கலைக்களஞ்சியம்/அரிக்கமேடு
அரிக்கமேடு என்பது புதுச்சேரிக்குத் தெற்கில் இரண்டு மைல் தொலைவில் வராக நதி யென்னும் செஞ்சியாற்றின் பழங்கிளையான அரியாங்குப்பத்தாறு என்ற காயல் பெருக்கத்தால் அறுத்தோடியும் அணையப்பட்டும் உள்ள ஒரு மேடு. ஆற்றையடுத்திருப்பது பற்றி அருகு மேடு எனப் பெயர் வந்தது போலும். அடுத்துள்ள பரதவர்குப்பமான வீராம்பட்டினம் பண்டை வணிகர் நியமங்களான வீரபட்டினங்களில் ஒன்றாம். புகார் நகருள் அடங்கிய மருவூர்ப்பாக்கம் போல் இங்கும் ஆற்றின் அக்கரை மருங்கைப்பாக்கம் என்ற பழம் பெயர் திரிந்து முருங்கைப்பாக்கமா யிருக்கிறது. அரியாங்குப்பத்தில் இன்றும் ஒரு புத்தர் சிலை காணக்கிடக்கிறது. அண்மையில் முறைப்படி அகழ்ந்தாராயப்பட்ட இம்மேடு கிறிஸ்து அப்தத் தொடக்கத்தில் இக்கயவாய் மருங்கில் திகழ்ந்த சோழமண்டலத் துறைமுகப்பட்டினங்களில் ஒன்றின் சிதைவைத் திறந்து காட்டியது. சங்க காலத்தே தமிழகம் ரோமானிய சாம்ராச்சியத்துடன் நிகழ்த்திய கடல் வாணிபத்தால் கொழித்த பட்டினங்களில் ஒன்றான இப்பழம்பதியை எஞ்சிய சங்க நூல்கள் குறிக்காது போயினும், முதல் நூற்றாண்டு யவன நூலான பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) இதைப் பொதுகை (Poduke) எனக் குறிக்கும். 1945-46 ஆம் ஆண்டுகளில் இங்கு அகழ்ந்து கண்ட இடம் இப்பழம்பதியின் யவனச்சேரியாம். கி.பி. 50 முதல் 200 ஆம் ஆண்டுவரை எனக் காலம் இடக்கூடியதும், சுடுமண்ணால் (செங்கல்) கட்டப்பெற்றதுமான பண்டகச் சாலைகளும், சாயச் சாலைகளின் சிதைவுகளும், மற்றும் கண்ணாடி, பளிங்கு, சூதுபவழம் (Carnelian) முதலியவைகளில் கடைந்த மணிகளும், உருவப் படங்கள் செதுக்கிய பதக்கங்களும், பொன்னின் மணிகளும், முற்றுப்பெற்றதும் பெறாததுமான நிலையில் காணப்பட்டமைபற்றி யவனத்து மணி வினைஞர்களும் பொற்கொல்லர்களும் இங்குத் தொழில் நடத்தியது விளங்கும். இந்தியரிடமிருந்து ரோமானியர் பெரிதும் விரும்பி வாங்கிய மெல்லிய மஸ்லின்கள் இங்கேயே சாயமேற்றப்பட்டன போலும். மற்றும் கண்ட பல தடையங்களில் மேனாட்டு மட்கலங்கள் பல இங்குக் கொணர்ந்து புழங்கப்பட்டமையும், அவைபோன்று இங்கேயே வனையப்பட்டமையும் தெளிவாகின்றன. இத்தாலி நாட்டின் பெயர் பெற்ற அரிஸ்ஸோ (Arezzo) நகரத்துக் குயவர்கள் இயற்றித் தம் முத்திரைகள் பதித்து விற்ற உயர்ந்தவகை அரிட்டைன் (Arretine) மட்கலங்களின் சிதைவுகளே இவ்விடத்தின் காலத்தை நுணுகியளவிடுவதற் குதவிய சிறந்த திறவுகோலாயின. புறநானூறும் (செய். 56, வரிகள் 18-20) மற்றும் பல சங்க நூல்களும் கூறுவதுபோல் அக்காலத்தே யவனர் தமிழரிடம் கொண்ட பொருள்களுக்கு விலையாகப் பொன்னுடன் உயர்ந்த மதுபான வகைகள் கொணர்ந்து இறக்கி வழங்கியதற்கு இங்குக் கண்ட இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் (Amphorae) சிதைவுகளும், கண்ணாடிக் கோப்பைகளுமே சான்றாகும். இவற்றுடன் கலந்து காணப்பட்ட இந்திய நாட்டுக் கல வகைகள், சங்கறுத்த வளைகள், அணிகள் முதலிய புதைபொருள்களின் கால அறுதி அவற்றுடன் கூடிக்கிடைத்ததும் காலத்தை நுணுக்கமாக அள்விடக் கூடியதுமான இம்மேனாட்டுப் பொருள்களையே ஓர் அளவுகோலாகக் கொண்டு அறிய முடிகிறது. இங்குக் கண்ட இந்திய நாட்டுத் தொல்பொருள்களுக்கு (Antiquities) இவ்வாறு கால அட்டவணையொன்றைத் திட்டமாக வரையறுக்க இயன்றதால் இனி நிகழும் தென்னாட்டு அகழ் வாராய்ச்சிகளில் காண இருக்கும் இதுபோன்ற பொருள்களுக்கு இவற்றை ஒப்பக் காலங்களை அறுதியிட இயலும். இதுவே அரிக்கமேட்டில் நிகழ்ந்த சிறு அகழ்வாராச்சியின் சிறப்பாம். மற்றும் சங்க நூல்களின் வாயிலாகத் துறைமுகங்களையும் அங்கு நடந்த அயல் நாட்டுக் கடல் வாணிபச் சிறப்புக்களையும் பற்றிப் படித்தறிந்தோமேயன்றி, அவற்றின் சான்றுகளையும் தடையங்களையும் ஐயமறக் கண்டதில்லை. தமிழர் வேண்டி நின்ற இச்சான்றுகளையும் கையாளப்பட்ட பொருள்களையும் ஒரளவு பொதுகைப்பட்டினமே தமிழர்க்கு முதன்முதலாகக் காட்டியுள்ளது. இதுவன்றி இங்குக் கிடைத்த மட்கலவோடுகள் சிலவற்றின்மேல் கீறியெழுதியுள்ள சொற்கள் தமிழ், பிராகிருத மொழிச் சொற்களானாலும், பிராமி எழுத்துக்களாலேயே எழுதப்பட்டிருப்பது பற்றியும், இதுபோலத் தென்னாட்டு மலை முழைஞ்சுகளில் காணப்படும் அக்காலத்துத் தமிழ்மொழிக் கல்வெட்டுக்களும் பிராமி எழுத்துக்களாலேயே யிருப்பது கொண்டும், கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னுமான நூற்றாண்டுகளில் தமிழும் அக்காலத்துப் பாரத நாட்டு மற்ற மொழிகளைப் போலப் பிராமி லிபியில் எழுதப்பட்டமை விளங்கும். கே. ஆர். ஸ்ரீ. (தமிழ் எழுத்துக்களைப் பற்றிய கருத்துக்களுக்கு எழுத்து-தமிழ் எழுத்து என்னும் கட்டுரை பார்க்க).