கலைக்களஞ்சியம்/அருண்டேல், ஜார்ஜ் சிட்னி

அருண்டேல், ஜார்ஜ் சிட்னி (1878-1945) 1934-1945-ல் அடையாற்றில் பிரம ஞான சங்கத்தின் தலைவராயிருந்த ஆங்கில அறிஞர். இங்கிலாந்தில் சர் ரேயில் 1-12-1878-ல் பிறந்தார். இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் கல்வி பயின்று, எம்.எ., எல்.எல்.பி. பட்டங்கள் பெற்றார்.

அருண்டேல்

காசி சென்ட்ரல் இந்துக்கல்லூரியில் முதலில் வரவாற்று ஆசிரியராகவும், பின் தலைவராகவுமிருந்தார். அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய ஹோம் ரூல் லீகின் காரியதரிசியா யிருந்தார். 1917-ல் அம்மையாரும் அவரும் நீலகிரியை விட்டு வெளியேறக்கூடாது என்து உத்தரவிடப்பட்டிருதது. 1917-ல் பிரமஞான சங்கம் நிறுவிய நாட்டுக் கல்வி வளர்ச்சிச் சங்கத்தின் ஆதரவில் நாட்டுப் பல்கலைக் கழகத்தின் தலைவராயிருந்தார். 1920-ல் இந்தூர் ஹோல்காருடைய கல்வி மந்திரியாய் யிருந்தார். பின்னர் பலமுறை உலக முழுவதும் பிரயாணம் செய்து, கல்வி, அரசியல், சமூக நிலைமைகளை ஆராய்ந்தார். பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் ஆதரவில் இந்தியா சுதந்திரம் பெற உழைத்தார். இந்துஸ்தான் சாரண இயக்கத்தின் சென்னை மாகாணக் கமிஷனரா யிருந்தார். 1934-ல் பெசன்ட் அம்மையார் நினைவுக்காகப் பெசன்ட் பிரமஞான உயர்நிலைப் பள்ளியை அடையாற்றில் நிறுவினர். 1936-ல் அவரும் அவரது மனைவியார் ருக்மிணி தேவியும் கலாஷேத்திரத்தை அமைத்தனர். 1936-ல் மான்டிசாரி அம்மையாரை அழைத்து, அவரிடம் கல்விப் பயிற்சி பெற வகுப்புக்கள் அமைத்தார். இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பதற்காக மனச்சான்று (Conscience) என்ற ஆங்கில வார இதழ் ஒன்றைத் தோற்றுவித்தார். சமயம், கல்வி, அரசியல் ஆகிய துறைகளில் பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவர் 12-8-1945-ல் அடையாற்றில் இறுதி எய்தினார்.