கலைக்களஞ்சியம்/அலெர்ஜி

அலெர்ஜி (Allergy) : அரிசி, பால், ஆரஞ்சு போன்ற உணவுப் பொருள்கள் உடல் நலம் தருபவை. அவற்றைப் பெரும்பான்மையான மக்கள் உண்கிறார்கள். ஆயினும் அவை சிலர்க்கு ஒத்துக்கொள்வதில்லை, நோய் உண்டாகிறது. அத்தகைய நோய் நிலையை அலெர்ஜி என்று கூறுவர். அல்லோஸ் (மற்ற), எர்ஜியா (சக்தி) என்னும் இரண்டு கிரேக்கச் சொற்களைச் சேர்த்து, அலெர்ஜி என்ற சொல்லை வான் பிர்க்கெட் (Von Pirquet) என்பவர் உண்டாக்கினார். அலெர்ஜி உண்டாக்கும் பொருள்கள் அலெர்ஜென்கள் எனப்படும். சிலர்க்கு மருந்துகளும், ஊசி குத்துதலும் அலெர்ஜியை உண்டாக்கும். உரோமம், முகப்பவுடர், துணியிலோ செருப்பிலோ ஏற்றியுள்ள சாயம் போன்ற சில பொருள்கள் உடலில் பட்ட மாத்திரத்திலேயே சிலர்க்கு அலெர்ஜியை உண்டாக்கக் கூடும். இந்தப் பொருள்கள் உடம்பில் சிரங்கையோ அல்லது வேறு நோய்களையோ தோற்றுவிக்கும். தூசியோ, சில மலர்களின் மகரந்தமோ காற்றுடன் கலந்து சுவாசிக்கப்பட்டால் சிலர்க்கு அலெர்ஜி உண்டாகலாம். மற்றும் சிலர்க்குச் சில ஜந்துக்களினின்றும் உண்டான புரதவஸ்துக்கள் அல்லது சில தாவரப் புரதங்கள் ஒத்துக்கொள்வதில்லை.

இதுவரை வேறு காரணங்களால் உண்டாகின்றனவாகவோ அல்லது காரணங்கள் அறியாதனவாகவோ இருந்த சில நோய்களுக்கு இப்போது அலெர்ஜியே காரணம் என்று தெரிகின்றது. காசம், கண் அழற்சி, சிலவித வயிற்றுக் கோளாறுகள், தலைவலிகள், காக்கை வலிகள், சரும நோய்கள் ஆகியவை அலெர்ஜி நோய்களுக்குள் அடங்கும்.

அலெர்ஜி எப்படி உண்டாகிறது என்பது இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடக்கத்தில் எந்தப் பொருளும் அலெர்ஜனாக இருப்பதில்லை ; நோய் உண்டாக்குவதுமில்லை ; உடம்புக்கு ஒத்துக்கொண்டதாகவே இருக்கிறது. பிறகு சிலகாலம் சென்றதும், அந்தப் பொருள் மிகச் சிறிய அளவில்கூட ஒத்துக்கொள்வதில்லை ; நோயை உண்டாக்குகிறது. ஹிஸ்டமைன் என்பது உடம்பின் உயிரணுக்களில் காணப்படும் பொருள்களில் ஒன்று. அலெர்ஜி உண்டாக்கும் பொருள் ஹிஸ்டமைனை மிகுதியாக உண்டாக்கி இரத்தத்தில் சேர்க்கின்றது. அப்படி அது அளவுக்கு மிஞ்சினால் இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இதன் காரணமாக அலெர்ஜி நோய்கள் உண்டாகின்றன. ஹிஸ்டமைன் பத்து இலட்சத்தில் ஒன்றாக மிகுதிப்பட்டாலும் போதும், அலெர்ஜி உண்டாகிவிடும். மூளையில் ஹிஸ்டமைன் மிகுதிப்பட்டால் காக்கை வலி (Epileptic fits) அல்லது ஒருத் தலைவலி (Migraine) உண்டாகும் ; மூச்சுக் கிளைக்குழலில் மிகுதிப்பட்டால் காசம் (Asthma) உண்டாகும்.

நோய் ஏற்பட்டதும் அது அலெர்ஜியால் ஏற்பட்டதா அல்லவா என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆயினும் வைத்தியர்கள் கேள்விகள் கேட்டும், நோயாளியைக் கவனித்து வந்தும் அலெர்ஜியை உண்டாக்கும் பொருள் இதுவாயிருக்கலாம் என்று ஊகிப்பர். அந்தப் பொருளை நீக்குவதால் நோயாளி நலம்பெற்றால், அப்பொருள் தான் காரணம் என்பது உறுதியாகும். இந்த முறை பயன்படாவிட்டால் வேறு முறைகளைக் கையாளுவர். கையிலோ முதுகிலோ இலேசாகக் கீறி, ஐயுறும் பொருளில் அணு அளவு வைத்துச் சில மணி நேரம் சென்றபின் கீறிய இடங்களைப் பார்த்தால், வைத்த இடம் சிவந்து பருத்துத் தினவுடன் காணப்படுமாயின் அப்பொருளே காரணம் என்று உறுதிகொள்வர். தூசி, இறகுகள், மகரந்தம், உணவுகள் போன்றவற்றை விரைவில் பரிசோதிப்பதற்கு இது பயன் தரும் முறையாகும். இதுபோலவே ஐயுறும்பொருளைக் கையில் பற்றுமாதிரி போட்டுக் கட்டி வைத்தும் பரிசோதிப்பதுண்டு. சில பொருள்களை ஊசி குத்தியும் சோதனை செய்யலாம். ஆயினும், எல்லா உணவுப்பொருள்களைக் கொண்டும் இவ்வாறு சோதனை செய்ய இயலாது. அதனால் உணவை உண்ணச் செய்து, நாடித்துடிப்பு வேகம், வெண் இரத்த அணுக்கள் தொகை முதலியவற்றை ஆராய்வர். உணவு அலெர்ஜிகள் பெரும்பாலும் புரதப் பொருள்களாலேயே உண்டாவன; மரப்பண்டப் பொருள்களால் உண்டாவது அரிது.

சிகிச்சை: எது ஒத்துக்கொள்ளவில்லையோ அதை அறவே நீக்கிவிடவேண்டும். ஆனால் சில பொருள்களை அறவே நீக்க இயலாது. அத்தகைய வேளைகளில் ஒத்துக் கொள்ளாத பொருளை முதலில் சிறிய அளவில் ஊசி குத்தியும், பிறகு சிறிது சிறிதாக அளவைக் கூட்டி ஊசி குத்தியும் அலெர்ஜி உண்டாகாமல் தடுக்கவேண்டும்.

சில வேளைகளில் ஒத்துக்கொள்ளாத உணவை நோயாளி பல மாதங்கள் உண்ணாதிருந்துவிட்டுப் பிறகு மிகச் சிறிய அளவில் உண்ணத் தொடங்கிச் சிறிது சிறிதாகக் கூட்டிக்கொண்டு வந்தால் அப்பொருள் ஒத்துக் கொள்ளும் நிலைமை வந்துவிடும்.

பொதுவாக உடல் நலம் குன்றாமல் இருந்தால் அலெர்ஜித் தொல்லைகள் உண்டாகா. சிலர் விட்டமின் சீ, விட்டமின் டீ சேர்த்துக் கொள்வதாலும் அலெர்ஜியின் கடுமையைக் குறைத்துக்கொள்ளலாம்.

ஒரு பொருளைப் பயன்படுத்துவதால் அலெர்ஜி தோன்றும் கால அளவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அது ஒரே ஆளுக்குக்கூட அலெர்ஜி உண்டாக்கும் பொருளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் அளவு, அலெர்ஜி உண்டாவதற்கேற்ற உடல் நிலை ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். சிலர்க்கு அலெர்ஜிக் குணம் தாயின் கருப்பையில் இருக்கும்போது தாய் உண்ட உணவுகளின் காரணமாக நஞ்சுக்கொடி வாயிலாக உண்டாகலாம். சிலர்க்குப் பாரம்பரியமாக அலெர்ஜிக் குணம் உண்டாகலாம். ஆனால் அப்படி உண்டாவது அலெர்ஜிக் குணமேயன்றி அதனால் ஏற்படும் குறிப்பிட்ட எந்த நோயுமன்று.

பொதுவாக மக்களுள் பத்தில் ஒருவருக்கு அலெர்ஜிக் குணம் இருப்பதாக ஓர் அறிஞர் கணக்கிட்டிருக்கிறார். ஆயினும் நோய் அலெர்ஜியாகத்தான் இருக்கும் என்ற ஊகம் சரியோ இல்லையோ, அதற்கான சிகிச்சை செய்வதுடன் நோயின் வேறு காரணங்களையும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்க சிகிச்சை செய்தலும் இன்றியமையாததாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலெர்ஜி&oldid=1503181" இலிருந்து மீள்விக்கப்பட்டது