கலைக்களஞ்சியம்/அரணை

அரணை ஊர்வன வகுப்பில் ஓணான், பல்லி முதலியவற்றைப் போன்ற ஒரு குடும்பம். இதில் சுமார் 40 சாதிகளும் 600 இனங்களும் இருக்கின்றன. அரணைகள் உலகத்தின் பல பாகங்களிலும் உண்டு. ஆயினும் பழைய உலகத்தின் வெப்பநாடுகளில் இவை மிகுதியாக

அரணை

வாழ்கின்றன. இவை சில அங்குல நீளமே வளரும் சிறு பிராணிகள். ஆஸ்திரேலியாவிலுள்ள ஓர் இனந்தான் இரண்டடி நீளம் வளர்கிறது. அரணையின் உடலில் செதில்கள் ஓடு போல ஒன்றின் மேலொன்று சிறிது படியும்படி அடுக்கப்பட்டிருக்கின்றன. அவை சிலவற்றில் மிகப் பளபளப்பாக மழமழவென்று இருக்கும். சிலவற்றில் சொரசொரப்பாகவும் முள் போலவும் இருப்பதுண்டு. செதில்களுக்கு அடியில் தோலிலே சிறு எலும்புத் தகடுகள் உண்டு. சாதாரணமாக ஐந்து விரல்களுள்ள நான்கு கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும். சில இனங்களில் முன்கால்களோ, பின்கால்களோ, இரண்டு ஜதைகளுமோ வளர்ச்சி குன்றிச் சிறுத்திருக்கலாம். கால்கள் முழுவதுமே இல்லாமலும் இருக்கலாம். இந்தப் பிராணிகள் மணற்பாங்கான இடங்களிலும், வளைகளிலும், கல் இடுக்குகளிலும் வாழ்வதற்குத் தகுதியாக அமைந்திருக்கின்றன. பிராணிகள் நீரில் முழுகுவதும் நீந்துவதும் போலச் சில அரணைகள் மணலில் முழுகியும் நீந்தியும் செல்லத்தக்கன. அரணைகளில் கண்ணிமைகளின் அமைப்பும் பலவாறுள்ளது. பாலைவனத்தில் மணற் பிரதேசத்தில் சிலவற்றிற்குக் கண்ணின் கீழ் இமையில் ஒளியூடுருவத்தக்க ஓர் இடம் உண்டு. இன்னும் சிலவற்றில் முழு இமையுமே இவ்வாறு கண்ணாடிபோல இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு இமைகளும் ஒன்றாக ஒட்டிக் கொண்டு, பல்லி அல்லது பாம்புக்கு இருப்பது போலக் கண்ணாடி மாதிரியிருக்கும். இப்படியிருப்பது மணலாற் கண்ணுக்குக் கேடு நேராமற் காக்கவுதவும்.

அரணைகள் பெரும்பாலும் குட்டிபோடும். முட்டைகள் வயிற்றிலேயே தங்கி முதிர்ந்து சிறு குட்டிகள் வெளிவரும். சிலவற்றில் உள்ளே வளரும் குட்டிக்குத் தாயின் உடலிலிருந்து உணவு வரக்கூடிய சம்பந்தமும் ஏற்படுகிறது. முட்டையிடும் அரணையினங்களும் ஒன்றிரண்டு உண்டெனத் தெரிகிறது. நமது வீடுகளிலும் தோட்டங்களிலும் ஓடும் அரணைகள் சாதாரணமாக லைகொசோமா, மபூயா என்னும் சாதிகளைச் சேர்ந்த மிகவும் அழகான பிராணிகள். அரணை கடித்தால் மரணம் என்பது உண்மையன்று. பல்லி முதலியவற்றைப் போல அரணையும் தனக்கு ஆபத்து வரும்போது தன் வாலைத்தானே முரியச் செய்துவிடும். துண்டுவால் துடித்துக் கொண்டிருக்கும். அரணையைப் பிடிக்க வந்த பிராணி அந்த வாலைப் பற்றிக்கொள்ளலாம். அரணை உயிர் தப்பிப்பிழைப்பதற்கு இது ஒரு வழி. வால் திரும்ப வளர்ந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரணை&oldid=1454274" இலிருந்து மீள்விக்கப்பட்டது