கலைக்களஞ்சியம்/அரணிடுதலும் முற்றுகையும்

அரணிடுதலும் முற்றுகையும் (Fortification and Siegecraft) : "அரணிடுதல் என்பது எந்திரவியற் சாதனங்களால் ஓரிடத்தில் உள்ள துருப்புக்கள் தமது போர்த்திறனைப் பெருக்கிக் கொள்ளுதல்" என்று மேனாட்டு இராணுவ நூலொன்று வரையறுக்கிறது. இவ்வாறு செய்வதால் அந்த இடத்தைப் பாதுகாக்கத் தேவையாகும் துருப்புக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதுமட்டுமன்றி எதிரிகளின் முன்னேற்றத்திற்கு அது தடையாகவும் அமைகிறது. ஆகையால் தற்காப்பும், தடையும் அரணிடுதலின் முக்கிய நோக்கங்களாக இருந்து வந்துள்ளன. அரண்கள் இருவகைப்படும். ஒரு நாட்டின் எல்லைகளையும், தலைநகரையும், போருக்கு இன்றியமையாத தொழிற்சாலைகள் முதலியன உள்ள பகுதிகளையும் நிலையான அரணிட்டுப் பாதுகாப்பதுண்டு. போரை மேற்கொண்டு நடத்தத் தேவையான அரண்களையும், மற்றத் தற்காப்புச் சாதனங்களையும் அவ்வப்போது அமைத்துக்கொள்வது தாற்காலிக அரண் எனப்படும். போர்க்களத்தின் அருகில் இத்தகைய அரண்கள் அமைக்கப்படலாம். அல்லது ஆயுதக் கிடங்குகளையும், போக்குவரத்து வழிகளையும், துருப்புக்கள் பின்வாங்கும்போது அவைகள் செல்லும் வழிகளையும் இவ்வாறு பாதுகாக்கலாம்.

அரணிடுதலின் வரலாறு போரின் வரலாறே ஆகும். பழங்காலத்திலிருந்தே மானிடன் தனக்குச் சாதகமாகவும், எதிரிக்குப் பாதகமாகவும் உள்ளவாறு ஓர் இடத்தின் இயற்கை அமைப்பைச் செயற்கை முறைகளால் மாற்றியமைக்கும் உபாயங்களைக் கையாண்டு வந்திருக்கிறான். பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மானிடன் இவ்வாறு அரண்களை அமைத்தனன் என்பது போர்க்கலையின் வரலாற்றிலிருந்து தெளிவாகிறது. பழங்கால மத்திய ஆசிய நாகரிகங்கள் தழைத்திருந்த காலத்தில் ஓரிடத்தில் வாழ்ந்த மக்களிற் பெரும்பான்மையானவர்களைப் பாதுகாக்க அந்நகரங்கள் வலிமைவாய்ந்த மதில்களால் சூழப்பட்டன. இடைக்கால ஐரோப்பாவில் வாழ்ந்த படைமானியப் பிரபுக்கள் (Feudal Lords) தாம் கப்பம் வசூலித்த நகரங்களைப் பாதுகாக்க இவ்வகை அரண்களை அமைத்தார்கள். பிற்காலத்தில் கட்டப்பட்ட தடைக் கோட்டைகள் எதிரியின் படைகள் நாட்டில் நுழைவதைத் தாமதப்படுத்தவும் தடுக்கவும் பயன்பட்டன. தற்காலத்தில் எதிரிகளின் படையெடுப்புக்கு ஆளாகத்தக்க எல்லைகளைக்கொண்ட நாடுகள் இந்த எல்லைகளில் அரணிட்டுத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றன.

பண்டை இந்திய அரண்கள் : பகைவரால் துன்பம் நேரும்போது பாதுகாத்துக் கொள்ள அரணை அமைக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் ஆதியிலிருந்தே இருந்துவந்துள்ளது. தொல்காப்பிய உரையில் இத்தகைய அரணின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது பகைவர் அணுக அரியதாய், வஞ்சனை மிக்க உபாயங்களையும், ஆழமான அகழியையும், அதைச் சுற்றிலுமுள்ள காவற்காடு என்ற அடர்ந்த காட்டையும், தோட்டி முள் போன்ற தடைகளையும், பகைவருக்குத் தொல்லை விளைவிக்கும் பல பொறிகளையும், படைக்கலங்களையும் உணவுப்பொருள்களையும் பிறபொருள்களையும் சேமித்து வைக்கும் கிடங்குகளையும் கொண்டிருக்கும். இதில் அம்புகளை எய்யும் இடமும், எந்திரப் பொறிகளை அமைக்கும் இடமும், காவற் கோபுரங்களும் இருக்கும் என்பது கூறப்பட்டிருக்கிறது. பகைவர் ஏறி நின்று போர்செய்ய ஏற்றவாறு அகலமாகவும், பகைவர் அணுகுவதற்கு அருமையான தாகவும் உள்ளதே அரண் எனப்படுவது என்றும், ஏராளமான நீரும், பெருமலைகளும் நிழல் தரும் அடர்ந்த காடும் உடையதே அரண் என்றும்,அரணுக்குள் இருப்பவர்கள் நெடுநாளைய முற்றுகையும் தாங்குவதற்கு ஏற்றவாறு, அது எல்லா வகையான போர்த் தளவாடங்களையும், உணவுப் பொருள்களையும், குடி தண்ணீரையும் தன்னிடத்தே கொண்டிருக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். வேறு எத்தகைய பெருமை கொண்டிருந்தாலும், அரணிட்டுப் பாதுகாத்துக் கொள்ளாத அரசன் எப்பெருமையும் அடையமாட்டான் என்பதும் அவர் கருத்து.

சுக்கிரநீதி என்ற வடமொழி நூலில் ஒன்பதுவகை அரண்கள் விவரிக்கப்பட்டுள:(1) எதிரியின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் களர்நிலவரண் பள்ளம், முள், கல் ஆகியவற்றால் ஆனது. (2) கோட்டையைச் சுற்றியுள்ள அகழி ஆழமான நீரையும்,முள்ளையும், நச்சுக் செடிகளையும் கொண்டது. (3) கனத்த சுவர்களால் ஆன மதில் உயரமானது. (4) கோட்டைக்கு அப்பாலுள்ள காட்டரண் மனிதர் நுழைய இயலாதவாறு அடர்ந்தது. (5) பகைவர் முன்னேற உதவும் நீரும் நிழலும் இல்லாத பாழிடம் நிலவரண் எனப்படும். (6) கடல், ஏரி,ஆறுபோன்ற நீர்ப்பரப்பினால் ஓரிடத்தைச் சூழ்ந்திருக்கச் செய்வது நீர் அரண். (7) செங்குத்தான மலைகளால் பாதுகாப்புடையது மலையரண். (8) திறமை வாய்ந்த படைவீரரால் பாதுகாப்புடையது படையரண். (9) ஓர் அரசன் தனது சுற்றத்தாரால் பாதுகாக்கப்படுவது துணையரண்.

இருக்கு வேத காலத்திலேயே வடநாட்டில் அரணிடும் வழக்கம் இருந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. மண்ணினால் ஆன மதிலையுடைய ஊரே புரம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌடிலியர் தமது அர்த்தசாஸ்திரத்தில் அரணின் இலக்கணத்தை மிக விரிவாகக் கூறுகிறார். சந்திரகுப்த அரசரது காலத்தில் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் பாடலிபுத்திர நகரத்தின் அரண் 600 அடி அகலமும், 50 அடி ஆழமும் கொண்ட அகழியையும், 572 கோபுரங்களையும், 64 வாயில்களையும் கொண்ட பெரிய மதிற்சுவரையும் உடையது என்று கூறுகிறார்.

இடைக்காலத்தில் எழுதப்பட்ட கட்டடச் சிற்ப நூல்களிலும் கோட்டைகளின் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பத்மகக் கோட்டை என்பது வட்டமாகவோ, சதுரமாகவோ அமைக்கப்பட்டு, எட்டு அல்லது பதினாறு வாயில்களையும், ஒவ்வொரு வாயிலுக்கும் கனமான இரட்டைக் கதவுகளையும், சுற்றிலும் ஆழமான அகழியையும் உடையது. போஜ அரசர் எழுதிய கட்டடச் சிற்ப நூலில் தமிழ் நூல்களில் காணப்படுவதையொத்த நால்வகை அரண்கள் விவரிக்கப்படுகின்றன.

முற்றுகையை நடத்தும் வகையையும் அர்த்த சாஸ்திரம் விளக்குகிறது. பின் வாங்குவதுபோல் பாசாங்கு செய்தும், உள்ளிருக்கும் மக்களைச் சாகசத்தினால் தம் பக்கம் சேர்த்துக்கொண்டும், நீண்ட முற்றுகைக்குப் பின்னரும் எதிர்பாராது தாக்கியும் ஒரு கோட்டையைக் கைப்பற்றலாம். வஞ்சகத்தால் கோட்டைக்குள் புகும் முறைகளையும், கோட்டையிலுள்ளோருக்கு உணவும் நீரும் கிடைக்காமல் தடுத்து, அவர்களை அடிமைப்படுத்தும் வகைகளையும், கோட்டைக்குத் தீ வைத்து அதைக் கைப்பற்றும் முறையையும், யானைகளையும் கனமான எந்திரங்களையும் கொண்டு கோட்டை வாயில்களைத் தகர்க்கும் வழிகளையும் கௌடிலியர் விவரிக்கிறார்.

பழங்கால ஐரோப்பா : ஆப்பிரிக்காவை யொத்த நாடுகளில் வாழும் காட்டுமிராண்டி மக்கள் இக் காலத்திலும் முள்வேலியை அரணாகப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் முதன்முதல் பயன்பட்ட அரண் இதுவே என ஊகிக்கலாம். இதற்கடுத்தபடியாகச் செங்குத்தான மண் சுவர்களை எழுப்பிப் பகைவரது படையெடுப்பைத் தடை செய்யும் பழக்கம் தோன்றியது. முற்றுகையிடும் படைவீரர்கள் சுவரை அணுகும்போது உள்ளிருப்பவர்கள் அதன்மேல் ஏறி நின்று, அவர்கள்மேல் அம்புகளை எய்து, அவர்களைத் துரத்த ஏற்றவாறு இது அமைந்திருந்தது. இச் சுவர்களைக் கல்லையும் மண்ணையும் மரத்தையும் கொண்டு அமைப்பது வழக்கம்.

செங்கற்களைக் கொண்டு பெருஞ் சுவர்களை அமைக்கும் வழக்கம் கி.மு.2000-ல் தோன்றியது. அக்காலத்தில் கட்டப்பட்ட மதில்களுள் அசிரியத் தலைநகரான நினவாவில் அமைக்கப்பட்ட கோட்டை புகழ் வாய்ந்தது. இதன் சுவர்கள் 120 அடி உயரமும், 30 அடி அகலமும், 50 மைல் நீளமும் கொண்டிருந்தன. பிரமாண்டமான இந்த மதிற் சுவரில் 1,500 வாயில்கள் இருந்தன. பாறைகளையும், தீப்பந்தங்களையும் கோட்டைக்குள் எரியும் பொறிகளைக் கண்டுபிடிப்பதற்குமுன் இத்தகைய பெருமதில்களைக் கடப்பது இயலாத செயலாகவே இருந்தது. ஆகையால் நீண்ட ஏணிகளையும், கயிறுகளையும் கொண்டு சுவரின்மேல் ஏறும் பழக்கமே அக்காலத்தில் இருந்தது. சுவரைத்தாண்டி உள்ளே நுழைவதைவிட அதில் குடைந்து நுழைய முயல்வதும், சுவரின் அடிநிலையை இடித்து அதைத் தகர்க்க முயல்வதும் உண்டு. ஓர் உடும்பிற்குக் கயிற்றைக் கட்டி, அதை மதிற்சுவரின்மேல் வீசி எறிந்து, கயிற்றைப் பற்றிக் கொண்டு மதிலேறும் வழக்கம் சிவாஜியின் காலத்திலும் இந்தியாவில் இருந்தது என்பார்கள்.

ரோமானிய சாம்ராச்சியம் தழைத்திருந்த காலத்தில் பலவகையான எறி பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெரும்பாறைகளையும் தீப்பந்தங்களையும் தீக் கோளங்களையும் கோட்டைக்குள் எறிந்து நாசம் விளைவித்தன. இடிக்கும் கட்டை (Battering Ram) என்ற பெரிய கட்டையின் உதவியால் மதிற்சுவரைத் தகர்க்கும் பழக்கமும் இப்போது தோன்றியது. மிக உயரமான மதிற்சுவர்களைக் கடக்க, அவர்கள் மரக் கட்டைகளால் பெரிய கோபுரங்களை அமைத்து, அவற்றை வண்டிகளில் பொருத்தி, மதிற்சுவரின் அருகே கொண்டுவந்து கோட்டைக்குள் நுழைய முயன்றனர். இந்தக் கோபுரங்கள் 150 அடி உயரம்வரை இருந்ததுண்டு. இக்கோபுரங்களையும், ஏணிகளையும் பகைவர்கள் சுவரின் அருகே கொண்டுவரும்போது உள்ளிருப்பவர்கள் பாறைகளை எறிந்தும், எரியும் பிசினையும், கொதிக்கும் எண்ணெயையும், உருகிய ஈயத்தையும் கொட்டியும் தடுக்க முயல்வார்கள். தமது தாய் நாட்டில் பகைவர்கள் படையெடுத்துச் சைரக்யூஸ் நகரை முற்றுகையிட்டபோது ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி பல பொறிகளை அமைத்துப் பகைவர்களுக்கு இடர் விளைவித்தார். பகைவர்களது கோபுரங்களும் ஏணிகளும் மதிலை அணுகும்போது நெம்புகோல்களால் இயங்கிய பெரிய தூக்கிகளால் அவற்றைத் தள்ளியும், கொக்கிகளால் அவற்றைப் பிடித்துக்கொண்டு தகர்த்தும் அவர் நாசம் விளைவித்தார்.

ரோமானிய சாம்ராச்சியத்தின் அழிவிற்குப்பின் அரண் கலையும் முற்றுகைக் கலையும் முன்னேற்றமடையவில்லை. பழங்காலக் கோட்டைகளை முற்றுகையிடும்போது உள்ளிருப்பவர்கள் வெளியேறாது தடுத்து, அவர்கள் உணவின்றித் தவித்து அடிபணியுமாறு செய்யும் முறையே வழக்கத்தில் இருந்தது. ஆனால் இதற்கு நெடுநாளைய முற்றுகை தேவையாக இருந்ததால் இம்முறை அவ்வளவாகப் பயன் தரவில்லை. இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளில் மிக உயரமான கோபுரங்களும், கோபுரத்திலிருந்து பல திசைகளில் அம்பு எய்யும் இடங்களும், படிப்படியான தற்காப்பு அமைப்புக்களும் இருந்தன.

துறைமுகங்களைப் பாதுகாக்கும் அரண்களும் கோட்டைகளின் அமைப்பையே கொண்டிருந்தன. துறைமுக வாயிலில் மதிற்சுவர்களை எழுப்பிப் பாதுகாத்தார்கள். நீருக்குள் தெரியாதபடி மறைந்திருந்த சங்கிலிகள் பகைவரது கப்பல்கள் முன்னேறாதபடி தடுத்தன. ஆனால் நிலத்தில் பயனாக்கியதைப் போன்ற கனமான பொறிகளைப் பயன்படுத்த இயலாததால் கடல் முற்றுகை மிகவும் கடினமான தாக இருந்தது.

வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டு வெகுநாட்கள் வரை அரணிடுதலிலும், முற்றுகையிலும் மாறுதல் எதுவும் நிகழவில்லை. முதன்முதற் பயன்பட்ட பீரங்கிகள் சிறுகுண்டுகளைச் சிறிது தூரம் வரையிலுமே எறிந்தன. ஆனால் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டைச் சுவர்களைத் தகர்க்க வலிவான பீரங்கிகள் தோன்றியபின் பழங்காலக் கோட்டைகளின் அமைப்பை மாற்றியமைக்க நேர்ந்தது. தரைமட்டத்திலிருந்து அதிகமான உயரம். இருந்த நெடுஞ்சுவர்கள் பீரங்கிகளுக்குத் தக்க இலக்குக்களாக அமைந்ததால், அவற்றைத் தரைக்குக் கீழுள்ள குழியொன்றில் அமைக்கத் தொடங்கினார்கள். இதிலிருந்து கொத்தளங்கள் (Bastion) கொண்ட அரண்கள் தோன்றின. கோட்டைச் சுவருக்குப்பின் பல உதைசுவர்களைக் (Buttresses) கட்டி, அதை வலிவாக்கியதோடு சுவருக்குப்பின் ஒரு மணல் மேட்டை அமைத்து அதன்மேல் பீரங்கிகளை வைத்தார்கள். இந்த மேடு ராம்பர்ட் (Rampart) எனப்படும். இதற்கடுத்தபடியாக வெளிப்புறத்தில் இருந்த குழி கோட்டைச் சுவரைப் பாதுகாத்ததோடு, எதிரிகளின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகவும் அமைந்தது. சுவருக்கு எதிர்ப்புறத்தில் இன்னொரு நேர் குத்தான சுவர் எழுப்பப்பட்டது. இது எதிர்ச்சுவர் எனப்படும். குழியினால் விளையும் தடை இதனால் இன்னும் அதிகமாகியது. குழியிலிருந்து வெட்டி யெடுக்கப்பட்ட மண்ணை மறுபுறத்தில் கொட்டிச் சரிவு குறைவான மேடொன்றை அமைத்தார்கள்.

கொத்தளங்கள் கொண்ட அரண்
ரா : ராம்பர்ட்
சு : சுவர்
எ : எதிர்ச் சுவர்
கு : குழி
மூ : மூடிய வழி
ச : சரிவு மேடு

இது சரிவு மேடு (Glacis) எனப்படும். முற்றுகையிடும் படையினர் இதன்மேல் வரும்போது கோட்டைக்குள்ளிருப்போர் அவர்களை நோக்கி எளிதில் சுட ஏற்றவாறு இம்மேடு அமைந்திருந்தது. இச்சரிவு மேட்டிற்குப் பின்னால் சிறுவழி யொன்றைத் தரை மட்டத்தில் அமைத்து முற்றுகையிடப்படும் படைகள் குழியைத் தாண்டிவந்து எதிரிகளைத் தாக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டது. எதிரிகள் இதைத் தாக்காதவாறு மூடப்பட்டிருந்ததால் இது மூடிய வழி (Covered Way) எனப்படும். இம்முறை ஐரோப்பிய நாடுகளில் சுமார் மூன்று நூற்றாண்டுகள் வரை வழக்கத்தில் இருந்தது. காலஞ் செல்லச் செல்ல இதன் அமைப்புப் பெரிதும் சிக்கலானதாயிற்று.

அரணிடும் முறையிலும், முற்றுகைக் கலையிலும் தேர்ச்சியும் அனுபவமும் மிக்க அறிஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுள் வாபன் (Vauban 1633-1707) என்ற பிரெஞ்சுப் பொறியிய லறிஞர் குறிப்பிடத் தக்கவர். இவர் தமது அரசரான XIV-ஆம் லூயிக்குப் பல கோட்டை அரண்களை அமைத்ததோடு 48 முற்றுகைகளை வெற்றிகரமாக நடத்தினார். இவர் அமைத்த கோட்டைகளில் 1700-ல் அமைக்கப்பட்ட லில்லி கோட்டை புகழ்பெற்றது. இது கொத்தளங்கள் கொண்ட வெளிச்சுவர்களையும், குழிக்கு வெளியே உள்ள முக்கோண வடிவமான மதில்களையும், பக்கங்களிலிருந்து வெளியே சுட ஏற்ற நிலவறைகளையும் படிக்கட்டுக்களையும் கொண்டது.

துப்பாக்கிகளும் பீரங்கிகளும் சீர்திருத்த மடைந்த பின், இன்னும் அதிகத் தொலைவுகளுக்கும், அதிக வேகமாகவும் சுட முடிந்தது. ஆகையால் ஓரிடத்தைப் பாதுகாக்க எதிரிகளை இன்னும் தொலைவிலேயே தடுத்து நிறுத்தும் அவசியம் ஏற்பட்டது. இதற்காகப் பிரதம கோட்டையைச் சுற்றிலும் ஆங்காங்குத் தனித் தனியே சிறு கோட்டைகளை அமைத்துப் பகைவர்களை முதலில் எதிர்க்க ஏற்றவாறு அவற்றைச் செய்யும் முறை தோன்றியது. இந்த முறைக்கு வாபன் காரணமானார் எனலாம். சுமார் 10 கோடி ரூபாய் செலவில் பாரிஸ் நகர அரண்களும் கோட்டைகளும் இம் முறையையொட்டி மாற்றி யமைக்கப்பட்டன. இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளும் இம்முறையைக் கையாளத் தொடங்கின.

வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் முதன்முதலில் கிடங்குகளையும், துருப்புக்களின் இருப்பிடங்களையும் அழிக்கக் குண்டுகளை எறிவது வழக்கமாக இருந்தது. ஆனால் பீரங்கிகளின் திறமை அதிகமானபின் கோட்டைகளைத் தகர்க்கவும் அவை பயன்பட்டன. முற்றுகை யிடப்பட்டவர்களின் பீரங்கிகளை முதலில் அழித்துப் பின்னர் மதிற்சுவர்களைத் தகர்ப்பது இன்னும் சிறந்த முறை என்று தெளிவாகியது.

முற்றுகைக் கலையிலும் வாபன் பெரு மாறுதல்களைச் செய்தார். அரணைத் தகர்க்கும் பீரங்கிகளைச் சரிவு மேட்டின்மேல் அமைத்துக் கோட்டைக் குழியில் பல பதுங்கு குழிகளை (Trenches) இணையாக வெட்டிப் படிப்படியாகச் சுவரை அடைந்து தாக்கும் முறையை அவர் கையாண்டு பெருவெற்றி அடைந்தார். இத்தகைய பதுங்கு குழிகளை வெட்டுவது ஆபத்து நிறைந்த வேலையாகையால் நல்ல பயிற்சி பெற்ற வீரர்களே இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 19ஆம் நூற் றாண்டின் இடைப்பகுதிவரை இந்த முறைகளே கையாளப்பட்டன. கிரிமியன் போரில் செவஸ்ட போல் முற்று கையின்போதும் இதே முறைகள் கையாளப்பட்ட போதிலும், முற்றுகையிடப்பட்டவர்களும் இதே முறைகளைக் கையாண்டு, பகைவர்களை வெற்றியுடன் தாக்கலாம் என்ற முக்கியமான படிப்பினை இதில் தெளிவாகியது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பீரங்கிகளின் சுடுந்திறனும், வீச்சும் அதிகமாகியதோடு, வளைவான பாதைகளில் குண்டு வீசும் ஹவிட்ஸர் முதலிய புதுப்படைக் கலங்களும் தோன்றிவிட்டன. இதனால் கோட்டைகளில் பீரங்கிகளைப் பயன்படுத்துவது அவசியமா என்ற வினாவே எழுந்துவிட்டது. ஏனெனில் கோட்டைக்குள் இருக்கும் பீரங்கிகளை எதிரிகள் மிக விரைவில் கண்டறிந்து அவற்றை அழிக்க முடிந்தது. பீரங்கிகளை மறைவாக அமைத்து, ஒருமுறை அவற்றை ஓரிடத்திலிருந்து சுட்டவுடன், வேறிடத்திற்குத் தள்ளிச் சென்று அமைக்கும் முறையும், வலிவான கூண்டுகளுக்குள் அவற்றைப் பாதுகாத்துவைக்கும் முறையும் தோன்றின.

அதே சமயத்தில் தோன்றிய தற்காலத் துப்பாக்கியும் முற்றுகைக் கலையில் சில மாறுதல்களைத் தோற்றுவித்தது. திருத்தமும் வீச்சும் மிக்க இத்துப்பாக்கிகளின் உதவியால் பீரங்கிகளின் தாக்குதலையும் சமாளித்துவிடலாம் என்பதை 1877-ல் நடைபெற்ற பிளேவ்னா (Plevna) முற்றுகையின்போது துருக்கிப் படைகள் தெளிவாக்கின. 1844-ல் ஜெர்மானியர் வெடி பஞ்சைப்பயன்படுத்தி, வியக்கத்தக்க நாசம் விளைவிக்கும் குண்டுகளைத் தயாரித்து, வலிவானசுவர்களையும் எளிதில் தகர்த்தார்கள். இவர்களது வெற்றி நிலையாக. அரணிடுதலில் இனிப் பயனே இராது என்ற கருத்தைத் தோற்றுவித்தது. இந்த மாறுதல்களால் கோட்டை அரண்கள் மேலும் விரிவடைந்தன. பீரங்கிகளுக்குக் கவசத்தினால் பாதுகாப்பு அளிக்கும் முறை பெருகியது. இதனால் கோட்டையே கவசந் தாங்கியதோ என்னும் அளவிற்குக் கவசத் தகடுகள் பயன்பட்டன. இம் முறைக்கு எதிராகப் பீரங்கிகளுக்குக் கவசப் பாதுகாப்பு அளிப்பதைவிடப் படைப் பாதுகாப்பு அளிப்பதே சிறந்தது. என்ற கருத்து இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்தது. இந்த முறைகளால் அரணிடப்பட்ட ரஷ்யத் துறைமுகமான போர்ட் ஆர்தர் 1904-ல் ஜப்பானியரால் முற்றுகையிடப்பட்டபோது ஐந்து மாதங்கள் வரை வலிவான பீரங்கிகளின் தாக்குதல்களையும், ஹவிட்ஸர்களின் நாசத்தையும் எதிர்த்து நின்றது. சுரங்க வெடிகள் அரண் அமைப்பைத் தூள்தூளாகத் தகர்க்கும் வரை ஜப்பானியர் முன்னேற முடியவில்லை. ஆகையால் தற்காலப் படைக்கலங்கள் தோன்றிய பின்னரும் அரண்கள் பயனற்றுப் போகவில்லை என்ற நம்பிக்கை வளர்ந்தது.

முதல் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் அரணிடுதலைப் பற்றி வழங்கிய கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறலாம். முக்கியமான பகுதிகளை அரணீட்டுப் பாதுகாக்க வேண்டும். சங்கிலிபோல் பிணைந்திருக்கும் இந்த அரண்கள், பகைவரது குண்டுகள் அந்த இடத்தை அடையாதவாறு, அதிலிருந்து பல மைல் தொலைவில் அமைந்திருக்கவேண்டும். பதுங்கு குழிகளோடு கூடிய காலாட்படை அணிவகுப்பு இக்கோட்டைகளை இணைக்க வேண்டும். கம்பிகளும், மற்றத் தடைகளும் அமைத்துப் பகைவரின் முன்னேற்றத்தைத் தடைசெய்ய வேண்டும். குண்டுகளால் சேதமடையாத பதுங்கிடங்கள் (Shelters) கட்டப்படவேண்டும். முக்கியமான சில பீரங்கிகள் கோட்டைக்குள்ளும் மற்றவை வெளியில் தக்க பாதுகாப்புடனும் மறைவாகவும் அமைக்கப் படவேண்டும். கோட்டைகளுக்கிடையே தக்க பாதைகளும், ரெயில் போக்குவரத்து வசதிகளும், தந்தி, தபால் வசதிகளும் இருக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் அதிகமான துருப்புக்களைப் பயன்படுத்தாமல் பகைவரது முன்னேற்றத்தைத் தடைசெய்ய முடியும் என்று நம்பினார்கள்.

பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையில் இத்தகைய வலிவான அரண்கள் இருந்தமையால் ஜெர்மனி போரைத் தொடங்கியபோது பிரான்சை நேரடியாகத் தாக்காது பெல்ஜியத்தை ஆக்கிரமித்து, அந்நாட்டின் வழியே பிரான்சின்மேல் படையெடுக்க நேர்ந்தது. ஆனால் பெல்ஜியத்தில் இருந்த கோட்டைகள் ஜெர்மானியரது தாக்குதலினால் விரைவில் வீழ்ந்தது வியப்பையும் அச்சத்தையும் ஊட்டியது. ஆனால் அவற்றின் அமைப்பில் இருந்த குறைகளினாலேயே இவை இவ்வாறு அடிபணிய நேர்ந்ததே தவிரத் தற்காலப் போரிலும் கோட்டைகளும் அரண்களும் பயன்பட வழியுண்டு என்பது, பின்னர் வெர்டன் போரின்போது தெளிவாகியது. குறிப்பிட்டதோர் இடத்திற்கு அரணிட்டுப் பாதுகாப்பதைவிட முக்கியமான பிரதேசங்களை அரண்களால் பாதுகாக்கும் முறை எளியதும், நல்ல பயன் தருவதும் ஆகும் என்று முதல் உலகப்போர் காட்டியது. நச்சு வாயுவைப் பயன்படுத்தியும், அயக் கான்கிரீட்டினால் ஆன கட்டடங்களில் பதுங்கி இருந்தும், டாங்கிகளின் முன்னேற்றத்தையும், விமானத் தாக்குதல்களையும் சமாளிக்கலாம் என்பது தெரியவந்தது. போக்கு வரத்து வசதிகளைப் பாழாக்கியும், தாமதமாக வெடிக்கும் சுரங்க வெடிகளை ஏராளமாகப் பயன்படுத்தியும் எதிரிகளின் முன்னேற்றத்திற்குப் பெருந் தாமதம் விளைவிக்கலாம் என்பதும் அறியப்பட்டது.

இப் படிப்பினைகளிலிருந்து தற்கால எல்லைப் பாதுகாப்பு அரண்கள் தோன்றின. இவற்றுள் புகழ் வாய்ந்தது பிரெஞ்சு ஜெர்மானிய எல்லையில் பிரான்சினால் அமைக்கப்பட்ட மாஜினோ அரண் (Maginot line). பிரெஞ்சுத் தளபதி மார்ஷல் பெட்டெயின் (Marshal Petain) குறிப்பிட்டதுபோல் இவை "குறைவான ஆபத்தும் அதிகமான சௌகரியங்களும்" உள்ளவாறு கட்டப்பட்டன. இந்த அரணின் நீளம் சுமார் 250 மைல். இதில் பூமிக்கடியே அமைக்கப்பட்ட பல கோட்டைகள் நூற்றுக்கணக்கான மைல் நீளமுள்ள குடைவுகளால் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு கோட்டையும் பல அடுக்குக்களாக அமைக்கப்பட்டது. அவற்றில் வெடிமருந்துக் கிடங்கும், உணவுக் களஞ்சியமும், படுக்கை யறைகளும், ஆஸ்பத்திரியும், போர்த் தளவாட சேமங்களும், காரியாலயங்களும், டெலிபோன் வசதி.களும், காற்றைப் பதப்படுத்தும் சாதனங்களும் இருந்தன கனமான குண்டுகளும், விமான வெடிகுண்டுகளும் இவற்றைப் பாதிக்காதவாறு இவை பூமியின் அடியே ஆழத்தில் கட்டப்பட்டிருந்தன. இந்த அரணை அமைக்க ஒரு மைலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவாயிற்று என மதிப்பிட்டார்கள். கடற்கரைவரை இதை அமைக்காதது இதன் பெருங்குறையாகும். இதனால் 1940-ல் ஜெர்மானியர் இந்த அரணைச் சுற்றிவந்து நாட்டிற்குள் புகுந்துவிட்டனர். 1944-ல் பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகள் நாட்டில் படையெடுத்த போதும் ஜெர்மானியர் இந்த அரணைத் தற்காப்புக்காகப் பயன்படுத்தவில்லை. ஆகையால் இது இரண்டாம் உலகப் போரில் பயன்படவே இல்லை.

பிரெஞ்சு எல்லையில் ஜெர்மானியர் சீக்பிரீடு அரணை (Siegftied Line) அமைத்திருந்தனர். இதில் மாஜீனோ அரணைப்போல் பெரிய கோட்டைகள் இல்லை. ஆனால் இது இரு வரிசைகளில் அமைக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியின்மேல் நேசநாடுகள் படையெடுத்துச் சென்ற போது ஜெர்மானியருக்கு இது பெரிதும் பயன்பட்டது.

நிலையான அரண்களுக்கும், அவ்வப்போது போர்க்களத்தில் அமைக்கப்படும் தாற்காலிக அரண்களுக்கும் ஒரு நூற்றாண்டிற்குமுன் இருந்த வேறுபாடு இப்போது இல்லை. ஓர் இடத்தைப் பாதுகாக்கப் பெரிய கட்டடங்கள் தேவையில்லை. மிக விரைவில் குறைவான பொருள்களைக்கொண்டு வலிவான அரண்களை அமைக்க முடிகிறது. பகைவனைத் தடை செய்வதே முதல் நோக்கமாக இருந்ததுபோய்த் தற்காலத்தில் மறைவும் பாதுகாப்புமே முக்கியமாய் விட்டன. ஓரிடத்தின் இயற்கை அமைப்பிற்கேற்றவாறு அரணிடும் முறையை மாற்றிக்கொள்வதன் தேவை தற்காலத்தில் நன்கு அறியப்பட்டுள்ளது. பதுங்கு குழிகள் முதலியன மலை அல்லது ஆற்றின் போக்கிற்கேற்றவாறு அமைக்கப்படுகின்றன. குழிகள், கம்பித்தடைகள் முதலியவை இக்காலத்திலும் ஓரளவு பயன்படுகின்றன. தற்காலத்தில் போர்க்களத்தில் அரணிடுதலின் இன்னொரு நோக்கம் பகைவர்க்குப் பதுங்கிடங்கள் இல்லாமற் செய்வது. இதனால் பகைவர்கள் வரும் வழியைக் கட்டாந்தரையாக ஆக்கிச் செல்வது தற்கால அரணிடுதலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. விமானங்களிலிருந்து குண்டுவீசும் முறையும், தாழ்வாகப் பறந்துவந்து எந்திரத் துப்பாக்கியால் சுடும் முறையும் அரணிடுதலைப் பற்றிய பழங்காலக் கருத்துக்களை அறவே மாற்றிவிட்டன.

முதல் உலகப் போருக்குப்பின் டாங்கிகளின் அமைப்பிலும், விமானத் தாக்குதல் முறையிலும் நிகழ்ந்த பெரு முன்னேற்றங்களால் தாக்குதல் என்பது தற்காலத்தில் தற்காப்பைவிட எளிதாய்விட்டது. இதனால் அரணிடப்பட்ட போர்க்களப் பகுதிகளிலிருந்து பீரங்கிகளையும் எந்திரப் துப்பாக்கிகளையும் சுடும் இடங்களையும் மின்னற்போர் (Blitz) முறையினால் எளிதில் கைப்பற்ற முடிகிறது. மண் சுவர்களாலும் மேடுகளாலும் தற்காப்பைப் பெற முடியாது என்பது 1939-ல் போரின் தொடக்கத்திலேயே தெளிவாயிற்று. கவசப் பாதுகாப்பும், பதுங்கியிருத்தலுமே நல்ல தற்காப்புச் சாதனங்கள். தற்காலப் போர் முறையையே டாங்கிகள் மாற்றி யமைத்துவிட்டன. விமானங்களும் போர். முறையில் வேறொரு புரட்சியை விளைவித்துவிட்டன. விமானத் தாக்குதலினால் ஓரிடத்திய தற்காப்பு அமைப்பைப் பாழாக்கி, மின்னல் வேகத்தில் மோட்டார்களில் துருப்புக்களை முன்னேற்றி, அதைக் கைப்பற்றும் முறையை ஜெர்மானியர் மிக வெற்றிகரமாகக் கையாண்டார்கள். இப்போர்முறையில் வரிசையாக உள்ள அரண்களினால் பயன் அதிகம் ஏற்படுவதில்லை.

இப்போரில் வேறொரு தற்காப்பு முறையும் ரஷ்யர்களால் கையாளப்பட்டது. இது சிலந்தி வலை முறை (Web method) எனப்படும். இம் முறையில் வரிசையாக அமைந்த நீண்ட அரண்களை அமைக்காது முக்கியமான சில இடங்களில் தற்காப்பு அமைப்பைப் பெருக்கி, அதைச் சுற்றிலும் பகைவர்கள் வந்து சூழ்ந்த பின்னரும் நெடுநாள்வரை அந்த இடத்திலிருந்து போரிடுகிறார்கள். இதனால் ஜெர்மானியரது மின்னல் தாக்குதல்கள் அனைத்தும் அவ்வளவாகப் பயன் தராமற் செய்யமுடிந்தது. இம்முறையில் இலட்சக்கணக்கான சுரங்க வெடிகள் அந்த இடத்தைச் சுற்றிலும் புதைக்கப்படுகின்றன. வரிசையாக அமைந்த அரண்களை டாங்கிகள் தகர்த்துச் செல்வதைப்போல் இம்முறையில் முன்னேற முடிவதில்லை. வருங்காலத்திலும் இத்தகைய முறைகள் பயன் தரலாம்.

விமானப் போக்குவரத்து முன்னேறிவிட்ட இக் காலத்தில் வேறொரு வகையிலும் வலிவான அரண்களையும் பயனற்றவைகளாகச் செய்யலாம். எதிரி அணிகளுக்குப் பின்புறத்தில் விமானங்களிலிருந்து துருப்புக் களையும், தளவாடங்களையும் இறக்கி அவர்களைப் பின்னிருந்து தாக்கும் முறை சென்ற போரில் பயனாகியது. நிலையான தற்காப்புச் சாதனங்களுக்காக 1939க்கு முன் பிரான்சு முதலிய நாடுகள் செலவழித்ததுபோல் ஏராளமாகப் பொருட் செலவு செய்ய, வருங்காலத்தில் எந்த நாடும் முன்வராது என எதிர்பார்க்கலாம். அணு குண்டின் தோற்றத்தினால் அரணிடல் மேலும் பயனற்றதாய் விட்டது. ஆனால் இதற்கு எதிராகப் பூமியின் ஆழத்தில் அமைக்கப்படும் பதுங்கிடங்கள். வருங்காலத்தில் பெருகலாம் என்று எதிர்பார்க்கலாம். எந்திரங்களின் வளர்ச்சியினால் போர்க்களத்தில் போரிடும் படைகளும் கொரில்லா (Guerilla) முறைகளைக் கையாளும் நாள் வந்துவிட்டது. இவ்வகைப் போருக்கு அரணிடுதல் அவசியமில்லை. நூல்கள்: V. R. R. Dikshitar, War in Ancient India; Col. Portway. Military Science Today; Gen. Hamley, Operation of War. கா. வா. ரா.