கலைக்களஞ்சியம்/அராபிய தத்துவ சாஸ்திரம்

அராபிய தத்துவ சாஸ்திரம் : அராபிய தத்துவ சாஸ்திரம் என்பதை முஸ்லிம் தத்துவ சாஸ்திரம் என்றழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இது கிரேக்கத் தத்துவ சாஸ்திரத் தொடர்பினால் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதில் நான்கு விதக் கொள்கைகள் காணப்படுகின்றன.

1. முத்தாஜல் (அறிவுக் கொள்கை - Rationalism) : முகம்மதுநபி மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதை ஹெஜிரா என்பர். அது 622-ல் நிகழ்ந்தது. அதிலிருந்தே முஸ்லிம் ஆண்டு தொடங்குகின்றது. அது தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகும் அளவிலே இந்தக் கொள்கை ஏற்பட்டது. இதன் ஆதாரத் தத்துவங்கள் கடவுள் ஒருவரே என்பதும், அவர் நீதியுள்ளவர் என்பதுமாம். அவர் நிர்க்குணர். அவர் உளராந்தன்மையே அவருடைய குணங்கள் அனைத்தும் ஆகும். அவர் எல்லாமறிந்தவர் ; எல்லா ஆற்றலும் பொருந்தியவர். இவ்விரண்டும் அவருடைய உளராந் தன்மையிலேயே அடங்கினவேயன்றி வேறான குணங்கள் அல்ல. அவர் நீதி யுள்ளவர். ஆதலால் கொடுமை என்பதே அவரிடம் இல்லை. கடவுள் மனிதனுக்குச் செயல் புரியும் சுதந்திரத்தை அளித்துளார். அதனால் மனிதன் தன்னுடைய செயல்களுக்குத் தானே பொறுப்பாளி, புண்ணியம் செய்தால் இன்பமும், பாவம் செய்தால் தண்டனையும் பெறுவான்.

இந்தக் கொள்கையை ஏற்படுத்தியவர் வாசில் பின் அட்டா (இ.748). இதைப் பின்னர்த் தெளிவாகவிளக்கியவர் அபுல் ஹுதாயில் அல்லாப் (இ.840). இந்த அறிவுக் கொள்கையினர் கடவுளுடைய ஒருமையையும் நீதியையும் ஏற்றுக் கொள்வதால் 'அஹல் அத்தாஹித்வால் அதல்', அதாவது கடவுள் ஒருமையையும் நீதியையும் நம்புவோர் என்று தங்களுக்குப் பெயர் வைத்துக்கொண்டார்கள். இன்னும் இவர்களுடைய மற்ற முக்கியக் கொள்கைகள் குர்ஆன் நித்தியமானது என்பதை மறுப்பதும், கடவுட் காட்சி கிடைக்க முடியாதது என்பதும் ஆகும். ஞானம் கடவுளுடைய குணம்; அது குர் ஆனில் வெளிப்படுகிறது. அதனால் குர்ஆன் மனிதனால் செய்யப்படாமல் கடவுளுடன் நித்தியமாக உள்ளது என்பது வைதிகர்களுடைய கொள்கை. அதை மறுத்து, முத்தாஜல் கொள்கையினர், ஞானம் கடவுளைப் போலவே நித்தியம் என்றால் அப்பொழுது இரண்டு நித்திய தத்துவங்கள் அதாவது இரண்டு கடவுள்கள் ஏற்படுமே என்று வாதிக்கின்றனர்.

சிலரேனும் கடவுளைப் பரலோகத்தில் பார்ப்பர் என்று வைதிகர்கள் கூறுவதை மறுத்து, முத்தாஜல் கொள்கையினர் கடவுளுக்கு உருவம் இல்லாதிருக்கும் பொழுது எப்படி ஓர் இடத்தில் இருக்கவும் காட்சி அளிக்கவும் முடியும் என்று கேட்கிறார்கள்.

முத்தாஜல் கொள்கையினர் முதலில் இஸ்லாம் மதத்தை அறிவுபூர்வமாக்க மட்டுமே முயன்றனர். ஆனால் நாளடைவில் அவர்களுடைய அறிவு வாதம், குர்ஆன் ஒருவரால் ஆக்கப்படாதது என்பது போன்ற வைதிகக் கொள்கைகளை எல்லாம் மறுக்கும்படி செய்து விட்டது. அத்துடன் அவர்கள் முதலில் தாங்களாகவே ஆராய்ந்து வந்தார்கள்; பின்னர், கிரேக்கத் தத்துவ நூல்களின் மொழிபெயர்ப்புக்களை ஆவலுடன் படிக்கத் தொடங்கினர். அப்போது மதப்பற்று நீங்கித் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடலாயினர். முத்தாஜல் கொள்கையினருள் முக்கியமானவர்கள் நஜ்ஜாம் (இ.845), ஜுப்பா இ ஜாஹிஜ் (இ.868) என்போர்.

2. அஷாரிக் கொள்கை (முஸ்லிம் மதப்பற்றுக் கொள்கை): இது முத்தாஜல் கொள்கையை எதிர்ப்பதற்காக ஏற்பட்டது. இதனை ஏற்படுத்தியவர் அபுல் ஹாஸன் அல் அஷாரி. அவர் 40 வயது வரை முத்தாஜல் கொள்கையினராகவே யிருந்தார். ஆனால் நபி நாயகம் அவர்கள் அவருடைய கனவில் வந்து, குர்ஆனையும் நபி உபதேசங்களாகிய ஹதீதையும் பின்பற்றும்படி கூறியதாகவும், பிறகு அவர் முத்தாஜல் கொள்கையை எதிர்க்கத் தலைப்பட்டதாகவும் கூறுவர். அவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதினதாகச் சொல்வதுண்டு. கடவுள் அருளாலன்றி எதையும் அறியமுடியாது என்பதும், எந்த மதத்தையும் வெறும் அறிவை மட்டும் துணையாகக் கொண்டு அமைக்க முடியாது என்பதும், கடவுளுக்குக் குணமுண்டு என்பதும், ஆனால் அவற்றை நம்முடைய குணங்களைப்போல் கொண்டு பொருள் கொள்ளலாகாது என்பதும், குர்ஆன் கடவுளுடைய நித்திய மொழி என்பதும் அவருடைய கொள்கைகள். மனிதன் எதையும் படைக்க முடியாது. கடவுள் ஒருவரே படைப்பவர்; கடவுள் மனிதனுக்குத் தான் விரும்பியவண்ணம் நடக்கும் சுதந்திரத்தையும் ஆற்றலையும் அருளுகிறார்; அவர் அந்த இரண்டையும் முதலில் தம்மிடத்திலேயே அமைத்துக் கொண்டபடியால் மனிதனிடம் காணப்படும் அந்த இரண்டும் கடவுளிடமிருந்து பெற்றவையே என்பனவும் அவர் கூறியவையாம்.

முத்தாஜல் கொள்கையினர் கடவுள் நீதிமான் ஆதலால் கேடு செய்ய முடியாது என்றும், கடவுள் மனிதனுக்குச் செயற் சுதந்திரம் அளித்திருப்பதால் மனிதனே தான் நன்மை தீமை செய்பவன் என்றும் கூறினர்.அதை மறுத்து, அஷாரிக் கொள்கையினர் கடவுளுடைய ஆற்றலுக்கு எல்லை கிடையாதாகையால் அவர் தம்முடைய படைப்புக்களுக்கு நன்மையோ தீமையோ எதையும் தம்முடைய விருப்பம்போல் செய்யமுடியும் என்று கூறினர்.

பரலோகத்தில் கடவுளை ஊனக் கண்ணால் பார்ப்பதானால் இடமும் திசையும் கூறவேண்டியது உண்மைதான். ஆனால் கடவுளை ஊனக் கண்ணில்லாமலே காண முடியுமல்லவா என்றும் அவர்கள் கூறினர்.

3. சூபிக்கொள்கை (அனுபூதி மார்க்கம்): இக்கொள்கை அழியா முத்தி பெறுவதற்காக மனத்தைத் தூய்மை செய்து கொள்ளவும், அறநெறியில் நிற்கவும், அகவாழ்வு புறவாழ்வு இரண்டையும் ஒழுங்கு செய்யவும் கற்பிக்கிறது. நித்திய முத்தியே அதன் குறிக்கோள்; ஆன்மாவைத் தூய்மை செய்வதே அதற்காக அது கூறும் நெறி. குர்ஆனில் கடவுள் கூறிய கட்டளைகளும், நபிநாயகம் அவர்கள் கூறியுள்ள கடமைகளும் அறிவுள்ள மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டியவை என்று இந்த மார்க்கம் போதிக்கின்றது. முஸ்லிம்களுடைய உள்ளும் புறம்புமான வாழ்க்கையைத் திருத்திப் புனிதமாக்கும் இஸ்லாமிய மதக் கட்டுப்பாட்டு முறையே சூபிக் கொள்கை என்பது.

ஆயினும் சூபிக் கொள்கையின் பொருள் முழுவதும் இவ்வளவேயன்று. அதற்கு மறைபொருளும் (Esoteric) உண்டு. அந்தப் பொருளில் கடவுளுக்கும் தனக்குமுள்ள உண்மையான உறவை அறிபவனே சூபி ஆவான். அதாவது மனிதன் என்பவன் கடவுளுடைய மனத்திலுள்ள கருத்தேயன்றி வேறல்லன். அவ்விதம் கருத்தாயிருப்பதால் அவன் கடவுளைப் போலவே நித்தியமானவன். கடவுள் தன்னையே மனிதனாகப் படைத்திருப்பதால் மனிதனுக்குக் கடவுளினின்றும் வேறாக உளனாந்தன்மையும் அதற்கேற்பவுள்ள வாழ்வு, அறிவு, ஆற்றல் போன்ற குணங்களும் இல்லை. அவன் இருப்பதும் கடவுளாலேயே, பார்ப்பதும் கடவுளாலேயே, கேட்பதும் கடவுளாலேயே. நபிகள், "நீரே புறம், உமக்கு மேலாக ஒன்றுமில்லை ; நீரே அகம், உமக்குக் கீழாக ஒன்றுமில்லை; நீரே முதல், உமக்கு முன்னர் ஒன்றுமிருக்கவில்லை ; நீரே கடை, உமக்குப் பின்னர் ஒன்றுமிருக்காது" என்று கூறிய உரையையும் தங்களுக்கு ஆதாரமாகக் கொள்ளுகின்றனர்.

இத்தகைய மறைபொருட் சூபிக் கொள்கையை முதன்முதல் விளக்கியவர் எகிப்து நாட்டினரான துன்- நூன் என்பவர் என்று, சூபிக் கொள்கையைப் பற்றி எழுதியுள்ள பாரசீக ஆசிரியர்களுள் ஒருவரான ஜாமி கூறுகிறார். ஆனால் இஸ்லாமிய மறைபொருள் மதத்தை

ஒழுங்குமுறை செய்து வகுத்தவர் பெரிய அனுபூதியினரான ஷாக் முகைதீன் இப்னுல் அராபி என்பவராவர். அவரே இருத்தல் கொள்கை (Existentialism) நிறுவியவர். இமாம் கஜாலி என்பவர் சூபிக் கொள்கைக்கு விஞ்ஞான உருவம் கொடுத்தார். அவருடைய பெருமுயற்சியால் சூபிமத வைதிகக் கொள்கையானது சுன்னிமதக் கோட்பாட்டுடன் கலந்து இன்றுவரை நிலைத்து வருகிறது. பார்க்க : சூபிக் கொள்கை.

4. தத்துவ சாஸ்திரம்: இஸ்லாம் மதம் ஏற்படு முன்னர் பாரசீகத்திலுள்ள ஜுன்டிஷபூர், மெசப்பொட்டாமியாவிலுள்ள ஹரான், எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா என்னும் இந்நகரங்கள் கிரேக்க நாகரிகத்துக்குப் பேர்போனவையாக இருந்தன. இவற்றிலிருந்துதான் அது கீழ்நாடுகளுக்குப் பரவிற்று. உமயத் அரசாட்சிக் காலத்தில் அராபிய ஏகாதிபத்திய வாதிகள் அராபியரல்லாதவருடன் பழகுவது தங்கள் பெருமைக்கு இழுக்காகும் என்று கருதினர். அப்பாஸ் கட்சியினர் (Abbasides) ஆட்சிக்கு வந்தபொழுது ஆள்வோரும் ஆளப்படுவோரும் தங்குதடையின்றிக் கலந்து வாழ்ந்தனர். ஆல்-மாமூன் என்பவர் கிரேக்க நாகரிகக் கல்வியை முஸ்லிம் அறிஞரிடையே பரவும்படி செய்தார். அராபியர்கள் அந்த நாகரிகத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். அவர்கள் அதைத் தங்கள் அராபி உலகத்தில் உலவி வந்த மதக் கருத்துக்களுக்கும் தத்துவ சாஸ்திரக் கருத்துக்களுக்கும் ஏற்ப ஒரு புதிய தத்துவ சாஸ்திர முறையாக மாற்றி அமைத்துக்கொண்டார்கள். முதன்முதல் புகழ்பெற்ற தத்துவ சாஸ்திரியாக இருந்தவர் ஆல்-கிண்டி (இ.873). அவர் கிரேக்கத் தத்துவ சாஸ்திர நூல்கள் பலவற்றை அரபு மொழியில் பெயர்க்கவும், முன்பேயுள்ள மொழி பெயர்ப்புக்களைத் திருத்தவும் செய்தார்.

இஸ்லாமிய தத்துவ சாஸ்திரிகளில் தலையாயவரும் புதிய பிளேட்டானிக் கொள்கையினருமான பாராபி (இ.950) என்பவரே பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியவர்களுடைய கொள்கைகளின் சிறந்த உரையாளராகக் கருதப்படுகிறார். அவர் அரிஸ்டாட்டிலுடைய கருத்துக்களின் மறைபொருள்களை மிகத் தெளிவாக விளக்கியபடியால், முஸ்லிம்கள் அரிஸ்டாட்டிலை முதல் ஆசிரியர் (குரு) எனவும், பாராபியை இரண்டாவது ஆசிரியர் எனவும் கூறுவர். அவருக்கு அரிஸ்டாட்டிலிடம் பக்தியிருந்ததுபோலவே புதிய பிளேட்டானிக்கொள்கையிடமும் மோகம் இருந்தது. அவர் உலகு கடவுளிடமிருந்தே கீழ்நோக்கும் வரிசைக் கிரமமாகத் தோன்றியது என்பதில் நம்பிக்கை உடையவராக இருந்தார்.

இபின் சீனா (இ.1036) அறிவுக் களஞ்சியமாகவும், திறமையான மருத்துவராகவும், பெரிய தத்துவ சாஸ்திரியாகவுமிருந்தார். அவரும் அரிஸ்டாட்டிலின் கொள்கையையே உடையவர். அவர் கொள்கையில் புதிய பிளேட்டானிக் கொள்கையின் அடையாளம் ஒரு சிறிதே காணப்படும். அவர் பல நூல்கள் எழுதியிருந்த போதிலும் அவருடைய ஷீபா என்னும் நூலே மிக முக்கியமானது. அதைப் பௌதிகம், தத்துவம், கணிதம் மூன்றின் களஞ்சியம் என்று கூறலாம்.

இப்னி ருஷத் (அவரோஸ்) (இ. 1198) சிறந்த முஸ்லிம் தத்துவ சாஸ்திரிகளில் ஒருவர், "அரிஸ்டாட்டிலின் நூல்களுக்கு ஆழ்ந்த உரைகள் எழுதியவர்களில் ஒருவர்" என்று மங்க் என்பவர் இவரைப் பற்றிக் கூறுகிறார். அவர் அத்துடன் சிறந்த இஸ்லாமியச் சட்ட விளக்க உரை ஆசிரியராகவுமிருந்தார்.அவருடைய நூல்கள் நீண்ட நாள்வரை ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் பயின்று வரப்பட்டன.அவருடைய தத்துவ சாஸ்திரத்துக்கு ஐரோப்பிய மொழிகளில் உரைகள் எழுதப்பட்டன.

இபின்-இ-பாஜா (இ.1138), இபின் மிஸ்கவயா (இ.1030), ஷேக் ஷெஹாபுதீன் (இ.1190) ஆகியவர்களும் புகழ் வாய்ந்த தத்துவ சாஸ்திரிகள்.

ஆகவே முஸ்லிம் தத்துவ சாஸ்திரிகள் கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தை ஆராய்ந்து, அதிலுள்ள முரண்பாடுகளை நீக்க முயன்றனர் என்று கூறலாம். மீ. வ.