கலைக்களஞ்சியம்/அரித்தல்

அரித்தல் : தங்கம், வெள்ளி போன்ற ராஜ உலோகங்களைத் தவிர மற்றெல்லா உலோகங்களின் மேலும் காற்றுப்பட்டால் மேற்பரப்பு மங்கி, ரசாயன விளைவுகள் நிகழ்ந்து, அவை ஆக்ஸைடுகள் ஆகின்றன. இவ்விளைவை அரித்தல் எனலாம். பொதுவாய் இதனால் உலோகத்தின் மேற்பரப்பில் ஆக்ஸைடு இலேசாகப் படிந்து, உலோகம் மேலும் கெடாமல் பாதுகாக்கிறது. செம்பில் பச்சையான களிம்பேறுவதும், அலுமினியத்தில் ஆங்காங்கு வெண்மையான புள்ளிகள் தோன்றுவதும் இதற்கு உதாரணங்களாகும். ஆனால் இரும்பில் இவ்விளைவு வேறு வகையாக நிகழ்கிறது. அதன் மேற்பரப்பில் பழுப்பு நிறமான துரு உண்டாகி, உலோகத்தின்மேற் படிந்து, அதைப் பாதுகாப்பதற்கு மாறாக இவ்விளைவை விரைவுபடுத்திப் பொருள் முழுதும் கெடுமாறு செய்கிறது. பார்க்க: துரு.

ராஜ உலோகங்கள் காற்றாலும், ஈரத்தாலும் பாதிக்கப்படமாட்டா. நிக்கலும், கோபால்ட்டும் அதிகமாக மங்குவதில்லை. கந்தக வாயுக்கள் கலந்த காற்றில் வெள்ளி விரைவில் மங்குகிறது. வெப்ப நாடுகளில் அலுமினியம் விரைவில் அரிக்கப்படுகிறது. இதனால் அலுமினியப் பாத்திரங்களில் வைக்கும் தண்ணீர் ஒருவகை நாற்றத்தைப் பெறுகிறது. அலுமினியத்துடன் வேறு உலோகங்கள் கலந்திருந்தால், அது இன்னும் எளிதில் அரிக்கப்படும். தூய செம்பு அதிகமாக அரிக்கப்படாவிட்டாலும், வேறு உலோகங்களுடன் கலவையாக இருக்கும்போது அரிக்கப்படுகிறது. வெண்கலத்தைவிடப் பித்தளை எளிதில் அரிக்கப்படும். வெள்ளீயம் சாதாரண நிலையில் சற்றும் அரிபடாது. நாகம் எளிதில் அரிக்கப்படுகிறது.

இரும்பைத் துருவேறாது தடுக்கும் முறைகளையே மற்ற உலோகங்கள் அரிக்கப்படாமல் தடுக்கவும் பயன்படுத்தலாம். அரிக்கப்படும் பொருள்களை நீக்கியும், மேற்பரப்பில் உலோகக் கூட்டின் பூச்சொன்று படியுமாறு செய்தும், அரித்தலைத் தடுக்கும் பொருள்களை உலோகத்துடன் கலந்தும் இவ்விளைவைத் தடை செய்யலாம்.