கலைக்களஞ்சியம்/அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம்
அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம் (Constitutional Government) : கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில், அரசாங்க முறைகளைப் பற்றித் தாமியற்றிய அரசியல் என்னும் நூலில், 'பாலிடி' என்று அவர் அழைக்கும் சட்ட வரம்புக் குட்பட்ட மக்கள் ஆட்சியை மிகச் சிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ”மக்களாட்சி என்பது பலராட்சி; அதாவது கும்பலாட்சி; இதை ஆட்சியேயில்லாத நிலை என்று கூறலாம்; இக்குழப்பத்தினின்று அமைதியை நிலைநாட்டக்கூடிய வல்லான் ஒருவன் வந்து தனியாட்சியை நிறுவுவான் ; இவ்வாறாக மாறிமாறி வந்து கொண்டிருக்கும் அரசியல் ஏற்பாட்டை நிலைப்படுத்த, அமைப்பிற்குட்பட்ட அரசாங்கமே சிறந்தது” என்று அவர் கருதினார். எதிலும் தீவிரக் கொள்கைகளை மறுத்து, நடுநிலையையே போற்றிய அவ்வறிஞர் 'இவ்வரசாங்கம் நடுத்தர வகுப்பினர் ஆட்சியாகுமாதலின் அதுவே விரும்பத் தக்கது' என்றும் கூறுகிறார்.
அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம் எனின், சட்டத்திற்கு அடங்கி நடத்தப்படும் ஆட்சி என்பதே பொருள்; அதாவது அரசாங்கம், குடிமக்கள் ஆகிய இருபாலரும் ஒருநாளும் புறக்கணிக்காமல் மதித்து, அதற்கு அடங்கி ஒழுக வேண்டிய மேலான சட்டமோ, சம்பிரதாயமோ உண்டு. அதற்குட்பட்டு நிகழும் ஆட்சியே மிக உயர்ந்தது என்பது கருத்து. தனியொருவர் அல்லது சிலர் அல்லது பலர் என்னும் யாருடைய தனி இச்சைப்படியும் நடத்தப்படாமல் சமூகத்தின் பொது மரபான சட்டத்தின் எல்லைக்குள் நடத்தப்படும் ஆட்சியே சிறந்தது. வரம்பிற்கும் சட்டத்திற்கும் கட்டுப்படாத எதேச்சாதிகாரம் பொதுமக்களால் நடத்தப்பெறின், அது மற்ற எந்த ஆட்சிமுறையைக் காட்டிலும் இழிந்தது என்பதில் ஐயமில்லை.
அமைப்பிற்கு அடங்கிய முடியாட்சி என்னும் கருத்தைவிட, அமைப்பிற்கடங்கிய ஆட்சி ஓரளவு விரிவானது. முடியாட்சியைச் சில வரம்புகளுக்குட்படுத்த வேண்டும் என்னும் விருப்பம் ஒரு மன்னனிடம் ஏற்படும் அவநம்பிக்கையினால் தோன்றலாம்; எவ்வகை யாட்சியீலும் யாரும் வரம்புமீறி நடக்க இயலாதவாறு சம்பிரதாயங்கள் வளர்ந்து, சட்டங்கள் இயற்றப்படுவதால் இக்கோட்பாடு அதனினும் உயர்ந்ததொன்றாம். ஜனநாயகம் வரம்பு கடத்தலால் பெருந்தீமை விளையும் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உண்டு.
படைமானிய ஸ்தாபனங்கள் நிலவிவந்த இடைக்கால முறைகளைப் பின்பற்றியே அமைப்பிற்குட்பட்ட ஆட்சி மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வந்தது. இங்கிலாந்தில் இடையீடு இல்லாமல் அரசியல் அமைப்பு உறுதியுடன் சட்டத்தை ஒட்டியும் தாங்கியும் வளர்ந்து வந்துள்ளது. இதற்கும் பிரான்சில் புரட்சிவாயிலாக ஏற்பட்ட ஜனநாயக ஆட்சியின் பரிணாமத்திற்குமுள்ள வேறுபாடுகள் காணத்தக்கவை.
அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம் சம்பிரதாயங்களை அடியோடு தகர்க்கும் எந்த மாறுதல்களையும் மேற்கொள்ளாது; அவ்வப்போது பதவியில் இருப்பவர்களுடைய எண்ணத்தின்படி இயங்காமல், எல்லாவற்றிற்கும் மேம்பட்ட சட்டத்தையே பின்பற்றும். இதனால் அமைப்பாட்சி, தீவிர ஜனநாயகத்தினின்றும் வேறுபட்டது என்பது புலனாகும்.
சுதந்திரத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்துள்ள மக்களின் ஒருவகை நிலையான அரசியல் ஏற்பாடுகளைச் சட்டபூர்வமாக நிலைநாட்டி, அவ்வப்போது தேவையான மாறுதல்களைச் சட்டப்படியே செய்து கொள்வதற்கு வேண்டிய பொறுமையை யூட்டுவதே அமைப்பிற்குட்பட்ட அரசாங்கத்தின் தனிப்பண்பு. ரா. பா.