கலைக்களஞ்சியம்/அயக் கான்கிரீட்டு

அயக் கான்கிரீட்டு (Ferro-concrete): இது வலுவாக்கிய கான்கிரீட்டு என்றும் கூறப்படுகிறது. கான்கிரீட்டிற்குள் எஃகு கம்பிகளை வைத்துக் கட்டட வேலைக்கு உபயோகிக்கும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதிகமான தகவினாலும் (Stress) கான்கிரீட்டு நசுங்கியோ அழுந்தியோ போவதில்லை. ஆனால் அதன் இழுவலிமை மிகக் குறைவு. எஃகின் இழு வலிமை அதிகம். ஆகையால் இவ்விரு பொருள்களையும் தக்க விகிதத்தில் பயனாக்கிப் பலவேறு வகையான தகவுகளையும், பலவேறு அளவுள்ள பாரங்களையும் தாங்க ஏற்றவாறு கட்டடங்களை அமைக்கலாம். இவ்வாறு கான்கிரீட்டை. வலுப்படுத்தும் முறையை மானியர் என்ற தோட்டக்காரர் 1860-ல் கண்டுபிடித்தார் எனக் கருதுகிறார்கள்.

அயக் கான்கிரீட்டினால் கட்டடம் கட்ட, முதலில் மரத்தினாலோ, உலோகத் தகடுகளாலோ, அதே வடிவுள்ள சட்டம் அமைக்கப்படுகிறது. பின்னால் ஊற்றப்படும் கான்கிரீட்டிற்கு இது வார்ப்படமாக அமைகிறது. இதற்குள்ளேயும் இதன் மேலும் எஃகு கம்பிகள் பொருத்தப்படுகின்றன. இதன்பின் புதிதாகத் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டு வார்ப்பிற்குள் ஊற்றப்படுகிறது. அது இறுகியபின் எஃகு கம்பிகள் அதில் பதிந்து அத் துடன் இணைந்துவிடுகின்றன. முன்னர் மரமும், எஃகும் பயனாகி வந்த பல கட்டட வேலைகளுக்குத் தற்காலத்தில் அயக் கான்கிரீட்டுப் பயனாகிறது. இது மரத்தை விட அதிகமான வலுவும் உறுதியும் கொண்டது. இதன் தீ யெதிர்க்கும் திறன் மரம், எஃகு இவற்றின் திறனை விட அதிகம். பார்க்க : கான்கிரீட்டு.