கலைக்களஞ்சியம்/அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் : செவ்வேட் பெருமானுக்குச் செஞ்சொற்புனைமாலை சிறக்க அணிந்தவருள் அருணகிரிநாதரும் ஒருவர். இவர் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகரத்தைப் பிரபுடதேவராயர் ஆண்டுவந்த காலத்தில் திருவண்ணாமலையில் தோன்றினார். இவர் முத்தம்மை என்ற உருத்திர கணிகையின் மைந்தர் என்பர். இவரைப் பட்டினத்தடிகளின் பிள்ளைஉ என்பாரு முளர். பத்தாம் நாற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகளுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டினரான அருணகிரியார் மகனாதல் பொருந்தா தென்க. இவரது குலம் பற்றியும் பவர் பலவாறு கூறுகின்றனர்.

இவர் இளமையில் சங்கமருவிய இலக்கிய இலக்கணங்களிலும், சைவத் திருமுறைச் சாத்திரங்களிலும், இதிகாச புராணங்களிலும், வடமொழி நூல்களிலும் மிக்க தேர்ச்சி பெற்று விளங்கினர். செல்வர்கள் மேல் கோவை, கலம்பகம், உலா, மடல் முதலிய பிரபந்தங்கள் பாடிப் பணத்தேடிச் சிற்றின்ப வகையில் செலவிட்டு வாழ்ந்தார். அதனால் குட்டம் முதலிய நோய்களும் வர நொந்து வாடினார் என்பது இவரது பாடல்களே அப்படியே அகச்சான்றாகக் கொள்ளுவோர் கருத்து. இல்லாக் குறையைத் தமதாக எற்றிக் கூறும் அருங்கவி வாதவூரார் போன்றவரது அடக்கவுரைகள் போன்றவை இந்த உரைகள் எனக் கொள்ளலுமாம். பெரிய குணதரர் என்பார் அறிவுரை பல கூறி இவரைத் திருத்தினர் என்று இவருடைய திருப்புகழ் கூறுகிறது.

தமது கூடாவொழுக்கத்தை நினைந்து வருந்தும் உணர்ச்சி வந்த காலத்தில் இவர் அருணை வடகோபுரத்தருகில் ஆறுமுகனிடம் தங்குறை கூறித் தவங்கிடந்தனர். ஆண்டவன் அருள் சுரக்கவில்லை. அதனால், அண்ணலாருக்கு வாழ்க்கையில் வெறுப்பு வந்தது; உயிர்விட எண்ணிக் கோபுரத்திலேறிக் குதித்தனர். தனது பழைய அடிமையான அருணகிரியார் இருக்க முயன்றது காணத் தரியாது முருகன் தரிசனம் தந்து தண்ணளி செய்தான். ஆண்டவன் காட்சி அருணகிரியார்க்கு ஆறுதலளித்தது. முருகன் தன் அருள் நோக்கத்தால் அவரைப் புனிதராக்கி, உய்யக் கொண்டான். அதுமுதலாக நம் தெய்வப் புலவர் தவஞானக் கடல்படிந்து சிவஞானச் செல்வராயினர். தேனூறு தமிழுக்கு வாயூறும் சிவகுமரன் ‘முத்தைத் தரு’ என்ற முதலடி எடுத்துதவினன். நம் சந்தப் புலவர் அதனைத் தொடர்ந்து ஒரு சந்தப்பாப் பாடினர். அன்று முதல் பாடிய அளப்பருஞ் சந்தப்பாக்களின் தொகுப்பே ‘திருப்புகழ்’ எனப் பெயர் பெற்றது என்று கூறுவர். தமிழ் நாட்டின் வடக்கிலும் தெற்கிலுமாகப் பல தலங்களைத் தரிசித்துப்பாடும் பணியே இவர்க்குப் பணியாயிற்று. இவர் காணதனவும் பாடாதனவுமான முருகன் தலங்கள் தமிழ் நாட்டில் இல்லை என்றே சொல்லலாம்.

அருணையிலிருந்தபோது வில்லிபுத்தூரார் என்பவர். தம்மிடம் வாதிட்டுத் தோற்ற புலவர் காதுகளைத் தோண்டியறுப்பது கேட்டு, அருணகிரியார் உளம் கவன்றார் ; அவரோடு வாதம் செய்தார்; தாமியற்றிய கந்தரந்தாதியில் ‘திதத்தித்த’ என்ற 54ஆம் பாட்டிற்கு உரை கூறத் தெரியாமல் வில்லியார் தோற்கவும். அவர்க்கும் கர்ணதானம் செய்து (காது அதுக்காமல் விட்டு) அவரைத் திருத்தினார். வில்லியார், புலவர்கள் காதறுக்கும் செய்தியை ஒரு பழம் பாடல் கூறுவதாலும், அவர் அருணகிரியாரது சமகாலத்தவராதலாலும், இருவரும் சந்தக் கவிஞராதலாதும் அந்தச் செய்தி உண்மை எனக் கொள்ளல் இழுக்காது.

சம்பந்தாண்டான் என்ற சக்தி பக்தனொருவன் அருணகிரியாரிடம் பொறாமை கொண்டான்; அண்ணாமலைப் பகுதியை ஆண்டுவந்த பிரபுடதேவ மன்னனிடம் சென்று, தான் வழிபடுந் தேவியைச் சபையில் அனைவருக்கும் தெரிசிக்கக் காட்டுவதாயும், அருணகிரியாரையும் தமது வழிபடும் தெய்வமான குகவேளக் காட்டச் செய்யச் சொல்லுமாறும் தூண்டினான். அரசனும் அவரை வேண்ட அவரும் இசைந்தனர். சம்பத்தாண்டான் சொற்படி தேவி சபையில் காட்சி தரவில்லை. அருணகிரியார் ‘அதலசேடனாராட’ என்ற பாடல் பாடினர். குமரவேள் மயிலின் மேல் சபையினர்க்கு அருட்காட்சி கொடுத்தனன். அப்பேரொளியால் அரசர்க்குக் கண்ணொலி மழுங்கியது. சம்பந்தாண்டான் தூண்டியபடி வேண்டிய அரசாக்காக, அருணகிரியார் கிளியுருவில் பொன்னுலகம் புகுந்து, கற்பக மலர் கொண்டுவந்து அரசன் கண்ணொளி பெற நல்கினர்; அக்கிளியுருவிலேயே ஆறுமுகன் திருத்தோளில் அமர்ந்தார் என்றும், அவனடியில் கலந்து முத்தி பெற்றார் என்றும் ஆன்றோர் கூறுவர். இவர் அருளிய நூல்கள்: திருப்புகழ், திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில்விருத்தம் முதலியன. சே. த. இ.

அருணகிரிநாதர் தத்துவம்: அருணகிரியார் திருப்புகழ்மூலம் உபதேசிக்கும் பொருள் யாது ? அவர் வழிபடும் முருகன் யார்? கடவுளை அறியும் வழி என்ன? மும்மூர்த்திகளும் தானாகி, அவர்க்குமேலுமாகி, எல்லாமுமாகி நின்ற தத்துவமுமே முருகன் என்று அவர் கூறுகின்றார். எல்லாத் தெய்வங்களும் முருகன் என்பதே அவர் துணிபு.

அருணகிரியார் திருமால் மருகனென முருகனைப் பலவிடங்களிலும் பாடியிருத்தலின் சைவ வைணவ சமரச நோக்கமுடையவராவார். அதுபோலவே புராண இதிகாசங்களையும் அவைகளில் கூறப்படும் கடவுளையும் தத்துவங்களையும் சமரசமாய்க் கையாண்டு பாடியிருக்கின்றார். கந்தபுராணத்தில் காணப்படும் கந்தப்பெருமானுடைய திருவிளையாடல்களை அனுபவித்த முறையில் வைத்துத் திருப்புகழில் மிகுதியாகப் பாடியிருக்கின்றார். சிவயோகத்தையும் அதை நாடும் ஜீவனுடைய தத்துவத்தையும் நன்றாக விளக்கியிருக்கிறார். 'ஐந்து பூதமும் ஆறு சமயமும்' என்னும் திருப்புகழில் ஆன்மாவானது ஆணவம் முதலான மும்மலத்தை யொழித்துத் தெய்வத்தை யடையவேண்டிய நெறியைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆசைகளும் ஆணவமும் அடங்கப் பெற்றாலன்றி முருகனை அணுகமுடியாதென்கிறார். ஆசையை அகற்றினாலன்றி வினை தீராது; மூண்ட வினையே விதியாகும்; விதியைத் தாண்டுவதே கதி; அந் நற்கதியைப் பெறவேண்டுமானால் முருகன் நாமமும் முருகன்பால் பக்தியும் இன்றியமையாத நெறி என்று கூறுகிறார்.

அவர் வேதம், உபநிஷதம், ஆகமம், புராணம் முதலியவைகளில் குறிப்பிட்டுள்ள அரிய நுட்பங்களைத் தெரிந்து, இசைத்தமிழ்ப் பாடல்களாகப் பாடி, யாவரும் அறிந்து ஒழுகக்கூடியவாறு எளிதான அறநெறியைக் காட்டியிருக்கின்றார். இவருடைய இத்தகைய உயர்வை எண்ணியே, தாயுமானவர்,

'ஐயா அருணகிரியப்பா உனைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்?'

என்று அருணகிரியாரைப் பற்றி உணர்ச்சி ததும்பப் போற்றுகிறார். பார்க்க: திருப்புகழ். டி. எம். கி.