங்களின் அரசியல் அமைப்பு : 1789-ல் கூட்டாட்சியை ஏற்படுத்திய உறுப்பு இராச்சியங்கள் 13. இன்று அமெரிக்கக் கூட்டாட்சியில் உறுப்பாக உள்ள இராச்சியங்கள் 48. புதிய இராச்சியங்கள் 35-ம் கூட்டாட்சியால் தோற்றுவிக்கப் பட்டவை.

இராச்சியங்களின் அரசியல் முறை. கூட்டாட்சி அமைப்பிற்கு முரணாக இருக்கக் கூடாது. குடியரசு முறையைப் பின்பற்றி இருக்கவேண்டும். இவ்விரண்டு நிபந்தனைகளுக் குட்பட்டுத் தங்கள் அரசியல் சட்டங் களை உறுப்பு இராச்சியங்கள் எவ்விதமாகவேனும் அமைத்துக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் உரிமை பெற்றிருக்கின்றன.

தங்களுடைய அரசியல் சட்டங்களை வகுக்கவும், மாற்றி அமைக்கவும் இராச்சியங்கள் மூன்று முறைகளைக் கையாளுகின்றன. சிலவற்றில் சட்டசபைகளே அரசியல் சட்டத்தையும் திருத்தும் உரிமை பெற்றிருக்கின்றன. சட்டசபைகள் பிரேரணை செய்யும் திருத்தங்களை ஒரு குடியொப்பத்தின் மூலம் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்ட பின்னர் அவை அமலுக்கு வரும். பெரும்பாலான இராச்சியங்களில் அரசியல் சட்டத்தைச் செய்யவும் மாற்றவும் அரசியல் நிருணய சபைக் கூட்டங்கள் (Constitutional Conventions) தனியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு சில இராச்சியங்களில் அரசியல் சட்டத்தில் மாறுதல்களைப் பிரேரேபிக்கும் உரிமையை வாக்காளர்கள் பெற்றுள்ளார்கள். திருத்தப் பிரேரணைகளைத் தயார் செய்து வாக்காளர்கள் இராச்சியச் சட்டசபைக்கு மனுச் செய்து கொள்கிறார்கள். இத்தகைய மனுக்களில் 5,000 முதல் 10,000 வரை வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனை செய்துள்ளார்கள். இத்திருத்தப் பிரேரணைகளை வாக்காளர்கள் ஒரு குடியொப்பத்தில் (Referendum) ஏற்றால் பிறகு அவை அமலுக்கு வரும்.

இராச்சிய அரசியல் சட்டங்கள் பொதுவாக நீண்டவை. அரசாங்க அமைப்பைத் தவிர, வேறு பல விஷயங்களைப் பற்றிய விவரமான விதிகளையும் நிபந்தனைகளையும் அவற்றுள் சேர்த்திருக்கிறார்கள். இதனால் அரசியல் சட்டத்திற்கும் சாதாரணச் சட்டங்களுக்கும் வேறுபாடு தெரிவது கடினம். அரசியல் சட்டங்களை அடிக்கடி மாற்றவேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது. இராச்சிய சர்க்கார்கள் கூட்டாட்சி சர்க்காரைப் பின்பற்றியுள்ளன. நிருவாகப் பகுதியும், சட்டசபையும், நீதிமன்றமும் முற்றிலும் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றை ஒன்று கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் என்பது இதன் நோக்கம்.

இராச்சிய அரசாங்க நிருவாகத் தலைவர் ஒரு கவர்னர். . சில இராச்சியங்களில் அவருக்கு உதவியாக ஓர் உப கவர்னரும் உண்டு. இவர்களையும் வேறு சில முக்கியமான இராச்சிய உத்தியோகஸ்தர்களையும் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 27 இராச்சியங்களில் நான்கு ஆண்டுகளும், மிகுந்த 21 இராச்சியங்களில் இரண்டு ஆண்டுகளும் கவர்னர்கள் பதவி வகிக்கிறார்கள். கூட்டாட்சியில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் யாவையும் இராச்சிய சர்க்கார்களில் கவர்னர்களுக்கு உண்டு.

நெப்ராஸ்கா என்னும் ஓர் இராச்சியத்தில் தவிர, மற்றெல்லா இராச்சியங்களிலும் சட்டசபைகள் இரண்டு சபைகளையுடையன. மேல் சபைகள் 17 முதல் 56 உறுப்பினரையும், கீழ்ச் சபைகள் 150 முதல் 400 உறுப்பினரையும் கொண்டுள்ளன. சட்டசபைகளின் உறுப்பினர்கள் எல்லோரையும் மக்கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். வாக்குரிமை 21 வயது வந்த அமெரிக்க மக்கள் எல்லோருக்கும் உண்டு. கல்வி, ஆள்வரி, பதிவு, தலக்குடிமை ஆகிய பலவிதமான தகுதிகளை வைத்துத் தெற்கு இராச்சியங்களில் நீக்ரோ சாதியினருக்கு வாக்குரிமை இல்லாமல் செய்துள்ளனர்.

கீழ்ச் சபைகளின் காலம் பெரும்பாலான இராச்சியங்களில் நான்கு ஆண்டுகள்; மிகுந்தவற்றில் இரண்டு ஆண்டுகள். மேல் சபைகள் நிரந்தரமானவை. சாதாரணமாக மூன்றில் ஒரு பங்கு அங்கத்தினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு சபைகளுக்கும் நிதி விஷயங்கள் தவிர, மற்ற எல்லாவற்றிலும் கீழ்ச்சபைகளோடு சமமான அதிகாரம் உண்டு.

சட்டசபைகளின் உள் அமைப்பும் நடைமுறையும் காங்கிரசைப் பின்பற்றியவை. மேல் சபைகளில் உப கவர்னரும், கீழ்ச் சபைகளில் அவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் தலைமை வகிக்கிறார்கள். மசோதாக்களைப் பரிசீலனை செய்ய, இரு சபைகளிலும் பல கமிட்டிகள் உண்டு. ஒவ்வொரு மசோதாவையும் ஒவ்வொரு சபையும் மும்முறை ஆலோசனை செய்யும். இரு சபைகளும் நிறைவேற்றிய மசோதாக்கள் கவர்னர் அங்கீகாரம் பெற்றபின் சட்டங்களாகும். சட்டசபைத் தலைவர்களும், பெரும்பான்மைக் கட்சியின் தலைவர்களும் சட்டசபையின் வேலையை நிருணயிக்கிறார்கள்.

நிருவாகத் தலைவருக்கும் சட்டசபைக்கும் உள்ள தொடர்பு கூட்டாட்சியில் ஜனாதிபதிக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. இராச்சியச் சட்ட சபைகளுக்குக் கவர்னர்கள் ஆண்டறிக்கை யொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அப்போதைக்கப் போது இராச்சியச் சட்டசபையில் வந்திருந்து சொற் பொழிவு நிகழ்த்தலாம்; நிருபம் அனுப்பலாம் ; சட்டசபையை விசேஷமாகக் கூடும்படி கேட்கலாம். சட்ட சபை நிறைவேற்றிய மசோதாக்களில் திருத்தங்கள் செய்யும்படி கேட்கலாம்; வரவு செலவுத் திட்டங்களில் தனி விவரங்களை (Items) நிராகரிக்கலாம். சட்டங்களுக்குத் தம் அங்கீகாரத்தை முற்றிலும் மறுக்கலாம். இவ்வாறு பல வழிகளில் சட்டமியற்றும் வேலையில் கவர்னர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இராச்சிய நீதி மன்றங்கள் : இவை மூன்று படிகளில் அமைந்துள்ளன ; தலைமையில் இராச்சிய அப்பீல் நீதி மன்றமும், இடையில் ஜில்லா நீதி மன்றங்களும் உள்ளன. அடிப்படையில் நகரங்களில் நகராண்மை நியாய மன்றங்களும், சிவில் நியாய மன்றங்களும் போலீஸ் நியாய மன்றங்களும் உள்ளன. நாட்டுப்புறத்தில் கவுன்டி நியாய மன்றங்களும், கௌரவ நீதிபதிகளும் (Justices of the peace) உண்டு. உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளைக் கவர்னர்கள் மேல் சபைகளின் அங்கீகாரம் பெற்று நியமிக்கிறார்கள். ஆறு அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் இவர்கள் பதவி வகிக்கிறார்கள். மற்ற நியாய மன்றங்களில் நீதிபதிகள் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்கிறார்கள். பெரும்பாலான இராச்சியங்களில் மக்கள் நேரில் இவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இராச்சிய நீதி மன்றங்கள், இராச்சியச் சட்டசபைகள்

செய்யும் சட்டங்களையும், இராச்சிய அரசியல் சட்டங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் விசாரணை செய்கின்றன. கூட்டாட்சிச் சட்டங்களும், அரசியல் அமைப்பும் தொடர்புற்ற விவகாரங்களில் இராச்சிய உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புக்களைக் கூட்டாட்சி உச்சநீதி மன்றத்திற்கு அப்பீல் செய்துகொள்ளலாம்.

தல சுயாட்சி : அமெரிக்க நகரங்கள் பெரும்பாலானவற்றை மக்கள் நேரில் தேர்ந்தெடுக்கும் ஒரு நகரசபையும் மேயரும் பரிபாலனம் செய்கின்றனர். பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் அநேகமாக இம்முறையே நடை பெறுவது. இதுவே பண்டைய முறை.

நகரசபைகள் கவனிக்கும் விஷயங்களில் முக்கியமானவை அமைதியையும் ஒழுங்கையும் பாதுகாப்பது, போலீஸ் நிருவாகம், நகர வரவு செலவுத் திட்டத்தை ஆமோதிப்பது, வரிகள் விதிப்பது, நிருவாகத்தை மேற்பார்வையிடுவது என்பவை. நகர நிருவாகத் தலைவர் மேயர். மக்கள் இவரை நேரில் தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு முதல் ஆறு ஆண்டுகள்வரை மேயர்கள் பதவி வகிக்கிறார்கள். பல ஊர்களில் மேயர்களுக்குச் சம்பளம் உண்டு.

அமெரிக்காவில் புதிதாகத் தோன்றிய நகரபரிபாலன முறைகள் இரண்டு. கமிஷன் திட்டம் என்பது ஒன்று ; நகர மானேஜர் திட்டம் என்பது மற்றொன்று. முதல் முறைப்படி நகர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கமிஷனர்கள் நகர நிருவாகத்தை மேற்கொள்வர். நகர மானேஜர் திட்டப்படி, நகர மக்கள் சில அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பர். அவர்கள் ஒரு மானேஜரை நியமித்து, நிருவாகத்தை நடத்த ஏற்பாடு செய்வர். அந்த மானேஜரே ஏனைய நகரசபை உத்தியோகஸ்தர்களை நியமிப்பார்.

நிருவாகப் பயிற்சியும் அனுபவமும் உள்ளவர்களையே நகர சபைகள் மானேஜர்களாக நியமிக்கின்றன. நகராட்சியில், கவுன்டி சபைகளும் சிறிது ஈடுபடுகின்றன. இவை செய்யும் வேலைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. மிக முக்கியமான சேவைகள் சிலவற்றைச் செய்ய 'விசேஷ ஜில்லாக்கள்' (Special districts) அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பல நகர்கள் அடங்கி யிருக்கின்றன.

நாட்டுப்புறங்களில் தல சுயாட்சி : அமெரிக்காவில் நகரங்களில் உள்ள பொது வசதிகள் பலவும் நாட்டுப்புறங்களிலும் உண்டு. நாட்டுப்புறங்களில் தல சுயாட்சி இரண்டு படிகளில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் கவுன்டிகளாகப் (ஜில்லா) பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கவுன்டியும் டவுன்ஷிப் (Township), கிராமம் (Village), பரோ (Borough) என்னும் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கவுன்டி சபைகளும், கிராம சபைகளும் தல சுயாட்சி ஸ்தாபனங்கள். ஐக்கிய நாடுகளின் சில பாகங்களில் கவுன்டி சபைகள் பெரும்பாலான தல விஷயங்களைக் கவனித்துக்கொள்கின்றன. வேறு சில பகுதிகளில் கிராம சபைகள் முக்கிய ஸ்தாபனங்களாக இருக்கின்றன. இன்னும் சில பாகங்களில் இருவகை ஸ்தாபனங்களும் முக்கியமான சேவைகளைச் செய்து வருகின்றன.

கவுன்டி நிருவாகம் (County administration) : ஒவ்வொரு கவுன்டியிலும் நிருவாகத்தை நடத்த மூன்று முதல் ஐந்து பேர்களைக்கொண்ட ஒரு போர்டு உண்டு. இதற்குக் கவுன்டி போர்டு, கோர்ட்டு, கமிஷன், மேற்பார்வைக்குழு என்று பல பெயர்கள் வழங்குகின்றன. இதன் அங்கத்தினர்களை மக்கள் நேரில் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கவுன்டி நிருவாகம் செய்யும் முக்கிய உத்தியோகஸ்தர்கள் அனைவரையும் மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள். கவுன்டி போர்டுகள் கவனிக்கும் வேலைகளில் முக்கியமானவை பின்வருவன : பொது உதவி அதாவது ஏழைகள், கிழவர்கள், வேலை செய்யச் சக்தியில்லாதவர்கள், குருடர், செவிடர், ஊமை முதலியோருக்கு உதவி செய்தல், சாலைகளை அமைத்து, அவற்றிற்கு மராமத்துச் செய்தல் ; சுகாதாரம், மருத்துவ நிலையங்கள். ஜனன மரணப்பதிவு, கல்யாண அனுமதிப் பத்திரங்கள், போலீஸ், அமைதி, ஒழுங்கு, சிறைகள் முதலியவற்றைக் கவனித்தல்.

கிராம சுயாட்சி (Townships, villages, boroughs) : நியூ இங்கிலாந்து என்னும் ஐக்கிய நாடுகளின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இராச்சியத்தில் நாடு முழுவதும் டவுன்ஷிப்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு டவுன்ஷிப்பும் 20 முதல் 40 சதுர மைல்வரை பரப்பு உடையது. சாதாரணமாக ஒரு கிராமமும் சுற்றுப்புறங்களில் உள்ள தனிப் பண்ணைகளும் அதில் அடங்கியிருக்கும்.

நேர்முகமான ஜனநாயக ஆட்சியை இங்கு நாம் காணலாம். இத்தகைய ஜனநாயகம் உலகில் ஐக்கிய நாடுகளிலும், சுவிட்ஸர்லாந்தில் சில கான்டன்களிலும் மட்டுமே உண்டு.

ஐக்கிய நாடுகளின் மற்றப் பாகங்களில் கவுன்டி போர்டுகளும், விசேஷ போர்டுகளும், கிராம சபைகளும், டவுன் ஷிப் செய்யும் வேலைகளைச் செய்கின்றன. கிராம சபைகளை இந்தியப் பஞ்சாயத்துக்களோடு ஒப்பிடலாம். ஆனால் இப்பஞ்சாயத்துக்களைவிடக் கிராம சபைகளுக்குள்ள அதிகாரங்கள் அதிகம்.

அரசியல் கட்சிகள் : அமெரிக்காவில் நாடெங்கும் பரவியுள்ள இருபெருங் கட்சிகளும் பல சிறு கட்சிகளும் உள்ளன. கூட்டாட்சி அரசியல் தொடங்கிய காலத்தில் பெரிய கட்சிகள் இரண்டும் தோன்றின. முதலில் குடியரசு கட்சி கூட்டாட்சிக் கட்சி என்ற பெயரோடு ஆரம்பித்தது. பின்னர் சிலகாலம் விக் கட்சி (Whigs) என்னும் பெயருடன் விளங்கியது. ஹாமில்டன். லின்கன், தியடோர் ரூஸ்வெல்ட் ஆகியோர் இக்கட்சிக்குத் தலைமை வகித்திருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சிக்கு ஆரம்பத்தில் குடியரசு கட்சி என்னும் பெயர் இருந்தது. ஜெபர்சன், ஜாக்சன், பிரையன், வில்சன், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோர் இக்கட்சியின் தலைவர்களாய் இருந்திருக்கின்றனர்.

கொள்கைகளில் இவ்விரண்டு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு மிகக் குறைவு. இவ்விரண்டு கட்சிகளும் தங்களை ஆதரிக்கும் மக்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை நாடுகின்றன. குடியரசு கட்சியைப் பெரும் பணக்காரர்களும், ஆலை முதலாளிகளும் ஆதரிக்கின்றனர் ; ஜன நாயகக் கட்சியை விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வருக்கத்தார் ஆதரிக்கின்றனர். வியாபாரமும் தொழிலும் மிகுந்துள்ள நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் குடியரசு கட்சிக்குப் பலம் அதிகம். தெற்கில் ஜனநாயகக் கட்சிக்குப் பலம் அதிகம்.

சிறுபான்மைக் கட்சிகள் பல அமெரிக்காவில் அப்போதைக்கப்போது தோன்றி மறைந்துள்ளன. சோஷலிஸ்டுக் கட்சி, முன்னேற்றக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவை இன்று சிறுபான்மைக் கட்சிகள். சிறுபான்மைக் கட்சிகள் பலமடைய அமெரிக்கச் சமுதாயத்திலும், அரசியலிலும் இடமில்லை. சென்ற நூற்றாண்டில் தோன்றிய சிறு கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு, ஓரிரண்டு தேர்தல்களில் கலந்துகொண்ட பின்னர்ப் பழைய கட்சிகளோடு சேர்ந்து விட்டன. இப்போதுள்ள மூன்றாம் கட்சிகள் சமீபகாலத்தில் தோன்றியனவே.

அமெரிக்காவில் கட்சி வேலையில் ஈடுபட்டவர்கள் பத்து லட்சத்திற்கு மேலுள்ளனர். இவர்களுள் பெரும்பாலோர் ஊதியமின்றி வேலை செய்கிறார்கள். கட்சித் தலைவரை அமெரிக்கர்கள் 'பாஸ்' (Boss) என்பர். கட்சிகளால் விளையும் தீமைகளைத் தவிர்க்கச் சென்ற ஐம்பது ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பல இராச்சியங்களில் கட்சிகளுடைய அமைப்பு, நடைமுறை, சட்டசபைக்கும் பல உத்தியோகங்களுக்கும் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவோரைத் தேர்ந்தெடுக்கும் முறை முதலியவற்றைப்பற்றி இராச்சியச் சட்டசபைகள் பல சட்டங்களை இயற்றி, நிபந்தனைகளையும் விதிகளையும் செய்துள்ளன. தேர்தல் செலவுகள், கட்சி நிதிகளுக்குப் பணம் சேர்த்தல், தேர்தல்களை ஒழுங்காக நடத்துதல் முதலியவை குறித்தும் சட்டங்கள் செய்துள்ளன. இவ்வகைச் சீர்திருத்தங்களின் பயனாக, அரசியல் கட்சிகளை ஒரு சிலர் கைப்பற்றி ஆள்வது கடினமான காரியமாகியுள்ளது. அரசியல் கட்சிகளை அவற்றின் அங்கத்தினர்கள் ஜனநாயக வழிகளில் நடத்துவது சாத்தியமாகியுள்ளது. நா. ஸ்ரீ. கல்வி : கல்வி தருவது அறிவு வளர்ப்பதற்காக மட்டுமன்று, சமுதாய நலம் தேடுவதற்காகவுமாகும் என்பதே அமெரிக்கர்களுடைய குறிக்கோள். அத்தகைய நோக்கத்துடன் தரும் கல்வியே சுதந்திரத்தைப் பாதுகாக்கவல்லது என்று அமெரிக்கச் சுதந்திர சமுதாயத்தை அமைத்தவர்களுள் ஒருவரான ஜெபர்சன் கூறினார்.

ஆயினும் அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் கல்வி பற்றிய குறிப்பே கிடையாது. அதற்குக் காரணம் பாடசாலைகளை ஏற்படுத்துவதும், நிருவகிப்பதும் அமெரிக்க ஐக்கியத்தில் சேர்ந்துள்ள நாடுகளின் பொறுப்பாக எண்ணப்படுவதேயாகும். ஆகவே 48 இராச்சியங்களும் தனித்தனியே கட்டாயக் கல்விச் சட்டம் இயற்றிக்கொண்டு, பாடசாலைகளை அமைத்து, நிறம், மதம், பால் முதலிய வேறுபாடு எதுவுமின்றி ஆரம்பக் கல்வி அளித்து வருகின்றன. இந்தப் பாடசாலைகளுக்கான செலவை நாட்டு அரசாங்கமோ அல்லது தலத் தாபனங்களோ செய்து வருகின்றன.

ஆதியில் கிழக்குக்கரையில் மட்டுமே குடியேற்ற நாடுகள் அமைந்திருந்தன. பின்னரே மேற்குக்கரை வரையிலும் நாடுகள் உண்டாயின. இந்த நாடுகளில் குடியேறிய மக்கள் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். அத்துடன் இவர்களுள் கிழக்குக்கரை மக்கள் கைத்தொழிலிலும் தென்பகுதிமக்கள் வேளாண்மையிலும் ஈடுபட்டவர்கள். இவ்வாறு பல்வேறு நாட்டவராகவும், பல்வேறு தொழிலுடையவராகவுமிருந்த போதிலும் இவர்களை ஒரே சமுதாயத்தினராகச் செய்தது கல்வியேயாகும்.

இப்பொழுது அமெரிக்காவிலுள்ள வயது வந்தவர் 820 இலட்சம் பேரில் 16 இலட்சம் பேரே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். மற்றவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஆரம்பக் கல்வியும், மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் உயர்நிலைக் கல்வியும் பெற்றவர். ஒரு கோடிப் பேர் கல்லூரிக் கல்வி பெற்றவராவர்.

அமெரிக்காவிலுள்ள பாடசாலைகள் பலதிறப்பட்டன. அவை அனைத்தும் ஒரேவிதமான முறையில் அமைந்துள்ளனவல்ல. சில அரசாங்கம் நடத்தும் இலவசப் பள்ளிகள் ; சில தலத் தாபனப் பாடசாலைகள் ; சில பொது மக்கள் நிறுவியுள்ளவை.

ஆயினும் அமெரிக்கா தரும் கல்வியில் ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி என நான்கு நிலைகள் காணப்படுகின்றன. அமெரிக்கக் குழந்தைகள் ஆறாவது வயதில் படிக்கத் தொடங்கி, ஆரம்பப் பாடசாலையிலும், உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றபின், கல்லூரிக் கல்வி பயில்கின்றனர். கல்லூரிக் கல்வி முடிந்தபின், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற தொழில்களுக்கு வேண்டிய கல்வியைக் கற்கின்றனர்.

இத்தகைய பள்ளிகள் தவிர, குழந்தைகளுக்காகக் குழந்தைப் பள்ளிகளும், தொழிற் பள்ளிகள் போன்ற பலவகையான பள்ளிகளும் உள. மக்களிடம் பெற்ற வரியைக் கொண்டு நடைபெறும் பாடசாலைகளில் மத போதனை கூடாது என்று எல்லா நாடுகளும் சட்டம் இயற்றி யிருக்கின்றன.

அமெரிக்கக் கல்வி முறையில் அறிஞர்களிடையே இரண்டுவிதமான அடிநிலைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. மக்கள் தம் வாழ்வின் புதுப் புதுத் துறைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் புதுப் புதுப் பாடத்திட்டங்கள் அமைத்தல் அவசியம் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதைவிட, விஷயங்களை ஆராய்ந்து முடிவு செய்யக்கூடிய சிந்தனா சக்திப் பயிற்சி அளித்தலே முக்கியம் என்று மற்ற அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர்கள் முன்னேற்ற வாதிகள் என்று அழைக்கப்படுவர். இந்த இரண்டு கருத்துக்களும் முரண்பட்டனவாக இருப்பினும், அவை இரண்டும் அமெரிக்கக் கல்வி முறையில் ஒருவாறு இணைந்தே காணப்படுகின்றன.

அமெரிக்காவில் எங்குப் பார்த்தாலும் பொதுப் பாடசாலைகள் உள. சிறுவர்கள் கட்டாயமாகப் பதினாறு வயது வரையில் பாடசாலைகளில் படித்தாக வேண்டும். கல்வி இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. அதனால் அங்கு எழுத்தறிவின்மை என்பது பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

அமெரிக்காவில் குழந்தைகள் மூன்று வயதளவில் குழந்தைப் பள்ளிகளில் பலர் ஒன்று சேர்ந்தும், ஒரே விளையாட்டுப் பொருளைப் பலர் பொதுவாக வைத்துக் கொண்டும் விளையாடக் கற்கிறார்கள். ஐந்து வயதில் குழந்தைத் தோட்டப் பள்ளியில் சேர்கிறார்கள். அங்கும் விளையாட்டே பிரதானம். அடுத்த ஆண்டில் ஆரம்பக் கல்வி பெறத் தொடங்குகிறார்கள்.

குழந்தைகள் செயல் மூலமே கல்வி பெறுகிறார்கள். இதுவே முன்னேற்ற முறைக் கல்வி எனப்பெறும். எல்லாப் பாடசாலைகளிலும் இந்த அமிசம் காணப்படினும், எழுதப் படிக்கவும் கற்றுக் கொடுக்கிறார்கள். அத்துடன் பிறர் உரிமைகளை மதித்து நடக்கவும், பொறுப்பு ஏற்றுக்கொள்ளவும், மற்ற மாணவர்களுடன் ஒத்துழைக்கவும் மாணவர் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்காகத் தயார் செய்யப்பெறும் பத்திரிகைகள் வாயிலாக அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் நடைபெறும் செய்திகளையெல்லாம் அறிந்துகொள்கிறார்கள். சுயாட்சி முறையிலும் பயிற்சி பெறுகின்றனர்.

அமெரிக்கக் கல்வி நிபுணர்களின் குறிக்கோள் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெறவேண்டும் என்பதேயாகும். சிறுவர்கள் ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்விபெற்ற பின்னர், மூன்று ஆண்டுகள் நடுநிலைப் பள்ளியிலும், மூன்று ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயிலுகின்றனர்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடிந்த பின்னர், சிலர் கலைகளோ தொழிலோ கற்பிக்கும் ஆரம்பக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்துத் தங்கள் கல்வியை முடித்துக்கொள்கிறார்கள். மிகுந்த திறமையுடைய மாணவர்கள் உயர்நிலைக் கல்லூரியிலோ, அல்லது பல்கலைக் கழகத்திலோ சேர்கின்றனர். பெரும்பாலும் கல்லூரிகள் அனைத்திலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே கல்வி பெறுகின்றனர். நான்கு ஆண்டுகள்

படித்தபின் பட்டம் பெறுகிறார்கள்.

உயர்தரக் கல்வி தரக்கூடிய நிலையங்கள் 1,800 உள. அவற்றுள் மூன்றில் ஒரு பங்கு ஸ்தாபனங்களே பொது வரிப் பணத்தால் நிறுவப்பட்டு நடைபெறுவன.

அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளில் அவைகளை நிறுவிய இராச்சியத்தில் வாழும் மக்கள் சம்பளம் தரவேண்டியதில்லை. பல ஏழை மாணவர்கள் ஓய்வு நேரத்தில் வேறு தொழில்கள் செய்து, கல்விக்கு வேண்டிய பணத்தைத் தேடிக்கொள்கிறார்கள். மாணவர்கள் உணவு விடுதிகளில் பரிமாறும் வேலை செய்தாலும் அதை யாரும் இழிவாகக் கருதுவதில்லை.

வியாபார அலுவலகங்களில் வேலை பார்க்க விரும்புகிறவர்களுக்கு வேண்டிய கல்வியைத் தரும் பாடசாலைகள் இரண்டாயிரத்துக்குமேல் இருக்கின்றன. அதுபோலவே அமெரிக்கச் சிறுவர்களும் சிறுமிகளும் கல்வி கற்பதற்கு வேண்டிய வசதிகள் அனந்தம். ஓஹியோ இராச்சியக் கல்லூரிகளில் எண்ணூறு விதமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

வயதுவந்தோர் கல்வி கற்பதற்கும் ஏராளமான வசதிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மூன்று கோடிப் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன் நாற்பத்திரண்டு பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் வயது வந்தோர்க்குத் தபால் மூலம் கல்வி கற்பித்து வருகின்றன. இவை தவிர, இத்தகைய தபால் வாயிலாகக் கல்வி போதிப்பதற்காகவே ஏற்பட்டுள்ள ஸ்தாபனங்கள் 350 ஆகும்.

அயல் நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்க்கு ஆங்கில மொழியை மிக விரைவில் கற்றுக்கொடுத்து, அவர்களை அமெரிக்கக் குடிகளாகச் செய்வதற்காகவும் கல்வி ஸ்தாபனங்கள் உண்டு.

கலைகள் : அமெரிக்காவில் ஓவியக்கலையானது 17ஆம் நூற்றாண்டில்தான் உதயமாயிற்று. தொடக்கத்திலிருந்த ஓவியர்கள் தொழில் நுட்பம் அதிகமாகத் தெரியாதவர்கள். சிறந்த ஓவியர்களைப் பார்க்க முடியாத நிலைமைதான் இதற்கு முக்கிய காரணம். அதனால் அமெரிக்க ஓவியர்களுள் பலர் ஐரோப்பாவுக்குச் சென்று, சிறந்த ஓவியர்களிடம் பயின்று வந்தனர். அவர்கள் ஐரோப்பிய ஓவியங்களைத் தழுவியே வரைந்து வந்தனர்.

ஆரம்ப அமெரிக்கா ஓவியங்களுள் முக்கியமானது 1729-ல் ஜான் ஸ்மிபெர்ட் என்பவர் வரைந்த உரு ஓவியமாகும் (Portrait). அவர் ஐரோப்பிய ஓவியங்களைத் தமது கடையில் தொகுத்து வைத்தார். அமெரிக்க ஓவியர்கள் அவைகளைப் பார்த்துப் பயன் அடைந்தனர்.

அமெரிக்க ஓவிய முறை என்பதை 18ஆம் நூற்றாண்டில் காப்ளி (1738-1815) என்பவரும், பெஞ்சமின் வெஸ்ட் (1738-1820) என்பவரும் தொடங்கி வைத்தனர். அவர்கள் உள்ளதை உள்ளவாறு வரையும் தன்மை நவிற்சிக் கொள்கையினர் (Realists).அக்காலத்திலிருந்த கில்பெர்ட் ஸ்டூவர்ட் என்பவர் ஜார்ஜ் வாஷிங்டனுடைய படங்களிற் பல வரைந்தனர். அவை புகழ்பெற்றவை.

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ஓவியக்கலை ஒரு புதிய எழுச்சி பெற்றது. வால்ட் விட்மன் போன்ற கவிஞர்கள் அமெரிக்காவிலுள்ள இயற்கைக் காட்சிகளின் எழிலை எடுத்து ஓதினர். ஆடபான் (Audubon), ஜார்ஜ் இன்ஸ் போன்றவர்கள் அவற்றைப் பிழையின்றி அழகாக வரைந்தனர்.

தன்மை நவிற்சிக் கொள்கைதான் அமெரிக்க ஓவியக் கலையின் சிறப்பியல்பாகும். அதை ஈக்கின்ஸ், ஹோமர், பிக்கெட் என்னும் மூவருடைய ஓவியங்களில் காணலாம். ஹோமருடைய ஓவியங்களைப் பார்த்தால், அவை ஓவியம் என்ற எண்ணமே தோன்றாதவாறு அவ்வளவு இயற்கையாகக் காணப்பெறும்.

அயல் நாட்டிலிருந்துகொண்டு வரைந்த அமெரிக்க ஓவியர்களுள் சார்ஜென்ட் என்பவருடைய ஓவியங்கள் அமெரிக்க ஓவியத் தொழில்நுட்பத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க ஓவியக்கலையில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. காசெட், விஸ்லர், சேஸ் போன்ற ஓவியர்கள் ஜெர்மனி, பிரான்சு முதலிய இடங்களில் பயின்று வந்ததன் பயனாக, அமெரிக்க ஓவியங்களில் அதிகமான விவரங்கள் காணப்படுவது மறைந்துபோயிற்று; உணர்ச்சியைக் காட்டுவதே சிறப்பியல்பாக ஆயிற்று.

ஜார்ஜ் பெல்லோஸ் என்பவர் தம்மைச் சூழ்ந்து காணும் வாழ்க்கையைச் சித்திரிப்பதிலேயே கவனத்தை ஈடுபடுத்தினார். மிகவும் சாதாரணமான பொருள்களில் கூட அழகிருப்பதைக் கண்டார்.

ஐரோப்பாவில் பதிவுநவிற்சி, கனவடிவநவிற்சி, அடி ன நவிற்சி (Impressionism, cubism, surrealism) போன்ற பல ஓவியக்கலை முறைகள் தோன்றியபோதிலும், அவை அமெரிக்காவில் அதிகமாக இடம் பெறவில்லை. இக்காலத்து ஓவியர்களுள் சிறந்தவர்கள் கிரான்ட் வுட் (1892-1942) என்பவரும், எட்வர்டு ஹாப்பர் என்பவருமாவர்.

இக்காலத்து அமெரிக்க ஓவியக்கலையானது தனி அமெரிக்க இயல்புடன் அமெரிக்காவையும் அங்குள்ள மக்களையும் சித்திரித்து வருகின்றது. அந்த இயல்பை வேறு எந்த நாட்டிலும் காண இயலாது.

அமெரிக்கச் சிற்பக்கலை 19 ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. அதுவரை செதுக்குவேலை மட்டுமே நடந்து வந்தது. அந்தச் சிற்பிகளுடைய வேலை, கலை மதிப்புடையதாக இருந்தபோதிலும், அவர்கள் அதை உணரவில்லை.

சிற்பக்கலை, தொடக்கத்தில் ஐரோப்பிய முறைகளையே தழுவி வந்தது. அவ்வாறு செய்தவர்களுள் பங்கர் குன்று நினைவுச் சின்னம் அமைத்த ஹொரேஷியோ கிரீனோ என்பவர் ஒருவர். அவரே வாஷிங்டன் நகரத்திலுள்ள வாஷிங்டனுடைய பிரமாண்டமான சிலையைச் செய்தவர். பிரடெரிக் ரெமிங்க்டன் (1861-1909) என்பவர் அமெரிக்காவின் மேற்குப்பகுதி மக்களுடைய வாழ்வைச் சித்திரிக்கும் அழகான வெண்கலச் சிற்பங்கள் பல செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கச் சிற்பிகள் ஐரோப்பாவுக்குச் சென்று வரவே அங்குள்ள முறையையே தழுவலாயினர். அவர்களுடைய சிற்பங்கள் தொழில் நுட்பத்தில் சிறந்திருப்பினும், கற்பனா சக்தித் திறன் மிகவும் குறைந்தனவாகும். அக்காலத்துச் சிற்பங்கள் சிறந்தனவாக இல்லாதிருந்தமைக்கு ஒரு காரணம் அவற்றை வாங்கியவர்களுக்குக் கலைப் பண்பு தெரியாதிருந்ததும், உள்ளது உள்ளபடியே எழுதுவதே சிறப்புத் தரும் என்று அவர்கள் எண்ணியதுமாகும்.

இக்காலத்துச் சிற்பிகள் புதுப்பொருள், புது விஷயங்கள், புது முறைகள் ஆகியவற்றைக்கொண்டு சோதனைகள் செய்துள்ளனர். அவர்களுடைய சிறந்த வேலைகளுள் ஒன்று சிற்பக்கலையைக் கட்டடக் கலைக்குத் துணையாகக்கொண்டதாகும். இக்காலத்து அமெரிக்கச் சிற்பிகளுள் சிறந்தவர்கள் டேவிட்ஸனும், மான்ஷிப்புமாவர். வில்லியம் ஜோரக் என்பவருடைய 'தாயும் குழந்தையும்' என்னும் சிற்பம் சிறந்ததாகும். ராபர்ட் லாரன்ட் என்பவர் பல உலோகங்களிற் சிலைகளை வார்க்கின்றார். அவருடைய 'முத்து' என்னும் சிலை அலுமினியத்தில் வார்த்ததாகும்.

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

ஜேக்கப் எப்ஸ்டைன் இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். அவருடைய சிலைகள் ஆற்றல் வாய்ந்தன என்பர். மால்வினா ஹாப்மன் என்னும் பெண் சிற்பியின் தலையாய சிலை, சிக்காகோ பொருட்காட்சிச் சாலையிலுள்ள 'மனித இனங்கள்' என்பதாகும்.

அமெரிக்கத் தத்துவ சாஸ்திரம் : தத்துவசாஸ்திரமானது அமெரிக்காவில் சமூக, அரசியல் நிகழ்ச்சிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடன் வளர்ந்து வந்திருப்பதால், அமெரிக்க வரலாற்றுடன் சேர்த்துப்பாராவிடின், அதன் தொடக்க வளர்ச்சியை அறிந்து கொள்ளஇயலாது.

அமெரிக்கத் தத்துவ சாஸ்திரம் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூ இங்கிலாந்தில் பியூரிட்டன்கள் குடியேறியது முதலாகத் தொடங்குகிறது. அவர்களுள் அறிஞர்களாயிருந்தவர்கள் பெரும்பாலும் பிராட்டஸ் டென்ட் கிறிஸ்தவப் பாதிரியார்களா யிருந்தனர். அவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய கால்வினியக் கொள்கை (Calvinism)வயப்பட்டவராயினும் அக்கொள்கையை வேறுவிதமாகக் கையாண்டனர். ஐரோப்பியக் கால்வினியக் கொள்கை மனிதன் தன்னால் அறியமுடியாத கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கூறிற்று. ஆனால் கடவுளுடைய கருத்தை அறிய முடியும் என்றும், கிறிஸ்தவ பிளேட்டானிக் கொள்கையைப் பின்பற்றிக் கடவுள் மனிதனுடன் நியாயமான முறையிலேயே! நடந்துகொள்வார் என்றும் அமெரிக்கக் கால்வினியர் வற்புறுத்தினர்.

இந்த முரண்பாட்டை ஜான தன் எட்வர்ட்ஸ் (1703-58) என்பவரிடம் காணலாம். அவர் கடவுளை அரசன் என்னும் வைதிகக் கால்வின் கொள்கையையும், உளவாகும் தன்மையின் (Being) மேன்மையை அறிவிக்கும் அனுபூதி அனுபவத்திலும், கடவுள் பக்தியிலும் விசேஷ நம்பிக்கையையும் உடையவராயிருந்தார். சாமுவேல் ஜான்சன் (1696-1772) என்பவர் பல மாறுதல்களுடன் பார்க்ளேயின் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தார். காட்வலீடெர் கால்டென் {CadwaleaderColden 1688-1776) நியூட்டனுடைய பௌதிக இயலில் கருத்துடையவராயும், இயற்கையே ஆதாரச்செயல் தத்துவமாக உளது என்ற கருத்துடையவராயும் இருந்தபடியால், இயற்கையியலை வைத்தே இறையியலை விளக்கவேண்டும் என்ற கொள்கைக்கு அடிகோலினார்.

இறையியல் இவ்வாறு வளர்ந்து வந்தபோதிலும், அது சமூக, பொருளாதார விஷயங்களைப் புறக்கணிக்க முடியாத நிலைமை ஏற்படலாயிற்று. இதனால் - அமெரிக்கத் தத்துவ சாஸ்திரம், பெரும்பாலும் அற நூல் விஷயங்களிலேயே மிகுந்த கருத்தைச் செலுத்தத் தொடங்கிற்று. அவ்விஷயங்கள் சில வேளைகளில் இறையறிவையும், சில வேளைகளில் மனித அறிவையும் ஆதாரமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டன. நன்மை செய்வதே கடவுள் அறநெறி என்று காட்டன் மாதெர் (1663-1728) கூறினார். பெஞ்சமின் பிரான்கிளின் (1706-90) உலகில் இன்பமாக வாழ்வதற்கான அறநெறியை மட்டும் கவனித்தால் போதும் என்று கூறினார்.

இவ்வாறு அற நூல் விஷயங்கள் வாதிக்கப்பட்ட போதிலும், அதே வேளையில் கடவுளின் தன்மை யாது? மனிதன் சுதந்திரமுடையவனா? அவன் இன்பம் அடைவதெப்படி? என்ற பொருள்கள் குறித்துத் தத்துவ விசாரணை நடைபெற்று வந்தது. தாமஸ் பெயின் (Thomas Paine 1737-1809) என்பவருடைய நூல்கள் உணர்வே பிரதானம் என்னும் கொள்கையைப் பரவச் செய்தன. நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட கடவுளுண்மைக் கொள்கையானது, அறிவு ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்ட கடவுளுண்மைக் கொள்கையாக மாறிவந்தது. பிரெஞ்சுப் புரட்சியானது உலோகாயதக் கொள்கைக்கு அடிகோலியது. அறிவை ஆதாரமாகக் கொண்டு எழுந்த இயக்கத்தினருடைய ஐரோப்பிய நூல்கள் மிகுதியாகப் படிக்கப்பட்டதால், புதிய அமெரிக்கக் குடியரசின் மக்களிடையே அரசியல் உணர்ச்சியும் எழுவதாயிற்று. ஜான் ஆடம்ஸ் (1735-1826), ஜேம்ஸ் மாடிசன் (1751-1836), தாமஸ் ஜெபர்சன் (1743-1826) ஆகியோர் பெரிய அமெரிக்க அரசியல் தத்துவ அறிஞர்கள். ஜெபர்சனுடைய கல்லறையில் அவர் அமெரிக்காவின் மூன்றாம் ஜனாதிபதியாக இருந்ததைக் குறிப்பிடாது, “அமெரிக்கச் சுதந்திர சாசன கர்த்தா, வர்ஜீனியாவின் சமய சுதந்திர சட்ட கர்த்தா, வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் தந்தை” என்று எழுதியிருப்பது அமெரிக்கச் சமூக, அரசியல், சமயக் கொள்கையின் போக்கைத் தெரிவிக்கும்.

இவ்வாறு கடவுள் விஷயமாகத் தாம் விசாரணை செய்வதை விட்டுவிட்டுச் சமூகத்தில் மக்கள் சேர்ந்து இன்பமாக வாழ்வது எப்படி என்ற விஷயமாக ஆராயத் தொடங்கினர். சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்ற பொருள்களே மிகுதியாகக் கவனத்தைக் கவர்ந்தன. ஆயினும் தத்துவ விசாரணை அறவே நின்று போய்விடவில்லை. உளவியல் பற்றிய விசாரணை மிகுதியாகச் செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் 19ஆம் நூற்முண்டின் இறுதியில் குறைந்து போயின.

இதற்கிடையில் ஜெர்மானியக் கருத்துக்கொள்கையும் (Idealism), கற்பனை நவிற்சிக் கொள்கையும் (Romanticism) அமெரிக்கத் தத்துவ விசாரணையில் இடம் பெறலாயின. தியோடர் பார்க்கர் (1810-60) ஜெர்மன் அறிஞர் கான்டினுடைய பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜெர்மானியத் தத்துவ அறிஞர் ஹேகலுடைய கொள்கை அமெரிக்காவில் வேரூன்றவும், தத்துவ விசாரணையை ஊக்கப்படுத்தவும் செய்தது. வில்லியம் டாலி ஹாகில் (1835-1909) என்பவருடைய தத்துவ விசாரணை இதற்கு முக்கிய காரணமாகும்.

19 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அறியொணாமைக் கொள்கை எழுந்தபோது, ஜான் பிஸ்க் (1842-1901), சார்ல்ஸ் சாண்டெர்ஸ் பர்ஸ் (1839-1914) போன்ற அறிஞர்கள் தத்துவ விசாரணை செய்து வந்தனர். ஜான் டூயி, ஜார்ஜ் ஹெர்பர்ட் மீடு போன்றவர்கள் சமூகத் தத்துவ விசாரணை செய்தனர்.

இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்லியம் ஜேம்ஸ் (1842-1910) ஆதரவில் புறவழி உண்மைக் கொள்கை (Pragmatism) விரைவாக வளர்ந்து வந்தது. டூயியினுடைய கருவிக் கொள்கை (Instru- mentalism) உலக முழுவதிலும் கல்வித் துறையில் மிகுந்த பயன் தந்துவருகிறது. பொதுவாக அமெரிக்க மனப்பான்மை புறவழி உண்மைக்கொள்கையையே பெரிதும் ஏற்றுக்கொண்டதா யிருப்பினும், வேறு விதமான கொள்கைகளும் காணப்படவே செய்தன. ஆனால், உளவாகும் தன்மையைப் (Being) பற்றி மட்டும் தத்துவ விசாரணை செய்யும் மனப்பான்மையை அமெரிக்க மக்களிடம் காண்பது அரிது. ஆயினும் உலகில் வழங்கும் தத்துவ விசாரணை வகைகள் அனைத்தையும் அமெரிக்காவில் காணலாம்.

ஆதியில் இருந்ததைப்போல் அமெரிக்கத் தத்துவ விசாரணை இப்போது ஐரோப்பியக் கருத்துக்களால் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை. ஐரோப்பிய அறிஞர்களான -ஆல்பிரட் நார்த் ஒயிட்ஹெட் (1861-1947), ருடால்ப் பி. கார்னாப் (1891-) போன்றவர்களுக்கு அமெரிக்காவிலேயே சீடர்கள் இருக்கின்றனர். இப்போது மக்கள் நலக்கொள்கை (Humanism), ஜனநாயகம் (Democracy) ஆகியவற்றையே அறிஞர்கள் மிகுதியாக வற்புறுத்துகிறார்கள், பொருளாதாரமும் தத்துவ அடிநிலை பெறவேண்டும் என்று எண்ணிய போதிலும், மார்க்சியத் தத்துவக் கொள்கையை ஆதரிக்கவில்லை, கீழ்நாட்டுத் தத்துவ சாஸ்திரத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் மிகுந்து வருகிறது. கல்வித் துறையும் தத்துவ அடிநிலை பெறுமாறு செய்யும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அமெரிக்கரிடையே வேரூன்றியுள்ள புறவழியுண்மைக் கொள்கை தளர்ச்சி பெற்று வருகின்றது.

அமெரிக்காவில் சங்கரர், கான்ட் போன்ற தத்துவப் பேரறிஞர்கள் தோன்றவில்லை. ஆனால் இத்துறையில் இத்தகைய பெருமையைப் பெறாத நாடு அமெரிக்கா மட்டும் அன்று என்பதையும் குறிப்பிட வேண்டும். கு. எப். லை.