கலைக்களஞ்சியம்/அலங்காரப் பொருள்கள்

அலங்காரப் பொருள்கள் (Cosmetics) : உடலின்மேல் தேய்த்தோ, தெளித்தோ, ஊற்றியோ அதைத் தூய்மையாக்கவும், அழகுப்படுத்தவும், அதன் தோற்றத்தை மாற்றவும் உதவும் பொருள்கள் அலங்காரப் பொருள்கள் எனப்படும்.

வரலாறு : செயற்கையாகத் தோற்றத்தை அழகுபடுத்தும் வித்தை இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே கையாளப்பட்டு வந்துள்ளது. சாயங்களைக்கொண்டு உடலை அலங்கரிக்கும் பழக்கம் பெண்டிரைத் தவிர ஆண்களிடையேயும் இருந்ததைப் பழந்தமிழ் நூல்களிலிருந்து அறிகிறோம். செம்பஞ்சுக் குழம்பினால் கால்களை அலங்கரித்துக்கொள்வதும், நறுமணமுள்ளவையும் உடலுக்கு நலந்தருபவையுமான மருந்துகளைக் கொண்ட தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதும், பல மூலிகைகளைப் பொடித்துத் தயாரிக்கப்பட்ட நீராடற் பொடிகளைப் பயன்படுத்துவதும், வாசனைத் தைலங்களைத் தடவி மயிரை அலங்கரித்துக் கொள்வதும், கண்ணுக்கு மை தீட்டுவதும் பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிற் கையாளப்பட்டுவரும் பழக்கங்களாகும். மருதோன்றியினால் நகங்களுக்கு நிற மூட்டுவதும் பழங்காலப் பழக்கம். அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவையொத்த கீழ்நாடுகளில் தோன்றி, எகிப்திற்கும், மற்ற மேனாடுகளுக்கும் பரவியது எனக் கருதுகிறார்கள்.

ஐரோப்பாவில் ரோமானிய சாம்ராச்சியத்தில் ஆண்களும் பெண்களும் அலங்காரப் பொருள்களைப் பெரிதும் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்று உள்ளது. இடைக்காலத்தில் மற்ற நாடுகளிலும் இந்த வழக்கம் மிகுந்திருந்தது. அரச குடும்பத்தினரும், மற்றச் செல்வர்களும் கீழ்நாட்டிலிருந்து வந்த அலங்காரப் பொருள்களை மிக அருமையாக மதித்துப் பயன்படுத்தினர். தோலின் தோற்றத்தை அழகுபடுத்த அக்காலத்தவர் திராட்ச மதுவிலும் பாலிலும் குளிப்பதுண்டு. 17-ஆம் நூற்றாண்டில் அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கத்தைச் சட்டத்தினால் தடை செய்யும் அளவிற்குப் பரவிவிட்டது. தற்காலத்தில், அமெரிக்காவின் முக்கியமான ஐந்து தொழில்களில் இதுவும் ஒன்று. இரண்டாம் உலகப் போரின்போது இருந்த ஏற்றுமதிக் கட்டுப்பாட்டினால் இந்தியாவிலும் இத்தொழில் வளர்ந்தது. வாசனைத் தைலங்களும், லோஷன்களும், வாசனைப் பசைகளும், முகப்பொடிகளும், முகப் பசைகளும், பற்பொடியும், பற்பசையும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 1949-50-ல் இந்தியாவில் சுமார் 30 இலட்சம் ராத்தல் நிறையுள்ள அலங்காரப் பொருள்கள் உற்பத்தியாயின.

பசைகள் : இவை குளிர்ப் பசைகள், மறை பசைகள், நீரற்ற பசைகள் என மூவகைப்படும். குளிர்ப் பசை என்பது நீரையும் எண்ணெயையும் குழம்பு நிலையிற்கொண்ட கலவை. இதில் தேன்மெழுகும், தாது எண்ணெயும், வெங்காரமும், நீரும் இருக்கும். இது அழுக்கை அகற்றித் தோலுக்கு மென்மையையும் மழமழப்பையும் தரும்.

மறை பசை என்பது சவர்க்காரத்தினால் குழம்பு நிலையில் இருத்தப்பட்ட ஸ்டியரிக அமிலம். இதில் ஸ்டியரிக அமிலத்துடன் காரமும், நீரும், கிளிசிரினும் இருக்கும். இது தோலின்மேற் பரவி நின்று அதற்குப் பளபளப்பையும் தரும். இதை முகத்தில் பூசிக்கொண்டு முகப்பொடியைத் தடவினால் அது நிலைத்து நிற்கவும் உதவுகிறது.

எண்ணெய்களையும், கொழுப்புக்களையும், நிறப் பொருள்களையும், வாசனைப் பொருள்களையும் கலந்து கொலாயிடு நிலையில் இருக்கும்படி செய்து நீரற்ற பசை தயாரிக்கப்படுகிறது. தோலின்மேல் தேய்க்க இது ஏற்றது. கூந்தல் பசைகளும் இவ்வகையைச் சேர்ந்தவை.

லோஷன்கள் : இவற்றுள் சிலவற்றுள் பிசினும், வேறு சிலவற்றில் ஆல்கஹாலும் இருக்கும். தலைமயிரைக் கழுவும் திரவங்களில் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் மருந்துச் சரக்கைக் கலப்பதுண்டு. கழுவு நீர்கள் தோலைத் தூய்மையாக்கிக் குளிர்ச்சியூட்டி, நாற்றத்தைப் போக்கி, அதிலுள்ள சிறு தொளைகளை மறைக்க உதவுகின்றன.

பொடிகள் : இவை இருவகைப்படும். இவற்றுள் முதல்வகை முகப்பொடி எனப்படும். முகப்பொடியில் பட்டுக்கல் தூளும், சீமைச் சுண்ணாம்பும், நாக ஆக்சைடு அல்லது டைட்டேனிய ஆக்சைடும், நாக ஸ்டியரேட்டு என்ற பசைப் பொருளும், மாப்பொருளும், நிறப்பொருளும், வாசனைப் பொருளும் இருக்கும். தடவப்படும் இடத்திலுள்ள தோலைப் பாதுகாத்துத் தோலின் இயற்கை நிறத்தையும் அதிலுள்ள குறைகளையும் மறைக்க முகப்பொடி உதவுகிறது.

டால்கம் தூள் என்ற பொடியில் பட்டுக்கல் தூள் அதிகமாக இருக்கும். இதில் போரிக அமிலம், நாக ஆக்சைடு, நாக ஸ்டியரேட்டுப் போன்ற பொருள்கள் இருக்கும். இப்பொடி வெப்பத்தினால் தோலில் விளையும் கோளாறுகளைத் தடை செய்து அதைப் பாதுகாக்கிறது. குளித்தபின் இதைப் பயன்படுத்துகிறார்கள்.


தோற்றத்தை அழகுபடுத்தும் பொருள்கள் : இதழ்ச் சாயம், கன்னச் சாயம், நக மெருகு, கண் அல்லது புருவ மை முதலியவை இத்தகையவை. எண்ணெயையும் மெழுகையும் பசைபோற் செய்து, அதில் நிறப்பொருள் ஒன்றைக் கலந்து இதழ்ச் சாயம் தயாரிக்கப்படுகிறது. கன்னச் சாயங்களில் முகப் பொடிகளிலும் பசைகளிலும் உள்ள பொருள்களே இருக்கும். நக மெருகு என்பது மெருகெண்ணெயைப் போன்றது. இதில் நைட்ரோ செல்லுலோஸ் போன்றதொரு பிளாஸ்டிக் பொருள் ஒரு கரிமக் கரைப்பானில் கரைந்திருக்கும்.

வேறு பொருள்கள் : பற்பசையில் சீமைச் சுண்ணாம்பும், அப்பிரகத் தூள் போன்றதொரு மெருகூட்டியும், சவர்க்காரத்தைப் போன்றதொரு நுரை தரும் பொருளும், இனிமையும் சுவையும் தரும் பொருளும் பற்களைப் பாதுகாக்கும் சில மருந்துப் பொருள்களும் பிசினும் இருக்கும். பற்பொடியிலும் இதே பொருள்கள் இருக்கும். கழுவு நீர்களில் பல்லைப் பாதுகாக்கும் மருந்துகளும், ஆல்கஹாலும், இனிமை தரும் பொருளும் கரைவாக இருக்கும்.

மயிர் நீக்கிகளில் கார மண் சல்பைடுகளும், மக்னீசியாவும், கிளிசிரின் மரச் சாராயம் போன்ற பொருள்களும், வாசனைப் பொருளும் இருக்கும். இவை மயிரிலுள்ள கெரட்டின் என்ற பொருளுடன் வினைப்பட்டு மயிரைக் கரைக்கின்றன. இவை சிலருக்கு எரிச்சலை விளைவிக்கக் கூடும்.

நூல்கள் : W. O. Poucher, Perfumes, Cosmetics and Soaps ; The Wealth of India. Iudustrial Products, Part II.