கலைக்களஞ்சியம்/அயர்லாந்து

அயர்லாந்து: பரப்பு : 26,600 ச. மைல். மக் : 29.6 இலட்சம் (1951). அட்லான்டிக் சமுத்திரத்தில் பிரிட்டனுக்குச் சிறிது மேற்கே அமைந்துள்ள ஒரு தீவு. பிரிட்டனுக்கும் இதற்கும் இடையே செயின்ட் ஜார்ஜ் கால்வாய், ஐரிஷ் கடல், வடகால்வாய் முதலியன இருக்கின்றன. இத்தீவின் கிழக்குக்கரை நேராகவே யமைந்துள்ளதாயினும், மேற்குக்கரையில் பல கடற்குடைவுகள் இருக்கின்றன. இத்தீவில் உள்ள மிக உயர்ந்த மலைகள் 3,400 அடி உயரம்; அவை வடபகுதியிலும் மேலைக்கரையோரமாகவும் இருக்கின்றன. தீவின் மேற்குப் பகுதியில் மக்கள் தொகை குறைவு. வடக்கேயும், தெற்கேயும் உள்ள மலைப் பிரதேசங்களுக்கிடையே சமநிலம் அமைந்திருப்பதால் இத்தீவு ஒரு கிண்ணம் போல் தோன்றுகிறது. இத்தீவிலுள்ள மிக நீண்ட ஆறு ஷானன் என்பது. இந்த ஆறு அட்லான்டிக் கடலோடு கலக்கிறது. இத்தீவில் மழை மிகுதியாக உண்டு. வட அட்லான்டிக் வெப்ப நீரோட்டம் இத் தீவின் மேற்குப் புறமாக ஓடுவதால், குளிர் காலத்திலும் இங்குக் குளிர் அதிகமாக இல்லை. கோடையில் சராசரி வெப்பநிலை 60° பா ; குளிர்காலத்தில் 40° பா. இத்தீவு பசுமையான புல்வெளிகள் நிறைந்துள்ளதால், மரகதத் தீவு என்னும் பெயர் பெற்றுள்ளது. மீன் பிடிப்பது இங்குள்ள மக்களின் பலருக்குத் தொழில், ஷானன் ஆற்றில் லிமெரிக் என்னுமிடத்திற்கருகே ஒரு நீர்த் தேக்கம் கட்டப்பட்டுள்ளது. ஓட்ஸ், பார்லி, பீட்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவை விளைகின்றன ; பன்றிகள், குதிரைகள், ஆடுகள் மிகுதியாக உள்ளன; பீட் சர்க்கரை அதிகமாக உற்பத்தியாகிறது. பால் பண்ணைத் தொழில் இங்கு முக்கியமானது.

இத்தீவில் ஆதியில் வசித்துவந்த மக்கள் கெல்ட் இனத்தவர். பிற்காலத்தில் டேனர்களும் ஆங்கிலேயரும் கெல்ட்களோடு கலந்தனர் ; பிராடஸ்டென்ட் மதத்தவராகிய ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் வடகிழக்கே அதிகமாக வசிக்கின்றனர். பெரும்பான்மை அயர்லாந்து மக்கள் கத்தோலிக்கர்கள்.

இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள். கம்பள நெசவு, தட்டுமுட்டுச் சாமான்கள், சவர்க்காரம் முதலியவை செய்தல் இங்கு நடக்கும் கைத்தொழில்கள். வெண்ணெய் முதலிய பொருள்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கரி முதலிய தாதுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அயர்லாந்து

முற்காலத்தில் அயர்லாந்து மக்களின் மொழி கேலிக் (Gaelic) என்பது ; ஆங்கில ஆட்சியில் ஆங்கிலம் பயிற்சி மொழியாயிற்று. தென் அயர்லாந்து சுதந்திரம் எய்தியபின் மறுபடியும் கேலிக் மொழியே அந் நாட்டு மொழியாயிற்று. அதற்கேற்ப அந்நாட்டின் பெயரும் ஏரே (Eire) என்று மாற்றப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் உள்ள வட அயர்லாந்தில் ஆங்கிலமே நாட்டு மொழியாயுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடு தலை பெறுவதற்காகப் போராடிய காலத்தில் ஏரே மக்கள் தம் நாட்டின் முன்னேற்றத்தைக் கவனிக்க முடியவில்லை. ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களும் அவர்களுடைய நன்மையைக் கருதியவர்களாக இருக்கவில்லை. சுதந்திரம் அடைந்தபின் ஏரே மக்கள் தம் நாட்டை முன்னேற்றமடைவிக்க முயல்கின்றனர். முக்கியமான நகரங்கள் : டப்ளின் (சுதந்திர அயர்லாந்தின் தலைநகரம்) ; மக்: 5,21,322 (1951) ; பெல்பாஸ்ட் (வட அயர்லாந்தின் தலைநகரம்); மக்: 4.43.670 (1951).

வரலாறு : இந்நாட்டின் தொடக்க வரலாற்றைப்பற்றி நமக்கு அதிகமான விவரங்கள் தெரியவில்லை. இங்கு முதலில் வாழ்ந்துவந்த மக்கள் 'கெல்ட்' இனத்தைச் சேர்ந்தவர்கள். 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் அவர்களிடைப் பரவியது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்தைக் கடல் வழியாகப் பலமுறை தாக்கிவந்த டேனர்கள் அயர்லாந்தையும் தாக்கி, அங்கிருந்த அரசர்களுடன் சண்டையிட்டார்கள். 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவ்வரசர்கள் ஒன்று சேர்ந்து, கிளோன்டார்ப் (Clontarf) போரில் டேனர்களை முறியடித்தனர். கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் இடையில் அயர்லாந்து அரசர்களுக்குள் தகராறு ஏற்படவே, அச்சமயம் இங்கிலாந்தை ஆண்டுவந்த 11-ம் ஹென்ரியின் உதவியை அவர்களில் சிலர் நாடினர். ஹென்ரி தமது பிரபுக்களில் விரும்பியவர் போய் உதவி செய்யட்டுமென்று கூறிவிட்டார். அவர்களில் முக்கிய மானவர் ரிச்சர்டு டீ கிளேர் என்பவர். அயர்லாந்தில் அவ அதிகாரம் பரவவே, 11-ம் ஹென்ரி அந்நாட்டில் தம் பிரபுக்களே சுயேச்சை பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சி, அயர்லாந்துக்கு ஒருமுறை சென்று, தம்மையே அயர்லாந்தின் தலைவராக அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு ஆங்கிலேயப் பிரபுக்கள் ஆதிக்கம் அயர்லாந்தின் கிழக்கு இடைப்பகுதியில் சில சதுர மைல்களுக்கே பரவியிருந்தது. அப்பிரதேசத்தை 'எல்லை' (The pale) எனக் குறிப்பிட்டு வந்தார்கள். டியூடர் அரசர் VII-ம் ஹென்ரி அயர்லாந்துக்கு அனுப்பிய பிரதிநிதியான சர் எட்வர்டு பாய்னிங்க்ஸ் என்பவர் அயர்லாந்து பார்லிமென்டைக் கூட்டினார் ; சில சட்டங்கள் மூலம் அது தானாகவே இங்கிலீஷ் பார்லிமென்டின் தலைமைக்குப் பணிந்தது. VIII-ம் ஹென்ரி கட்டுக்கடங்காத 'கில்டேர்' என்ற ஒரு ஐரிஷ் பிரபு வமிசத்தவர்களைப் பிடித்துவரச் செய்து, அவர்களைத் தூக்கிலிட்டார். இங்கிலாந்தின் சமயச் சீர்திருத்த மாறுதல்களையும் அயர்லாந்தில் புகுத்தினார். எலிசபெத் ஆட்சியின்போது அயர்லாந்து மக்களும் அவர்கள் தலைவர்களும் மூன்று முறை கலகம் செய்தனர். கடைசிக் கலகம் டைரோன் பிரபுவின் தலைமையில் நடைபெற்றது. அயர்லாந்து மக்களின் கத்தோலிக்க சமயப் பற்றையும், தேசிய உணர்ச்சியையும் வெளிக்காட்டிய இக்கலகம் 1603-ல் ஆங்கிலப் படை வலிமையால் அடக்கப்பட்டது.

1641-ல் பெரியதோர் ஐரிஷ் கலகம் தோன்றி ஆங்கிலேய அரசர் 1-ம் சார்லஸுக்கும் அவருடைய பார்லிமென்டுக்கும் ஏற்கனவே இருந்த மனக்கசப்பை அதிகமாக்கியது. சார்லஸின் இராணி கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவள். அயர்லாந்து மக்களும் கத்தோலிக்க சமயப் பற்றுடையவர்களாகையால் சார்லஸுக்கும் இக்கலகத்துக்கும் சம்பந்தமிருக்க வேண்டுமென்று பார்லிமென்டு தலைவர்கள் முடிவு கட்டினார்கள். இது இங்கிலாந்தின் உள்நாட்டுப் போருக்கு ஓரளவு வழிகோலிய நிகழ்ச்சி. 1-ம் சார்லஸின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் நிறுவப்பட்ட புது அரசாங்கத்தை அயர்லாந்து மக்கள் எதிர்த்ததால் ராணுவத் தலைவர் கிராம்வெல் 1649-50-ல் அயர்லாந்துக்குத் தமது படைகளுடன் சென்று, வெக்ஸ்போர்ட், டிராயிடா (Wexford, Drogheda) முதலிய இடங்களில் பல அயர்லாந்து வீரர்களைக் கொன்று, அயர்லாந்து மக்கள் நிலங்களையும் பெருவாரியாகப் பறிமுதல் செய்து ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். பொதுவாக, அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் பகை நீடித்ததற்குக் காரணங்கள் சமய வேறுபாடு, நிலப்பறிமுதலால் விளைந்த அநீதி, ஆங்கிலேய சாதியினரின் அதிகாரச் செருக்கு முதலியவையாம்.

1688 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புரட்சிக்குப்பின் முடி துறந்த 11-ம் ஜேம்ஸ் தீவிர கத்தோலிக்கரானபடியால் அவருக்கு அயர்லாந்தில் ஆதரவு கிடைத்தது. இங்கிலாந்தின் புதிய அரசர் III-ஆம் வில்லியம் ஒரு படையுடன் அயர்லாந்துக்குப் போய் பாயின் போரில் (Battle of the B 'yne 1690) ஜேம்ஸை முறியடித்தார். சில மாதங்களில் அயர்லாந்து மக்கள் எதிர்ப்பும் ஓய்ந்தது. அயர்லாந்து மக்களிடம் பொறுமை காட்டப்படுமென்று ஆங்கிலேய அரசாங்கம் உறுதி கூறியிருந்தது. ஆயினும் 18ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் வசித்துவந்த பெரும்பாலோரான கத்தோலிக்கர்கள் பல வழிகளில் ஒடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வோட்டுரிமை இல்லை ; உயர் தரக் கல்வி அளிக்கக் கூடாது. அவர்கள் நிலச்சுவான் தார்களாக இருக்க முடியாது. அயர்லாந்தின் தொழில் வளர்ச்சிக்கும் எவ்வளவோ தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் அயர்லாந்து மக்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் பல இடங்களுக்குச் சென்று பிழைத்தனர்.

அமெரிக்கச் சுதந்திரப் போர் நிகழ்ந்தபோது ஆங்கிலேய அரசாங்கம் அயர்லாந்து மக்களுக்குச் சில சலுகைகளைக் காட்டியது. ஆயினும் பிரெஞ்சுப் புரட்சியினால் அயர்லாந்திலும் தீவிர அரசியல் கொள்கைகள் பரவவே, பிரிட்டன் அடக்குமுறையைக் கையாண்டது. 1798-ல் அயர்லாந்தில் பெருங் தேசியக் கலகம் ஏற்பட்டது. ஈவு இரக்கமின்றி, அது ஆங்கிலேயர் படை பலத்தால் நசுக்கப்பட்டது. இச்சமயம் திரட்டப்பட்டிருந்த படைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிரிட்டன் அயர்லாந்து பார்லிமென்டை 1801-ல் ஒரு ஐக்கியச் சட்டம் இயற்றச் செய்தது. அதன்படி பிரிட்டிஷ் பார்லிமென்டில் பிரபுக்கள் சபைக்கு 4 பிஷப்புக்களையும், 28 மற்றப் பிரபுக்களையும், காமன்ஸ் சபைக்கு 100 அங்கத்தினர்களையும் அயர்லாந்து அனுப்ப வேண்டியது. அயர்லாந்துக்குத் தனிப் பார்லிமென்டு இல்லை. இரு நாடுகளுக்குமிடையே தடையிலா வாணிபம் அனுமதிக்கப்பட்டது. கத்தோலிக்கர்களுக்கு 'விடுதலை' அளிப்போமென்று பிரிட்டன் வாக்களித்தது ; ஆனால் அதை நிறைவேற்றவில்லை, தொடக்கத்திலிருந்தே அயர்லாந்து மக்கள் இந்தக் கட்டாய ஐக்கியத்தை வெறுத்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டானியல் ஓ கானெல் என்ற அயர்லாந்து தலைவர் தம் நாட்டு மக்களின் விடுதலைக்காக மிகவும் பாடுபட்டார். பார்லிமென்டுக்கு அயர்லாந்தின் அங்கத்தினர்களிலொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கத்தோலிக்கர் என்ற காரணத்தால் அவர் அச்சபையில் உட்கார முடியவில்லை. கத்தோலிக்கர்களுக்குக் குடி உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமென்றும், ஆங்கிலத் திருச்சபை அயர்லாந்துக்கு அதிகாரத்தோடுகூடிய திருச்சபையாயிருப்பது நியாயமில்லையென்றும், 1801 ஆம் ஆண்டின் ஐக்கியச் சட்டத்தை நீக்க வேண்டுமென்றும் அவர் பல கிளர்ச்சிகள் செய்தார். முதல் கிளர்ச்சி 1829-ல் வெற்றியடைந்தது; கத்தோலிக்கர் பிராட்டெஸ்டென்டுகளுடன் சமஉரிமை பெற்றார்கள். ஆனால் அவருடைய மற்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை. இந்நூற்றாண்டின் பிற்பத்தியில் கிளாட்ஸ்டன் பலமுறை பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தார். அப்பொழுது அயர்லாந்து தலைவர் பார்னெல் ஒரு நிலச்சங்கத்தை ஏற்படுத்தி, அயர்லாந்து விவசாயிகளின் குறைகளை நீக்க முயன்றார். ஆனால் துன்புறுத்து முறைகளைக் கையாள அவர் தயங்கவில்லை. கிளாட்ஸ்டன் சட்ட விரோதமான நடவடிக்கைகளை அடக்கும்படி நேர்ந்தது. ஆயினும் அயர்லாந்து மக்களின் நன்மைக்காகவும் பல சட்டங்களை இயற்றினார். அயர்லாந்தில் பிராட்டெஸ்டென்டு திருச்சபைக்கு அரசாங்கச் சலுகை நின்றது (1867). விவசாயிகள் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகைகளை நிதானித்து நிருணயிக்க நில நீதிமன்றங்களை அவர் ஏற்படுத்தினார் (1881). மற்றும் சில சட்டங்கள் நிலப்பிரச்சினையை இறுதியாகத் தீர்க்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டன. மிராசுதார்கள் நிலங்களை விற்க விரும்பினால் அங்கு வேலை செய்யும் அயர்லாந்துக் குடியானவர்கள் அவைகளை வாங்கிக்கொள்ளலாம் என்பதும் அதற்கென அரசாங்கமே குறைந்த வட்டியில் குடியானவர்களுக்குக் கடன் கொடுத்துதவும் என்பதுமே அவற்றின் சாரம். 1886-ல் அயர்லாந்துக்குச் சுயாட்சி அளித்துவிட கிளாட்ஸ்டன் நிச்சயித்தார். பார்லிமென்டு அவர் மசோதாவை மறுத்தது. அவர் கட்சி இதனால் பிளவுபட்டது. 1893-ல் மீண்டும் ஒரு 'ஐரிஷ் சுயாட்சி மசோதாவைப்' பார்லிமென்டுக்குக் கொணர்ந்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அயர்லாந்து தலைவர்கள் சின்பேன் (Sinfein} எனும் தேசியத் தாபனத்தை நிறுவி, நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு துறைகளில் சீர்ப்படுத்தி உய்ப்பிக்க உழைத்தனர். 1911-ல் இங்கிலாந்து பிரதமர் ஆஸ்க்வித் மற்றொரு ”சுயாட்சி மசோதாவை”ப் பார்லிமென்டுக்குச் சமர்ப்பித்தும் பயனில்லை. அயர்லாந்திலும் புரட்சி மனப்பான்மை வளர்ந்தது. பிரிட்டனின் தொடர்பை நீக்கிக் கொள்ளப் பலர் ஆய்த்தம் செய்தனர். அயர்லாந்தின் வடபகுதியில் பிரிட்டிஷார் சந்ததியில் தோன்றிய பிராட்டெஸ்டென்டு வகுப்பினர் பிரிட்டனுடனுள்ள தொடர்பு போகக்கூடாதென்று கருதினார்கள். உள் நாட்டுப் போர் மூண்டுவிடும் போலிருக்கையில் முதல் உலக யுத்தம் தொடங்கிவிட்டது.

யுத்தத்தின்போது அயர்லாந்தில் குடியரசு குறிக்கோளை விரும்பியவர்கள் பெருங்கிளர்ச்சி செய்து, பிரிட்டனுக்கு நெருக்கடியை மிகுவித்தனர். இவர்களில் முக்கியமான தலைவர் ஈமன் டெவலேரா. 1918 லிருந்து 1920 வரை பிரிட்டன் அடக்குமுறைகள் அனுசரித்தது. கடைசியாக, சமரச வழியைப் பின்பற்றி, பேச்சு வார்த்தைகள் நடத்தி, 1921 டிசம்பர் மாதத்தில் அயர்லாந்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி வடபகுதி தனது பார்லிமென்டை வைத்துக்கொண்டு பிரிட்டனுடன் இணைந்திருந்தது. அயர்லாந்தின் மற்றப் பிரதேசங்கள் ஐரிஷ் சுதந்திர அரசாங்கம் என்ற பெயருடன் குடியேற்ற அந்தஸ்து பெற்றன. இதுவும் ஐரிஷ் தீவிரவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு அவர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வந்து, கடைசியில் 1932-ல் புதுத் திட்டத்தை ஒப்புக்கொண்டார்கள். அவ்வாண்டு டெவலேரா அயர்லாந்தின் பிரதம மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டு, பிரிட்டனுடன் சச்சரவுகளைத் தொடர்ந்து நடத்தினார். அவர் கட்சியின் நோக்கம் பிரிட்டனுடன் சம்பந்தமே கூடாது, அயர்லாந்து ஒரு குடியரசாகத் திகழ வேண்டுமென்பது. 1932-ல் ஆங்கில அரசருக்கு அயர்லாந்து பார்லிமென்டு அங்கத்தினர்கள் விசுவாசப் பிரமாணம் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள். 1932-ல் பிரிவிகவுன்சிலுக்கு அயர்லாந்து அப்பீல்கள் போவது நின்றது. 1936-ல் கவர்னர் ஜெனரல் பதவி, மறைந்தது. 1937-ல் அயர்லாந்தின் பார்லிமென்டு ஒரு புது அரசியல் திட்டத்தை வகுத்து, அயர்லாந்து இனிப் பூரண சுதந்திரம் பெற்ற ஜனநாயக அரசாங்கம் என்று சட்டபூர்வமாகக் கூறிக்கொண்டது.

1932 முதல் 1948 தொடக்கம் வரை டெவலேரா பிரதம மந்திரியாக இருந்தார். இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளெல்லாம் பிரிட்டன் கட்சியில் சேர்ந்து சண்டையிட்டன. ஆனால் அயர்லாந்து சுதந்திர அரசாங்கம் மாத்திரம் நடுநிலைமை வகித்துத் தனிப்பட்டு நின்றது. ஜூன் 1946-ல் டெவலேரா அயர்லாந்து பார்லிமென்டில் அதிகார முறையில் தமது நாட்டின் அந்தஸ்தைப் பின்வரு மாறு விளக்கினார்: “ஏரே (அயர்லாந்து) பூரண சுதந்திரக் குடியரசு. அது பிரிட்டனுடனும் பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டுத் தொகுதியுடனும் பிற அயல்நாடுகளுடன் உள்ள தொடர்பே போன்ற தொடர்புடையது.” ஸ்ரீ. தோ.

அரசியலமைப்பு : 1921ஆம் ஆண்டுப் புரட்சியின் விளைவாக இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையின்படி தென் அயர்லாந்து, ஐரிஷ் சுதந்திர இராச்சியம் என்ற முழுச் சுதந்திரமுள்ள நாடாயிற்று. 1937-ல் பொதுமக்களால் குடியொப்பத்தில் (Referendum) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புதிய அரசியல் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் திட்டமே சிற்சில மாறுதல்களுடன் தற்போதைய ஐரிஷ் அரசியலுக்கு அடிப்படை. இதன்படி தென் அயர்லாந்து சுதந்திர இராச்சிய அந்தஸ்துடன் கூடிய ஜனநாயகக் குடியரசாயிற்று. இந்த அரசியல் திட்டம் நிருவாகத் தொகுதி, சட்டமியற்றும் தொகுதி, நீதித்தொகுதி என்ற மூன்று உறுப்புக்கள் அடங்கியது.

நீருவாக முறை பிரிட்டிஷ் காமன்வெல்த் தேசங்களில் வழங்கும் பார்லிமென்ட் மந்திரிசபை முறையைப் பின்பற்றியதே. நிருவாகத் தலைவருக்கு ஜனாதிபதி என்று பெயர். இவர் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் மக்கள் அனைவரும் வாக்குரிமை அளிப்பதன் மூலம் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் ஏழு ஆண்டு பதவியிலிருப்பார். அரசியலமைப்பின்படி எல்லா நிருவாக சம்பந்தமான நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பேரால்தான் நடைபெறவேண்டி யிருந்தாலும், உண்மையில் நிருவாக அதிகாரம் முழுவதையும் மந்திரி சபையே செலுத்துகிறது. ஜனாதிபதிக்கு இரண்டொரு தனி அதிகாரங்கள் உண்டு. பார்லிமென்டில் இயற்றப்பட்ட எந்தச் சட்டமாவது அரசியல் திட்டத்து ஷரத்துகளுக்கு முரணாக இருக்கிறதென்று அவருக்குத் தோன்றினால், அவர் அந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பி, அம்மன்றத்தின் கருத்தைத் தெரிந்துகொள்ளலாம். மேற்சபையின் பெரும்பான்மையோரும், கீழ்ச்சபையின் மூன்றில் ஒரு பாகம் அங்கத்தினரும் பொது முதன்மை வாய்ந்த ஒருமசோதாவைச் சட்டமாக இயற்ற மறுத்தால், ஜனாதிபதி அப்பிரச்சினையைக் குடியொப்பத்திற்கு அனுப்பலாம். ஜனாதிபதிக்கு அவரது அலுவல்களில் உதவவும், ஆலோசனை கூறவும் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட ஒரு மந்திரிசபை உண்டு. பிரதம மந்திரி சட்டசபையில் பெரும்பான்மைக் கட்சியின் பிரதிநிதி. மந்திரிசபையின் தீர்மானத்தை ஜனாதிபதி சாதாரணமாகப் புறக்கணிக்கக் கூடாது. மந்திரிசபைதான் உண்மையில் எல்லா நிருவாக அதிகாரத்தையும் செலுத்துகிறது. ஜனாதிபதி சில குறிப்பிட்ட விஷயங்களில் பிரதம மந்திரியும்,ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர்களும் ஆகிய ஏழு அங்கத்தினர்கள் அடங்கிய 'கவுன்சில் ஆப் ஸ்டேட்' என்ற ஒரு சபையையும் ஆலோசனை கேட்கலாம். இந்தச் சபையின் ஆலோசனைப்படி ஜனாதிபதி நடந்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது. சட்டமியற்ற செனெட் என்ற மேற்சபை, டேல் என்ற கீழ்ச்சபை ஆகியவையடங்கிய ஒரு பார்லிமென்டு நிறுவப்பட்டிருக்கிறது. செனெட் சபை 60 அங்கத்தினர்க ளடங்கியது. இவர்களில் பதினோரங்கத்தினர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்; ஆறு அங்கத்தினர் இரண்டு பல்கலைக் கழகங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்; மற்ற 43 அங்கத்தினர் இலக்கியம், விஞ்ஞானம், கலை, கல்வி, சமூகத்தொண்டு, வாணிபம், விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் என்னும் இவைபோன்ற விஷயங்களில் விசேஷ அறிவுள்ளவராகவோ, அனுபவமுள்ளவராகவோ இருப்பவர்களை 5 பட்டியலாக (Panels) பிரித்து, அந்தந்த வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஐந்துக்குக் குறையாமல் பதினொன்றுக்கு மேற்படாமல் அங்கத்தினர் எடுக்கப்படவேண்டும். கீழ்ச்சபை அங்கத்தினர் சர்வஜனவோட்டு முறைப்படி விகிதப் பிரதிநிதித்துவ ஏற்பாட்டை யொட்டித் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மந்திரிசபை கீழ்ச்சபைக்குக் கூட்டுமுறையில் பொறுப்பாளியா யிருக்கவேண்டும். செலவு நிதி மசோதா இங்குத்தான் சமர்ப்பிக்கப்படலாம். மற்ற மசோதாக்கள் மேற்சபையிலோ கீழ்ச்சபையிலோ சமர்ப்பிக்கப்படலாம். கீழ்ச்சபையிலிருந்து மேற்சபைக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு மேற்சபை 90 நாட்கள்வரை தடை (Suspension veto) செய்து வரலாம். நிதி மசோதாக்களைத் தடைசெய்யவே முடியாது. ஆகையால் கீழ்ச்சபைக்குத்தான் முழு அதிகாரமும் என்பது நன்கு விளங்கும். நீதி வழங்குவதற்கு ஓர் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டிருக்கிறது. அரசியல் திட்டத்தில் கண்ட ஷரத்துக்கள் விவாதிக்கப்பட்டால் அந்தத் தகராறுகளை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அசல் அதிகாரம் உண்டு.

1940-1950 முடியப் புத்து ஆண்டுகளில் நிருவாக அதிகாரிகளும் சட்டசபையும் பொது மக்களுக்கு அரசியல் திட்டத்தில் உறுதியான பாதுகாப்பு அளித்திருந்த சில அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டார்களென்று வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டன. சில வழக்குகளில் ஆக்கிரமிப்பு இல்லையென்றும், மற்றும் சிலவற்றில் ஆக்கிரமிப்பு இருந்திருப்பதால் அந்த நடவடிக்கைகளெல்லாம் ரத்து செய்யப்பட வேண்டியவை யென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திய அரசியல் திட்டத்தில் நாலாவது பாகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் வேலை முறையில் அனுசரிக்கவேண்டிய கொள்கைகள் அயர்லாந்து அரசியல் திட்டத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

வட அயர்லாந்து அரசியலமைப்பு : 1920, 1922 அரசியல் அமைப்புச் சட்டப்படி வட அயர்லாந்து மக்கள் தமக்கெனத் தனி நிருவாகமும் சட்டசபையும் பெற்றனர். நிருவாக அதிகாரம் இங்கிலாந்து மன்னரின் சார்பாக ஒரு கவர்னரால் வகிக்கப்படுகிறது. இவர் ஆறாண்டு காலத்திற்குப் பதவியிலிருப்பார். இவருக்கு ஆலோசனை கூறப் பார்லிமென்டுக்குப் பொறுப்பான ஒரு மந்திரிசபை யுண்டு; பார்லிமென்டு 26 அங்கத்தினர்கள் கொண்ட செனெட்டும், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 அங்கத்தினர்களடங்கிய காமன்ஸ் சபையும் என இரண்டு சபைகளடங்கியது. செனெட்டு அங்கத்தினர்கள் எட்டாண்டு காலத்திற்குக் காமன்ஸ் சபை அங்கத்தினர்களால் ஒற்றை மாற்று வோட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். காமன்ஸ் சபையின் காலவரையறை 5 ஆண்டுகள். 1929 முதல் சபையின் பெரும்பாலான அங்கத்தினர்கள் ஒற்றை அங்கத்தினர் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இங்கிலாந்தின் காமன்ஸ் சபைக்கு வட அயர்லாந்து இன்றைக்கும் 13 அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. அயர்லாந்து பார்லிமென்டுக்குச் சாம்ராச்சியத்தைச் சார்ந்த விஷயங்கள், போர்ப் பிரகடனம் செய்தல், சமாதானப் பேச்சு நடவடிக்கை எடுத்தல், உடன்படிக்கை செய்தல், பட்டம் முதலிய கௌரவங்கள் அளித்தல் என்பவற்றைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் சட்டமியற்றவோ நிருவாகம் நடத்தவோ அதிகாரமுண்டு. வட அயர்லாந்து அரசியலமைப்பில் மேற்சபையைக் கீழ்ச்சபை தேர்ந்தெடுப்பது ஒரு சிறப்பான அமிசம். வீ. வெ.