கலைக்களஞ்சியம்/அயூதியா
அயூதியா (Ayuthia) கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து நான்கு நூற்றாண்டுகளாகச் சயாமின் தலைநகரமாயிருந்த ஊராகும். பின்னர் அது அழிக்கப்படவே பாங்காக் தலைநகராயிற்று. அயூதியாக் கலை என்பது, கலைவேலைப்பாட்டைவிடக் கைத்தொழில் வேலைப்பாடே மிகுதியாகக் காணப்படும் ஒரு கலை முறையாகும். அது பண்டைக் கலையாக இருந்தது; இப்போது நாடோடிக் கலையாகத் தாழ்ந்துளது. புத்தருடைய உருவச் சித்திரங்கள், ஜாதகக் கதைச் சித்திரங்கள் முதலியன சயாமிய ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அரக்குப் பூசிய பொருள்களில் ஓவியம் வரையும் கலை இணையற்றதாக இருக்கின்றது. பிற்காலத்திய அயூதியாக் கலைஞர்கள் தீச்சுடரையும் புராண மிருகங்களையும் தேவதைகளையும் விரும்பித்தீட்டி வந்தனர்.