கலைக்களஞ்சியம்/அரையஸ்

அரையஸ்(?-335) லிபியாவிலிருந்த கிறிஸ்தவ மத குரு; இவர் தமது சமயக் கோட்பாடுகளைக் கற்றறிய அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். அங்கு நல்ல நிலைமையை யடைந்தார். ஆனால் இவர் கொண்ட சமயக் கொள்கை புதிதாக இருந்தது. அதாவது இயேசு கிறிஸ்துவாகிய தேவ குமாரர் கர்த்தாவாகிய இறைவனினின்றும் வேறு பட்டவர் என்பது. அவ்வேறுபாடு இல்லை என்பது பண்டையர் கொள்கை. அதுவே ரோமாபுரியிலிருந்த போப்பினுடைய கருத்துமாகும். ஆகையால் அரையஸினுடைய கொள்கையை உடனே ஏனையோர் மறுக்கத் தொடங்கியதில் வியப்பில்லை. ஒரு பேரவை கூட்டிப் பல சமயப்புலவர்கள் அரையஸோடு வாதாடினார்கள். இயேசுவின் நிலை வேறுபட்டதாயினும் மாறுபடா நிலைமையைத் தம்மகனுக்கு இறைவன் அருளியுள்ளார் என்னும் கோட்பாடும் அரையஸிற்கு உண்டு. ஆனால் அப்பேரவையில் தம்மையும் மறந்து, இயேசுவும் அறக்குறைபாடுகட்கு உட்பட்டவர் என்று கூறிவிட்டார். போப் உடனே அரையஸையும் அவரைப் பின்பற்றியவர்களையும் சமய வரம்பினின்றும் அகற்றிவிட்டார். அரையஸ் தமது கொள்கைகளைத் திரட்டித் தாலியா என்னும் செய்யுள் நூல் மூலம் வெளியிட்டார். நாடு கடத்தப்பட்ட அரையஸ் டான்யூப் நதிக்கு வடக்கே போய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, பின்பு கி. மு. 335-ல் இறந்தார். பிறகு, கான்ஸ்டன்டைன் கூட்டிய நிசையா கவுன்சில் அரையஸின் கொள்கை தவறுடையது என்றும், அதைப் பின்பற்றுவோர்களைக் கண்டித்தும் தீர்மானம் செய்தது. காத்தியர்களின் மத குருவாக இருந்த உல்பிலா என்பவர் அரையஸ் கொள்கையைப் பின்பற்றியவர். இவருடைய முயற்சியால் டான்யூப் நதிக்கு வடக்கே இருந்த ஜெர்மானிய ஆதிக் குடிகள் அரையஸ் கொள்கையை மேற்கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரையஸ்&oldid=1455651" இலிருந்து மீள்விக்கப்பட்டது