கலைக்களஞ்சியம்/அர்த்தகோளம்

அர்த்தகோளம் : பூமியை நேர் குறுக்கே வெட்டினால் இரு சமபாதிகளாகு மல்லவா? அவ்வொவ்வொரு பகுதியும் ஓர் அர்த்தகோளம் ஆகும். பூமத்தியரேகையை ஒட்டி வெட்டினால் ‘ வட அர்த்தகோளம்' என்றும். 'தென் அர்த்தகோளம்' என்றும் இருபகுதிகளாகப் பிரியும். வட அர்த்தகோளத்தில் வட அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா முதலிய பகுதிகளும், தென் அர்த்தகோளத்தில் தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பகுதிகளும் அடங்கி யிருக்கும். துருவத்திற்குத் துருவம். குறுக்கே (மேற்குத் தீர்க்கரேகை 20° பக்கமாக) வெட்டினால் கிழக்கு அர்த்தகோளம் என்றும் மேற்கு அர்த்தகோளம் என்றும் இரண்டாகப் பிரியும் ; மேற்கு அர்த்தகோளத்தில் பெரும்பாலும் இரு அமெரிக்காக் கண்டங்களும், கிழக்கு அர்த்தகோளத்தில் அட்லான்டிக் சமுத்திரத்துக்குக் கிழக்கேயும் பசிபிக் சமுத்திரத்திற்கு மேற்கேயும் உள்ள நில நீர்ப்பகுதிகளும் அடங்கினவாகக் கொள்ளப்படும். இவ்வாறு பிரித்துக் கூறுவது பூகோள மரபு.