கலைக்களஞ்சியம்/அலாவுதீன் கில்ஜி

அலாவுதீன் கில்ஜி ( ?-1316) சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் சகோதரன் மகன். இவன் 1294-ல் தேவகிரியை முற்றுகையிட்டுக் கைப்பற்றிய திறமையைப் பெரிஷ்டா என்னும் வரலாற்றாசிரியர் புகழ்ந்துள்ளார். காரா என்னுமிடத்தில் இவனைச் சந்தித்துப் புகழவந்த சுல்தானை இவன் கொன்றுவிட்டு, 1296-ல் டெல்லி சுல்தானானான். 1299-ல் இராசபுதனத்திலுள்ள ரந்தம் போர் என்னும் இடத்தைக் கைப்பற்றினான். 1305-ஆம் ஆண்டிற்குள்ளாக வட இந்தியா முழுவதும் அலாவுதீன் ஆட்சிக் குட்பட்டுவிட்டது. இவன் காலத்திற்கு முன்பு வட இந்தியாவில் மட்டும் முகம்மதியர் ஆட்சி வலுத்திருந்தது. இவன் ஆட்சிக்காலத்தில், 1307-ல் இவனுடைய படைத் தலைவனான மாலிக்காபூர் தென்னிந்தியாவில் பெரும் பகுதியை வென்று திரும்பினான்.

இவன் ராஜத்துரோகத்தை அடியோடு ஒழித்தான். மக்கள் அரசனுக்கு விரோதமாக இரைந்து பேசவும் அஞ்சினர். தனி மனிதர்களின் சுதந்திரம் மிகவும் குறைக்கப்பட்டது. இவ்வளவையும் இராச்சியத்தில் அமைதி நிலவுவதற்காகவே தான் செய்வதாக அவன் கூறிக்கொண்டான். மொகலாயர்கள் வட இந்தியாவி னுட் புகுந்துவிடுவார்களோ என்று அஞ்சி இவன் பெரும் படையை வைத்திருந்தான். வாசாப் என்னும் வரலாற்றாசிரியர் அலாவுதீன் படையில் 4,75,000 முகம்மதியப் போர் வீரர்கள் இருந்தார்கள் என்று கூறுகிறார். இவன் மேற்கொண்ட பல போர்களின் வெற்றி காரணமாக மிகுந்த செல்வம் டெல்லியில் குவிந்துவிடவே, அங்கிருந்த பண்டங்களின் விலை அதிகமாகிவிட்டது. தன்னுடைய படைக்குப் பங்கீடு செய்வது கஷ்டமாக இருந்ததால் இவன் பண்டங்களின் விலைகளைக் குறைத்து நிருணயித்து வைத்தான். மக்களுடைய வருவாயைக் குறைத்தால் அவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கத் திறனற்று இருப்பார்கள் என்று கருதி அலாவுதீன் வரிகளை அதிகப்படுத்தினான். முகம்மதியர் ஆட்சி முதன் முதல் பெரிய அளவில் இந்தியாவில் நிறுவப்பட்டது இவன் காலத்தில் தான். அமீர் குஸ்ரு இவன் காலத்திலிருந்த பெரும் புலவர். இவன் 1316-ல் இறந்தான். தே. வெ. ம.