கலைக்களஞ்சியம்/அலரி

அலரி ஏழெட்டடி வளரும் அழகான குற்றுச்செடி ; அழகும் மணமுமுள்ள பல நிறப்பூக்கள் பூப்பது ; தோட்டங்களில் வைத்து வளர்ப்பது; ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் தானாக வளர்வது.

அலரி

இது இமயமலைப் பிரதேசங்களில் காட்டுச் செடியாக இருக்கிறது. இலை பெரும்பாலும் கணுவுக்கு மூன்று, வட்ட வொழுங்காக இருக்கும்; 4-6 அங்குலம் நீண்ட ஈட்டி வடிவம் ; சற்றுத் தடிப்பாக இருக்கும். பூங்கொத்து வளரா நுனி மஞ்சரிகளடங்கிய ரசீம். சிவப்பு, வெண்மை, மஞ்சள் முதலிய பல நிற அலரிகள் உண்டு. அல்லியின் உட்புறத்தில் இழைபோன்ற நீண்ட செதில்கள் உபமகுடமாக இருக்கும். சில வகைகளில் அடுக்குப் பூக்கள் உண்டு. கேசரப்பையறைகளைச் சேர்க்கும் இணைப்பு மேலே நீண்டு முறுக்கிக்கொண்டிருக்கும். ஒரு பூவில் இரண்டு ஒருபுற வெடிகனிகள் உண்டாகும். விதைகளுக்கு மேலே மஞ்சள் நிறமான பஞ்சுபோன்ற மயிர் மூடியிருக்கும். அலரியில் நீர் போன்ற மஞ்சட்சாறு இருக்கிறது. இந்தச் செடியின் எல்லாப் பாகங்களும் நஞ்சுள்ளவை. வேர் மிகக் கொடிய நஞ்சு. குடும்பம்: அப்போசைனேசீ (Apocynaceae); இனம் : நீரியம் ஓடரம் (Nerium odorum).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலரி&oldid=1502969" இலிருந்து மீள்விக்கப்பட்டது