கலைக்களஞ்சியம்/அம்மை
அம்மை (Pox) : தொற்று நோய்களில் அம்மை நோய்கள் ஒரு தனிப்பட்ட வகையைச் சேர்ந்தவை. தொற்று ஏற்பட்டுச் சில நாட்களுக்குப் பிறகு, அதாவது அவயக் காலத்திற்குப் (Incubation period) பிறகு, காய்ச்சலும், அதற்குச் சில நாட்களுக்குப் பின் உடம்பில் தோலின் மேலும், வாய், மூக்கு, கண் இவைகளின் சவ்வுகளின் மேலும், சிறு சிவப்புப் புள்ளிகள் தோன்றிப் பின் அவை நீர்க் கொப்புளங்களாகவோ சீழ்க் கொப்புளங்களாகவோ மாறிப் பிறகு சில நாட்களுக்குள் இந்தக் கொப்புளங்கள் அடங்கிக் காய்ந்து, பொருக்குகளாகி உதிர்ந்துவிடும். சிவப்புப் புள்ளிகளும், தடிப்புக்களும், படைகளும், கொப்புளங்களும் உண்டாகும். இந்த நோய்கள் மாரி அல்லது சீதளாதேவி என்னும் தெய்வத்தால் ஏற்படுபவை என்னும் நம்பிக்கையால், இவற்றிற்கு அம்மை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
அம்மை வகைகள்: 1. சின்ன அம்மை (Chicken pox): இதை நீர்க் கொளுவான் என்பார்கள். இந்த அம்மை கடுமையானதன்று. கொப்புளங்கள் சாதாரணமாகச் சீழ் பிடிப்பதில்லை. ஆகையால் இதனால் மரணம் ஏற்படுவதில்லை. 2. பெரியம்மை (Small pox) மிகவும் கடுமையானது; உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதுண்டு. இதில் காணும் கொப்புளங்கள் சீழ் பிடிப்பதால் அதிகக் காய்ச்சலும், அவை வாய், கண், மூக்குகளில் உண்டாவதால் ஆபத்தும் ஏற்படுகின்றன. நோயினின்று தப்பிப் பிழைத்தாலும், தழும்புகள் முக்கியமாக முகத்தில் உண்டாகி விடுவதால், விகார ரூபத்தைக் கொடுத்துவிடுகிறது. கண்ணில் கொப்புளம் புறப்பட்டால், புண்ணாகி, அது ஆறின பிறகு குருடாகிவிடுகிறது. இதைத்தான். பூ விழுந்துவிட்டது என்பார்கள். 3. தட்டம்மை (Measles)பெரியம்மைபோலக்கொடியதன்று. ஆயினும் பெருவாரியாக அதிக தீவிரமாகத் தொற்றக்கூடியது.
அம்மைகள் பொதுவாகச் சிறுவர்களைத் தொற்றும் குணமுடையன. விளையாட்டு அம்மையும், பெரிய அம்மையும் சாதாரணமாக ஒரு தடவைக்கு மேல் வருவதில்லை. ஆனால், தட்ட அம்மையோ ஒரு தடவைக்கு மேலாகவும் அடிக்கடியும் வரலாம்.
இந்த அம்மைகளைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. டி. எஸ். தி.