கலைக்களஞ்சியம்/அயோனியக் கடல்
அயோனியக் கடல் இத்தாலிக்கும் கிரீசின் தென்பகுதிக்கும் இடையேயுள்ள மத்தியதரைக் கடற்பகுதி; ஆட்ரான்ட்டோ ஜலசந்தி இக்கடலுக்கும் ஏட்ரியாடிக் கடலுக்கும் இடையே உள்ளது. கிரீசின் மேலைக் கடற்கரையில் இக்கடல் குடைந்துள்ள பெரிய உள்வாய்தான் காரிந்த் வளைகுடா என்பது. சிசிலிக்கும் கிரீசின் தென்பகுதியான மாட்டபான் முனைக்கும் இடையே 420 மைல் தூரம் இருக்கிறது. புராதன
கிரேக்கக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள அயோ என்பவள் பெயரால் இக்கடல் பெயரிடப் பெற்றது. அயோவை ஜூபிட்டர் ஓர் எருமையாக மாற்றிவிட்டான். தன்னைக் கடிக்க வந்த ஓர் உண்ணியின் தொந்தரவைத் தாங்கமாட்டாமல் அயோ இக்கடலைக் கடந்து நீந்திச் செல்ல முயன்றதால் இக்கடல் இப்பெயர் பெற்றது என்பது கிரேக்கக் கதை.