கலைக்களஞ்சியம்/அர்த்வுல்ப்
அர்த்வுல்ப் (Aardwolf) டச்சு மொழியில் நில ஓநாய் எனப் பொருள்படும். தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் வாழ்வது. பார்வைக்குக் கழுதைப்புலியைப் போலத் தோன்றும். மயிர் பழுப்பு நிறம். அதில் ஐந்தாறு குறுக்குப் பட்டைகள் இருபுறமும் உண்டு. வாலில் மயிரடர்ந்திருக்கும். கழுத்தின் மேலும் முதுகு நெடுகவும், பிடரி மயிர் இருப்பது நன்றாகத் தெரியும். முன் காலில் ஐந்து விரல்களும், பின் காலில் நான்கு விரல்களும் உண்டு. நில ஓநாயின் தாடை வலிமையில்லாதது. இதன் பல் சாமானியமாகப் புலால் உண்ணும் விலங்குகளுக்கு உள்ளதுபோல இல்லை. இதன் முக்கிய உணவு கறையான், வேறு பூச்சிகள், புழு, பழம் முதலியவை. இது குழி தோண்டி அதில் வசிக்கும். ஒரே குழியில் பல ஒன்றாக வாழும். சாதாரணமாகக் குழி தோண்டி வசிக்கும் விலங்குகள் கோழைத் தனமானவை. இதுவும் அத்தன்மையதே. இது இர வில்தான் இரை தேட வெளியில் வரும். இதன் இறைச்சி தின்ன நன்றாயிராது. இது கழுதைப்புலி, கீரி முதலியவற்றிற்கு நெருங்கிய உறவுள்ளது. இது பாலூட்டி வகுப்பில் புலாலுண் விலங்குக் (Carnivora) குடும்பத்தைச் சேர்ந்தது. புரொட்டிலிஸ் கிரிஸ் டேட்டஸ் (Proteles cristatus) என்பது இந்த இனத்தின் பெயர்.