கலைக்களஞ்சியம்/அர்த்தசாஸ்திரம்

அர்த்தசாஸ்திரம்: இந்தச் சாஸ்கிரத்தின் முக்கியக் கருத்து, குடிகளின் நலமே அரசனின் பொறுப்பு என்பதாம். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசனுக்கு அதிகாரம் இருக்கவேண்டும், அவனுடைய அதிகாரத்திற்கு மேன்மை கொடுக்கவேண்டும். அவனுடைய ஆணையைச் செலுத்த விரிவான அதிகார வர்க்கம் இருக்கவேண்டும். கௌடிலியர் எழுதியுள்ள அர்த்தசாஸ்திரத்திலிருந்து தெரிபவை : அரசன் ஒரு சாம்ராட். அரசாங்கம் ஒரு மண்டலி. இந்த மண்டலியைச் சுற்றியுள்ள ஏனைய இராச்சியங்களை அரசாங்கம் போர்செய்து வென்றோ, வஞ்சனையாகவோ அடிப்படுத்த வேண்டும். அரசியலானது அரசன் உட்பட எட்டு உறுப்புக்கள் உள்ளது. மந்திரிசபை, நாடு, அரண், படை, பண்டாரம் (செல்வம்), நட்பு, பகை என்பவை மற்ற ஏழும் ஆகும். அரசாங்கமானது நிலவரி, சுங்கம், இலாகிரி வரி, மானியம், பயிர், நாணயசாலை முதலியவற்றைக் கண்காணிக்கும் பல இலாகாக்களாக வகுக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு வெவ்வேறு அதிகாரிகள் இருந்தனர். பரத்தையர் இல்லங்களைக் கவனிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படையில் தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு பிரிவுகள் இருந்தன. தொழிலாளிக் குழுக்கள் இருந்தன. அவற்றிற்குச் சிரேணிகள் என்று பெயர். அவை தத்தம் தொழில்கள் முன்னேற்ற மடைவதற்கேற்ற சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருந்தன. இந்தியாவுக்கும், மத்திய ஆசியா, சீனம் முதலிய நாடுகளுக்கும் வாணிபப் போக்குவரத்து இருந்தது. தென் இந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் வியாபாரம் வலுத்திருந்தது. கூ. ரா. வே.

கௌடிலியர் அர்த்தசாஸ்திரம்

பண்டைக் காலத்துப் பாரத மக்களிடையில் பல்வேறு அர்த்தசாஸ்திரங்கள் வடமொழியில் பயின்று வந்தன. கெளடிலியர் அவை அனைத்தையும் சுருக்கி, உலக வழக்கையும் ஆராய்ந்து, தாம் ஓர் அர்த்தசாஸ்திரம் இயற்றியதாகக் கூறுகின்றார். "பூமி நந்த அரசர் கைவசமானதைக் காணப் பொறாது படைக்கலம் எடுத்து விடுதலை செய்தவன்" என்று நூலின் இறுதியில் அவர் தம்மைக் குறித்தலான், சந்திரகுப்த மௌரியனது (கி. மு. 325-297) சூழ்ச்சித் துணைவரான கௌடிலியரே அர்த்தசாஸ்திரம் இயற்றியவர் என்று கருதுகின்றார்கள். கௌடிலியர் பிறந்தது வடநாட்டின் வடகோடியிலிருந்த தட்சசீலம் என்று மகாவமிச உரையும், தமிழ்நாடு என்று நிகண்டுகளும் கூறுகின்றன. இவரது குடிப்பெயர் கௌடிலியர் என்றும், தந்தை இட்டபெயர் விஷ்ணுகுப்தர் என்றும், நாட்டைப்பற்றி வந்தது சாணக்கியர் என்றும் காமந்தக உரை கூறும். நூலை உற்று நோக்கின், அதை ஆக்கியவர் விரிந்த கல்வி அறிவும், ஆழ்ந்த அனுபவ அறிவும் பெற்ற ஓர் அரசியல் நிபுணர் என்று எளிதில் ஊகித்தல் கூடும்.

பாரத சமுதாயத்தில் தொன்றுதொட்டு வழங்கி வந்த வைதிகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அர்த்தசாஸ்திரம் இயற்றப்பெற்றது. இது தரும சூத்திரங்கள் போன்ற பழைய நூல்களில் தோன்றும் எளிமை, நேர்மை, ஆழம் முதலிய சிறப்பியல்புகள் நிரம்பியது; 15 அதிகரணங்கள் ஆகவும், 150 அத்தியாயங்கள் ஆகவும், 180 பிரகரணங்கள் ஆகவும் வகுக்கப்பட்டது. 32 எழுத்துக்கள் சேர்ந்தது ஒரு சுலோகம் என்ற வழக்கின்படி இதனுள் 6,000 சுலோகங்கள் உள்ளன. பொதுவாக அத்தியாயம் ஒவ்வொன்றும் சூத்திரம் எனப்படும் தலைப்பால் ஒரு பொருளைக் குறிப்பிட்டுப் பின்னர் அதை எடுத்து விளக்கிப் பொருளின் சிறப்பைக் கூறும் சுலோகத்தால் முடிவு பெறும். இவ்வாறு 180 தலைப்புக்களின்கீழ் அரசு, அமைச்சு, படை, பொக்கிஷம், நீதிமன்றம், ஒற்று, தூது, வாணிபம், சுங்கம், விவசாயம், கூட்டுறவு, சந்திசெய்தல், போர்புரிதல் போன்ற பல விஷயங்கள் விரிவாகக் கூறப்படுகின்றன; இக்காரணம் பற்றி அர்த்த சாஸ்திரம் ஓர் அறிவுரைக் களஞ்சியமாம் என்பர். முக்கியமான பொருள்களை ஆராயுங்கால், கௌடிலியர் தம் முன்னோர்களின் கொள்கைகளை எடுத்துக் காட்டித் தம் முடிவையும் கூறுவர்- அர்த்த சாஸ்திரத்திலுள்ள தத்துவங்களும், தொடர்களும், சொற்களும் இலக்கியங்கள் பலவற்றுள் எடுத்து ஆளப்பட்டு, அவற்றை வளஞ்செய்துள்ளன. இந்நூலுக்குப் பழைய உரைகள் பல வழங்கி வந்துள்ளன.

கௌடிலியர் தமக்கு முன் இருந்த பல தண்டநீதி நூல்களையும், அவற்றின் ஆசிரியர்களாகிய மனு, உசனஸ், பிருகஸ்பதி, பாரத்துவாசர், விசாலாட்சர், காத்தியாயனர், பராசரர் முதலியவர்களையும் பற்றித் தமது நூலில் குறித்துள்ளார். மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் தண்டரீதி விளக்கப்பட்டிருக்கின்றது. பஞ்சதந்திரமும் இதோபதேசமும் அரச குமாரருக்குத் தண்டநீதியை விளக்குவதற்காகச் சொல்லப்பட்ட கதைகளே. இவ்வீரண்டும் கௌடிலியருடைய நூலுக்குப் பிற்பட்டவை.

இடைக்காலங்களில் பிரசாரம் குன்றி, யாருக்கும் தெரியாதிருந்த இந்நூல் 1909-ல் முதன் முதலாக வெளிவந்தது. இது சந்திரகுப்த மௌரியன் காலத்தது தானா என்ற ஐயம் அப்போது எழுந்தது. அர்த்த சாஸ்திரத்தில் சந்திரகுப்தனையும் அவனது அரசியலையும் பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை என்றும், பிற்கால வழக்குகள் காணப்படுகின்றன என்றும், அதனால் இது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி யிருத்தல் வேண்டுமென்றும் சிலர் வாதித்தனர். இக்கட்சியாரது கொள்கையை முடிவுகட்டப் போதிய சான்றுகள் இன்னும் வெளி வரவில்லையாதலால் சந்திரகுப்த மௌரியனது காலத்தது என்ற கொள்கை வலியுற்றுப் பலராலும் அங்கீகரிக்கப்படுகின்றது.

பிற ஆசிரியர்களும் நூல்களும்

1. காமந்தகரது நீதிசாரம்: கௌடிலியர் தமக்குமுன் ஆசிரியர்கள் பலர் அர்த்தசாஸ்திரங்கள் இயற்றி யிருந்தனர் என்று கூறுகின்றார். அவர் காலத்திற்குப் பின்னர் அவை வழக்காறற்று இறந்துபட்டன. புதிய நூல்களும் இயற்றப்படவில்லை. வழிநூல்கள் ஒருசில தோன்றியவற்றுள் முக்கியமானது காமந்தகர் இயற்றிய நீதிசாரம் என்பது. இந்நூல் கௌடிலியரது அர்த்தசாஸ்திரத்திலுள்ள அமைச்சர் தொழில் (அதிகாரம் 2), நீதிமன்றம் (அதி. 3, 4), இரகசியவினை (அதி. 14), தந்திரவுத்தி (அதி.15) ஆகியவற்றை ஒழித்து, எஞ்சிய பகுதிகளைச் சுருக்கமாகக் கூறுகின்றது. சந்திசெய்தல், போர்புரிதல் போன்ற வெளிநாட்டு விஷயங்கள் விரிவாகவும் உள்ளன. இதனுள் 20 சருக்கங்களும் 1,224 சுலோகங்களும் உள. நூல் காவிய வடிவத்தில் எளிய விருத்தங்களால் அமைந்தது.

காமந்தகரது காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. அவர் கூறும் அரசியல் குப்தகாலத்து (கி. பி. 300-600) அரசியல் அமைப்பைக் குறிக்கும் என்பர். அவரது நீதிசாரம் பதினோராவது நூற்றாண்டிலிருந்த அபுசாலி என்பவரால் அரபு மொழியில் சுருக்கிப் பெயர்க்கப்பட்டது. இம் மொழிபெயர்ப்பு முதல் நூலாசிரியனை, 'சிபார்' அல்லது சிகரன் என்ற சொல்லால் வழங்குகின்றது. கி.பி.375-415-ல் அரசுபுரிந்த II-ம் சந்திரகுப்தனுக்குச் சிகரஸ்வாமி என்றொரு மந்திரி இருந்தனன் என்பர். ஆகவே அபுசாலி, சிகரஸ்வாமி என்பவனையே சிகரன் என்ற சொல்லால் குறிக்கின்றான் என்றும், காமந்தகர் என்பது நூலாசிரியரது குடிப்பெயர் ஆதல்வேண்டும் என்றும் கருத இடமுண்டு. சந்திரகுப்தனுக்குத் தேவகுப்தன் என்று வேறு பெயரும் உள்ளமையால் நீதிசாரத்தின் காப்புச் செய்யுளில் வரும் தேவன் என்ற சொல்லால் காமந்தகன் அல்லது சிகரஸ்வாமி தன் தலைவனான சந்திரகுப்தனைக் குறிக்கின்றான் என ஊகித்தலும் தகும். எட்டாவது நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பவபூதி தமது மாலதீ மாதவம் என்ற நாடகத்தில் நீதிநூற் பயிற்சி பெற்ற பௌத்த பிட்சுணிக்குக் காமந்தகி எனப் பெயர் சூட்டியிருத்தலால் காமந்தகர் பவபூதிக்கு முற்பட்டவர் என்பது திண்ணம். பவபூதிக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காமந்தகரது நீதிசாரத்தை எடுத்தாளுகின்றன.

2. நீதிவாக்கியாமிருதம்: இந்நூல் நிச்சயமான கால தேச வரையறை யுடையது ; சூத்திர வடிவான எளிய வாக்கியங்களால் ஆக்கப்பெற்றது ; 32 அத்தியாயங்கள் கொண்டது. கௌடிலியரது அர்த்தசாஸ்திரத்திலுள்ள கருத்துக்களும் சொற்களும் இதன்கண் காணப்படுவதோடு, பிற நூல்களிலிருந்து அரிய நீதி மொழிகளும் தெரிந்தெடுத்துச் சேர்க்கப் பெற்றுள்ளன. இந்நூலை ஆக்கியவர் சோமதேவர். அவர் ஒரு சிறந்த கவிஞர் ; ஜைன சமயத்தினர். அறத்தை அரசியலின் முக்கிய நோக்கமாகக் கொண்டவர். சாதியைத் தவிர்த்துக் குணங்களை ஆதரிப்பவர் ; பரத்தை வாயினின்று வரினும் அறமொழி கொள்ளத்தக்கதே என்பர். “அறம் பொருள் இன்பம் பயக்கும் நாட்டிற்கு வணக்கம்” என்று நூல் தொடங்குதல், அது புது வழியில் இயற்றப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது. சோமதேவர், யசஸ்திலகம் என்ற சம்பு காவியமும் இயற்றியுள்ளார். அந்நூலினின்று அவர் கி. பி. 947-ல் தக்கோலம் (தெக்குளம், வட ஆர்க்காடு) என்ற இடத்து நிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற மூன்றாவது கிருஷ்ணராஜ (கன்னர) தேவன் என்ற ராஷ்டிரகூட அரசனுக்குத் துணைவனாயிருந்த பத்திகன் அல்லது பூதிகன் என்ற சாளுக்கிய அரசனால் ஆதரிக்கப் பெற்றவர் என்று தெரிகின்றது. அவர் காலத்து அரசியலைப் பற்றிய செய்திகள் சில நீதிவாக்கியாமிருதத்தால் அறியக் கிடக்கின்றன.

3. சுக்கிரநீதி அறத்தையும் பொருளையும் பற்றிய பல அரிய பொருள்களைக் கூறுவது. இந்நூல் சுக்கிராசாரியர் இயற்றிய புராதனப் பொருள் நூலின் சுருக்கம் என்றும், நாளடைவில் ஏற்பட்ட வேறுபாடுகளை உடையது என்றும் கூறுவர். இதனுள் 5 அத்தியாயங்களும் 2,500 சுலோகங்களும் உள்ளன. கௌடிலியரது அர்த்தசாஸ்திரத்திலும் பிற நூல்களிலும் சுக்கிராசாரியரைச் சார்ந்தனவாக வரும் கருத்துக்கள் இந்நூலில் காணப்படவில்லை. இங்குக் கூறப்படும் வெடி மருந்து செய்தல் போன்ற புதிய வழக்குக்கள் இடைச்செருகல் என்பர்.

4. பார்கஸ்பத்திய சூத்திரம்: இது ஓர் அறிவுரைத் திரட்டு. இது அத்துணைச் சிறப்புடையதன்று. சாஸ்திர நூல்கள் கூறும் பிருகஸ்பதியின் கொள்கைகளோடு எவ்வகைச் சார்பும் அற்றது. பிற்பட்ட காலங்களில் தென்னாட்டில் தோன்றிய வழக்குக்களைக் கூறுவது. இதனுள் 5 அத்தியாயங்களும் 430 சூத்திரங்களும் உள்ளன.

5. சாணக்கிய சூத்திரம் : இது கௌடிலியரது அர்த்தசாஸ்திரத்திலுள்ள சில நீதி மொழிகளையும், உலகவழக்கிலும் நூல்வழக்கிலும் பயின்று வந்த அறிவுரைகளையும் திரட்டி அமைக்கப் பெற்றது. இதனுள் 571 சூத்திரங்கள் உள்ளன.

பத்தாவது நூற்றாண்டுக்குப்பின் பொருளைப் பற்றித் தனியே கூறும் நூல் இயற்றப்படவில்லை. மனு முதலிய அற நூல்களிலுள்ள அரச தருமங்களைப் பெரும்பான்மையும் தழுவிய நீதி நூல்கள் சில தோன்றியுள்ளன. அவற்றுள் ஹேமசந்திரன் (1088-1172) இயற்றிய இலகு அருகந்தநீதியும், சண்டேசுவரன் (1370) இயற்றிய ராஜநீதி ரத்தினாகரமும் முக்கியமானவை. கோ. ஹ.