கலைக்களஞ்சியம்/அலாஸ்கா

அலாஸ்கா (Alaska) வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் உள்ள நிலப்பரப்பு. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமானது. அலாஸ்காவிற்கும் அ. ஐ. நாடுகளுக்கும் இடையே கானடா இருப்பதால் இது அ. ஐ. நாடுகளினின்றும் பிரிபட்டு நிற்கிறது. மொத்தப் பரப்பு: 5,86,400 ச. மைல், மக் : 1,28,643 (1950). பலுக்கான் ஆறும், அலாஸ்கா மலைத்தொடரும் இங்குள்ள முக்கியமான இயற்கைத் தோற்றங்கள். மீன் முதலிய கடல்படு பொருள்களும், தங்கம், வெள்ளி, எண்ணெய், கரி முதலிய கனிபடு பொருள்களும் கிடைக்கின்றன. கோதுமை, பார்லி, காய்கறிகள் முதலியன விளைகின்றன. முதன் முதலில் ரஷ்யர்களே இங்கு வந்து குடியேறியவர்கள். அமெரிக்க ஆதிக்குடிகள் மற்றப் பாகங்களில் காட்டிலும் இங்கு அதிகமாக வசிக்கின்றனர்.

அலாஸ்கா

சுமார் 500 மைல் நீளத்திற்கு ரெயில் பாதை போடப்பட்டிருக்கிறது. பார்பார்க்ஸ் என்னுமிடத்தில் ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள்.

அமெரிக்கக் காங்கிரசுக்கு இங்கிருந்து ஒரு பிரதிநிதி அனுப்பப்படுகிறார் ; ஆனால், அவருக்குக் காங்கிரசில் வோட்டுரிமை இல்லை. உள் நாட்டில் 16. அங்கத்தினர்கள் கொண்ட செனெட்டும், 24 அங்கத்தினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையும் உண்டு. தலைநகரம்:ஜூனோ ; மக் : 5,818 (1950).

வரலாறு : வட அமெரிக்காவின் ஆதிக் குடிகள் அந்த நாட்டுக்கு ஆசிய நிலப்பரப்பிலிருந்து அலாஸ்கா வழியாகவே வந்து புகுந்தனர் என்று கருதுகிறார்கள். அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியாகிய அலாஸ்கா ஆசியாவின் வடகிழக்குப் பகுதிக்கு நெருங்கியிருப்பது இக்கருத்துக்கு ஒரு காரணமாகும். பேரிங் என்பவர் 1741-42-ல் மேற்கொண்ட ஆராய்ச்சிப் பிரயாணங்களுக்குப் பிறகு அலாஸ்காவில் ரஷ்ய ஆதிக்கம் ஏற்பட்டது. ரஷ்யர்கள் அங்கு முக்கியமாக நடத்தியது மென் மயிர் (Fur) வாணிபமே. அலெக்சாந்தர் பாரனோவ் என்னும் ரஷ்ய ஏஜண்டு காலத்தில் சிட்கா என்னுமிடம் ரஷ்ய அமெரிக்காவின் தலைநகராயிற்று (1802). 1821-ல் ரஷ்யப் பேரரசன் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவாக்க முயன்றான். ரஷ்யா மென்மயிர் வாணிபத்திலேயே கண்ணும் கருத்துமாயிருந்ததால் அவ்வியா பாரம் குறையத் தொடங்கியதும், ரஷ்யர்களுக்கு அலாஸ்காவில் இருந்த ஆர்வம் குறைந்தது. அதுவே தருணம் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டினர் 72,00,000 டாலருக்கு அலாஸ்காவை 1867-ல் ரஷ்யரிடமிருந்து விலைக்கு வாங்கினர். அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாகாணமாயிற்று. அங்கு 1884-ல் ஒரு தல அரசாங்கம் நிறுவப்பட்டது. 1896-ல் அங்குத் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அந்நாட்டின் முக்கியத்துவம் மிகுந்தது. 1912-ல் அலாஸ்காவிற்குப் பிரதேச அந்தஸ்து (Territorial status) அளிக்கப்பட்டது. 1942-ல் ஜப்பானியர்கள் அலாஸ்காவைச் சேர்ந்த அலியூஷன் தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டனர் ; அலாஸ்கா ராணுவ முக்கியத்துவம் மிகுந்த இடம் என்பதும் ஏற்பட்டது. யுத்தம் முடிந்த பிறகு அலியூஷன் தீவுகள் உட்பட அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு பகுதியாக மறுபடியும் அமைந்துள்ளது. அ. மு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலாஸ்கா&oldid=1503167" இலிருந்து மீள்விக்கப்பட்டது