கலைக்களஞ்சியம்/அரிசில் கிழார்

அரிசில் கிழார் கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிட வடபாலுள்ள அரியலூர் என்பதன் மரூஉவாக இருக்கலாம். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடி (பதிற்றுப்பத்து-எட்டாம்பத்து) ஒன்பது லட்சம் பொற்காசும் அரசாட்சியும் பரிசிலாகப் பெற்றார். எனினும் அவன் கொடுத்த அரியணையை அவனுக்கே கொடுத்து அமைச்சுரிமை பெற்றார்; வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தல்வேண்டி அவனைப் பாடினார். அதிகமான் தகடூர் எறிந்து வீழ்ந்த எழினியின் பிரிவாற்றாது புலம்பினர். இவர் செய்தனவாக இப்பொழுது பதினெட்டுச் செய்யுட்கள் இருக்கின்றன. (பதிற்றுப்பத்து எட்டாம்பத்து ; புறம். 146, 230, 281, 285, 300, 304; குறுந்தொகை 193).