கலைக்களஞ்சியம்/அயோடோபாரம்

அயோடோபாரம் (Iodoform) : [குறியீடு CHI3) செருல்லாஸ் என்ற அறிஞர் 1822-ல் இதைக் கண்டுபிடித்தார். காரங்களையோ, காரக் கார்பனேட்டுக்களையோ ஆல்கஹாலுடன் கலந்து, அயோடினுடன் வினைப்படுத்தி அயோடோபாரத்தைப் பெறலாம். வாணிபத்திற்காகப் பெரும் அளவில் தயாரிப்பதற்கும் இதே முறை கையாளப்படுகிறது, பொட்டாசியம் அயோடைடுக் கரைவில் தேவையான அளவு ஆல்கஹாலையோ அசிட்டோனையோ கலந்து மின்பகுப்பால்இதைப் பெறுவது மற்றொரு முறை.

இது சிறப்பான மணமுள்ள மஞ்சள்நிறத் திண்மம். இதன் உருகுநிலை 119°. இது நீரில் கரையாது. ஆனால் ஆல்கஹாலிலும் ஈதரிலும் கரையும். வெளிச்சத்தில் இது காற்றுடன் வினைப்பட்டுச் சிதைகிறது. காயங்களுக்கு இது நச்சுநீக்கியாகப் பயனாகிறது. உயிர்ப் பொருள்களில் இது பட்டால் அயோடின் வெளிப்படுகிறது. அயோடின் பாக்டீரியாவை அழிக்கிறது. அயோடோபாரம் கெட்ட நாற்றமும், நச்சுத் தன்மையும் உள்ளதாகையால், இதற்குப் பதிலாக வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீ. பா.