கலைக்களஞ்சியம்/அர்ஜுனர்

அர்ஜுனர் (? 1606) அமிருதசரசில் இருந்த சீக்கிய மதகுரு. இராமதாசர் என்னும் குருவின் குமாரர். இவர் 1581-1606 வரை மதகுருவா யிருந்தார் ; அமிருதசரசில் சீக்கியர்களுடைய பொற்கோவிலைக் கட்டி முடித்தார். 1604-ல் சீக்கியப் புண்ணிய நூலாகிய ஆதிகிரந்தம் எழுதிப் பூர்த்தி செய்யப்பட்டது. இவர் காலத்தில் சீக்கிய மதம் அதிகமாகப் பரவத் தொடங்கிற்று. இவர் பிற மதத்தவர்களை அவமதிப்பதாகச் சிலர் அக்பரிடம் குறை கூறினர்; ஆயினும் அப்பேரரசன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஜகாங்கீருக்கும் அவன் மகன் குஸ்ருவிற்கும் நடந்த தகராற்றில் குஸ்ருவின் நிலைக்கு வருந்திய அர்ஜூனர் ரூபாய் 5.000 அவனுக்கு உதவியளித்தார் (1606). இதனால் சினமடைந்த ஜகாங்கீர் குஸ்ருவை யடக்கிய பிறகு அர்ஜுனருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தான். அர்ஜூனரின் சீடர்கள் அத்தொகையை யளித்துவிட முன்வந்தார்களாயினும் குரு அதற்கு இணங்கவில்லை. ஆகையால் ஜகாங்கீர் குரு அர்ஜுனரை லாகூரில் சித்திரவதை செய்து கொல்லுவித்தான். தே. வெ. ம.