கலைக்களஞ்சியம்/அர்த்வர்க்

அர்த்வர்க் (Aardvark) டச்சு மொழியில் நிலப்பன்றி எனப் பொருள்படும். இதற்கு எறும்பு தின்னி என்றும் பெயர். தென்னாப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா வெளிகளில் மட்டும் இருப்பது. பார்ப்பதற்கு விசித்திரமாகவும் விகாரமாகவும் இருக்கும். உடம்பு பருத்துக் கனமாக இருக்கும். வால் உட்பட

அர்த்வர்க்

நான்கு ஐந்து அடி நீளம் உள்ளது. வால் நீண்டு தடித்திருக்கும். முதுகு வில்போல வளைந்திருக் அர்த்வர்க்கும். முகம் நீண்டுகுழாய் போல இருக்கும். காது கழுதைக் காது போல நீளமாக இருக்கும். அது மெல்லிய ஒலியையும் கேட்டு, ஆபத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ள உதவும். இப்பிராணகளில் வெப்பமான இடங்களிலுள்ளவற்றிற்கு மயிர் இருப்பதில்லை. குளிரான இடங்களில் உள்ளவற்றிற்கு முரடான பழுப்பு நிறமுள்ள மயிர் இருக்கும். இதற்கு முன் பற்கள் இல்லை. மற்றப் பற்கள் முளைபோலச் சாமானியமாக இருக்கும். இது ஆழமான குழி தோண்டும்; இடர் வந்தால் மிக விரைவாகத் தோண்டிப் புதைந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். அதற்கு ஏற்றபடி இதன் உகிர்கள் வலுத்திருக்கும். இது இருட்டுகிற வரையில் பதுங்கிக் கிடந்து, இரவில் வெளியே வந்து, புற்றுக்களைப் பறித்துத் தோண்டிக் கறையான், எறும்பு முதலிய பூச்சிகளைத் தின்னும். இவற்றைப் பற்றித் தின்பதற்கு ஏற்றவாறு இதன் நாக்கு நீண்டு பசையுள்ளதாக இருக்கும். இது வாழும் நாட்டு மக்கள் இதைக் குழியிலிருந்து தோண்டியெடுத்து உணவாகக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு இது மிகவும் விருப்பமான உணவு. இது குட்டி போட்டுப் பால் கொடுக்கும். சிங்கமும், காட்டுப் பன்றியும், மலைப்பாம்பும் இதைப் பிடித்துத் தின்னும். இது பாலூட்டி வகுப்பில் எறும்பு தின்னிக் குடும்பத்தில் ஆரிக்டிரோபஸ் (Orycteropus) சாதியைச் சேர்ந்தது. இதில் இரண்டு இனங்கள் உண்டு. தென்னிந்தியக் காடுகளில் காணப்படும் அழுங்கு (Manis) இதே வரிசைப் பிராணி; இதைப் போன்ற உடல் அமைப்பும் உள்ளது.