கலைக்களஞ்சியம்/அம்மானை

அம்மானை : விளையாட்டு: தமிழ் நாட்டில் பெண்கள் ஆடும் விளையாட்டுக்களுள் அம்மானை என்பதும் ஒன்று. பழங்கால முதற்கொண்டு இந்த விளையாட்டு இருந்து வருகிறது. அம்மானைக் காய்கள் மூன்றை வைத்துக்கொண்டு, இரண்டு கையாலும் பெண்கள் விளையாடுவார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு காய் இருக்க, மேலே ஒன்று இருக்கும். ஒரு பெண் ஒரு கையில் இருக்கும் அம்மானைக் காயை மேலே வீசி, அந்தக் கையால் மேலுள்ள அம்மானைக் காயைப் பிடித்தல் வேண்டும். இப்படிச் சாமர்த்தியமாக ஆடும்போது காய் தவறிக் கீழே விழுந்துவிட்டால், வேறு ஒரு பெண் ஆடுவாள். ஒருத்தி ஆடுவதும், பலர் சேர்ந்து பந்தயம் போட்டு ஆடுவதும் உண்டு. பெரும்பான்மையாக மூன்று பெண்கள் சேர்ந்து, ஒருவர் பின் ஒருவராக ஆடுவது வழக்கம். இப்படி அம்மானை ஆடும்போது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பாட்டுக்கும் அம்மானை என்றே பெயர் வழங்கும்,

அம்மானைக்காய் : பெரும்பான்மையாக அம்மானைக் காய்கள் மரக் கட்டையால் ஆனவை ; உருண்டையாய் இருக்கும் ; வெவ்வேறு நிறம் தீட்டப்பெற்றவை. கனமில்லாத மரக்கட்டைகளால் அம்மானைக் காய்கள் செய்யப்படும். இலக்கியங்களில் வேறு வகையான அம்மானைக் காய்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், பவளம் ஆகிய மணிகளைப் பதித்த அம்மானைகளையும், பொன்னாலும் பளிங்கினாலும் செய்த அம்மானைகளையும் ஆடுவதாகப் பிள்ளைத் தமிழ்கள் கூறுகின்றன. அம்மானையை அம்மனையென்றும் சொல்வதுண்டு. உலாக்களிலும் அம்மானை விளையாட்டைப் பற்றிய செய்திகள் உள்ளன.

அம்மானை வரி: அம்மானை ஆடும்பொழுது மகளிர் பாடும் பாடல் அம்மானை வரி என்றும் வழங்கப்பெறும். தொழில் செய்வாரும், விளையாடுவாரும் பாடும் நாடோடிப் பாடல்களை வரிப் பாடல் என்று சொல்வார்கள். அந்த வகையில் அம்மானைப் பாட்டுக்கு அம்மானை வரி என்ற பெயர் வந்தது. பாடிக்கொண்டே விளையாடுவதையும் கூத்தின் வகையாகச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றைப் பல்வரிக்கூத்து என்று வகைப்படுத்தினர் புலவர். மகளிர் விளையாடும் விளையாடல்கள் பல இந்தப் பல்வரிக்கூத்தில் சேர்ந்தவை. அம்மானையும் பல்வரிக் கூத்து வகையில் ஒன்று. (சிலப். அரங்கேற்று காதை, 13, அடியார்க்கு நல்லார் உரை). நாடோடியாக வழங்கும் அம்மானைப் பாட்டே இயற்கையான அம்மானை வரி. அதன் அமைப்பைப் பின்பற்றிப் புலவர்கள் இலக்கியங்களிலும் அம்மானைப் பாடலை அமைத்தார்கள். அததகைய அம்மானைவரிகளில் இப்போது கிடைப்பவற்றுள் பழமையானது சிலப்பதிகாரத்தில் உள்ள அம்மானைவரி. அந்த நூலில் வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழைப் பாடுவதாக அம்மானை வரிப் பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும்போது, ஒரு பெண் ஒரு கேள்வி கேட்பதும், மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார்நகரைப் பாடும்படி சொல்வதுமாக அந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

தமிழ்ப் பிரபந்த வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற உறுப்பு ஒன்று உண்டு. அது மூன்று பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கும். முதற்பெண் ஒரு செய்தியைச் சொல்ல, இரண்டாமவள் ஒரு வினாவை எழுப்புவாள். மூன்றாமவள் அதற்குச் சமத்காரமாக விடை கூறுவாள். அவள் விடையிலே பெரும்பாலும் சிலேடை நயம் அமைந்திருக்கும்.

இந்த வகையில் சில புலவர்கள் தனித்தனியே பல அம்மானைப் பாடல்கள் பாடினார்கள். இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலிய புலவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அத்தகைய பாடல்களை யெல்லாம் தொகுத்தமைத்து, மூவர் அம்மானை என்ற பெயருடன் ஒரு திரட்டு நூல் வழங்குகிறது. மூன்று பெண்கள் பாடுவதாக இருப்பதனால், அதற்கு மூவர் அம்மானை என்ற பெயர் வந்தது. அதில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப்பற்றியனவே. சிலப்பதிகாரத்தில் வரும் அம்மானை வரியும், கலம்பகங்களிலும் மூவரம்மானையிலும் வரும் பாடல்களும் கலித்தாழிசை என்னும் பாவினத்தால் அமைந்தவை; தரவு கொச்சகமாகவும் கொள்ளலாம். அம்மானை என்று முடியும் மூன்று வாக்கியங்கள் ஒவ்வொரு பாடலிலும் உள்ளன. ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு பெண் சொல்வாள்.

அம்மனை என்பது தாய் என்ற பொருளை உடையது. பெண்களைப் பொதுவாக அம்மா என்று அழைப்பது போல, அம்மனை என்றும் அழைப்பது இலக்கிய மரபு. பாட்டில் வாக்கியத்தின் முடிவில் பெண்ணை விளிக்கும் விளியாக அம்மானை என்பது அமைந்தது. இதுவே அம்மானாய் என்றும் வரும். இந்த முடிவையுடைய வாக்கியங்கள் பாட்டில் வருவதினால் இந்தப் பாட்டும் விளையாட்டும் அம்மானை என்ற பெயரைப் பெற்றன போலும்.

மூவர் ஆடாமல் ஒரு பெண்ணே ஆடுவதாகவும் அமைந்த பாடல்கள் உண்டு. திருவாசகத்தில் உள்ள திருவம்மானை என்ற பகுதியிலுள்ள இருபது செய்யுட்களும் இத்தகையனவே. அம்மானாய் என்ற முடிவையுடையது ஒவ்வொரு பாடலும். ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும்.

அம்மானைப் பருவம் பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்த வகையில் பெண்பாற் பிள்ளைத் தமிழ்களில் வரும் பருவங்களில் ஒன்று. இதனை எட்டாம் பருவமாக அமைப்பர். பாட்டுடைத் தலைவியைத் தாய்மாரும் செவிலியரும் அம்மானையாடும்படி சொல்லும் முறையில் இப்பருவப் பாடல்கள் அமைந்திருக்கும். பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களாக அவற்றைப் பாடுவர் புலவர்.

அம்மானைப் பாட்டு : இவற்றையன்றி நாடோடிப் பாடல்களில் கதையைத் தழுவி வரும் நெடும்பாடல்கள் பல அம்மானை என்ற பெயரோடு வழங்கி வருகின்றன. புகழேந்திப் புலவர் சோழனாற் சிறைப்பட்டிருந்தபோது அல்லியரசாணி மாலை முதலிய அம்மானைப் பாட்டுக்களைப் பாடி, அந்த வழியே செல்லும் மகளிருக்குக் கற்பித்துப் பாடச் செய்தார் என்று ஒரு கர்ண பரம்பரைச் செய்தி வழங்குகிறது. அது வெறும் புனைந்துரையானாலும், பெண்கள் பாடுவதற்குரியவை இந்த அம்மானைப் பாடல்கள் என்ற உண்மையைத் தெரிவிப்பதாகக் கொள்ளலாம். அடியளவின்றி வரும் இந்தப் பாடல்களின் அடிகள் முன்னே சொன்ன தரவு கொச்சகத்தின் அடிகளைப் போன்றவை. தரவு கொச்சகத்துக்கு அடி வரையறை உண்டு. இந்தப் பாடல்களுக்கு அடிவரையறை இல்லை. அடிகள் அம்மானைப் பாட்டில் வரும் தரவு கொச்சக அடியைப்போல நாற்சீராக இருப்பதனால், இத்தகைய பாடல்களை அம்மானைப்பாட்டென்று வகுத்தார்கள் எனத் தோன்றுகிறது. அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை என்பன போன்ற எல்லாக் கதைப் பாட்டுக்களும் அம்மானைப் பாட்டைச் சார்ந்தனவே. அவற்றிற் சில பாட்டுக்களுக்கு அம்மானை என்ற பெயரே அமைந்துள்ளது. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை என்பன இதற்கு உதாரணங்கள். இத்தகைய பாடல்களில் நாடோடிப் பாடல்களின் இயல்புகள் யாவும் இருக்கும். கொச்சை மொழிகள், உலக வழக்குச் சொற்கள், யாவருக்கும் விளங்கும் உபமானங்கள், ஒரு செய்தியையே மீட்டும் மீட்டும் சொல்லுதல், சில வகையான வாக்கியங்கள் எல்லாப் பாடல்களிலும் வருதல் முதலியவற்றை இந்த அம்மானைப் பாடல்களில் காணலாம். கி. வா. ஜ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அம்மானை&oldid=1455713" இலிருந்து மீள்விக்கப்பட்டது